Published:Updated:

``கடந்த ஆட்சியில் போலி நகைகளை வைத்து ரூ.7 கோடி மோசடி" - பேரவையில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள்!

சட்டப்பேரவை
சட்டப்பேரவை

இன்று சட்டப்பேரவையில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...

தமிழக அரசின் நிதிநிலை கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் ஆகஸ்ட் 13-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 13-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. கடந்த 13-ம் தேதி பொது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். 14-ம் தேதி முதன்முறையாக வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

நிதிநிலைக் கூட்டத்தொடரின் 9-வது நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. நேற்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்து முடிந்திருந்தது. இன்றைய தினம் கூட்டுறவுத்துறை மற்றும் உணவு நுகர்வோர்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இன்று கூட்டத்தொடரில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளைப் பார்க்கலாம்.

அதிமுக-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், மதுரையில் பென்னிகுவிக் வாழ்ந்த இல்லத்தை இடித்துவிட்டு தி.மு.க கலைஞர் நூலகம் கட்டுவதாகக் குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்டுப் பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ``குறுக்கீடு செய்வதில் எனக்கு விருப்பம் இல்லை. இருந்தாலும் தவறான கருத்தைப் பதிவுசெய்திருக்கிறார். அந்த ஒன்றுக்கு மட்டும் நான் குறுக்கீடு செய்கிறேன். அந்த இல்லம் பென்னிகுவிக்கின் இல்லமே கிடையாது. பென்னிகுவிக் மரணமடைந்த வருடம் 1911. அந்த இல்லம் கட்டப்பட்ட ஆண்டு 1912-15-ம் ஆண்டு. அந்த இல்லம் பென்னிகுவிக்கின் இல்லமாக இருந்திருக்க வாய்ப்பே கிடையாது" என்றார்.

சட்டமன்றத்தில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
சட்டமன்றத்தில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
Durairaj G

தொடர்ந்து பேசியவர், ``இவ்வளவு தெளிவான விளக்கம் வந்த பிறகு உறுப்பினர் தவறான கருத்தைப் பதிவுசெய்துவிடக் கூடாது என்பதற்காகவே நான் குறுக்கீடு செய்து பேசினேன்" என்றார். அப்போது எழுந்து பேசிய முதல்வர், ``முன்னாள் அமைச்சர் பென்னிகுவிக் இல்லத்தை அப்புறப்படுத்திவிட்டு, கலைஞர் பெயரில் அமையவிருக்கும் நூலகம் கட்டப்படுகிறது என்று கூறியிருக்கிறார். சட்டமன்றத்துக்கு வெளியிலும் இந்த விவகாரம் பேசப்படும்போது பொதுப்பணித்துறை அமைச்சர் விளக்கம் கொடுத்திருக்கிறார். இப்போதும் சொல்கிறேன், நீங்கள் கூறுவதற்கு ஆதாரம் இருந்தால், நிச்சயமாக இந்த அரசு அடிபணியக் காத்திருக்கிறது. ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள்... அதை நாங்கள் மாற்றுவதற்குத் தயாராக இருக்கிறோம். ஒரு தவறான பிரசாரம் செய்யப்படுகிறது. அது சட்டமன்றத்தில் பதிவாகிவிடக் கூடாது என்பதற்காகத்தான் விளக்கத்தைக் கூறுகிறோம்" என்று பேசினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சட்டப்பேரவையில் செல்லூர் ராஜூ பேசுகையில், ``கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட பயிர்க் கடன்களில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. கடந்த பத்து ஆண்டுகளில் முறைப்படி பயிர்க்கடன்களை வழங்கியுள்ளோம். நியாய விலைக் கடைகளில் தினக்கூலிகளுக்குக் கடந்த ஆட்சியில் வழங்கிய 200 ரூபாயைத் தொடர்ந்து வழங்க வேண்டும்" என்றும் வலியுறுத்தினார். அவர் பேசும்போது சபாநாயகர் அப்பாவுவிடம், ``நானும் ஒரு துறையின் அமைச்சராக பத்து வருடங்கள் இருந்திருக்கிறேன். கொஞ்சம் பேச நேரம் கொடுங்கள் குருவே" என்று கூறியபோது அவையில் சிரிப்பலை எழுந்தது.

சட்டமன்றத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன்
சட்டமன்றத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன்

``கூட்டுறவு நகைக்கடனில் முறைகேடு நடந்திருப்பின் அது களையப்பட வேண்டும்" என்று திமுக உறுப்பினர் பேசினார். அப்போது பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், ``அ.தி.மு.க ஆட்சியில் தாய்கோ வங்கி மூலம் சிறு, குறு நிறுவனங்கள் சார்பில் வங்கிகளில் போலி நகைகளை வைத்து ரூ.7 கோடி மோசடி நடந்திருக்கிறது. சேலம் மற்றும் நாமக்கல் பகுதிகளில் அதிக அளவு மோசடி நடைபெற்றுள்ளது. 45 கூட்டுறவு வங்கிகளில் ஆய்வு நடைபெற்றுவருகிறது" என்று கூறினார்.

கூட்டுறவுத்துறை மானியக் கோரிக்கை கொள்கை விளக்கக் குறிப்பை அந்தத் துறையின் அமைச்சர் ஐ.பெரியசாமி பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அப்போது, ``வாடகைக் கட்டடங்களில் இருக்கும் நியாய விலைக் கடைகளுக்கு, புதிய கட்டடங்கள் கட்டித்தரப்படும். கூட்டுறவு மருந்தகங்கள் 600-ஆக உயர்த்தப்படும். கூட்டுறவுத்துறையில் காலியாகவிருக்கும் 3,393 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். கூட்டுறவுச் சங்கங்களில் சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் கலைக் கல்லூரி கட்டப்படும். கைம்பெண், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு ஐந்து சதவிகிதம் கடன் வழங்கப்படும்" என்றார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமி
முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமி

தொடர்ந்து பேசியவர், ``மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்களில் வட்டிவிகிதம் 12-லிருந்து 7 சதவிகிதமாகக் குறைக்கப்படும். 2021 - 2022-ம் ஆண்டு கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக ரூ.11,500 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன் திட்டத்தைக் கொண்டுவந்த பிதாமகன் முத்தமிழறிஞர் கலைஞர்தான். கூட்டுறவு வங்கியில் வழங்கப்படும் கடன் வரம்பு 10 லட்சத்திலிருந்து 15 லட்சமாக உயர்த்தப்படும்" போன்ற பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தார்.

உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கொள்கை விளக்கக் குறிப்பை அந்தத் துறையின் அமைச்சர் சக்கரபாணி பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அப்போது, ``கடந்த 2007-ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அறிமுகம் செய்த பொது விநியோகத் திட்டம் வரும் டிசம்பர் 2021-ம் ஆண்டு வரை நீட்டித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 140 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும். மக்கள் எளிதில் சென்றுவர முடியாத பகுதிகள் மற்றும் மலைப்பகுதிகளில் நியாய விலைக் கடைகள் திறக்க சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. தமிழகத்தில் தனியாக அல்லது குடும்பமாக வசித்துவரும் திருநங்கைகளுக்கு ஜூலை 31ம் தேதி வரை 2,950 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் சக்கரபாணி
முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் சக்கரபாணி

மேலும், ``கடந்த மே மாதம் முதல் தற்போதுவரை 3,38,512 பேருக்கு புதிதாக மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு நடந்துள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது" என்று பேசினார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ``2,000 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை ஒன்றிய அரசிடமிருந்து பெறத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை" என்றார். அப்போது பேசிய அமைச்சர் சக்கரபாணி,``2018-2021 நிதியாண்டுகளில் புள்ளிவிவரங்களைச் சரியாகப் பதிவேற்றம் செய்யாததே நிலுவைத் தொகை பெறுவதில் தாமதம் ஏற்படக் காரணம்" என்று பதிலளித்தார். கூட்டுறவுத்துறை மானியக் கோரிக்கையின்போது பேசிய செல்லூர் ராஜூ , ``கடந்த 2011-2021-ம் ஆண்டு வரை 6,98,000 விவசாயிகளுக்கு 60,640 கோடி ரூபாய் வட்டியில்லாக் கடன் வழங்கப்பட்டுள்ளது’’ என்று கூறினார்.

சபாநாயகர் அப்பாவு
சபாநாயகர் அப்பாவு
`` என்னுடைய தந்தை தீவிர கலைஞர் பக்தர்" - நெகிழ்ந்த ஓ.பி.எஸ்! பேரவையில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள்

அப்போது பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, ``கடந்த 2001-2006 ஆண்டில் 23 மத்திய கூட்டுறவு வங்கிகளில் 13 வங்கிகள் நஷ்டத்தில் இயங்கியது. 2006-ம் ஆண்டு திமுக ஆட்சியில் 23 வங்கிகளும் லாபத்தில் இயங்கின. திமுக ஆட்சியில் 4,481 தொடக்கக் கூட்டுறவு வங்கிகளில் 3,900 கூட்டுறவு வங்கிகள் லாபத்தில் இயங்கின. வட்டியில்லா கடன் திட்டம் மூலம், 2,30,000 பேருக்கு 120 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. தஞ்சையில் குறுவைச் சாகுபடிக்கு 37 கோடி ரூபாய்க் கடன் வழங்கப்பட்டிருந்தது. இது திமுக ஆட்சியில் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டு 80 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டிருந்தது" என்று பதிலளித்திருந்தார்.

எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ``திமுக கடந்த 22 ஆண்டுகளாகக் கூட்டுறவு வங்கி நிர்வாகிகளை நியமிக்கவில்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றம் வரை சென்று சட்டப் போராட்டம் நடத்தி புதிய உறுப்பினர்களை நியமிக்க ஆணை பெற்றார்" என்று குற்றம் கூறினார். அதற்கு பதில் கூறிய அமைச்சர் ஐ.பெரியசாமி, ``புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று திமுக ஆட்சியில்தான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக ஆட்சியில்தான் உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை" என்று கூறினார்.

சட்டப்பேரவையில் அமைச்சர்  ஐ.பெரியசாமி
சட்டப்பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி

மேலும், ``கடந்த அதிமுக ஆட்சியில் நபார்டு வங்கி உதவியோடு 4,000 கிடங்குகள் கட்டினார்கள். அந்த 4,000 கிடங்குகளும் காலியாக இருந்தன. தற்போது திமுக ஆட்சிக்கு வந்த இந்த மூன்று மாதங்களில் இந்தக் கிடங்குகளில் 5 லட்சம் டன் நெல் கையிருப்பு வைக்கும் அளவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது. மக்களுக்குத் தரமான அரிசியை வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் கூறியிருக்கிறார்" என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு