Published:Updated:

`` ஜெயலலிதா பல்கலை. விவகாரம் முதல் ஓ.பி.எஸ் கைது வரை" - இன்றைய சட்டசபை ஹைலைட்ஸ்!

சட்டசபை நிகழ்வுகள்

இன்று சட்டப்பேரவையில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு.

`` ஜெயலலிதா பல்கலை. விவகாரம் முதல் ஓ.பி.எஸ் கைது வரை" - இன்றைய சட்டசபை ஹைலைட்ஸ்!

இன்று சட்டப்பேரவையில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு.

Published:Updated:
சட்டசபை நிகழ்வுகள்

தமிழக அரசின் நிதிநிலை கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் ஆகஸ்ட் 13-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 13-ம் தேதி வரை நடைபெற்றுக்கொண்டிருக்கிற்து. கடந்த 13-ம் தேதி பொது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து 14-ம் தேதி முதன்முறையாக வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின்
சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின்

நிதிநிலைக் கூட்டத்தொடரின் 13-வது நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. கடந்த சனிக்கிழமை அன்று வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, பால்வளத் துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்து முடிந்திருந்தது. ஞாயிற்றுக்கிழமை, கிருஷ்ண ஜெயந்தி இரண்டு நாள்கள் விடுமுறைக்கு அடுத்து இன்று மீண்டும் சட்டப்பேரவை கூடியது. இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, தொழில்துறை, தமிழ் வளர்ச்சித்துறை ஆகிய மூன்று துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடக்கிறது. இன்று கூட்டத்தொடரில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளைப் பார்க்கலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடந்த அதிமுக ஆட்சியில் விழுப்புரத்தில் தொடங்கப்பட்ட டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் என்று பேரவையில் கூறப்பட்டிருந்தது. இன்று சட்டப்பேரவையில் 2021-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டத்தை அமைச்சர் பொன்முடி அறிமுகம் செய்தார். இந்த அறிவிப்பில், டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகத்தைச் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மசோதாவைக் கடுமையாக எதிர்ப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்யும் அ.தி.மு.க-வினர்
பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்யும் அ.தி.மு.க-வினர்

அப்போது பேசிய சபாநாயகர், ``இந்த மசோதாவை ஆய்வுக்கு எடுக்கும்போது விரிவாகப் பேச வாய்ப்பு தருகிறேன்'' என்று கூறினார். அப்போது எழுந்து பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பி.எஸ்.,``இந்த மசோதாவுக்கு ஆரம்பகட்டத்திலேயே எதிர்ப்பு தெரிவிப்பதாகக்" கூறினார். அப்போது எழுந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், ``இந்தச் சட்டத்தை ஆரம்பநிலையிலேயே அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துவிட்டார்கள். அவர்கள் வெளிநடப்பு செய்ய விரும்பினால் அதற்கு வாய்ப்பு கொடுங்கள்" என்று கூறி அமர்ந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அ.தி.மு.க தொடர்ந்து அவையில் தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்த நிலையில், அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பு செய்த நிலையில் கலைவாணர் அரங்கத்துக்கு வெளியிலுள்ள சாலையில் ஓ.பி.எஸ் தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர். அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர்கள் சாலைமறியலில் ஈடுபட்ட ஓ.பி.எஸ் உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்களைக் கைதுசெய்து, காவல் வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். இதனால் அந்தப் பகுதி சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.

சாலைமறியலில் அதிமுக உறுப்பினர்கள்
சாலைமறியலில் அதிமுக உறுப்பினர்கள்

இன்றைய கேள்வி நேரத்தின்போது, காவல்துறையினருக்கு ஊக்க ஊதியம், ரிஸ்க் அலவன்ஸ், சிறப்புப் பரிசுகள் போன்றவை வழங்கப்படுமா என்ற கேள்வியை பா.ம.க-வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி எழுப்பினர். அப்போது எழுந்து பேசிய முதல்வர். ``காவல்துறையினரை ஊக்குவிக்க நிச்சயம் இந்த அரசு தயங்காது. இது குறித்து பரிசீலனை செய்து, ஆராய்ந்து அவர்களுக்கு என்னென்ன வகையில் சிறப்புச் செய்ய வேண்டுமோ, அதற்குரிய வெகுமதியும் அவர்களுக்கு நிச்சயமாக வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.

போதைப்பொருள் தடுப்பதற்குத் தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பா.ம.க உறுப்பினர் ஜி.கே.மணி எழுப்பிய கேள்விக்கு, முதல்வர் பதிலளித்துப் பேசினார். ``போதைப்பொருள்கள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இதை விற்பவர்கள், கடத்துபவர்கள் என்று 10,673 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. 11.247 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். 149.43 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 113 நான்கு சக்கர வாகனம் மற்றும் 106 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 15 பேர் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களை விற்றது, கடத்தியது தொடர்பாக 2,450 வழக்குகள் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதோடு, 5,793 கிலோ கஞ்சா மற்றும் இதர போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் 3,413 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 81 பேர் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். போதைப் பொருள்களை விற்பனை செய்பவர்கள், கடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. போதைப்பொருள் விற்பனை முற்றிலுமாகத் தடுக்கப்படும். பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் விற்பவர்களைத் தண்டிக்கச் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று புள்ளி விவரங்களோடு பதிலளித்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்
முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

மேலும், ``புல எல்லையை அளந்து காட்டக் கோரி பொதுமக்கள் எங்கிருந்தும் இணையம் வாயிலாக விண்ணப்பிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்படும். முறையற்ற நிலப் பரிவர்த்தனைகளைத் தடுக்கும் வகையில், இணையவழி சேவையிலுள்ள நில ஆவணங்களைப் பிற அரசுத் துறைகள், நீதிமன்றங்கள், பாதுகாப்புத்துறை ஆகியவற்றுடன் ஒன்றிணைக்கப்படும். மாவட்ட பேரிடர் மேலாண்மை நிர்வாக அமைப்பை வலுப்படுத்தும் வகையில் 14 வட்டாட்சியர் பணியிடங்கள், துணை ஆட்சியர் பணியிடங்களாகத் தரம் உயர்த்தப்படும். பேரிடர் மேலாண்மையில் மக்களின் ஈடுபாட்டைப் பெருக்கிடும் வகையில் 14 கடலோர மாவட்டங்கள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் முதற்கட்டமாக 65,000 தன்னார்வலர்களுக்குப் பயிற்சி வழங்கப்படும்" உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தார்.

தொழில்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை கொள்கை விளக்கக் குறிப்பை அந்தத் துறையின் அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். ``தென்மாவட்டங்களில் பொருளாதார வளர்ச்சி அடையும் வகையில், விருதுநகர் மாவட்டம், குமாரலிங்கபுரம் சிப்காட் தொழிற்பூங்காவில் 250 ஏக்கர் பரப்பளவில், 400 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் ஒருங்கிணைந்த ஆடைப் பூங்கா உருவாக்கப்படும். திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், செங்காந்தாகுளத்தில், 576 ஏக்கர் பரப்பளவில் 250 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்படும். பணிபுரியும் மகளிரின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு 70 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 2 ஏக்கர் பரப்பளவில் சிறுசேரி மற்றும் பர்கூர் சிப்காட் தொழிற்பூங்காவில் சிறப்பு வசதிகளுடன், பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள் அமைக்கப்படும்" என்றார்.

முதலவர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு
முதலவர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு

மேலும், ```தீரக் காதல் திருக்குறள்' என்ற பெயரில் தீந்தமிழ் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதற்குச் சிறப்பு நிதியாக 2 கோடி ஒதுக்கப்படும். ஒரு கோடி ரூபாய் நிதிச் செலவில், அயல்நாடு மற்றும் வெளி மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்குத் தமிழ் கற்பிக்க `தமிழ்ப் பரப்புரைக் கழகம்' உருவாக்கப்படும். பள்ளி மாணவர்கள் தங்களின் தமிழ்மொழி இலக்கியத்திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் `திறனறித் தேர்வு' நடத்தி ஆண்டுதோறும் 1,500 பேர் தேர்வு செய்யப்பட்டு, ஆண்டுதோறும் ரூ. 1,500 ஊக்கத்தொகையாக இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும். தமிழ் அறிஞர்களான சிலம்பொலி, சு.செல்லப்பன், முனைவர் தொ.பரமசிவன், புலவர். இளங்குமரனார், திரு முருகேச பாகவதர், திரு சங்கரவள்ளி நாயகம் மற்றும் புலவர் செ. இராசு ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, பரிவுத் தொகை வழங்கப்படும்" உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

தொழில்துறையில் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மானியக் கோரிக்கை கொள்கை விளக்கக் குறிப்பை அந்தத் துறையின் அமைச்சர் துரைமுருகன் இன்று தாக்கல் செய்தார். ``பயனற்ற பழைய சுரங்கம் மற்றும் குவாரிகள் பொதுமக்களுக்குப் பயனுள்ள அமைப்பாக மாற்றப்படும். விதிமுறைகளுக்குப் புறம்பாகக் கனிமங்கள் எடுப்பதைத் தடுக்க ஆளில்லாத சிறிய விமானம் பயன்படுத்தப்படும். குவாரிப் பணிகளிலிருந்து வரலாற்றுச் சின்னங்கள், பழந்தமிழர் கல்வெட்டுகள், சமணப்படுகை மற்றும் தொல்பொருள் தளங்கள் பாதுகாக்கப்படும்" என்றார் .

முதலவர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன்
முதலவர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன்

தொடர்ந்து பேசியவர், ``எம்.சாண்ட் தயாரிப்பு தொழிலை முறைப்படுத்த ஒரு புதிய கொள்கை உருவாக்கப்படும். அதிக செறிவூட்டப்பட்ட கிராபைட் தயாரிக்க தொழில்நுட்ப ஆய்வு மேற்கொள்ளப்படும். தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் கிராபைட் சுரங்கம் மற்றும் ஆலையின் சுற்றுவட்டாரத்தில் அமைத்துள்ள கிராமப் பகுதிகளின் சுற்றுச்சூழல் மேம்படுத்தப்படும்’’ என்ற அறிவிப்புகளை வெளியிட்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism