Published:Updated:

`துரைமுருகனின் அழுகை; கொடநாடு தீர்மானம்' - இன்று பேரவையில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள்

பேரவையில் துரைமுருகன்
பேரவையில் துரைமுருகன்

இன்று சட்டப்பேரவையில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு:

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழக அரசின் நிதிநிலை கூட்டத் தொடர் கலைவாணர் அரங்கில் ஆகஸ்ட் -13-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. கடந்த 13-ம் தேதி பொது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து 14-ம் தேதி முதல் முறையாக வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின்
சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின்

நிதிநிலைக் கூட்டத்தொடரின் ஏழாவது நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடந்து முடிந்திருந்தது. மூன்று நாள்கள் அரசு விடுமுறைக்குப் பின்னர் இன்று கூடிய கூட்டத்தொடரில், சட்டமன்றத்தில் முதன்முறையாக நீர்வளத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இன்று கூட்டத்தொடரில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளைக் காணலாம்.

நீர்வளத்துறையின் மீதான மானியக் கோரிக்கை விவாதம் தொடங்கும் முன்பு முதல்வர் ஸ்டாலின் பேசினார். ``முதல் மானிய கோரிக்கையாக நீர்வளத்துறை எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்தத் துறையின் அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கக்கூடியவர், திமுக-வின் பொதுச் செயலாளராகவும், இந்த அவையின் முன்னவராகவும், என் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய அண்ணன் துரைமுருகன் அவர்களின் துறையின் மானியக் கோரிக்கை இன்று தாக்கல் செய்யப்படவிருக்கிறது. நூற்றாண்டு வரலாறு கொண்டிருக்கும் இந்த சட்டப்பேரவையில், அரை நூற்றாண்டுக்கு முன்பு வந்தவர்தான் அவர். ஐம்பது ஆண்டுகளாக அவை நடவடிக்கைகளில் பங்கேற்றிருப்பவர் துரைமுருகன்" என்றார்.

சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின்
சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின்

மேலும், `` அவர் கலைஞரின் பக்கத்தில் இல்லை. அவரின் இதயத்திலே ஆசனம் போட்டு அமர்ந்திருப்பவர் அண்ணன் துரைமுருகன். அந்த இடம் எல்லாருக்கும் கிடைத்துவிடாது. மனதில்பட்டத்தை உறுதியுடன் கூறும் தன்மைகொண்டவர். எந்தத் துறையில் எந்தப் பதவி கொடுத்தாலும், அதில் திறம்படப் பணியாற்றுபவர். கலைஞர், அன்பழகன் இடத்தில் துரைமுருகனை வைத்திருக்கிறேன். ஒரு மாபெரும் அரசியல் இயக்கத்திலிருந்துகொண்டு எனக்கு வழிகாட்டியாக இருக்கக்கூடியவர்தான் அவர். தமிழக சட்டசபையில் ஐம்பது ஆண்டுகள் கண்டு பொன்விழா நாயகராக அமைச்சர் துரைமுருகன் இருக்கிறார். அவரை இந்தப் பேரவை மனதாரப் பாராட்டுகிறது என்ற தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன். அனைத்து உறுப்பினர்களும் கட்சி எல்லைகளைக் கடந்து இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றித் தர வேண்டும் என்று பேரவைத் தலைவர் மூலமாகக் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்போது பேசிய அமைச்சர் துரைமுருகன். ``என் வாழ்நாளில் எத்தனையோ ஆயிரக்கணக்கான மேடைகளில் பேசியிருக்கிறேன். ஆனால், வார்த்தைகளைத் தேடி நான் அலைந்தது இல்லை. இன்றைக்கு எனக்கு வார்த்தையும் வரவில்லை, என்ன பேசுவது என்றும் தெரியவில்லை. என் வாழ்க்கையில் எத்தனையோ வெற்றிகள் தோல்விகள் நடைபெற்றிருந்தாலும். எல்லாவற்றுக்கும் முதன்மையாக ஒரு தீர்மானத்தை என் தலைவர் கொண்டுவந்திருப்பதும், இந்த அவையிலுள்ள எல்லா கட்சித் தலைவர்களும், ஒட்டுமொத்தமாக என்னைப் பாராட்டியிருப்பதும் என் நெஞ்சத்தை நெகிழ்ச்சியடையச் செய்திருக்கிறது. நான் சிறிதும் எண்ணிப் பார்க்கவில்லை, இப்படி ஒரு தீர்மானம் இன்று கொண்டுவரப்படும் என்று. பொதுவாக, எங்கள் தலைவர் எதையும் அவசரப்பட்டு வெளிப்படையாகப் பேசுபவர் அல்ல" என்றார்.

சட்டப்பேரவையில் துரைமுருகன்
சட்டப்பேரவையில் துரைமுருகன்

தொடர்ந்து பேசியவர், ``இன்று நான் அறைக்கு வந்து அவரோடு பேசிக்கொண்டிருக்கும்போதுகூட இதைப் பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை. தலைவர் என்மீது காட்டிய பாசத்தைப் பார்த்துக் கிறுகிறுத்துப் போயிருக்கிறேன். என் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு நன்றிக்கடன் ஆற்றுவதைத் தவிற வேறெதுவும் எனக்குத் தெரியவில்லை. எல்லா கட்சித் தலைவர்களும் என்னைப் பாராட்டியுள்ளீர்கள், அதற்கு என்ன கைம்மாறு செய்வது என்று தெரியவில்லை. முதன்முறையாக எனக்குப் பேசத் தெரியவில்லை என்ற ஒப்புதல் வாக்குமூலம் தருகிறேன் நான். எந்த நம்பிக்கையில் என்னை வாழ்த்தினீர்களோ, அந்த நம்பிக்கைக்குச் சிறிதளவும் சேதாரம் ஏற்படாதவாறு மீதமுள்ள என் வாழ்நாளை, உங்களின் அனைவரின் மதிப்பையும் மரியாதையும் பெற்று வாழ்கிற அளவுக்கு வாழ்ந்து காட்டுவேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். என் மூச்சிருக்கும் வரையில் இந்த இயக்கம், அதுவரையில் நீங்கள் என் தலைவர்." என்று உணர்ச்சிவசமாகப் பேசியிருந்தார்.

துரைமுருகனைப் பாராட்டி முதல்வர் கொண்டுவந்த தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி உறுப்பினர்களான ஓ.பி.எஸ் மற்றும் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரும் பேசினர். அப்போது பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பி.எஸ், ``துரைமுருகன் அனைவரிடத்திலும் பாசம் காட்டக்கூடியவர். ஒரே மாதிரி நடந்துகொள்பவர். ஒரு சட்டமன்ற உறுப்பினர் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு துரைமுருகன் ஒரு சிறந்த உதாரணம். 2001-ம் ஆண்டு முதல் அவரின் நடவடிக்கைகளைப் பார்த்துவருகிறேன். உயர்ந்த உள்ளத்துக்குச் சொந்தக்காரர்" என்றார்.

சட்டப்பேரவை
சட்டப்பேரவை

நீர்வளத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின்போது அந்தத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பு வெளியிடப்பட்டது. இதில், மாநிலம் முழுவதும், ஆறுகள், ஓடைகளில் சாத்தியமுள்ள இடங்களின் குறுக்கே தொடர் தடுப்பணைகள் அமைக்கப்படவிருக்கின்றன. இதன் முதற்கட்டமாக, காவிரி, கொள்ளிடம், தாமிரபரணி போன்ற ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்படும். காவிரி டெல்டா மாவட்டங்களில் 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 647 இடங்களில் தூர்வார கடந்த மே மாதம் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. வரும் பத்து ஆண்டுகளில் 1,000 தடுப்பணைகள் கட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்லணைக் கால்வாய் திட்டப்பணிகள் 24 சதவிகிதம் நிறைவடைந்துள்ளன. இந்தப் பணிகளில் கால்வாய் கட்டமைப்பு தானியங்கியாகவும், நீர் ஓட்டத்தைக் கட்டுப்படுத்த நவீன தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படும். சென்னை நீர் ஆதாரமான செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் ஏரிகள் 20.44 கோடி ரூபாய் செலவில் தூர்வாரப்படும். 9.9 கோடி ரூபாய் செலவில் செங்குன்றம் ஏரி தூர்வாரப்பட்டுவருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. செங்கல்பட்டிலுள்ள கொளவாய் ஏரி மீட்டெடுக்கப்பட்டு, அது விரிவாக்கப்பட்ட புறநகர்ப் பகுதிகளுக்குக் குடிநீர் வழங்க 60 கோடி ரூபாயில் பணிகள் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

``பேச வார்த்தையில்லை; ஸ்டாலினைக் கட்டிப்பிடித்து அழுதிருப்பேன்!" - துரைமுருகன் உருக்கம்
முதல்வர் பேசுகையில், `` கடந்த அதிமுக ஆட்சியில் அண்ணா நூற்றாண்டு நூலகம் திருமணங்களுக்கு வாடகைக்குவிட்டுப் பாழ்படும் சூழல் ஏற்பட்டது. நீதிமன்றம் வரை சென்று அங்கு நிகழ்ச்சிகள் நடத்துவதற்குத் தடை உத்தரவை நாங்கள் பெற்றுவந்தோம். அதைச் சீர்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன" என்று கூறியிருந்தார்

கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாகச் சட்டப்பேரவை விதி எண் 55-ன் கீழ் கவன ஈர்ப்பு தீர்மானத்தை எடுத்துக்கொள்ள காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை கோரிக்கை வைத்தார். அதற்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் பதில் வழங்குவார். இந்த மனுவை செல்வப்பெருந்தகை சபாநாயகரிடம் வழங்கியுள்ளார். மனு மீதான விவாதம் குறித்து சபாநாயகர் அப்பாவுதான் இறுதிமுடிவு எடுப்பர்.

2015-ம் ஆண்டு சென்னையில் வெள்ளம் ஏற்பட்டதற்குக் காரணம் என்ன என்பது குறித்த விவாதம் சட்டமன்றத்தில் எழுந்தது. அப்போது பேசிய திமுக உறுப்பினர் நந்தகுமார், ``கடந்த அதிமுக ஆட்சியில் கால்வாய்கள் சரியாகத் தூர்வாராததுதான் காரணம் . இரண்டு மணி நேரம் மழை பெய்ததற்கே சென்னை தத்தளிக்கிறது’’ என்று கூறினார். அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, ``செம்பரம்பாக்கம் ஏரி மற்றும் அதற்குக் கீழ் இருந்த ஏரிகள் நிரம்பியதும்தான் காரணம்" என்று கூறினார்.

செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை

அப்போது, காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை பேசியபோது, செம்பரம்பாக்கம் ஏரியைத் திறக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் அன்றைய முதல்வர் உத்தரவுக்குக் காத்திருந்ததாகவும், ஒரு நாளில் அதிக அளவு நீர் ஏரியிலிருந்து திறந்துவிடப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார். இதை மறுத்த எதிர்க்கட்சி தலைவர், ``அணைகளோ, ஏரிகளோ நிரம்பும்போது அதிகாரிகளே திறந்துவிடுவதுதான் நடைமுறை. பாசனத்துக்கு நீர் திறக்கும்போது மட்டும்தான் முதல்வரின் அனுமதி தேவை" என்று கூறியிருந்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு