Published:Updated:

`இந்த ஐந்து விஷயங்களைச் செய்யுங்கள்” - பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்

சோனியா காந்தி - மோடி
சோனியா காந்தி - மோடி

கொரோனாவின் தாக்கத்தை எதிர்கொள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் ஐந்து பரிந்துரைகளை முன்வைத்துள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உலகையே முடக்கிப் போட்டுள்ளது. ஏப்ரல் 8-ம் தேதி நிலவரப்படி உலக அளவில் எழுபது ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொழில்கள் முடங்கியுள்ளதால் பொருளாதாரமும் மிகப்பெரிய அளவில் பாதிப்படையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

அதற்கு ஆயத்தமான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்கிற குரல் வலுத்து வருகிறது. இடைப்பட்ட காலத்தில் தொழில் முடக்கத்தால் வேலை பாதிக்கப்பட்டு வருமானம் இழந்த தொழிலாளர்களுக்கு இடைக்கால பொருளாதார நிவாரணமும் அரசு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

மத்திய அரசு ஒரு லட்சத்து எழுபதாயிரம் கோடி மதிப்பிலான பொருளாதார நிவாரணங்கள் வழங்கப்படும் என அறிவித்திருந்தது. மேலும், கொரோனா நடவடிக்கைகளுக்குச் செலவிடுவதற்கான நிதி ஆதாரங்களையும் மத்திய அரசு திரட்டி வருகிறது. அதன்படி எம்.பி-க்களின் சம்பளம் மற்றும் இதர சலுகைகளில் 30% வரை குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எம்.பி-க்களுக்கு வழங்கப்படுகிற தொகுதி மேம்பாட்டு நிதியும் அரசின் நிதிக்கு (Consolidated Fund of India) மடைமாற்றம் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது. இதற்கு பல தரப்பில் விமர்சனங்களும் எழுந்துள்ளன. மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கியுள்ள நிதியுதவியிலும் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சோனியா காந்தி
சோனியா காந்தி
``கமிஷன் ஒருபுறம்… பழைய பகை மறுபுறம்!” - விஜயபாஸ்கருக்கு வில்லங்கமான விவகாரங்கள்!

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்ததோடு ஐந்து பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளார்.

1. அரசு விளம்பரங்களுக்குத் தடைவிதிக்க வேண்டும்:

அச்சு, தொலைக்காட்சி மற்றும் இணைய ஊடகங்களில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் வெளியிடுகிற விளம்பரங்களை முற்றிலுமாக நிறுத்த வேண்டும். கொரோனா மற்றும் சுகாதாரம் குறித்த விளம்பரங்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட வேண்டும். மத்திய அரசு மட்டுமே ஆண்டொன்றிற்கு ரூ.1250 கோடி விளம்பரங்களுக்குச் செலவு செய்கிறது. (மற்ற அரசுத் துறைகள் இதைவிடவும் அதிகம் செலவு செய்கின்றன). இந்தத் தொகை முழுவதும் கொரோனா தொடர்பான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

2. புதிய நாடாளுமன்ற கட்டட திட்டத்தை கைவிட வேண்டும்:

மத்திய அரசு சமீபத்தில் புதிய நாடாளுமன்றம் கட்டும் திட்டத்துக்கு ரூ.20,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இத்தகைய நெருக்கடியான சமயத்தில் ஆடம்பரம் தேவையற்றது. தற்போதைய கட்டடங்களிலே நாடாளுமன்றம் சிறப்பாக செயல்பட முடியும். இந்த நெருக்கடி முடிகிற வரையில் இந்த திட்டத்தை தள்ளிவைக்கலாம். இந்தத் தொகையை புதிய மருத்துவ கட்டுமானங்கள், பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவதற்கு செலவிடலாம்.

3. மத்திய அரசின் செலவினங்களைக் குறைக்க வேண்டும்:

மத்திய அரசின் செலவினங்களில் (ஊதியம், ஓய்வூதியங்களைத் தவிர்த்து) 30% வரை குறைக்கலாம். இதன்மூலம் ஆண்டொன்றிற்கு கிடைக்ககூடிய ரூ. 2.5 லட்சம் கோடியை அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் பொருளாதார பாதுகாப்புக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சோனியா காந்தி கடிதம்
சோனியா காந்தி கடிதம்

4. வெளிநாட்டுப் பயணங்களை ரத்து செய்ய வேண்டும்:

பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் வெளிநாட்டுப் பயணங்களை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும். தேசிய நலன் சார்ந்த அவசரமான பயணங்களுக்கு மட்டுமே விதிவிலக்கு அளிக்க வேண்டும்.

5. பி.எம். கேர்ஸ் நிதியை பிரதமர் நிவாரண நிதிக்கு மாற்ற வேண்டும்:

மத்திய அரசு புதிதாக உருவாக்கியுள்ள பி.எம். கேர்ஸ் எனும் நிதிக்கு வந்துள்ள தன்னார்வல நன்கொடைகளை ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள பிரதமர் தேசிய நிவாரண நிதிக்கு மாற்ற வேண்டும். இவை இந்த நன்கொடைகள் வெளிப்படைத்தன்மையுடன் ஒதுக்கீடு செய்யப்பட்டு செலவு செய்யப்படுகின்றது என்பதை உறுதி செய்யும். ஒரே நோக்கத்துக்கு இரண்டு வெவ்வேறு நிதியை வைத்திருப்பது நேர விரயம். பிரதமர் தேசிய நிவாரண நிதியில் ஏற்கெனவே ரூ.3,800 கோடி வரை செலவு செய்யப்படாமல் உள்ளது. அந்த தொகையையும் பி.எம். கேர்ஸ் நிதிக்கு நன்கொடையாக வந்துள்ள தொகையையும் விளம்பு நிலை மக்களின் உணவு தேவையைப் பூர்த்தி செய்ய பயன்படுத்தலாம்.

அடுத்த கட்டுரைக்கு