Published:Updated:

ஊரடங்கிலும் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம்... கட்டுப்படுத்த சில ஆலோசனைகள்!

மக்கள் கூட்டம்
மக்கள் கூட்டம்

தவறு எங்கே நடக்கிறது, மக்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டுமா இல்லை கட்டுப்பாடுகளை அதிகப்படுத்த வேண்டுமா?

தமிழகத்தில் நாளொன்றுக்கு 33 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் புதிதாக கோரோனா தொற்றுக்கு ஆளாகிவருகின்றனர். சென்னையில் மட்டும் நாளொன்றுக்கு ஆறாயிரம் பேருக்கு மேல் பாதிப்புக்குள்ளாகிவருகின்றனர். முதல் அலையைவிட அதிவேகமாகப் பரவிவருகிறது இரண்டாவது அலை. தேநீர் கடைகளுக்குத் தடை, நடைபாதை கடைகளுக்குத் தடை, காய்கறி, மளிகைக் கடைகளுக்கும் காலை ஆறு மணி முதல் பத்து மணி வரை மட்டுமே அனுமதி என தமிழக அரசும் பல புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து நடைமுறைப்படுத்திவருகிறது. ஊரடங்கின் நேரத்தை அதிகப்படுத்துவதற்கான நோக்கமே, மக்கள் கூட்டத்தை தவிர்ப்பதற்காகத்தான். ஆனால், புதிய கட்டுப்பாடுகளுக்குப் பிறகு மக்கள் இன்னும் அதிகமாக சாலைகளில் கூடுவதைக் காண முடிகிறது. அதற்கான காரணம் என்ன, தவறு எங்கே நடக்கிறது, மக்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டுமா இல்லை கட்டுப்பாடுகளை அதிகப்படுத்த வேண்டுமா?

பூஜா, கல்லூரி மாணவி
பூஜா, கல்லூரி மாணவி

''மக்களுக்கு அக்கறையே இல்லை'' - பூஜா, கல்லூரி மாணவி,

''நானும் ஆரம்பத்தில் மிகவும் அசால்ட்டாகத்தான் இருந்தேன். அரசு புதிய கட்டுப்பாடுகளை விதிக்கவும் மக்களுக்கு இன்னும் நெருக்கடி கொடுக்கிறார்களே என்றுதான் நினைத்தேன். ஆனால், வெளியில் சென்று பார்த்தபோதுதான் மக்கள் செய்யும் தவறுகளும் தெரிந்தன. மளிகைக் கடைக்கு பொருள்கள் வாங்க ஒரு வீட்டிலிருந்து இரண்டு பேர் வருகிறார்கள். ஒருவர் வெளியில் நின்றுகொள்ள இன்னொருவர் மட்டும் கடைக்குள் சென்று பொருள்கள் வாங்கிவருகிறார். அடுத்ததாக, சிலர் தங்கள் குழந்தைகளையும்கூட உடன் அழைத்து வருகிறார்கள். ரேஷன் கடைகளிலெல்லாம் யாரும் சமூக இடைவெளியைக் கடைபிடிப்பதே இல்லை. நாம் எவ்வளவு விலகிச் சென்றாலும் பக்கத்தில் வந்துகொண்டேதான் இருக்கிறார்கள். சிலர், தங்களின் குழந்தைகளைக் கடைகளுக்கு அனுப்புகிறார்கள். அவர்களின் சைஸுக்கான மாஸ்க் அணியாமல், பெரிய மாஸ்க்குகளைக் கடமைக்கு அணிவித்து அனுப்புகிறார்கள். தங்களைச் சூழ்ந்திருக்கும் ஆபத்து குறித்து சிறிதும் அச்சமில்லாமல் மக்கள் நடந்துகொள்வது வேதனையாக இருக்கிறது. வெளியில் செல்வதற்கே அச்சமாக இருக்கிறது. மக்கள் இனியாவது தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.''

``விழிப்புணர்வுப் பிரசாரங்களை அதிகப்படுத்த வேண்டும்'' - திலகவதி ஐ.பி.எஸ்., முன்னாள் காவல்துறை இயக்குநர்

``மக்கள் கூட்டமாகக் கூடுகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், பெரும்பாலான மக்கள் தங்களின் அத்தியாவசியத் தேவைகளுக்காகத்தான் வெளியில் செல்கிறார்கள். அவர்களைக் காவல்துறையைக் கொண்டு கட்டுப்படுத்த முடியாது. இன்னும் கட்டுப்பாடுகளை விதித்தாலும் அது அவர்களுக்குப் புரியாது. மாறாக, தொலைக்காட்சிகளில், ரேடியோக்களில் கொரோனா ஆபத்து குறித்த விழிப்புணர்வுப் பிரசாரங்களை அதிகப்படுத்த வேண்டும். திரைப்பிரபலங்களை வைத்து அந்தப் பிரசாரங்களை மேற்கொண்டால் மக்களிடம் இன்னும் விரைவாகப் போய்ச்சேரும். தவிர, போனமுறை வேன்களில் மைக் மூலம் கொரோனா குறித்த விழிப்புணர்வுப் பிரசாரங்கள் தெருத்தெருவாக மேற்கொள்ளப்பட்டன. இந்தமுறை அப்படி எதுவும் நடைபெறுவதாகத் தெரியவில்லை. தவிர, மக்கள் கூட்டமாக வெளியில் செல்வதைத் தடுக்க, ரேஷன் கடைகளில் காய்கறிகள், மளிகை போன்ற பொருள்களை வாங்குவதற்கு ஏற்பாடு செய்யலாம். இந்த தினத்தில், இந்தத் தெருவைச் சார்ந்தவர்கள் என ஓர் ஒழுங்குமுறையை வடிவமைக்க வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே இந்த நெருக்கடியைத் தடுக்க முடியும்.’’

திலகவதி ஐ.பி.எஸ்
திலகவதி ஐ.பி.எஸ்

''முழு ஊரடங்கு அவசியம்'' விக்கிரமராஜா, வணிகர் சங்கத் தலைவர்.

``காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அனுமதி என்பதே பல்வேறு சிக்கல்களுக்குக் காரணம். காரணம், மளிகை, காய்கறிக் கடைகளில் பொருள்களை எடுத்து வெளியில் வைப்பதற்கே ஒரு மணி நேரத்துக்கு மேலாகும். அதற்குப் பிறகுதான் வியாபாரம் செய்ய முடியும். அதேபோல, மக்களும் 8 மணிக்கு மேல்தான் வெளியில் வருகிறார்கள். சரியாக இரண்டு மணி நேரம்தான் இருக்கிறது. அதனால்தான் மக்கள் நெருக்கடி அதிகமாக இருக்கிறது. அதனால் காலை 8 மணி முதல் 12 மணி வரை என நேரத்தை மாற்றம் செய்ய வேண்டும்.

அதேபோல, மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் நிச்சயமாக தொற்றுப் பரவலைத் தடுக்க முடியாது. மக்கள் இந்த அசாதாரண நேரத்திலும்கூட கிடைக்கின்ற உணவுப் பொருள்களைக்கொண்டு சமைத்துச் சாப்பிடலாம் என யோசிக்காமல், தாங்கள் விருப்பப்பட்ட உணவுகளை சாப்பிட்டே ஆக வேண்டும் என யோசிக்கிறார்கள். பலர் தினமும் ஃப்ரெஷ்ஷாக வாங்கிச் சமைத்துச் சாப்பிட வேண்டும் என நினைக்கிறார்கள். அதை நிச்சயமாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

இஸ்ரேல்:பாலஸ்தீனத்துக்கு எதிராக இத்தாலி அனுப்பும் ஆயுதங்கள்!கப்பலில் ஏற்ற மறுத்த துறைமுக ஊழியர்கள்!

அதேபோல, வருகின்ற, 20-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கை அரசு அறிவிக்க வேண்டும். மளிகைக் கடைகளையும் மூட உத்தரவிட வேண்டும். மூன்று சக்கர, நான்கு சக்கர வாகனங்களை வைத்து காய்கறி, பால் வியாபாரம் மட்டும் செய்ய அனுமதிக்கலாம். அதையும் 12 மணியோடு முடித்துவிடலாம். அதேபோல. அரசு ஊரடங்கு தொடர்பான அறிவிப்புகளை தடாலடியாக அறிவிக்கக் கூடாது. வாங்கிவைத்த பொருள்கள் எல்லாம் தேவையில்லாமல் வீணாகிப் போகின்றன. அதேபோல, முடிவெடுக்கும்போது கற்றறிந்த அதிகாரிகளிடம் மட்டுமே ஆலோசனை செய்யாமல் அனுபவம் வாய்ந்த வியாபாரிகளையும் கலந்து ஆலோசிக்க வேண்டும்.''

விக்கிரமராஜா
விக்கிரமராஜா

''அரசாங்கமே வாய்ப்புகளை உருவாக்கக் கூடாது ''- மருத்துவர் சாந்தி

''அரசாங்கம், நமக்காகத்தான் கட்டுப்பாடுகளை அதிகரித்திருக்கிறது என மக்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். டிராஃபிக் ஜாம் ஏற்படுகிற அளவுக்கு மக்கள் போக்குவரத்து இருக்கிறது. அதை நிச்சயமாகத் தவிர்க்க வேண்டும். என்னென்ன வாங்க வேண்டும் என்பதைக் குறித்து வைத்துக்கொண்டு ஒரு முறைதான் வெளியே செல்ல வேண்டும். காவல்துறையினர் வெளியில் நின்று கண்காணித்தால் மட்டுமே சரியாக நடப்போம் என மக்கள் அலட்சியமாக நடந்துகொள்ளக் கூடாது. குடிமக்களாக அரசிடம் நம் உரிமைகளை எதிர்பார்க்கும் அதே நேரத்தில், நம் கடமைகளையும் நாம் சரியாகச் செய்ய வேண்டும். காவல்துறையினர் இதுவரைக்கும் 3,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பலர் இறந்தும்போயிருக்கிறார்கள். மக்களிடம் பொதுமுடக்கத்துக்குப் போதிய ஒத்துழைப்பு இல்லை. அதனால், பொதுமுடக்கத்தை இன்னும் அதிகரிப்பதால் எந்தப் பயனும் இல்லை.

தடுமாறும் ஊரடங்கு: அரசின் தளர்வுகளால் எல்லை மீறுகின்றனரா மக்கள்?
மருத்துவர் சாந்தி
மருத்துவர் சாந்தி

அதேபோல, அரசாங்கமே மக்கள் வெளியே வருவதற்கான வாய்ப்புகளை உருவாக்கக் கூடாது. உதாரணமாக, ரெம்டெசிவிர் மருந்து வாங்குவதற்காக மக்கள் கூட்டமாகக் கூடினார்கள். தற்போது, தனியார் மருத்துவமனைகளிலும் மருந்து கிடைக்கும் என்கிற அறிவிப்பை அரசு வெளியிட்டிருக்கிறது. அது வரவேற்கத்தக்கது. ஆனால், நோயாளிகளின் சரியான விவரங்களுடன் தனியார் நிறுவனங்கள் அதைக் கொள்முதல் அல்லது விநியோகம் செய்யும் வழிமுறைகளை உருவாக்க வேண்டும். அதேபோல, தடுப்பூசியையும் ஒரு நாளைக்கு இரண்டு மாவட்டங்கள் எனப் பிரித்து சுழற்சிமுறையில் செலுத்த வேண்டும்.''

அடுத்த கட்டுரைக்கு