Published:Updated:

``நாங்களும் மறக்கவில்லை. நாட்டு மக்களும் மறக்கவில்லை"- இன்று பேரவையில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள்!

பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

இன்று சட்டப்பேரவையில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்தது. தமிழக அரசின் நிதிநிலை கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் ஆகஸ்ட் -13-ம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்தக் கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 21-ம் தேதிவரை நடைபெறவிருக்கிறது. கடந்த 13-ம் தேதி பொது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து 14-ம் தேதி முதன்முறையாக விவசாயத்துக்கென தனி பட்ஜெட் கொண்டுவரப்பட்டது. அந்த வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

சபாநாயகர் அப்பாவு
சபாநாயகர் அப்பாவு

கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், சபாநாயகரும் சட்டப்பேரவைத் தலைவருமான அப்பாவுவும், துணைச் சபாநாயகரான பிச்சாண்டியும் இல்லாத நேரத்தில் பேரவையை நடத்தும் மாற்றுத் தலைவர்களை அறிவித்தார்கள். ``அன்பழகன், எஸ்.ஆர்.ராஜா, உதயசூரியன், டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் மாற்றுத் தலைவர்களாகச் செயல்படுவார்கள்" என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

சமீபத்தில் மறைந்த சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மதுசூதனன், திண்டிவனம் ராமமூர்த்தி உள்ளிட்ட ஒன்பது பேருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. மேலும், ஸ்டான் ஸ்வாமி, மதுரை ஆதீனம் உள்ளிட்ட ஐந்து பேருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றபட்டது. அடுத்த மூன்று நாள்கள் நிதிநிலை அறிக்கையின் மீதான பொது விவாதம் நடைபெறவிருக்கிறது. இன்றைய கூட்டத்தொடரில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் பேசினார்கள். அவர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்களின் பதிலுரைகளும் இடம்பெற்றன. அவற்றில் சில முக்கிய விவாதங்கள்:

``செம்மொழித் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் கட்டடப் பணிகள் பெரும்பாக்கத்தில் நடைபெற்றுவருகின்றன. விரைவில் முதல்வர் அந்த கட்டடத்தைத் திறந்துவைப்பார். அங்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவாக்கிய பாவேந்தர் நூலகமும் இடம்பெறும்" - அமைச்சர் தங்கம் தென்னரசு

கடந்த அதிமுக ஆட்சியின்போது, பொருளாதார நெருக்கடியிலும் விலையில்லா திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாகவும், நிதிநிலை அறிக்கையில் பணவீக்கம் அதிகரித்திருப்பதையும் குறிப்பிட்டு ஆர்.பி.உதயகுமார் பேசினார். இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ``இன்றைய நிலையையும், ஐந்தாண்டுக்கு முன்னர் இருந்த மதிப்பையும் ஒப்பிடக் கூடாது’’ என்றும், ``திட்டங்களுக்கு முறையாக நிதி ஒதுக்கீடு செய்யாததால் செயல்திறன் குறைந்திருப்பதுடன் உற்பத்தி கடன் அதிகரித்துள்ளது. இதனால், பணவீக்கம் அதிகரித்துள்ளது. மேலும், விதி 110-ன் கீழ் அதிமுக அறிவித்த திட்டங்களின் செயல்படுத்தப்பட்ட மற்றும் செயல்படுத்தப்படாத திட்டங்களின் நிலை குறித்து பேரவையில் விரைவில் அறிவிக்கப்படும்" என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற காலம் தாழ்த்தவே இந்த வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டதா?’’ என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர். இந்தக் கேள்விக்குத் தமிழக முதல்வர் ஸ்டாலின் பதிலளிக்கும் வகையில், ``தேர்தல் நேரத்தில் திமுக வழங்கிய வாக்குறுதிகளையெல்லாம் நிறைவேற்ற முடியாத நிலையில் பின்வாங்குவதற்கான முயற்சி என்று பொருள்படப் பேசியுள்ளனர். நான் நேற்று முன்தினம் பேசும்போது கூறியிருந்தேன். எந்தக் காரணம் கொண்டும் நாங்கள் வழங்கியுள்ள வாக்குறுதிகளிலிருந்து பின்வாங்க மாட்டோம். நீங்கள் கேட்கலாம், விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்வோம். நகைக்கடனைத் தள்ளுபடி செய்வோம் என்றெல்லாம் சொன்னீர்களே என்று கேட்கலாம். வெள்ளை அறிக்கையில் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. நிதிநிலை அறிக்கையிலும் நிதியமைச்சர் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார். நகைக்கடன் தள்ளுபடியை நாங்கள் நிறைவேற்ற நினைத்தாலும், அதில் பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. பயிர்க்கடன் தள்ளுபடியிலும் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றிருக்கிறது. அவற்றையெல்லாம் முறையாகச் சரிசெய்து, பின்னர் நிச்சயமாக வழங்கப்படும் என்று உறுதிமொழி கூறியிருக்கிறோம்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்
`100 நாட்கள் ஆட்சி நிறைவு’ - சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியது என்ன?!

உங்களின் ஆட்சிக்காலத்தில், நீங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றினீர்களா? நாங்களும் மறக்கவில்லை. நாட்டு மக்களும் மறக்கவில்லை. அளித்துள்ள உறுதிமொழிகளில் சிலவற்றை நிறைவேற்றியிருக்கிறீர்கள். ஆனால், பல உறுதிமொழிகளை நிறைவேற்றவில்லை. உதாரணமாக, இலவச செல்போன் தரப்படும், ஏழை மக்களுக்கு அம்மா மினரல் வாட்டர் வழங்கப்படும், குறைந்த விலையில் மளிகைப் பொருள்கள், அனைவருக்கும் அம்மா வங்கி அட்டை, கோ-ஆப் டெக்ஸ் 500 ரூபாய் கூப்பன், சென்னையில் மோனோ ரயில் என்று பல்வேறு வாக்குறுதிகளைத் தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தீர்கள்... செய்தீர்களா? நிறைவேற்றாத பெரிய பட்டியலே உள்ளது. எங்கெல்லாம் முறைகேடு நடந்திருக்கிறது என்பதைக் கூட்டுறவுத்துறை அமைச்சர் மானியக் கோரிக்கை விவாதத்தில் பதிலளித்துப் பேசும்போது நிச்சயமாக ஆதாரத்தோடு எடுத்துக் கூறுவார்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு