Published:Updated:

`என்னிடம் நீங்கள் பேச வேண்டாம்' சோனியா காந்தி Vs ஸ்மிருதி இரானி - நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?!

சோனியா காந்தி Vs ஸ்மிருதி இரானி

சோனியா காந்தி Vs ஸ்மிருதி இரானி: ஆதிர் ரஞ்சன் செளத்ரியின் `ராஷ்டிரபத்னி' விவகாரத்தால் மூண்ட வாக்குவாதம்... மக்களவையில் என்ன நடந்தது?

`என்னிடம் நீங்கள் பேச வேண்டாம்' சோனியா காந்தி Vs ஸ்மிருதி இரானி - நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?!

சோனியா காந்தி Vs ஸ்மிருதி இரானி: ஆதிர் ரஞ்சன் செளத்ரியின் `ராஷ்டிரபத்னி' விவகாரத்தால் மூண்ட வாக்குவாதம்... மக்களவையில் என்ன நடந்தது?

Published:Updated:
சோனியா காந்தி Vs ஸ்மிருதி இரானி

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கும், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக வெளியான தகவல்கள் பரபரப்பைக் கிளப்பியிருக்கின்றன. ஜூலை 28-ம் தேதி அன்று, நாடாளுமன்றத்தில் இந்த வாக்குவாதம் நடந்ததாக, தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. மக்களவையில் என்ன நடந்தது?

ஆதிர் ரஞ்சன் செளத்ரியின் பேச்சு!

காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் செளத்ரி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு குறித்துப் பேசும்போது, `ராஷ்டிரபதி' என்று சொல்வதற்கு பதிலாக, `ராஷ்டிரபத்னி' என்று சொல்லிவிட்டார். ஜூலை 27-ம் தேதி அன்று செய்தியாளர் ஒருவரிடம் பேசும்போது, ``இந்தியாவின் குடியரசுத் தலைவர் என்பவர் அனைவருக்குமானவர். அவர் இந்தியாவின் `ராஷ்டிரபத்னி' ஆவார்'' என்றிருந்தார் ஆதிர் ரஞ்சன். இதையடுத்து பா.ஜ.க-வைச் சேர்ந்த பலரும், ``இந்தியாவின் குடியரசுத் தலைவரை வேண்டுமென்றே ஆதிர் ரஞ்சன் அவமானப்படுத்திவிட்டார். இதற்காக அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும்'' என்று வலியுறுத்தினர்.

தொடர்ந்து இது தொடர்பாகப் பேசிய ஆதிர் ரஞ்சன், ``நான் பேசும்போது வாய் தவறி அப்படிச் சொல்லிவிட்டேன். வேண்டுமென்றே அப்படிச் சொல்லவில்லை. சிறிய பிரச்னையை மலையளவுக்கு மாற்றப் பார்க்கிறது பா.ஜ.க. குடியரசுத் தலைவரிடம் நேரம் கேட்டிருக்கிறேன். அவர் நேரம் ஒதுக்கியதும், இது தொடர்பாக அவரிடம் மன்னிப்புக் கேட்பேன்'' என்று கூறியிருந்தார். இந்த நிலையில், ஜூலை 28-ம் தேதி காலையில், செய்தியாளர் ஒருவர் சோனியா காந்தியிடம், `ஆதிர் ரஞ்சனை மன்னிப்புக் கேட்கச் சொல்வீர்களா?' என்று கேட்டார். அதற்கு, ``அவர் ஏற்கெனவே மன்னிப்புக் கேட்டுவிட்டார்'' என்றார் சோனியா காந்தி.

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி
ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாடாளுமன்றத்தில் மோதல்?

இதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை பா.ஜ.க-வினர் தீவிரமாகக் கையிலெடுத்தனர். மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ``குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரெளபதி முர்மு அறிவிக்கப்பட்டதிலிருந்தே, அவர் காங்கிரஸ் கட்சியின் வெறுப்புக்கும் கேலிக்கும் ஆளானார். சோனியா காந்தியால் பேரவைத் தலைவராக நியமிக்கப்பட்ட ஆதிர் ரஞ்சன் செளத்ரி குடியரசுத் தலைவரை ராஷ்டிரபத்னி என்று அழைத்திருக்கிறார்'' என்றார். மேலும், ஆதிர் ரஞ்சன் செளத்ரி மட்டுமல்ல, சோனியா காந்தியும் தேசத்திடம் மன்னிப்புக் கேட்க வேண்டுமென பா.ஜ.க எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தியதாகத் தெரிகிறது. இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சோனியா காந்தி Vs ஸ்மிருதி இரானி

இதையடுத்து, எம்.பி-க்கள் எல்லோரும் அவையிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்தபோது, சோனியா காந்தி மட்டும் பா.ஜ.க எம்.பி-க்களின் இருக்கையை நோக்கி நடந்து சென்றதாகக் கூறப்படுகிறது. அங்கு சென்று, பா.ஜ.க எம்.பி ரமா தேவியிடம், `எதற்காக என்னை இதில் இழுக்கிறீர்கள்... ஆதிர் ரஞ்சன் ஏற்கெனவே மன்னிப்புக் கேட்டுவிட்டாரே' என்று கேட்டதாகச் சொல்லப்படுகிறது. அப்போது குறுக்கிட்ட ஸ்மிருதி இரானி, `மேடம், உங்களுக்கு எதாவது உதவி வேண்டுமா... நான்தான் உங்களை இதில் இழுத்தேன்' என்று சொன்னதாகவும், அதற்கு சோனியா, `என்னிடம் நீங்கள் பேச வேண்டாம்' என்று கூறியதாகவும் தேசிய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இதைத் தொடர்ந்து அங்கு சலசலப்பு ஏற்படவே தேசியவாத காங்கிரஸின் எம்.பி சுப்ரியா, சோனியா காந்தியை அங்கிருந்து அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

சோனியா  - ஸ்மிருதி இரானி
சோனியா - ஸ்மிருதி இரானி

இது குறித்து ஏ.என்.ஐ செய்தி ஊடகத்திடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ``எங்கள் எம்.பி ரமா தேவி அருகே சோனியா காந்தி வந்தார். அப்போது எங்கள் கட்சியின் மற்றொரு எம்.பி அவரிடம் பேச முயன்றபோது, `நீங்கள் என்னிடம் பேசாதீர்கள்' என்று கத்தினார் சோனியா. இது அச்சுறுத்தும் செயல்'' என்று கூறினார். காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், ``நாடாளுமன்றத்தில் ஸ்மிருதி இரானி நடந்துகொண்டவிதம் மிகவும் கொடூரமானது, முரட்டுத்தனமானது. விதிகளெல்லாம் எதிர்க்கட்சிகளுக்கு மட்டும்தானா?'' என்று கேள்வியெழுப்பியிருக்கிறார்.

மக்களவையில் பெரும் பரபரப்பைக் கிளப்பிய இந்த விவகாரம், எதிர்வரும் நாள்களில் விஸ்வரூபம் எடுக்குமா அல்லது புஸ்வாணமாகுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!