இந்த ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. பொதுவாகவே மாநில அரசு தயார் செய்துகொடுக்கும் உரையை, ஆளுநர் வாசிக்க வேண்டும் என்பது மரபாகக் கருதப்படுகிறது. ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி மாநில அரசு சார்பில் தயாரித்துக் கொடுக்கப்பட்ட உரையில், சில தகவல்களைத் தவிர்த்துவிட்டு வாசித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
இந்த விவகாரம் மாநில அரசியலில் அனலைக் கிளப்பியிருக்கும் நிலையில், சபாநாயகர் அப்பாவு இந்தச் சம்பவம் தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``ஆளுநருக்கான உரை கடந்த 5-ம் தேதி வழங்கப்பட்டு, 7-ம் தேதி அதற்கு ஆளுநர் மாளிகை ஒப்புதல் அளித்திருக்கிறது. ஆனால், ஆளுநர் அதில் குறிப்பிடப்பட்டிருந்த பல செய்திகளைத் தவிர்த்திருக்கிறார். ஆளுநருக்கு சட்டசபையில் உரையாற்ற அனுமதியளித்த, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய அம்பேத்கர் பெயரையே ஆளுநர் படிக்காமல் தவிர்த்திருப்பது வேதனையான செய்தி.

திராவிட மாடல் என்பதை ஆளுநரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள், அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 159-ன் அடிப்படையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டவருக்கு, அதில் இருக்கும் ஒவ்வொன்றையும் பாதுகாக்கவேண்டிய முழுக் கடமை இருக்கிறது.
அரசியலமைப்பில் இந்தியா மதச்சார்பற்ற நாடு என்று இருக்கிறது. அதேபோல்தான், தமிழ்நாடு என்று அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கிறது. அதையே மாற்றிப் பேசுகிறார் என்றால் இது எவ்வளவு பெரிய தவறு... பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலத்தில் இருக்கும் ஆளுநர்கள், எதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளும் அரசுக்கு மாற்றமாக நடந்துகொள்கிறார்கள் எனத் தெரியவில்லை.
ஆன்லைன் சூதாட்டம், நீட் போன்ற மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காத்திருப்பில் வைத்திருக்கிறார். ஆளுநர்களின் இத்தகைய செயல்களால், அவர்கள் தங்களுக்கு மத்திய அரசில் உயர் பதவிகள் வழங்கப்படும் என நினைக்கிறார்களா... தற்போது குடியரசுத் துணைத் தலைவராக இருக்கும் ஜெகதீப் தன்கர், ஆளுநராக இருந்தபோது மாநில அரசுக்குக் குடைச்சல் கொடுத்துக்கொண்டேயிருந்தார். அவருக்கு பா.ஜ.க அரசு, குடியரசு துணைத் தலைவராகப் பதவி உயர்வு வழங்கியது.

உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய நீதிபதிகள் ஓய்வுபெற்றவுடன் அடுத்த உயர் பதவிகளை வழங்குகிறது. எனவே, உயர் பதவிக்காக ஆளுநர் இப்படிச் செயல்படுகிறாரா எனச் சந்தேகம் வருகிறது. தேசியகீதத்துக்கு மரியாதை செய்துவிட்டு ஆளுநர் சென்றிருக்கலாம். ஆனால் அவர் அதற்கு முன்பே சென்றது நாட்டையே அவமானப்படுத்தியதாகத் தோன்றுகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டுக்கென ஒரு பார்வை, சமூகநீதி இருக்கிறது" எனத் தெரிவித்தார்.