முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி சம்பந்தப்பட்ட இடங்களில் இரண்டாவது முறையாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் ரெய்டு நடத்தினர். ஏற்கெனவே கடந்த ஆண்டு வழக்கு பதிவு செய்து ரெய்டு நடத்திய நிலையில், நேற்று புதிததாக வழக்கு பதிவு செய்து அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கோவை சுகுணாபுரம் பகுதியிலுள்ள வேலுமணி வீட்டில் சுமார் 13 மணி நேரத்துக்கும் மேல் ரெய்டு நடத்தப்பட்டது. முன்னாள் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் வேலுமணி வீட்டின் முன்பு திரண்டு ஆதரவு தெரிவித்தனர். ரெய்டு முடிந்த பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது வேலுமணி கூறுகையில், “இரண்டாவது முறையாக மீண்டும் என் வீட்டிலும், என் சகோதரர், எனக்குச் சம்பந்தம் இல்லாதவர்கள் இடங்களிலும் ரெய்டு நடத்தியுள்ளனர். திமுக-வையும், முதல்வரையும் யார் எதிர்த்து தேர்தல் வேலை பார்த்தார்களோ, அரசியல் செய்தார்களோ அங்குதான் ரெய்டு நடத்துகின்றனர். அரசியல் காழ்புணர்ச்சி காரணமாகத்தான் ரெய்டு நடத்தினர்.

கடந்த முறையும் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இந்த முறையும் என் வீட்டில் ஒருரூபாய்கூட பறிமுதல் செய்யப்படவில்லை. சட்டசபைத் தேர்தலில் கோவையில் முழுமையாக வெற்றி பெற்றோம். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் நாங்கள் கடுமையாக வேலை பார்த்தோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
முறைகேடு செய்துதான் இங்கு திமுக வெற்றிபெற்றது. சி.பி.ஐ-யிடம் இந்த விஷயத்தை ஒப்படைத்தாலே உண்மை தெரிந்துவிடும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின்போது கொரோனா நோயாளிகளுக்கு மாலை 5-6 மணிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. கோவையில் மொத்தமே 70 கொரோனா நோயாளிகள்தான் உள்ளனர்.

ஆனால் 85,000 பேர் வாக்கு செலுத்தியதாக கணக்கு காண்பிக்கின்றனர். வாக்கு இயந்திரத்திலேயே முறைகேடு செய்துள்ளனர். அமைச்சராக இருக்கும்போது அதிகாரிகளுடன் அலுவல்ரீதியாக வெளிநாடு சென்றேன்.
அதேபோல மருத்துவ காரணங்களுக்காகவும், உறவினர்களைப் பார்க்கவும் வெளிநாடு சென்றதையெல்லாம் இப்போது தவறாகக் கூறுகின்றனர். என் வீட்டிலிருந்து எந்தப் பொருளும் பறிமுதல் செய்யப்படவில்லை. என்னுடன் வாக்கிங் வந்தவர்கள் வீட்டிலெல்லாம் ரெய்டு நடத்தியுள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் மேடையில் பேசும்போது, ‘நான் எல்லோருக்கும் பொதுவானவன்’ என்று சொல்கிறார். ஆனால், முழுமையாக பழிவாங்கும் நடவடிக்கையில் மட்டுமே அவர் ஈடுபடுகிறார். தேர்தல் வாக்குறுதி உட்பட எதையுமே நிறைவேற்றவில்லை” என்றார்.