Published:Updated:

`சபாநாயகர் நோட்டீஸ் கண்துடைப்பு?!' - 11 எம்.எல்.ஏ-க்கள் விவகாரத்தில் அடுத்தது என்ன?

ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ்
ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ்

``நீங்களே நன்றாக நினைத்துப் பாருங்கள். கட்சிக்கு ஆதரவாகத் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் வாக்களித்தனர். ஆனால், எடப்பாடி அரசு எவ்வளவு வேகமாகச் செயல்பட்டு அவர்களைக் கூண்டோடு வெளியேற்றியது''.

பரபரப்பான அரசியல் சூழலில் பன்னீர்செல்வத்தின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 11 பேருக்குச் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியிருக்கும் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இது எல்லாமே கண்துடைப்புக்காக நடத்தப்படுகிறது என்றும், இவ்வழக்கைக் கூடிய விரைவில் நீர்த்துப்போக வழிவகை நடந்து கொண்டிருப்பதாக ஆதங்கப்படுகிறார்கள் தினகரன் ஆதரவாளர்கள். அப்படி என்ன நடக்கிறது என்று விசாரிக்கத் தொடங்கினோம்.

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி 2017-ல் பதவி ஏற்றதும் பிப்ரவரி 18-ம் தேதி தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அப்போது அவர் மீது அதிருப்தியிலிருந்த தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மாஃபா பாண்டியராஜன், செம்மலை, சரவணன் உட்பட மொத்தம் 11 எம்.எல்.ஏ-க்கள் அரசுக்கு எதிராக, கட்சி கொறடாவின் உத்தரவை மீறி வாக்களித்தனர். இருப்பினும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு 122 எம்.எல்.ஏ-க்கள் பெரும்பான்மை இருந்ததால் ஆட்சி பெரும்பான்மையை இழக்கவில்லை. இதையடுத்து நம்பிக்கை கோரும் தீர்மானமும் வெற்றி பெற்றது.

இந்த விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏ-க்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனத் தி.மு.க சார்பில் சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால், அதுகுறித்து எந்தவித நடவடிக்கைகளையும் அவர் எடுக்கவில்லை. இதையடுத்து தி.மு.க தரப்பில் மீண்டும் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சபாநாயகர் உத்தரவே இறுதியானது எனக் கூறி நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்தது. உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தி.மு.க சட்டசபை கொறடா சக்கரபாணி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்தார்.

செம்மலை
செம்மலை

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு,``இந்த விஷயத்தில் தி.மு.க கொறடா சபாநாயகரிடம் கொடுத்த மனு மீது மூன்று வருடங்களாகச் சபாநாயகர் நடவடிக்கை எடுககாததற்கு என்ன காரணம் என்றும் சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ-க்களுக்கு ஒரு நோட்டீஸ் கூட வழங்கவில்லையே ஏன் என்றும், இதற்கு மூன்று ஆண்டுகளாக என்ன செய்தீர்கள் என்றும் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி சபாநாயகருக்கு கேள்வி எழுப்பியது நீதிமன்றம். அத்தோடு ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் முடிவெடுக்க வேண்டுமெனச் சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது எனக் குறிப்பிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

இந்த நிலையில், பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்களிடமும் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் இன்று அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக ஏன் வாக்களித்தீர்கள் என்பது உள்ளிட்ட சில கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இதற்குப் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் விளக்கம் அளிப்பதைப் பொறுத்து அவர்கள் மீதான நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வழக்கு ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுப்பாரா என்று தினகரன் ஆதரவாளர்கள் சிலரிடம் பேசினோம். ``சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியது வெறும் கண்துடைப்புக்காகத்தான் நடக்கிறது. நீங்களே நன்றாக நினைத்துப் பாருங்கள். கட்சிக்கு ஆதரவாகத் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் வாக்களித்தனர். ஆனால், எடப்பாடி அரசு எவ்வளவு வேகமாகச் செயல்பட்டு அவர்களைக் கூண்டோடு வெளியேற்றியது.

`அரசுக்கு எதிராக வாக்களித்தது ஏன்?' -ஓ.பி.எஸ் உட்பட 11 எம்.எல்.ஏ க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்

ஆனால், இவர்கள் கட்சிக்கு எதிராக வாக்களித்தார்கள். ஆனால், இன்று வரையிலும் நீடித்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படி என்றால் மிகப்பெரிய அரசியல் விளையாட்டு அரங்கேறிக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம். சபாநாயகர் இன்று அனுப்பிய மனுவில் எதற்காக நீங்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தீர்கள் என்று கேட்டிருக்கிறார். அதற்கு ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் என்ன பதில் தரப்போகிறார்கள் என்று இப்போதே நாங்கள் சொல்கிறோம். `அப்போதைய அரசியல் சூழல்படி அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டிய நிலை வந்தது. அதனால்தான் வாக்களித்தோம்' என்று சொல்வார்கள். அத்தோடு நாங்கள் ஒன்றாக இணைந்துவிட்டோம் ஓ.பி.எஸ்ஸுக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருக்கிறார்கள். அவரும் மக்களுக்காக முதல்வருடன் இணைந்து பணியாற்றிக்கொண்டிருக்கிறார். எங்களுக்குள் எந்தவித பிரச்னையும் இல்லை என்றும் அதற்கான அரசு கோப்புகளையும் காட்டுவார்கள். அந்தப் பதில் மனுவைச் சபாநாயகர் பார்த்ததும், `அவர்கள் கொடுக்கும் பதில் திருப்திகரமாக இருக்கிறது' என்று இந்த வழக்கை முடித்து வைக்கப்போகிறார்கள். இதுதான் நடக்கப்போகிறது. இவர்களுக்காக சட்டத்தை எப்படி வேண்டுமானாலும் வளைத்துக் கொள்வார்கள்" என்று காட்டமாக முடித்தார்கள்

அடுத்த கட்டுரைக்கு