Published:Updated:

காங்கிரஸ்: `மோடி அரசின் மோசமான சதியைத் தோற்கடிக்க வேண்டும்!' - சோனியா காந்தி

சோனியா காந்தி
சோனியா காந்தி

மோடி அரசாங்கம் தற்போது அதன் அரசியலமைப்புப் பொறுப்புகளைக்கூட மதிக்கத் தவறிவிட்டது. ஜி.எஸ்.டி இழப்பீட்டின் பங்கு மாநிலங்களுக்கு மறுக்கப்படுகிறது. அரசாங்கம் தனது அரசியலமைப்புக் கடமைகளை நிராகரித்தால், மாநில அரசுகள் மக்களுக்கு எவ்வாறு உதவ முடியும்?

பீகார், மத்தியப்பிரதேச இடைத்தேர்தல்களை சந்திக்கவிருக்கும் நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, `விவசாயத்துக்கு எதிரான கறுப்புச் சட்டங்கள், பட்டியலினத்தவர்கள் மீதான அட்டூழியங்கள் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வீழ்ச்சி என இந்தியாவின் பொருளாதார நிலையை’ச் சுட்டிக்காட்டி பா.ஜ.க அரசைக் கடுமையாகச் சாடியிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியில் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் பொதுச்செயலாளர்கள் மற்றும் மாநில காங்கிரஸின் மேலிடப் பொறுப்பாளர்கள் கூட்டம் நேற்று காணொளிவாயிலாக நடைபெற்றது. அந்தக் கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமை தாங்கினார். அப்போது பேசிய சோனியா காந்தி, `இந்தியா, மிகவும் இக்கட்டான காலங்களைக் கடந்து செல்கிறது’ என்றும், `சதி வேலைகளில் ஈடுபடும் பா.ஜ.க அரசைத் தோற்கடிக்க வேண்டும்’ என்றும் பேசினார்.

சோனியா காந்தி
சோனியா காந்தி

நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, ``கோடிக்கணக்கான விவசாயத் தொழிலாளர்கள், குத்தகை விவசாயிகள், சிறு, குறு விவசாயிகள், தொழிலாளர்கள், சிறிய கடைக்காரர்கள் ஆகியோரின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றன. மோடி அரசின் இந்த மோசமான சதித்திட்டத்தை தோற்கடிக்க காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து கைகோத்துப் பாடுபட வேண்டும்” என்றார்.

பொருளாதாரம் குறித்துப் பேசிய சோனியா காந்தி, ``மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும், பிற பொருளாதாரக் குறியீடுகளிலும் நாடு இது போன்ற கடும் வீழ்ச்சியைக் கண்டதில்லை. அதேநேரத்தில் சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் அனைத்தும் மூடப்படுகின்றன. இந்தியர்களின் கடின உழைப்பு, அடுத்தடுத்த காங்கிரஸ் அரசாங்கத்தால் கடினமாகக் கட்டமைக்கப்பட்ட இந்தியப் பொருளாதாரத்தை பா.ஜ.க அரசாங்கம் ஒரேநேரத்தில் இடித்துவிட்டது” என்றார்.

மேலும், ``மோடி அரசாங்கம் தற்போது அதன் அரசியலமைப்பு பொறுப்புகளைக்கூட மதிக்கத் தவறிவிட்டது. ஜி.எஸ்.டி இழப்பீட்டின் பங்கு மாநிலங்களுக்கு மறுக்கப்படுகிறது. அரசாங்கம் தனது அரசியலமைப்புக் கடமைகளை நிராகரித்தால், மாநில அரசுகள் மக்களுக்கு எவ்வாறு உதவ முடியும்?” என்று கேள்வி எழுப்பிய சோனியா, ``மத்திய அரசு பொருளாதார அராஜகம் செய்வதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு" என்றார்.

கோவிட் -19 தொற்றுநோயை மோடி அரசாங்கம் கையாளுவதை விமர்சித்துப் பேசிய சோனியா காந்தி, ``மிகப்பெரிய, திட்டமிடப்படாத, நிர்வகிக்கப்படாத கொடூரமான கையாளுதல் இது’’ என்றார். மேலும், மக்களின் துயரங்களில் மோடி அரசாங்கம் `ஊமைப் பார்வையாளராக' மட்டுமே இருப்பதாகக் குற்றம்சாட்டினார்.

21 நாள்களில் கொரோனாவை முறியடிப்பதாகப் பிரதமர் கூறினார். ஆனால், இப்போது நாடு தன்னைத் தானே பாதுகாத்துக்கொள்ளுமாறு விட்டுவிட்டார். தனது பொறுப்பை தட்டிக்கழித்துவிட்டார். கொரோனாவை ஒடுக்க எவ்விதக் கொள்கையோ, வியூகமோ அரசிடம் இல்லை என்றார்.

சோனியா காந்தி
சோனியா காந்தி

மேலும், சோனியா கூறுகையில், ``பட்டியலினத்தவர்கள் மீதான அட்டூழியங்கள் ஒரு புதிய உச்சத்தை எட்டியிருக்கின்றன. சட்டத்தை மதித்து, இந்தியாவின் மகள்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்குவதற்கு பதிலாக, பா.ஜ.க அரசாங்கம் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருக்கிறது. ஒடுக்கப்பட்ட குடும்பங்களின் குரலை அரசே அடக்குகிறது. இது ராஜதர்மமா?” என்று கேள்வி எழுப்பினார்.

கட்சி நிர்வாகிகளின் இந்தச் சந்திப்பு பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கும், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் இடைத்தேர்தல்களுக்கும் முன்னதாக நடைபெற்றிருக்கிறது. தேர்தல் பிரசாரத்தின்போது நரேந்திர மோடி அரசாங்கத்தின் `உழவர் எதிர்ப்பு மற்றும் தொழிலாளர் எதிர்ப்பு முகத்தை’ உயர்த்துவதாக கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர். மேலும், 19 வயது பட்டியலினச் சிறுமி, நான்கு பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட ஹத்ராஸ் சம்பவப் பிரச்னையை எழுப்புவதன் மூலம் மத்திய மற்றும் மாநிலங்களில் பா.ஜ.க தலைமையிலான அரசாங்கத்தின் `பட்டியலின எதிர்ப்பு’ கொள்கைகளையும் முன்னிலைப்படுத்தலாம் என்றும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு