Published:Updated:

``எத்தகைய தியாகத்துக்கும் தயார்” - சோனியா காந்தி... காரிய கமிட்டிக் கூட்டத்தில் நடந்தது என்ன?

காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டம்

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அடைந்த தோல்வி குறித்து, சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸின் காரிய கமிட்டிக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

``எத்தகைய தியாகத்துக்கும் தயார்” - சோனியா காந்தி... காரிய கமிட்டிக் கூட்டத்தில் நடந்தது என்ன?

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அடைந்த தோல்வி குறித்து, சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸின் காரிய கமிட்டிக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

Published:Updated:
காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டம்

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் கடந்த 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கையோடு நடந்து முடிந்தது. இதில், காங்கிரஸ் கட்சி, ஒரு மாநிலத்தில்கூட ஆட்சியைப் பிடிக்க முடியாமல் தோல்வியடைந்திருக்கிறது. அதிலும் முக்கியமான மாநிலமாகப் பார்க்கப்பட்ட உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் வெறும் இரண்டு இடங்களை மட்டுமே பெற்று படுதோல்வியைச் சந்தித்தது. மேலும் பஞ்சாப்பில் ஏற்கெனவே இருந்த ஆட்சியைக்கூட தக்கவைத்துக்கொள்ளவில்லை. இதில் பா.ஜ.க., பஞ்சாப்பை தவிர்த்து மற்ற நான்கு மாநிலங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் பஞ்சாப்பில் 92 இடங்களைக் கைப்பற்றிய ஆம் ஆத்மி அங்கு முதன்முறையாக ஆட்சியமைக்கவுள்ளது.

காங்கிரஸ்
காங்கிரஸ்

இதையடுத்து காங்கிரஸ் தலைமை முன்னதாக அறிவித்தபடி, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் காரிய கமிட்டிக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி, பா.சிதம்பரம், பிரியங்கா காந்தி உட்பட முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொண்டனர். மேலும் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் உட்பட ஐந்து மூத்த காங்கிரஸ் தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கட்சியின் தோல்விக்கான காரணங்கள், எதிர்காலத் திட்டங்கள், கட்சியில் மேற்கொள்ளவேண்டிய சீர்திருத்தங்கள், நிர்வாகரீதியிலான உட்கட்சித் தேர்தல் தொடர்பாக காங்கிரஸின் காரிய கமிட்டிக் கூட்டத்தில் பேசப்பட்டன. நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல் தோல்விக்கு தாங்கள்தான் காரணம் என காரிய கமிட்டி கருதினால் கட்சியின் நலனுக்காக எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயார் என சோனியா காந்தி தெரிவித்ததாகவும் தகவல் வெளியானது. எனினும், சோனியா காந்தி மீது தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாக காரிய கமிட்டித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சோனியா, ராகுல், பிரியங்கா
சோனியா, ராகுல், பிரியங்கா

காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டிக் கூட்டத்துக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களிடம், ``காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா எங்களை வழிநடத்தி, எதிர்கால நடவடிக்கைகளை எடுப்பார். அவரது தலைமையின் மீது அனைவருக்கும் நம்பிக்கை உள்ளது” எனத் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கூட்டத்துக்குப் பிறகு வெளியான அறிக்கையில், “ஐந்து மாநிலங்களின் சமீபத்திய சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இந்திய தேசிய காங்கிரஸுக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன. எங்களின் வியூகத்திலுள்ள குறைபாடுகள் காரணமாக, நான்கு மாநிலங்களில் பாஜக மாநில அரசுகளின் தவறான ஆட்சியை திறம்பட அம்பலப்படுத்தவும், தலைமை மாற்றத்தை ஏற்படுத்திய குறுகிய காலத்தில் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சிக்கு எதிரான விஷயங்களைச் சமாளிக்கவும் முடியவில்லை என்பதைக் கட்சி ஏற்றுக்கொள்கிறது.

இன்று நாட்டில் நிலவும் அரசியல் யதேச்சதிகாரத்துக்கு எதிரான லட்சகணக்கான இந்தியர்களின் நம்பிக்கையை காங்கிரஸ் கட்சி பிரதிநிதித்துவப்படுத்துகிறது. கட்சி, தனது மகத்தான பொறுப்பை முழுமையாக உணர்ந்துள்ளது.

காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டம்
காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டம்

கட்சிக்காகவும், அதன் வேட்பாளர்களுக்காகவும் அயராது உழைத்த ஐந்து மாநிலங்களிலுள்ள காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தலைவர்களுக்கு காங்கிரஸ் காரிய கமிட்டி தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

சமீபத்திய சட்டமன்றத் தேர்தல்களின் தேர்தல் தீர்ப்பைப் பணிவுடன் ஏற்கும் அதே வேளையில், காங்கிரஸ் கட்சி தனது தொண்டர்களுக்காகவும் இந்திய மக்களுக்காகவும் தொடர்ந்து விழிப்புடனும் துடிப்பான எதிர்க்கட்சியாகவும் இருக்கும் என்று உறுதியளிக்கிறது. 2022, 2023-ம் ஆண்டு தேர்தல் நடைபெறும் மாநில தேர்தல்களிலும் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல்களிலும், சவால்களை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி முழுமையாகத் தயாராக இருக்கும்.

காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டம்
காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டம்

சோனியா காந்தியின் தலைமையின் மீதான நம்பிக்கையை காங்கிரஸ் காரிய கமிட்டி ஒருமனதாக உறுதிப்படுத்துகிறது. காங்கிரஸ் தலைவர் முன்னணியிலிருந்து வழிநடத்தவும், நிறுவன பலவீனங்களை நிவர்த்தி செய்யவும், அரசியல் சவால்களை எதிர்கொள்ளத் தேவையான மற்றும் விரிவான நிறுவன மாற்றங்களை ஏற்படுத்தவும் கேட்டுக்கொள்கிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கட்சியின் அமைப்புத் தேர்தல் நடத்தப்படும்வரை காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தொடர்வார் என்றும், ஏப்ரல் மாதத்தில் சிந்தனைக் கூட்டம் நடத்தப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டிருப்பதாகக் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். அதற்கும் முன்னதாக காங்கிரஸ் காரிய கமிட்டி மீண்டும் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism