Published:Updated:

முருகனுக்கு ஸ்பெஷல் அசைன்மென்ட்!

முருகன் - வி.பி.துரைசாமி
பிரீமியம் ஸ்டோரி
News
முருகன் - வி.பி.துரைசாமி

தி.மு.க-வின் பட்டியலின நிர்வாகிகளை குறிவைக்கிறதா பா.ஜ.க?

‘வரும் 2021 சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன் தி.மு.க-வின் பட்டியலின நிர்வாகிகளில் கணிசமானோரை பா.ஜ.க-வுக்குக் கொண்டுவந்துவிட வேண்டும்’ - இப்படியொரு அசைன்மென்ட் தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகனுக்குக் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கட்சி வட்டாரத்தில் பேச்சு நிலவுகிறது. அதில் முதல் விக்கெட்தான் வி.பி.துரைசாமி என்கிறார்கள்.

இதுபற்றி நம்மிடம் பேசிய பா.ஜ.க-வின் முக்கிய நிர்வாகிகள், ‘‘தி.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவரான வி.பி.துரைசாமி எங்கள் கட்சியில் இணைந்தது, முருகனின் முதல் வெற்றி. சமீபகாலமாக வி.பி.துரைசாமி, முருகனைச் சந்திக்க கமலாலயம் வந்தார். அப்போது முருகன் தரப்பில், ‘பட்டியலின மக்களுக்காகப் பாடுபட்டதாகச் சொல்லும் தி.மு.க-வில், குறிப்பிட்ட சில சாதியினர்தான் முக்கியப் பொறுப்பில் இருக்கின்றனர். அவர்கள் பட்டியலின மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்டு அவர்களுக்காக எதுவும் செய்வதில்லை. தவிர, தி.மு.க-வில் இருக்கும் பட்டியலினத் தலைவர் களுக்கும் சரியான மரியாதை கிடைப்பதில்லை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அப்படி இருக்கும்போது தி.மு.க-வில் ஏன் இன்னமும் தொடர வேண்டும்? தேசியக் கட்சியான பா.ஜ.க-வுக்கு வந்துவிடுங்கள். நாட்டைத் தொடர்ந்து ஆளப்போவது பா.ஜ.க-தான். தமிழகத்திலும் விரைவில் பா.ஜ.க ஆட்சி அமையும். உங்களைப் போன்றவர்களுக்குப் பெரிய பதவிகள் தேடி வரும்’ என்று வி.பி.துரைசாமியிடம் சொல்லப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்தே துரைசாமி பா.ஜ.க-வில் இணைந்துவிட்டார். இவரை வைத்தே தி.மு.க-வில் மற்ற மாவட்டங்களிலுள்ள பட்டியலின நிர்வாகிகளை பா.ஜ.க-வுக்கு அழைத்துவரத் திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றவர்கள், தொடர்ந்து வேறு சில விஷயங்களையும் பகிர்ந்துகொண்டார்கள்.

‘‘வட மாநிலங்களைப்போல தமிழகத்தில் பா.ஜ.க வளர முடியவில்லை. இந்த நிலையில்தான், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை மாநிலத் தலைவராகக் கொண்டுவரும் யுக்தியைக் கையில் எடுத்தது பா.ஜ.க. இது ஓரளவு வெற்றிபெற்று அந்தச் சமூகத்தில் கணிசமானோரை பா.ஜ.க ஆதரவாளர்களாக மாற்றியுள்ளது. தொடர்ந்து, ‘தி.மு.க-விலும் அதன் கூட்டணிக் கட்சிகளிலும் அங்கம் வகிக்கும் பட்டியலின நிர்வாகிகளை பா.ஜ.க பக்கம் கொண்டு வர வேண்டும். குறிப்பாக மாநில, மாவட்ட அளவில் பொறுப்புகளில் இருக்கும் அருந்ததியர், ஆதிதிராவிடர் சமூகத்தினரைக் கொண்டு வர வேண்டும்’ என்பது மாநிலத் தலைமைக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே தேவேந்திர குல வேளாள சமூகத் தலைவர்களான ஜான்பாண்டியன், டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் பா.ஜ.க-வுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். அதனால், அவர்களை வைத்தும் பட்டியலினத்தின் மற்ற சமூகத்தினரையும் கட்சிக்குள் கொண்டுவரும் வேலைகளை முருகன் முடுக்கிவிட்டுள்ளார். சமீபத்தில் பட்டியலின மக்களை இழிவுபடுத்திப் பேசியதாக தி.மு.க-வின் தலைவர்களான டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் ஆகியோருக்கு எதிராக பா.ஜ.க எஸ்.சி/எஸ்.டி பிரிவு சார்பில் புகார் கொடுக்க வைத்தார் முருகன். இந்த விவகாரத்தை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்ததற்குக் காரணமும் முருகனே.

ஸ்ரீனிவாசன் - அந்தியூர் செல்வராஜ்
ஸ்ரீனிவாசன் - அந்தியூர் செல்வராஜ்

ஏற்கெனவே தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத்தலைவராக இருந்தபோது, முரசொலி அலுவலக மூலப்பத்திர விவகாரத்தைப் பெரிய அளவில் பரபரப்பாக்கி தி.மு.க-வுக்குக் குடைச்சலைக் கொடுத்தவர் முருகன். அந்த வழக்கு இப்போதும் நிலுவையில் உள்ளது. விரைவில் தி.மு.க உட்பட தமிழகத்தின் பல கட்சிகளிலிருந்தும் பட்டியலினப் பிரமுகர்கள் பலர் பா.ஜ.க-வில் இணைவார்கள்’’ என்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுபற்றிக் கருத்து கேட்க முருகனின் அலைபேசியில் தொடர்பு கொண்டோம். தொடர்பில் வந்த உதவியாளரிடம் விவரம் கூறினோம். திரும்ப அழைப்பதாகக் கூறியவர் அழைக்கவில்லை.

தொடர்ந்து பா.ஜ.க-வின் மாநிலச் செயலாளரான பேராசிரியர் ஸ்ரீனிவாசனிடம் இதுகுறித்துக் கேட்டோம் “திட்டமிட்டு நாங்கள் யாரையும் இழுக்கவில்லை. தி.மு.க தலைமையின் செயல்பாடுகள் பிடிக்காமல் அவர்களாகத் தான் வருகிறார்கள். தி.மு.க-வில் வாரிசு அரசியல், கிச்சன் கேபினட், தற்போது பிரசாந்த் கிஷோர் ஆதிக்கம் எனப் பல விஷயங்கள் கட்சி நிர்வாகிகள் பலரை அதிருப்தியடைய வைத்துள்ளன. சமூகநீதி பற்றி வாய்கிழியப் பேசிய தி.மு.க-வில் சமூகநீதி இல்லை என்பது அம்பலமாகி யுள்ளது. அதேசமயம், பா.ஜ.க-வில் சத்தம் இல்லாமல் சமூகநீதியை நிலைநாட்டி வருகிறோம். பெண்களுக்கான இட ஒதுக்கீட்டைக் கட்சியிலும் ஆட்சியிலும் நடைமுறைப்படுத்தி வருகிறோம்” என்றார்.

முருகனுக்கு ஸ்பெஷல் அசைன்மென்ட்!

இதுகுறித்துப் பட்டியலினத்தைச் சேர்ந்த தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும் ராஜ்ய சபா எம்.பி-யுமான அந்தியூர் செல்வராஜிடம் கேட்டோம். “துரைசாமி பா.ஜ.க-வுக்குச் சென்றதை வைத்து மற்றவர்களை ஒப்பிட வேண்டாம். அவருக்கு எப்போதுமே ஒரு பதவி வேண்டும். அதற்காக பா.ஜ.க-வுக்குச் சென்றிருக்கலாம். ஆனால், தி.மு.க-விலிருந்து பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் வெளியே செல்ல மாட்டார்கள். அப்படியே சென்றாலும் மற்றொரு திராவிடக் கட்சியான அ.தி.மு.க-வுக்குச் செல்வார்களே தவிர பா.ஜ.க-வுக்குச் செல்ல மாட்டார்கள். பா.ஜ.க மதவாதக் கட்சி, அங்கு ஆர்.எஸ்.எஸ் ஆதிக்கம் அதிகம் என்பதை அனைவரும் அறிவார்கள். பட்டியலின மக்களுக்காக ஏராளமான உரிமைகளைப் பெற்றுத்தந்த கட்சி தி.மு.க என்பதை எவரும் மறுக்க முடியாது” என்றார்.