Published:Updated:

`` உதயநிதியைப் புகழ்ந்த எ.வ.வேலு முதல் கட்டளையிட்ட முதல்வர் ஸ்டாலின் வரை" - இன்றைய சட்டசபை ஹைலைட்ஸ்!

சட்டப்பேரவை
சட்டப்பேரவை

இன்று சட்டப்பேரவையில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு.

தமிழக அரசின் நிதிநிலை கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் ஆகஸ்ட் 13-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 13-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. கடந்த 13-ம் தேதி பொது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து 14-ம் தேதி முதன்முறையாக வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின்
சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின்

நிதிநிலைக் கூட்டத்தொடரின் 11-வது நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. நேற்று உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை இவற்றின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்து முடிந்திருந்தது. இன்று, நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள்துறை மற்றும் பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இன்று கூட்டத்தொடரில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளைப் பார்க்கலாம்.

இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டுத்தொடரில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின். ``கடல்நீர் ஏன் உப்பாக இருக்கிறது என்றால், கடல் கடந்து வாழும் தமிழர்களின் கண்ணீரால்தான் என்று பேரறிஞர் அண்ணா எழுதியிருந்தார். அண்ணாவின் வழியில் நடைபெறும் இந்த அரசின் சார்பில், கடல் கடந்து வாழும் தமிழர்களுக்கு விதி எண் 110-ன் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட நான் விரும்புகிறேன். 1983-ம் ஆண்டு இன கலவரத்துக்குப் பிறகு கடல் கடந்து மக்கள் இங்கே வருகிறார்கள். அன்று முதல் இன்றுவரை அவர்களை நாம் அரவணைத்துவருகிறோம். இலங்கைத் தமிழர்கள் முகாம்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளன. முகாம்களில் 7,469 வீடுகள் 231.54 கோடி ரூபாய் செலவில் புதிதாகக் கட்டப்படும். இதில் முதற்கட்டமாக 3,510 வீடுகள் புதிதாகக் கட்டுவதற்கு நடப்பு நிதியாண்டில், 108.81 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்" என்றார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின்
முதல்வர் மு.க. ஸ்டாலின்

மேலும், ``முகாம்களிலுள்ள மின் வசதி, கழிப்பிட வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இலங்கைத் தமிழர்களின் குழந்தைகள் பொறியியல் படிப்பு பயில தேர்ச்சிபெற்ற மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் முதல் 50 மாணவர்களுக்குக் கல்வி மற்றும் விடுதிக் கட்டணத்தை அரசே ஏற்கும். முகாம் வாழ் இளைஞர்கள் 5,000 பேருக்கு வேலைவாய்ப்புடன்கூடிய திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்க 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு விலையில்லா இலவச எரிவாயு மற்றும் இலவச அடுப்பு வழங்கப்படும். அகதிகள் முகாம்களிலுள்ள தமிழர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த மொத்தமாக 317.4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்" என்று அறிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேக்கேதாட்டு விவகாரம் குறித்து விவரிக்க காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் செல்வப்பெருந்தகை கோரிக்கை விடுத்தார். ``கர்நாடக அணை விவகாரத்தில் கர்நாடக முதல்வரின் பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராக உள்ளது'' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் நாகை மாலி கண்டனம் தெரிவித்தார். ``கர்நாடக அரசு மேக்கேதாட்டு விவகாரத்தில் தொடர்ந்து அடம்பிடித்துவருகிறது. கர்நாடகாவுக்கு எதிராகத் தமிழக முதல்வர் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்" என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ பி.எஸ் பேசினார்.

சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன்
சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன்

அப்போது பதிலளித்துப் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ``காவிரி பிரச்னையில் அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமையாக இருந்தால் வெற்றி உறுதி. இன்று எப்படி அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமையாக இருக்கிறோமோ, அதேபோல கடைசிவரை ஒற்றுமையாக இருந்தால் நிச்சயம் இந்தப் பிரச்னையில் வெற்றி என்ற உறுதியைத் தெரிவிக்க நான் கடமைப்பட்டுள்ளேன். கர்நாடகாவில் எந்தக் கட்சி மாறினாலும் அனைவருமே ஒரேபோலத்தான் பேசுவார்கள். காவிரி பிரச்னையில், இருமொழிக் கொள்கையில், இந்தியை எதிர்ப்பதில் நாம் ஒன்றுமையாக இருந்தால் தமிழகத்தை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது. நமது முதல்வர் பிரதமரைச் சந்தித்தபோதுகூட காவிரிப் பிரச்னை குறித்து பத்து நிமிடங்கள் பேசியிருப்பார்" என்றார்.

நெடுஞ்சாலைத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, திருவையாறு சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினர் துரை சந்திரசேகரன், ``தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு வரும்போது பல்வேறு சுங்கச்சாவடிகளைக் கடக்க வேண்டியிருக்கிறது. சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டுமென்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைக்கின்றனர். தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்துச் சுங்கச்சாவடிகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பேசினார்.

சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு
சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு

அவரின் கேள்விக்கு பதிலளித்துப் பேசிய நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, ``தமிழகத்தில் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. இவற்றில் 14 சுங்கச் சாவடிகள் நகர்ப்புற பகுதிகளிலும், 9 சுங்கச் சாவடிகள் புறநகர்ப் பகுதிகளிலும் உள்ளன. சென்னை நகர்ப்புற பகுதியிலுள்ள நெமிலி, வானகரம், பரனூர், சமுத்திரம், சூரப்பட்டு ஆகிய ஐந்து சுங்கச்சாவடிகளைக் கடக்க நீண்ட நேரம் ஆகிறது. இந்த சுங்கச்சாவடிகளை அகற்ற முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஒன்றிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கூட்டுத்தொடர் முடிந்ததும் அவரை நேரில் சந்தித்துப் பேசவிருக்கிறோம்" என்றார்.

நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை மற்றும் பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது பேசிய அமைச்சர் எ.வ.வேலு, ``கலைஞர் முதல்வராக இருந்த சமயத்தில் 132 கி.மீ தொலைவுக்கு இரண்டு வெளிவட்ட சாலைகள் அமைக்கப்பட்டன. திமுக ஆட்சியில்தான், கூடுவாஞ்சேரி- மீஞ்சூர் முதற்கட்ட வெளிவட்ட சாலைப் பணிகள் தொடங்கப்பட்டன. திமுக ஆட்சிக் காலத்தில் ஆறு மாதங்களுக்கு 63.13 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் இரண்டாம் கட்ட வெளிவட்ட சாலைப் பணிகள் நடைபெற்றன. அந்தப் பணியில் ஆறு மாதங்களுக்கு 119.7 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு 1886.4 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது" என்றார்.

முதலவர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் எ.வ.வேலு
முதலவர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் எ.வ.வேலு

தொடர்ந்து பேசியவர், ``ஒரே கோட்டத்தில், ஒரே ஒப்பந்ததாரர் மொத்தமாகச் சாலைப் பணியை எடுக்கும் பேக்கேஜ் முறை இன்று முதல் ரத்து செய்யப்படுகிறது. ஒன்பது இடங்களில் தரமில்லாத சாலைகள் கண்டறியப்பட்டு ஒப்பந்ததாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தரமில்லாத சாலைகள் அமைத்த ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்த அதிகாரிகளின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய கைலாஷ் சந்திப்பில் 56 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் கட்டப்படும். பெருங்குடி, துரைப்பாக்கம், கலைஞர் சாலை, மேடவாக்கம் சாலைகளிலுள்ள நான்கு சுங்கச்சாவடிகளிலும் சுங்கக் கட்டண வசூல் நிறுத்தப்படும். கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்துக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் இடையே நடந்து செல்லும் வகையில் 37 கோடி ரூபாயில் கடல்சார் நடைப்பாலம் அமைக்கப்படும்" உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

``தேர்தல் சமயத்தில் முதல்வர் செல்ல முடியாத கிராமப் பகுதிகளுக்கும், தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் நேரில் சென்று பிரசாரம் செய்து, இன்று மேசை தட்டும் பல சட்டமன்ற உறுப்பினர்கள் உருவாகப் பெரும் உந்து சக்தியாக இருந்தவர், உதயநிதி ஸ்டாலின். ராமனுக்குத் துணையாக அனுமன் வந்தான், தர்மனுக்குத் துணையாகக் கண்ணன் வந்தான், குலோத்துங்க சோழனுக்குத் துணையாகக் கருணாகரத் தொண்டைமான் வந்தான், இலங்கேஸ்வரனுக்குத் துணையாக இந்திரஜித் வந்தான், ராஜாராஜ சோழனுக்குத் துணையாக ராஜேந்திர சோழன் இருந்ததுபோல. இந்தக் கழக ஆட்சியைக் கட்டி முடிப்பதற்குத் தளபதிக்குத் துணையாக இருந்தது என் தம்பி உதயநிதி ஸ்டாலின் என்று சொன்னால் அது மிகையாகாது" என்று அமைச்சர் எ.வ.வேலு பெருமிதம்கொண்டார்

`அம்மா உணவகம்; புதிய கல்லூரிகள்; `கவிமணி' விருது' -  இன்றைய சட்டசபை ஹைலைட்ஸ்!
சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு
சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு

முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில், ``தொடக்க நாளிலேயே நான் ஒரு கருத்தைச் சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். திமுக அமைச்சர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் எனது கண்டிப்பான வேண்டுகோள், உங்களின் உரைகளில் உங்களை ஆளாக்கிய, உங்களை உருவாக்கிய நமது முன்னோடிகளைக் குறிப்பிட்டுப் பேசுவது முறை. நேரத்தைக் கருத்தில்கொண்டு இதைக் கேள்வி நேரத்துக்கு முன் பயன்படுத்தக் கூடாது. ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு இது எனது கட்டளை" என்று அழுத்தமாகக் கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு