Published:Updated:

`எங்களை அநாதையாக விட்டுவிட்டீர்கள்!’ - காந்தி சிலை முன் கண்ணீர்விட்டுக் கதறிய சமாஜ்வாதி நிர்வாகி

சமாஜ்வாதி கட்சி நிர்வாகி ஃபிரோஸ் கான் காந்தி சிலை முன்பு கதறியழுத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

SP leader Firoz Khan
SP leader Firoz Khan

மகாத்மா காந்தியின் 151-வது பிறந்தநாள் விழா, நாடு முழுவதும் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. அவரது நினைவைப் போற்றும்விதமாக அரசியல் கட்சித் தலைவர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த ஃபிரோஸ் கான் உத்தரப்பிரதேசத்தின் சம்பல் பகுதியில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தச் சென்றார். பராமரிப்பு இல்லாமல் இருந்த காந்தி சிலையைத் தனது தொண்டர்களுடன் சேர்ந்து தண்ணீர் ஊற்றிக் கழுவினார். காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தியவர், திடீரெனக் கண்ணீர்விட்டுக் கதறி அழத் தொடங்கிவிட்டார். அருகில் இருந்த நிர்வாகிகள் அவரை சமாதானம் செய்தனர்.

காந்தி சிலைக்கு மரியாதை
காந்தி சிலைக்கு மரியாதை

``பாபு நீங்கள் இந்த தேசத்தை அந்நியர்களிடமிருந்து விடுவித்தீர்கள். ஆனால், எங்களை அநாதைகளாகத் தனியாக விட்டுவிட்டீர்கள். எங்கள் கனவுகள் அனைத்தும் நாளுக்குநாள் நசுக்கப்படுகின்றன. நீங்கள் எங்கே போனீர்கள். எங்களுக்கு நீங்கள் தேவை” எனக் கூறி கதறி அழுதார் ஃபிரோஸ் கான். இந்தக் காட்சிகளை வீடியோவாக எடுத்த அவரது தொண்டர்கள் இணையத்தில் பதிவேற்றினர். நெட்டிசன்கள் இந்த வீடியோவை ட்ரோல் செய்து வருகிறார்கள். சிலர், `ஃபிரோஸ் கான் நடிப்புக்கு ஆஸ்கரே கொடுக்கலாம்' என கமென்ட் செய்துவருகிறார்கள்.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்தவர், “காந்தியின் சிலை அழுக்காக இருந்ததைக் கண்டு நான் மனம் உடைந்துவிட்டேன். உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ்வாதி ஆட்சியின்போது காந்தியின் பிறந்தநாள் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினோம். அவரது சிலைகளைத் தூய்மைப்படுத்தி வணங்குவோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த அரசு அதைச் செய்யவில்லை. மகாத்மா காந்தியின் சிலைகளைச் சுத்தம் செய்வது நமது பொறுப்பு, நாம் அதை நிறைவேற்றவில்லை என்று கூற வருத்தப்படுகிறேன்.

காந்தி இந்த தேசத்தை எங்களுக்குக் கொடுத்த போது அவருடைய கொள்கைகளும் நோக்கங்களும் தெளிவாக இருந்தன. அரசாங்கம் செயல்பட வேண்டும். செயல்படுவது போல் காட்டக்கூடாது. பா.ஜ.க.வின் மற்றொரு பெயர் நவ்டாங்கி (வித்தை காட்டுபவர்). பாபுவின் பிறந்தநாளில் நான் அவரது சிலையைச் சுத்தம் செய்தேன். எதிர்க்கட்சிகள் அதை நாடகம் என்கிறார்கள்” என ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.