Election bannerElection banner
Published:Updated:

மங்கள நாளில் பத்திரப்பதிவுக்குக் கூடுதல் கட்டணம்: எழும் எதிர்ப்புக் குரல்கள்

பத்திரப்பதிவு -  சிறப்புக் கட்டணம்
பத்திரப்பதிவு - சிறப்புக் கட்டணம்

மங்களகரமான நாள்களில் பத்திரப்பதிவு செய்யவும், அதற்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் அனுமதி அளிக்கப்படுவதாக உத்தரவு பிறப்பித்து பத்திரப்பதிவுத்துறைத் தலைவருக்கு, முதன்மைச் செயலாளர் பீலா ராஜேஷ் கடிதம் எழுதியுள்ளார்.

மங்களகரமான நாள்களான சித்திரைத் திருநாள், ஆடிப்பெருக்கு, தைப்பூசம் உள்ளிட்ட நாள்களில் பத்திரப்பதிவு அலுவலகத்தைத் திறந்துவைக்கவும், அத்தகைய நாள்களில் மேற்கொள்ளப்படும் பத்திரப்பதிவுகளுக்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் அனுமதி அளிக்கப்படுவதாக உத்தரவு பிறப்பித்து பத்திரப்பதிவுத்துறைத் தலைவருக்கு முதன்மைச் செயலாளர் பீலா ராஜேஷ் கடிதம் எழுதியுள்ளார். மங்கள நாள்களில் அதிக எண்ணிக்கையில் பத்திரப்பதிவு செய்பவர்கள் வருவதைத் தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டாலும், அரசியல் கட்சியினர், பொதுமக்களிடையே இந்த அறிவிப்புக்குப் பெரிய அளவில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

பீலா ராஜேஷ் ஐ.ஏ.எஸ்
பீலா ராஜேஷ் ஐ.ஏ.எஸ்

பத்திரப்பதிவு தொடர்பாக பீலா ராஜேஷின் அறிவிப்பு மூடநம்பிக்கையை மக்கள் மனத்தில் விதைக்கிறது என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த அறிவிப்பு குறித்துக் கூடுதல் பதிவுத்துறையின் முன்னாள் தலைவர் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆ.ஆறுமுக நயினாரிடம் பேசினோம்.

இனி இந்த மங்களகரமான நாட்களில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கும்... ஆனால், கூடுதல் கட்டணம்!

``சார்பதிவாளரின் அனுமதியுடன் அவசரகாலத்தில், விடுமுறை நாள்களில் பத்திரம் பதிவு செய்யும் நடைமுறை தற்போதும் இருக்கிறது. மேலும், சமூகத்தில் பெரிய மனிதர்கள் அதாவது நடிகர்கள், அரசியல் தலைவர்கள், உயர் பதவியில் இருப்பவர்கள் பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என்று நினைத்தாலோ, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவர்களோ பத்திரங்கள் பதிவு செய்ய வேண்டும் என்றாலோ அலுவலக வேலை நாள்களில் அல்லது விடுமுறை நாள்களில் அவர்களின் வீடுகளுக்கே சென்று பத்திரங்களை சார் பதிவாளர் பதிவு செய்துகொள்ளும் நடைமுறையும் சட்டத்தில் இருக்கிறது. ஆனால், அப்படிப் பதிவு செய்யப்படும் பத்திரங்கள் மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து முறையான விளக்கம் அளித்து மாவட்டப் பதிவாளரிடம் சார் பதிவாளர் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த நடைமுறையைப் பின்பற்றி பத்திரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்றால் 200 ரூபாய் கட்டணம் செலுத்தி சார் பதிவாளரிடம் விண்ணப்பம் ஒன்றைக் கொடுக்க வேண்டும். அதைச் சார்பதிவாளர் ஏற்றுக்கொண்டால் விடுமுறை நாளில் அல்லது வீட்டுக்குச் சென்று பத்திரப்பதிவைச் செய்யலாம்.

ஆ.ஆறுமுக நயினார்
ஆ.ஆறுமுக நயினார்

இப்படி ஒரு நடைமுறை முன்னரே இருக்கும்போது சித்திரை முதல்நாள், ஆடிப்பெருக்கு, தைப்பூசம் ஆகிய நாள்களுக்கு என்று சிறப்பாக ஓர் அறிவிப்பை வெளியிட வேண்டிய தேவை ஏன் வந்தது என்று தெரியவில்லை. மதச்சார்பற்ற நாடு என்று சொல்லிக்கொள்ளும் இந்தியாவில், இந்துக்களின் பண்டிகை நாள்கள் மட்டும்தான் மங்களகரமான நாள்களா, மற்ற மதங்களின் பண்டிகை நாள்களுக்கு அந்தச் சிறப்பு இல்லையா என்ற தேவையற்ற கேள்வி எழுவதற்கு இந்த அறிவிப்பு காரணமாக அமைந்துவிடும்.

இந்த மூன்று முக்கிய நாள்கள் தவிர பிற முகூர்த்த நாள்கள், பிற நல்ல நாள்களில் பொதுவாகவே பத்திரப் பதிவு அலுவலகத்தில் கூட்டம் அலைமோதும். அப்படி ஒரு குறிப்பிட்ட நாளில் கூட்டம் சேருவதைத் தவிர்க்கக்கூட இத்தகைய அறிவிப்பை வெளியிட்டிருக்கலாம் என்றாலும் இதற்குச் சட்டத்தில் இடமில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

பத்திரப்பதிவு அலுவலகம் (மாதிரி படம்)
பத்திரப்பதிவு அலுவலகம் (மாதிரி படம்)

மங்கள நாடள்களில் பதிவுசெய்யக் கூடுதல் கட்டணம் என்ற அறிவிப்பு திரும்பப் பெறப்படவிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. ஆனால் அதிகாரபூர்வமாக இன்னும் திரும்பப் பெறப்படவில்லை. எது எப்படியோ நல்ல முறையான, அனைவருக்கும் பயன் தரக்கூடிய அறிவிப்புகளை வெளியிட்டு அரசு செயல்படுத்த வேண்டும் என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது” என்றார்.

ஆன்லைன் பத்திரப்பதிவு முறை... சாதகங்களும் பாதகங்களும்!

அரசின் அறிவிப்பு குறித்து திராவிடக் கழகத்தின் பிரசார செயலாளர் மற்றும் வழக்கறிஞர் அ.அருள்மொழியிடம் பேசினோம். ``ஓர் அரசின் கடமை என்பது மக்களின் தேவைகளைச் சட்டத்தின்படி நிறைவேற்றுவதுதானே தவிர மூட நம்பிக்கைகளை விதைப்பது அல்ல. பீலா ராஜேஷ் `மங்களகரமான நாள்களான சித்திரை திருநாள், ஆடிப்பெருக்கு, தைப்பூசம் உள்ளிட்ட நாள்களில் பத்திரப்பதிவு அலுவலகத்தைத் திறந்துவைக்கவும், அத்தகைய நாள்களில் மேற்கொள்ளப்படும் பத்திரப்பதிவுகளுக்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது’ என அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். இந்த அறிவிப்பு அக்‌ஷய திருதியை நாளில் நகை வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்று மக்களிடையே மூடநம்பிக்கையை விதைத்து அதன் மூலம் வருமானம் பார்க்கும் தனியார் முதலாளிகளின் செயல்பாட்டுக்குச் சற்றும் குறைந்தது இல்லை. அரசு விடுமுறை என்பது குடிமக்களுக்கான உரிமை. அந்த நாளில் அவரவர் விருப்பப்படி இருக்கவிட வேண்டும் என்பது தனிமனிதனின் உரிமை சார்ந்த விஷயம். அதை மதித்து நடக்க வேண்டியது அரசின் கடமை.

அ.அருள்மொழி
அ.அருள்மொழி

ஆனால், இத்தகைய அறிவிப்புகள் குடிமக்களின் உரிமையில் தலையிடுவதோடு, தனிப்பட்ட ஒரு சில நம்பிக்கைகளுக்காக தங்களின் உரிமைகளையே மக்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற இடத்தில் கொண்டுபோய் நிறுத்திவிடும் அபாயம் இருக்கிறது. அதுமட்டுமல்ல, இத்தகைய நடவடிக்கைகள் காலப்போக்கில் மதத்தின் பெயரால் அரசாங்கத்தை மிரட்டும் இடத்துக்குக் கொண்டு போய் நிறுத்திவிடும்” என்றவர்

நாட்டை ஆல்பவர்கள், அரசு இயந்திரத்தை நடத்துபவர்களுக்கு மத நம்பிக்கை இருக்கலாம். ஆனால், அவர்கள் மதவாதிகளாக நடந்துகொள்ளக் கூடாது. இந்த மங்களகரமான நாள் என்பதை இந்து மதத்தோடு தொடர்புடைய நாள்களுடன் நிறுத்திக்கொள்வார்களா அல்லது ஒவ்வொரு மதத்துக்கும் விரிவுபடுத்திக்கொண்டே போவார்களா என்ற கேள்வியும் இதனூடே எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. அப்படி அனைத்து மதங்களுக்கும் விரிவுபடுத்தினால் எல்லா அரசு விடுமுறை நாள்களிலும் அரசு அலுவலகங்கள் செயல்படுமா? மூட நம்பிக்கைக்காகச் சட்டம் ஒழுங்கை ஓர் அரசு மதிக்காமல் நடக்கும் என்று சொன்னால் அதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த மாதிரி சட்ட மீறல்களைக் கண்டிப்பதுதான் மக்கள் அரசாங்கத்துக்குச் சொல்லும் நல்ல பாடமாக இருக்கும்” என்றார்.

பத்திரப்பதிவு
பத்திரப்பதிவு

இது தொடர்பாக பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பேசினோம், “பதிவுத்துறை செயலாளரிடம் இருந்து இப்படிச் சில பரிந்துரைகள் அடங்கிய கடிதம் வந்துள்ளது. அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் தொடர்பாக விவாதித்து, ஆலோசனை செய்து நடைமுறைப்படுத்துவது குறித்து முடிவெடுப்போம்” என்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு