Published:Updated:

ஆசிரியர்களிடம் கை ஓங்கும் மாணவர்கள்... அமைச்சர் அன்பில் மகேஸுக்குச் சில யோசனைகள்!

அமைச்சர் அன்பில் மகேஸ்

11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பதிலாக பி.யூ.சி போன்ற முறை மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும் என்கிற குரல்களும் எழுகின்றன. ஆனால், இவை மட்டுமா தீர்வாகுமா... இன்னும் என்னென்ன செய்ய வேண்டும்?

ஆசிரியர்களிடம் கை ஓங்கும் மாணவர்கள்... அமைச்சர் அன்பில் மகேஸுக்குச் சில யோசனைகள்!

11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பதிலாக பி.யூ.சி போன்ற முறை மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும் என்கிற குரல்களும் எழுகின்றன. ஆனால், இவை மட்டுமா தீர்வாகுமா... இன்னும் என்னென்ன செய்ய வேண்டும்?

Published:Updated:
அமைச்சர் அன்பில் மகேஸ்

கடந்த சில நாள்களாக சமூக வலைதளங்களில் வெளியாகும் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களிடம் அத்துமீறும் வீடியோக்கள் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றன. மாணவர்கள், ஆசிரியர்களிடம் ஆபாசமாகப் பேசுவது, மிரட்டுவது, அடிக்கப்போவது, மேஜை, நாற்காலிகளை உடைப்பது, பேருந்துகளில் தொங்கிக்கொண்டு வருவது என ஒவ்வொரு வீடியோவும் பகீர் ரகம். கொரோனா ஊரடங்கு, சில பஸ் குழப்பங்கள், போதைப்பழக்கம் உள்ளிட்ட பல விஷயங்கள் இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகின்றன. மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும், அதிகமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட விஷயங்கள் தீர்வாக முன்வைக்கப்படுகின்றன. அதிலும், 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பதிலாக பி.யூ.சி போன்ற முறை மீண்டும் கொண்டு வரப்படவே ண்டும் என்கிற குரல்களும் எழுகின்றன. ஆனால், இவை மட்டுமா தீர்வாகுமா, இன்னும் என்னென்ன செய்ய வேண்டும்?

மேஜை, நாற்காலிகளை உடைக்கும் மாணவர்கள்
மேஜை, நாற்காலிகளை உடைக்கும் மாணவர்கள்

குழந்தைகள் நல ஆர்வலர் தேவநேயனிடம் பேசினோம்.

``இதுவரைக்கும் மொத்தமாகவே பத்து வீடியோக்கள்தான் வெளிவந்திருக்கின்றன. அவற்றில் ஐந்து பழைய வீடியோக்கள். ஆனால், ஏதோ ஒட்டுமொத்தப் பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களிடம் அத்துமீறுவதைப்போலவும் குறிப்பாக, அரசுப் பள்ளி மாணவர்கள் அப்படி நடந்துகொள்வதாகவும் சித்தரிக்கப்படுகிறது. அரசுப் பள்ளிகள் என்றாலே மோசமானவை என்கிற பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. இது அடிப்படையிலேயே தவறான ஒரு விஷயம். கொரோனாவுக்குப் பிறகு 16 லட்சம் பேர் அரசுப் பள்ளிகளுக்கு வந்திருக்கிறார்கள். அதனால், தனியார் பள்ளிகளின் சதியாக இருக்குமோ என்கிற அச்சம் எங்களுக்கு இருக்கிறது. தனியார் பள்ளி சார்ந்து இதுவரை ஒரு வீடியோகூட வெளியாகவில்லை, அப்படியே வெளியானாலும் பள்ளியின் பெயர் வெளியில் வராது. நெருக்கடி கொடுத்து எடுத்துவிடுவார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அடுத்ததாக, பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களிடம் அத்துமீறுவதைப்போல வீடியோக்கள் யாருக்காவது கிடைத்தால், உரிய குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகளிடம்தான் அதை ஒப்படைக்க வேண்டுமே தவிர பொதுவெளியில் பகிரக் கூடாது. 1098 அல்லது குழந்தைநலக் காவல் அலுவலரிம் தகவல் சொல்ல வேண்டும். குழந்தைகள்மீது உண்மையான அக்கறை, கரிசனம் உடையவர்கள் அப்படித்தான் நடந்துகொள்வார்கள். மீறி அதை மற்றவர்களிடம் பகிர்வது இளம் சிறார் நீதிச் சட்டத்தின்படி குற்றம். காவல்துறையினர் சமூகத்துக்குத்தான் அறிவுரை சொல்ல வேண்டுமே தவிர, மாணவர்களுக்கு அறிவுரை சொல்லக் கூடாது. அதற்காக மாணவர்கள் செய்வது அனைத்தும் சரியென்று நான் சொல்ல வரவில்லை. ஆனால், சமூகத்தில் எல்லோரும் எந்தவிதப் பிரச்னைகளும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருப்பதுபோலவும், மாணவர்கள் மட்டும்தான் பிரச்னைகளில் ஈடுபடுவதைப்போலவும் ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார்கள். கொரோனா காலகட்டத்தில், குடும்ப உறுப்பினர்களையே கொலை செய்யும் பல செய்திகளை அன்றாடம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். குழந்தைகளும் சூழல்களிருந்துதான் கற்றுக்கொள்கிறார்கள். அதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.

தேவநேயன்
தேவநேயன்

இன்றைய ஆண்ட்ராய்டு காலகட்டத்தில் பெரும்பாலும் தவறான விஷயங்கள்தான் அதிகமாகக் காட்சிக்கு வருகின்றன. பெரியவர்களே என்ன செய்கிறோம் என்பது தெரியாமல் பல விஷயங்களில் சிக்கிக்கொள்ளும்போது வளரிளம் பருவத்தில் இருக்கும் மாணவர்களை நாம் எப்படிக் குற்றவாளிகளாக ஆக்க முடியும்... அவர்களுக்கு முன்பாக தவறுகள்தான் அதிகமாக இருக்கின்றன. தவறுகள்தான் ரோல்மாடல் ஆக்கப்படுகின்றன. அப்படி இருக்கும்போது அவர்கள் அதைத்தான் தேர்வு செய்வார்கள். சமூகத்தில் நிலவும் தவறான விஷயங்களைச் சரிசெய்யாமல், மாணவர்களை மட்டும் குற்றம் சுமத்துவது அடிப்படையில் தவறான ஒரு விஷயம்.

ஆசிரியர்களின் கைகள் கட்டப்பட்டுவிட்டன. அதனால்தான் இது போன்ற விஷயங்கள் நடக்கின்றன என்பது ஒரு கற்பிதம். குழந்தைகளை மையப்படுத்தி வேலை செய்யும் ஆசிரியர்கள் இன்று குறைந்துவிட்டனர். ஆசிரியர்களே உளவியல் ஆலோசனைகளை அளிக்கும் கவுன்சிலர்களாக மாற வேண்டும். அதேபோல, குழந்தைகளுக்கு மதிப்பீட்டுக் கல்வி, வாழ்க்கைத்திறன் கல்வியை வழங்க அரசு முன்வர வேண்டும். பள்ளிகளில் குறைவான ஆசிரியர்கள் போன்ற பல்வேறு சிக்கல்கள் இருப்பது உண்மைதான். அதைக் கண்டிப்பாகச் சரிசெய்தாக வேண்டும். பள்ளிகளுக்கு செல்போன் கொண்டு செல்வதைக் கட்டுப்படுத்த வேண்டும். 11 மற்றும் 12-ம் வகுப்பை, பி.யூ.சி மாதிரி தனியாகக் கொண்டு போய்விட வேண்டும் எனப் பலர் பேசுகிறார்கள். அது தவறானது'' என்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அரசுப்பள்ளி தலைமையாசிரியர் பரமேசுவரியிடம் இந்தச் சிக்கல்கள் குறித்துப் பேசினோம்.

``தேர்வுக்கான பாடத்திட்டம் குறித்துத் தெளிவான அறிவிப்புகள் இல்லாதது ஆசிரியர்களுக்கும் அழுத்தத்தைக் கொடுக்கிறது. அதனால் மாணவர்களுக்கு விதவிதமாக தேர்வுகள் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒன்றரை வருடம் படிக்காமல் இருந்துவிட்டு திடீரெனப் படிக்கச் சொல்லும்போது மாணவர்களுக்கும் ஒருவிதமான நெருக்கடி உண்டாகிறது. தவிர, கொரோனா காலகட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்களில் பெரும்பாலானவர்கள் வேலைக்குச் சென்று திரும்பியிருக்கின்றனர். அங்கே வயதில் மூத்த நபர்களுடன் பழகியதன் மூலம் அவர்களிடமிருந்து பல்வேறு பழக்கவழக்கங்களையும் கற்றுக்கொண்டிருக்கின்றனர். மாணவர்களின் கையில் காசு புழங்குவதால் தவறான பல பழக்க வழக்கங்களுக்கு ஆளாகியுள்ளனர். அதீத சுதந்திரமாக இருந்துவிட்டு, திடீரென பழைய ஒழுங்குக்குள் அவர்களை உடனடியாகக் கொண்டு வரும்போது அதில் சிக்கல் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை பாடங்களை நன்றாகக் குறைத்துவிட்டு பள்ளிக்கே உரிய கட்டுப்பாடுகளுக்குள் அவர்களை அழைத்து வருவதற்கான காலமாக இந்த ஆண்டைப் பயன்படுத்தியிருக்க வேண்டும்.

போதைப்பொருள்களைப் பயன்படுத்தாமல், ஆசிரியர்களிடம் இப்படி நடந்துகொள்ள வாய்ப்பே இல்லை. அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் நடந்த ஆசிரியர்கள் இடமாற்றத்துக்கான கவுன்சலிங்கும் ஒரு காரணம். ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் உருவாகியிருந்த அன்பு துண்டுபட்டு, புதிய ஆசிரியர்கள் தேர்வு நேரத்த்தை, கண்டிப்பைக் காட்டும்போது அதுவும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. பல பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையும் உள்ளது. இது போன்ற விஷயங்களையும் நாம் கவனிக்க வேண்டும்.

பரமேசுவரி
பரமேசுவரி

ஆசிரியர்கள்தான் மாணவர்களைப் பொறுப்பேற்க வேண்டும் என்பது சரிதான். ஆனால், குறைவான ஆசிரியர்களை வைத்துக்கொண்டு எப்படி அதைச் செய்ய முடியும்... பல பள்ளிகளில் ஆசிரியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது. அலுவலக வேலைகளையும் ஆசிரியர்கள் பார்க்கவேண்டியிருக்கிறது. கல்வி மேலாண்மைத் தகவல் மையத்தில் மாணவர்களின் தினசரி நடவடிக்கைகளைப் பதிவுசெய்யும் நடவடிக்கையிலேயே பாதி நேரம் விரயமாகிறது. பல ஊர்களில் நெட்வொர்க் வசதி சரியாக இல்லாததால் விரைந்து முடிக்க இயலாத சூழல்.

ஆசிரியர்களை, மாணவர்களை மட்டும் குறைசொல்லிப் பிரயோஜனம் இல்லை. பெற்றோரும் தங்கள் பொறுப்பைச் செய்ய வேண்டும். இது ஒட்டுமொத்த சமூகத்துக்கான பிரச்னையே தவிர, ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான சிக்கல் மட்டுமல்ல. அடுத்த ஆண்டிலாவது கூடுதலான ஆசிரியர்களையும் அலுவலக வேலைகளுக்குத் தனியாக உதவியாளர்களையும் நியமிக்க வேண்டும். பாடங்கள் குறித்தும் தெளிவான அறிவிப்பு வர வேண்டும். பாடம் தவிர்த்த மாணவர் நலன் சார்ந்த செயல்பாடுகளை ஆசிரியர்கள் பெற்றோருடன் இணைந்து முன்னெடுக்க வேண்டும்'' என்கிறார்.

குழந்தை நேயப் பள்ளிகள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளரும் ஆசிரியருமான சுடரொளி,

``கொரோனா காலம் குழந்தைகளின் வாழ்க்கையில் பல்வேறு சிக்கல்களை உண்டாக்கியிருக்கிறது. இடப்பெயர்வு, வேலையிழப்பு, குடும்பத்தில் உயிரிழப்பு என அவர்கள் பல்வேறு சம்பவங்களைக் கடந்துவந்திருக்கிறார்கள். ஆன்லைனில்தான் வகுப்புகளை கவனித்திருக்கிறார்கள். திடீரென வழக்கமான நடைமுறைக்குள் வருவதால் சில நெருக்கடிகளுக்கு ஆளாகின்றனர். இப்படிப்பட் சூழலில் வரும் மாணவர்களைக் கையாள, ஆசிரியர்களுக்கு முதலில் முறையான பயிற்சிகள் வழங்க வேண்டும் என நாங்கள் தொடர்ந்து கோரிக்கை முன்வைத்துவந்தோம். ஆனால், அரசு கண்டுகொள்ளவில்லை.

முத்துராணி
முத்துராணி

நாங்கள் தனிப்பட்ட முறையில் 800 ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள் வழங்கினோம். அரசு முறையான நடவடிக்கைகள் எடுத்திருந்தால் இது போன்ற சிக்கல்கள் எழுந்திருக்காது. இனியாவது ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.'' என்கிறார்.

குழந்தைகள் நலச் செயற்பாட்டாளர் முத்துராணி,

``பொதுவாக மாணவர்கள் வளரிளம் பருவத்தில், தங்களின் சுயத்தை நிரூபிக்க முயல்வது இயல்பு. அந்த நேரத்தில் ஆசிரியர்களும் பெற்றோர்களும் குழந்தைகளுடன் நேயமாக நடந்துகொள்வது அவசியம். குழந்தைகள் கற்கும் சூழலை மகிழ்ச்சி நிறைந்ததாக அமைக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் மிக எளிதாக பல்வேறு போதைப்பொருள்கள் மாணவர்களுக்கு கிடைக்கின்றன. அது பள்ளிகளுக்கு அருகிலேயே கிடைக்கிறது. அவற்றையெல்லாம் கண்டறிந்து தடைசெய்ய முயற்சி எடுக்க வேண்டும். குழந்தைகள் பெரியவர்களிடமும் சமூகத்துடனும் இருந்துதான் தெரிந்துகொள்கிறார்கள் என்று எண்ணம் நமக்கு இருக்க வேண்டும். அவர்கள் முன் நாம் விழிப்புடனும் இருக்க வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் குழந்தைகளைப் புரிந்துகொண்டு அவர்களுடன் நேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும்'' என்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism