Published:Updated:

`அரசியலை விட்டே விலகத் தயார்!'- ஸ்டாலினுக்கு எஸ்.பி.வேலுமணி சவால்

இல்லாத ஒன்றை இருப்பதைப் போல இட்டுக்கட்டி பெருநகர சென்னை மாநகராட்சி மீது குற்றம் சுமத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் வேலுமணி
அமைச்சர் வேலுமணி

சென்னை மாநகராட்சி சார்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்ற கட்டுமானப் பணிகளில் 1,000 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக அதிரடியைக் கிளப்புகிறார்கள் அறப்போர் இயக்கத்தினர். இதுதொடர்பாக அந்த இயக்கத்தின் சார்பில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ, கடந்த சில நாள்களாக சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ‘எம்.சாண்ட் எனப்படும் செயற்கை மணலை கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்திவிட்டு, ஆற்றுமணலுக்குரிய விலையை கான்ட்ராக்டர்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள். இதன்மூலம் 1,000 கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது. ஊழலில், மாநகராட்சி அதிகாரிகளுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது’ என்பதுதான் அந்த வீடியோவின் சாரம்.

`அரசியலை விட்டே விலகத் தயார்!'- ஸ்டாலினுக்கு எஸ்.பி.வேலுமணி சவால்

இதே குற்றச்சாட்டை சமீபத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் முன்வைத்தார். இந்நிலையில், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிடுட்டுள்ளார். அதில், ``தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்து, அதற்கான பணிகளில் அரசின் நிர்வாக இயந்திரம் மிக முனைப்புடன் செயல்படும் நிலையில், உள்ளாட்சித் தேர்தலைத் தடுத்து நிறுத்த முழு முயற்சி மேற்கொண்டு படுதோல்வியுற்ற தி.மு.கவின் தலைவர் மு.க.ஸ்டாலின், அரசைக் களங்கப்படுத்தி அரசியல் ஆதாயம் தேடும் உள்நோக்கத்துடன், இல்லாத ஒன்றை இருப்பதைப் போல இட்டுக்கட்டி பெருநகர சென்னை மாநகராட்சி மீது குற்றம் சுமத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டும், அவராகச் சொல்லுகின்ற குற்றச்சாட்டு இல்லை. பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுமானப் பணிகளில் எம்-சாண்ட்ஐ பயன்படுத்திவிட்டு, ஆற்று மணலைப் பயன்படுத்தியது போல விலைப்புள்ளியை வழங்கியதாக உண்மைக்கு முற்றிலும் புறம்பான செய்தியை தி.மு.க ஆதரவு பெற்ற இயக்கம் ஒன்று அறிக்கை வெளியிட்டது. இந்தத் திரிக்கப்பட்ட செய்தியை அடிப்படையாகக் கொண்டுதான், எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

தி.மு.க ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சித் துறையினை தன் பொறுப்பில் வைத்திருந்த மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு ஆற்றிய பணி என்ன? `ஜீரோ' தமிழகத்தின் துணை முதலமைச்சராகப் பதவி வகித்த போதும் அவர் ஆற்றிய பணிகள் என்ன? `ஜீரோ' இப்படி, ஜீரோ உள்ளாட்சி அமைச்சர் என்றும், ஜீரோ துணை முதல்வர் எனும் பெயர் வாங்கிய ஜீரோ ஸ்டாலின், தான் ஹீரோ ஆகிவிடலாம் எனும் நப்பாசையுடன் நம்மைப் பார்த்து குறை சொல்கிறார், குற்றம் சுமத்துகிறார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

ஆற்று மணல் பயன்படுத்தப்படுவதாக மதிப்பீடு கொடுத்துவிட்டு எம்-சாண்ட் பயன்படுத்துவதாகவும், 1000 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருக்கிறது எனும் நஞ்சைக் கக்கி இருக்கிறார் ஸ்டாலின். ஏதேனும் தவறு செய்துவிட்டு, அதுபற்றி மக்கள் கேட்டால், உங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறுவது ஸ்டாலினின் வழக்கம். தேர்தல் கூட்டணி அமைக்க கம்யூனிஸ்ட் மற்றும் கூட்டணி கட்சியினருக்குப் பணம் கொடுத்த நிகழ்வில் அப்படித்தான் சொன்னார் ஸ்டாலின்.

ஆனால், ஜெயலலிதா எங்களுக்கு அப்படி கற்றுக்கொடுக்கவில்லை. மக்கள்தான் எங்கள் எஜமானர்கள். அவர்களுக்கு பதில் சொல்ல நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம். எதிர்க்கட்சிகள் நம் மீது பொய்க்குற்றம் சாடும்போது, அது பற்றிய உண்மை நிலையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது நமது கடமை என்கிற பாடத்தை கற்றுத் கொடுத்திருக்கிறார்.

அமைச்சர் வேலுமணி
அமைச்சர் வேலுமணி

அவர் எங்களுக்கு வழிகாட்டியுள்ளபடி, ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கை எப்படி அடித்தளமே இல்லாத ஒரு குற்றச்சாட்டு, என்பதையும், அவரது அறிக்கையில் உண்மை என்பது ஒரு துளி அளவும் இல்லை என்பதையும், எத்தகைய காழ்ப்புணர்ச்சியுடன் அந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்பதையும் மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டியது எங்களது கடமை.

மக்கள் மத்தியில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்ள நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தி.மு.க-வின் அங்கமாகச் செயல்படும் ஓர் இயக்கத்தின் செய்திகளின் உண்மைத் தன்மையை ஆராயாமல் ஆளுங்கட்சியைத் தாக்க ஒரு ஆயுதம் கிடைத்துவிட்டது என்ற ஆர்வக் கோளாறு காரணமாக, அவசரக் குடுக்கையாக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

மேலும் கடந்த 3 ஆண்டுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனை எத்துணை? என்று கேட்கிறார் ஸ்டாலின். தவறு செய்பவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை அவ்வப்பொழுது நடவடிக்கை எடுத்து வருகின்றது. நடக்காத ஊழலுக்கு லஞ்ச ஒழிப்புத் துறை விஜிலென்ஸ் அறிக்கை போடவில்லை எனக் கேட்பது சிறுபிள்ளைத் தனம். உள்ளாட்சித் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், அரசியல் உள்நோக்கத்துடன் அமைச்சர்களையும், அதிகாரிகளையும் குறை சொல்லி, மிரட்டிப் பார்ப்பதை தமிழக மக்கள் ஒரு போதும் ஏற்க மாட்டார்கள்.

M. K. Stalin
M. K. Stalin

ஆயிரம் கைகள் தடுத்து நின்றாலும். முழு நிலவின் குளிர் ஒளியைத் தடுத்துவிட முடியாது. ஆயிரம் பொய்களை ஸ்டாலின் அடுத்தடுத்துச் சொன்னாலும் மக்கள் மத்தியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை களங்கப்படுத்தி விடமுடியாது. எதிர் வரவிருக்கும் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் ஒருக்காலும் தி.மு.க வெற்றி பெற முடியாது. மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுகளைக் கூறாமல் தக்க ஆதாரத்துடன் பேச வேண்டும். அப்படி ஆதாரம் இருக்கும் என்று நம்பினால், இன்றே என் பதவியினை முழுமனதுடன் ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறேன்.

இன்றே மு.க.ஸ்டாலினும் ராஜினாமா செய்ய வேண்டும். நிரூபிக்க ஸ்டாலினால் முடியவில்லை என்றால், அவர் தி.மு.க தலைவர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் பதவிகளைத் துறந்துவிட்டு அரசியலை விட்டே அவர் ஒதுங்கிப் போக வேண்டும். நிரூபித்தால், நான் ஜெயலலிதா வழங்கிய கழக அமைப்புச் செயலாளர், கோவை புறநகர் மாவட்ட கழகச் செயலாளர் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஆகிய பதவிகளை துறந்து, அரசியலை விட்டே விலகத் தயார்" எனக் கூறியுள்ளார்.