தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 34 அமைச்சர்களைக்கொண்ட அமைச்சரவை கடந்த ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றது. அதன் பிறகு ஒன்றரை ஆண்டு கழித்து தற்போது அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில், தி.மு.க இளைஞரணிச் செயலாளரும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதிக்கு அமைச்சரவையில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை ஒதுக்கப்பட்டிருக்கிறது. நேற்று பதவி பிரமாணமும் நடைபெற்றது.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, " இளைஞர் நலத்துறைக்கு அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றிருப்பது மகிழ்ச்சிதான். இளைஞர்கள், மாணவர்களை சர்வதேச தரத்தில் கொண்டுவரும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. விளையாட்டுத் துறையில் மாணவ, மாணவிகளை அவர் நிச்சயமாக மேம்படுத்துவார்.

ரூ.600 கோடி அளவில் சென்னையில் சர்வதேச அளவிலான விளையாட்டு மைதானத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிறுவ இருக்கிறார். தென்பகுதியான ராதாபுரம் தொகுதியிலும் சர்வதேச அளவிலான விளையாட்டு அரங்கை அவர் தொடங்க இருக்கிறார். விளையாட்டுத்துறையை இந்த அரசு மிகுந்த கவனத்தோடு செயல்படுத்தி வருகிறது. இந்த தி.மு.க அரசுதான், ஒவ்வொரு எம்.எல்.ஏ-க்கும் அவர்களின் தொகுதியில் ஒரு ஸ்டேடியத்தை அறிவித்து விளையாட்டை ஊக்குவிக்கிறது. அதற்கு அமைச்சராக சரியான இளைஞர் கிடைத்திருக்கிறார்.
இளம் வயதிலேயே உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக தமிழகத்துக்கு கிடைத்திருப்பது பெருமைதான். அவரை பார்க்கும் போது அவரின் தாத்தா தான் நினைவுக்கு வருவார். கலைஞர் போல மற்றவரை புண்படுத்தாமல் பேசும் திறன் கொண்டவர் உதயநிதி. அவரை அமைச்சராக்கியது வாரிசு அரசியல் எனப் பேசுகிறார்கள்.

முதன்முதலில் கருணாநிதி முதலமைச்சராக பதவிக்கு வரும்போது அண்ணா ஆட்சி போல இருக்காது என்றனர். அவர் மறைவுக்குப் பிறகு மு.க ஸ்டாலின் முதலமைச்சராகும்போது வாரிசு அரசியல் என்றுதான் கூறினர். இந்த இளம் வயதில் தன் குடும்ப வாழ்க்கையில் பல சந்தோஷங்கள், கனவுகளை விட்டுவிட்டு, நாட்டுக்காக ஒருவர் உழைப்பதற்கு முன் வந்திருப்பது பெருமைக்குறியது. எனவே அதை குறுகிய வட்டத்தில் பார்க்க வேண்டாம்" என தெரிவித்திருக்கிறார்