Published:Updated:

ஆளுநர் ரவிக்கு எதிரான தனித் தீர்மானம்: எதிர்ப்பு தெரிவித்த பாஜக... வெளிநடப்பு செய்த அதிமுக!

தமிழ்நாடு அரசு - ஸ்டாலின் - ஆர்.என்.ரவி

ஆளுநருக்கு எதிரான தீர்மானத்தை அமைச்சர் துரைமுருகன் முன்மொழிந்தார். அதற்கு பா.ஜ.க உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, அ.தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Published:Updated:

ஆளுநர் ரவிக்கு எதிரான தனித் தீர்மானம்: எதிர்ப்பு தெரிவித்த பாஜக... வெளிநடப்பு செய்த அதிமுக!

ஆளுநருக்கு எதிரான தீர்மானத்தை அமைச்சர் துரைமுருகன் முன்மொழிந்தார். அதற்கு பா.ஜ.க உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, அ.தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தமிழ்நாடு அரசு - ஸ்டாலின் - ஆர்.என்.ரவி

தமிழ்நாடு அரசின் சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதா உள்ளிட்ட 14 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ரவி நிலுவையில் வைத்திருக்கிறார். இது தமிழ்நாடு அரசியலில் பெரும் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. இந்த நிலையில், சமீபத்தில் குரூப்-1 தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களிடம் உரையாடிய ஆளுநர் ரவி, ``மாநில சட்டமன்றத்தில் ஒரு சட்டம் இயற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படுகிறது. ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்திவைத்தால், அது நிராகரிக்கப்பட்டதாகவே கருதப்படும்.

முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி
முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி

ஆனால், அது `நிலுவையில் இருக்கிறது' என அலங்கார வார்த்தையாகக் குறிப்பிடப்படுகிறது" எனத் தெரிவித்திருந்தார்.  இதற்கு தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், ``எதையும் துணிச்சலாக ஏற்கவோ, எதிர்க்கவோ செய்யாமல் கிடப்பில் போடுவது என்பது அரசியல் சட்டம் அங்கீகரித்த பதவியில் இருப்பவருக்கு அழகல்ல. அதையும் தாண்டி, அதைச்  சட்டபூர்வமற்ற பொதுவெளியில் பகிர்ந்துகொள்வதோடு, நியாயப்படுத்திட முயல்வது என்பது மிகமிக மோசமான முன்னுதாரணமாகும்" எனக் காட்டமாகத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் ரவிக்கு எதிராக `அரசு சார்பில் தீர்மானம் நிறைவேற்றக் கூடாது' என்ற சட்ட விதிகளைத் திருத்தி, தீர்மானம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இந்தத் தீர்மானத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டமன்றத்தில் முன்மொழிந்தார்.

அப்போது, ``சட்டமன்றப் பேரவை விதி 92-ல் அடங்கியிருக்கும்... `conduct of any governor' என்னும் பதம் மற்றும் `Use the governor's name for the purpose of influencing a debate' என்னும் பதம் மற்றும் விதி 287-ல் அடங்கியிருக்கும் `Provided however that the above provision shall not be invoked to suspense rule 92' என்னும் பதம் ஆகியவற்றின் பயன்பாடுகளை நிறுத்திவைக்க வேண்டும் என்ற அரசின் தனித் தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.

சட்டப்பேரவை
சட்டப்பேரவை
கோப்புப் படம்

இந்தத் தீர்மானம் கொண்டுவரப்படுவதற்கு முன்பே அ.தி.மு.க உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அதைத் தொடர்ந்து பேரவைக் கதவுகள் மூடப்பட்டு, `எண்ணி கணிக்கும் முறை'யில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அவையிலுள்ள மொத்த உறுப்பினர்களில் நான்கில் மூன்று பங்கு உறுப்பினர்களின் ஆதரவு இந்தத் தீர்மானம் நிறைவேறுவதற்குத் தேவையான நிலையில், தி.மு.க., அதன் கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். பா.ஜ.க உறுப்பினர்கள் இருவர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மற்ற இரு பா.ஜ.க உறுப்பினர்கள் இன்று அவைக்கு வரவில்லை. அதைத் தொடர்ந்து, முதல்வரின் தனித் தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.