Published:Updated:

மோடி 8 ஆண்டுகள்! - ப்ளஸ்... மைனஸ்

மோடி
பிரீமியம் ஸ்டோரி
மோடி

கொரோனா பரவலைத் தடுப்பதற்காக உலக நாடுகள் தள்ளாடிக்கொண்டிருந்த நேரத்தில், சுயச்சார்பாக இந்தியாவிலேயே கொரோனா தடுப்பூசி உருவாக்கப்பட்டது.

மோடி 8 ஆண்டுகள்! - ப்ளஸ்... மைனஸ்

கொரோனா பரவலைத் தடுப்பதற்காக உலக நாடுகள் தள்ளாடிக்கொண்டிருந்த நேரத்தில், சுயச்சார்பாக இந்தியாவிலேயே கொரோனா தடுப்பூசி உருவாக்கப்பட்டது.

Published:Updated:
மோடி
பிரீமியம் ஸ்டோரி
மோடி

மத்தியில், எட்டாண்டுகள் ஆட்சியை நிறைவுசெய்திருக்கிறது நரேந்திர மோடி அரசு. டிஜிட்டல் இந்தியா, நூறு கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள், மருத்துவ, பயிர்க் காப்பீட்டுத் திட்டங்கள், கழிவறை அமைக்கும் திட்டம் எனப் பல்வேறு சமூகநலன் சார்ந்த திட்டங்களை அமல்படுத்தி ஒருபக்கம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது மோடி அரசு. அதேவேளையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கை, பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவது, மதக் கலவரங்கள், சி.ஏ.ஏ., வேளாண் சட்டங்களைக் கொண்டுவர முயன்றது உள்ளிட்ட விஷயங்களில் பொதுமக்களிடம் வெறுப்பையும் சம்பாதித்திருக்கிறது. ‘எப்படி இருந்தது மோடியின் எட்டாண்டுகள் ஆட்சி?’ பொது அமைதி, சுகாதாரம், தேசப் பாதுகாப்பு, உணவு, விவசாயம், வளர்ச்சி எனப் பல தளங்களில் மோடி அரசின் `ப்ளஸ் - மைனஸ்’ ரிப்போர்ட்டைச் சேகரித்தோம்!

மோடி 8 ஆண்டுகள்! - ப்ளஸ்... மைனஸ்

‘முத்ரா கடன்’ திட்டமும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையும்!

மோடி அரசின் பிரபலமான திட்டங்களில் சிறு, குறு வியாபாரிகளிடம் ‘முத்ரா கடன்’ திட்டம் வரவேற்பைப் பெற்றது. இந்தத் திட்டத்தின்படி, 50,000 ரூபாயில் தொடங்கி, 10 லட்சம் ரூபாய் வரை வியாபாரிகளுக்கு வங்கிகளில் குறைந்த வட்டியில் கடன் அளிக்கப்படுகிறது. 2015, ஏப்ரலில் பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில், இதுவரை 19.22 லட்சம் கோடி ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 35.3 கோடிப் பேர் இதன் மூலமாகப் பயனடைந்துள்ளனர். கடந்த ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் 54 லட்சம் பேருக்கு 36,578 கோடி ரூபாய் கடன் அளிக்கப்பட்டுள்ளது. கடன் அளித்ததோடு மட்டுமல்லாமல், வியாபாரம் முன்னேற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கும் ஊக்கமளித்தது மோடி அரசு. காய்கறிக் கடை, டீக்கடைகளில் தொடங்கி, பெரிய பெரிய ஷாப்பிங் மால்கள் வரை ‘யூ.பி.ஐ ஸ்கேன்’ நடைமுறை விஸ்வரூபம் அடைந்திருப்பதற்கு இந்த உத்வேகம் முக்கியக் காரணம்.

இன்றைய தேதியில், ‘நிகழ் நேரப் பரிவர்த்தனைகள்’ அதிகம் நிகழும் நாடாக இந்தியா மாறியிருக்கிறது. 2021-ம் ஆண்டில் மட்டும் 4,800 கோடி டிஜிட்டல் பணப் பரிவர்த் தனைகள் நடந்ததாக ‘ஏ.சி.ஐ வேர்ல்டு வைடு’ என்கிற அமைப்பு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. நம்மிடம் பேசிய மத்திய அரசின் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலர், “மத்திய அரசின் திட்டங்களில் பயன்பெறுவோர், திட்டங்களுக்கான நிதியை முழுமையாகப் பெற முடியாத நிலை இருப்பதைக் கருத்தில்கொண்டு, அதைக் களைவதற்காக, அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்கிற ‘ஜன் தன் யோஜனா’ திட்டம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் 40 கோடிப் பேர் புதிதாக வங்கிக் கணக்குப் பெற்றுள்ளனர். மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு நலத்திட்டங்களுக்கான நிதி, அந்த வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. சமீபத்தில் ஜெர்மனிக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, ‘ஒரு ரூபாய் அனுப்பினால், அதில் 15 பைசாதான் மக்களுக்குச் செல்கிறது. மீதி 85 பைசாவை இடையிலிருப்பவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள் என இனி யாரும் சொல்ல முடியாது’ என்றார். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் பொதுமக்களை இணைத்ததால்தான், அரசின் நிதியுதவிகள் ஊழல் இல்லாமல் நேரடியாகச் சென்று சேர்கின்றன. கடந்த எட்டாண்டுகளில் நடைபெற்றிருக்கும் இந்த மாற்றம் மிகப் பெரியது” என்றனர்.

மலிவு விலையில் மருந்து... அனைவருக்கும் தடுப்பூசி... 80 கோடிப் பேருக்கு இலவச அரிசி!

சுகாதாரத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது மோடி அரசு. ‘ஸ்வச் பாரத்’ திட்டத்தின் கீழ், 11.23 கோடி கழிப்பறைகள் இந்தியா முழுவதும் கட்டப்பட்டுள்ளன. சாமானியர்களுக்குக் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க ஏதுவாக, ‘மக்கள் நல மருந்தகங்கள்’ எனும் மலிவு விலை மருந்தகங்கள் நாடு முழுவதும் திறக்கப்பட்டன. இந்த மருந்தகங்களில், சுமார் 800 மருந்து நிறுவனங்களின் மருந்துகள் 50 முதல் 90 சதவிகித தள்ளுபடி விலையில் விற்கப்படுகின்றன. ‘ஜன் ஔஷதி’ திட்டத்தின் கீழ், யார் வேண்டுமானாலும் இந்த மருந்தகங்களை ஆரம்பிக்கலாம். இதற்காக, 2.5 லட்சம் ரூபாய் மானியம் அளிக்கிறது மத்திய அரசு. இதுவரை, நாடு முழுவதும் 8,604 மக்கள் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இவற்றில், தமிழகத்தில் மட்டும் 844 மருந்தகங்கள் இயங்குகின்றன.

கொரோனா பரவலைத் தடுப்பதற்காக உலக நாடுகள் தள்ளாடிக்கொண்டிருந்த நேரத்தில், சுயச்சார்பாக இந்தியாவிலேயே கொரோனா தடுப்பூசி உருவாக்கப்பட்டது. இதுவரை, 89.05 கோடிப் பேருக்கு முழுவதுமாகத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. உலகிலேயே அதிக அளவாக, 193 கோடி டோஸ் மருந்துகள் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. கொரோனா காலகட்டத்தில் சிரமத்துக்குள்ளான சாமானியர்களுக்கு உதவிடும் வகையில், ‘பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா’ திட்டத்தின்கீழ், 80 கோடிப் பேருக்கு இலவசமாக அரிசி, கோதுமை வழங்கப்பட்டன. முன்னுரிமை பெற்ற அந்த்யோதயா அன்ன யோஜனா கார்டுகளுக்கு அதிகபட்சம் 35 கிலோ இலவச அரிசியும் வழங்கப்பட்டது. கொரோனாவால் வியாபாரம் பாதித்த சாலையோர வியாபாரிகளுக்கு உதவிடும் வகையில், 36,89,503 பேருக்கு நிதி உதவியும் அளிக்கப்பட்டது. நபர் ஒருவருக்கு அதிகபட்சம் 10,000 ரூபாய் வரை, நிதியுதவி அளித்தது மத்திய அரசு.

மோடி 8 ஆண்டுகள்! - ப்ளஸ்... மைனஸ்

வீடு முதல் ரோடு வரை!

மோடி ஆட்சியில், வீடு இல்லாதவர்களுக்கு வீடுகட்டிக் கொடுப்பதற்காக ‘ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் கீழ் குறைந்த வட்டியில் கடன் அளிக்கப்படுகிறது. இதில், தகுதியுள்ளவர்களுக்கு 2.67 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது. கிராமப்புறங்களில், ‘மோடி வீடு’ என அடைமொழியிட்டு அழைக்கும் அளவுக்கு மிகப் பிரபலமான இந்தத் திட்டத்தில், இதுவரை சுமார் மூன்று கோடிப் பேர் பலனடைந்துள்ளனர்.

வீடு கட்டுவதில் மட்டுமல்ல, நாட்டின் எல்லையோரங்களில் சாலைகள் அமைப்பதிலும் சாதித்திருக்கிறது மோடி அரசு. கடந்த எட்டாண்டுகளில், காஷ்மீர் முதல் அருணாச்சலப் பிரதேசம் வரை தரமான சாலைகள் போடப்பட்டுள்ளன. குறிப்பாக, ஜூன் 2017-ல் இந்தியா - சீனா இடையே எல்லை மோதல் எழுந்த பிறகு, ‘பார்டர் ரோடு அமைப்பு’க்கு வழங்கும் நிதியை 40 சதவிகிதத்துக்கு மேல் உயர்த்தியிருக்கிறது மத்திய அரசு. மணாலி - லடாக்கை இணைக்கும் வகையில், 9.02 கி.மீ நீளத்தில் ‘அடல் சுரங்கப்பாதை’ திறக்கப்பட்டது. கடந்த ஆண்டு மட்டுமே, 87 பாலங்கள், 15 சாலைகள் இந்திய எல்லையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளன. “இந்திய வரலாற்றிலேயே, ஒரு வருடத்தில் இவ்வளவு கட்டமைப்புகள் இந்திய எல்லையில் அமைக்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறை” எனப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சமீபத்தில் பெருமைப்பட்டிருக்கிறார்.

‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தின்கீழ், 17.9 கோடி பேருக்கு மருத்துவக் காப்பீடு, ‘பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி’ திட்டத்தின்படி, 12.04 கோடி விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி, சுயச்சார்பு உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக, ‘ஆத்மநிர்பார் பாரத்’ திட்டத்தின் கீழ் 20 லட்சம் கோடி ரூபாய் பேக்கேஜ் எனப் பல்வேறு நலத்திட்டங்களை, கடந்த எட்டு ஆண்டுகளில் வீடு முதல் எல்லையோர ரோடு வரை பல சாதனைகளை சாதித்துக் காட்டியிருக்கிறது மோடி அரசு. அதேவேளையில், அவர்கள் சறுக்காமலும் இல்லை.

தெருவில் நிறுத்திய பண மதிப்பிழப்பு நடவடிக்கை!

‘கறுப்புப் பணத்தை ஒழிக்கிறோம்’ என்கிற கோஷத்தை முன்வைத்து, 8 நவம்பர், 2016-ல் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார் மோடி. நாடே பிரளயமானது. ஒட்டுமொத்தமாக மக்களின் இயல்பு வாழ்க்கை நிலைகுலைந்தது. பணத்தட்டுப்பாடும் குழப்பமும் அதிகரித்ததால் வாழ்வாதாரம் பாதித்தது. பணம் எடுப்பதற்காக ஏ.டி.எம் மையங்களில் பல மணி நேரம் மக்கள் வரிசையில் நின்றார்கள். திட்டமிட்டபடி மருத்துவம், கல்வி, திருமணம், மரணம் உள்ளிட்ட விஷயங்களில் செலவுகளைச் சமாளிக்க முடியாமல், வங்கிகளில் நிற்க முடியாமல் மக்கள் தவித்தனர். இந்த அசாதாரணச் சூழலால் நாடு முழுவதும் 105 பேர் இறந்தனர். இந்த ரத்தக் கறைகள் இன்னும் மோடி அரசின் கைகளிலிருந்து அகலவில்லை. ‘பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கறுப்புப் பணம் ஒழியவில்லை’ என்று ஆர்.பி.ஐ அமைப்பே அறிவித்துவிட்டது. புதிதாக அச்சடிக்கப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகளும் தற்போது பெரும் புழக்கத்தில் இல்லை. மொத்தத்தில், பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டு மக்களை ரோட்டில் நிறுத்தியதுதான் மிச்சம்.

மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகள், பொதுத்துறை காப்பீடு நிறுவனங்களைத் தனியார்மயமாக்க முடிவெடுத்திருக்கிறது மத்திய அரசு. இதற்கு அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள் போராட்டம் நடத்திப் பார்த்தும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. ‘இந்தியா விற்பனைக்கு’ என்று போர்டு மாட்டாத குறையாக, ஏர் இந்தியாவில் தொடங்கி, பாரத் பெட்ரோலியத்தைத் தாரை வார்ப்பது வரை விற்பனை தொடரத்தான் செய்கிறது.

மோடி 8 ஆண்டுகள்! - ப்ளஸ்... மைனஸ்

சிக்கலை ஏற்படுத்திய சட்டங்கள்!

சர்ச்சையைக் கிளப்பும் சட்டங்களைக் கொண்டுவருவதும், அதற்கு எதிராக மக்களின் போராட்டம் வெடித்தவுடன் சட்டங்களை வாபஸ் பெறுவமாக, கடந்த எட்டாண்டுகளில் மோடி அரசு ஆடிய கண்ணாமூச்சி ஒன்றிரண்டல்ல. 2014-ல் ஆட்சிக்கு வந்தவுடன், ‘நில ஆர்ஜிதச் சட்டம்’ கொண்டுவரப்பட்டது. இதற்கு எதிர்ப்பு எழுந்ததும், சட்டத்தை வாபஸ் பெற்றனர். குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதற்குப் பெரிய அளவில் மக்களிடம் எதிர்ப்பு கிளம்பியது. இந்தியா முழுவதும் சிறுபான்மையின மக்களின் போராட்டங்கள் வெடித்தன. ‘சட்டத்தை ஏற்றுக்கொண்டு இந்தியாவில் இருக்க முடியவில்லையென்றால் பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள்’ என சமூக வலைதளங்களில் அருவருக்கத்தக்க வாதங்களை பா.ஜ.க-வினர் முன்வைத்தனர். இந்தச் சட்ட மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டதால், மசோதாவைத் தள்ளிப்போட்டிருக்கிறது மத்திய அரசு.

அதேபோல, மோடி அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களும், போராட்டக் களத்தைச் சூடேற்றின. ஓராண்டுக்கும் மேலாக டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 700-க்கும் மேற்பட்டவர்கள் இந்தப் போராட்டத்தால் இறந்ததாகச் செய்திகள் தடதடத்தன. உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் தேர்தல் வந்ததால், சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக அறிவித்தது மத்திய அரசு. இஸ்லாமியர்களின் மரபார்ந்த உரிமைகளில் தலையிடும்விதமாக முத்தலாக் தடைச் சட்டமும், காஷ்மீரின் அடிப்படை உரிமையைப் பறிக்கும்விதமாக, அந்த மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளித்த ‘அரசியலமைப்பு பிரிவு 370’-ஐ நீக்கியும் உத்தரவிட்டது மோடி அரசு. ஜி.எஸ்.டி-க்கு எதிராக மாநில அரசுகள் போர்க்கொடி தூக்கும் நிலையில், அதையும் அலட்சியப்படுத்துகிறது மத்திய அரசு. இவற்றுக்கு எதிராக இன்றுவரை போராட்டங்கள் தொடரும் நிலையில், மக்களின் கோரிக்கையைக் காதுகொடுத்துக் கேட்கக்கூட மோடி அரசு தயாராக இல்லை.

‘இந்தியாவில் திறந்தவெளி கழிப்பிடங்களே இல்லை’ என டிசம்பர் 2019-ல் மத்திய அரசு ஒரு தகவலை வெளியிட்டது. ஆனால், தேசிய குடும்பச் சுகாதாரக் கணக்கெடுப்பின்படி, பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, லடாக் போன்ற பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், வெறும் 40 முதல் 60 சதவிகித மக்களுக்கு மட்டுமே மேம்பட்ட சுகாதார வசதிகள் கிடைக்கின்றன. உலக சுகாதார அமைப்பு நடத்திய ஓர் ஆய்வில், இந்தியாவில் 20 கோடிக்கும் அதிகமானோர் இன்னும் திறந்தவெளியில்தான் மலம் கழிக்கிறார்கள் எனக் குறிப்பிட்டிருப்பது, மத்திய அரசின் பிரசாரத்துக்கு வேட்டுவைத்திருக்கிறது. அதேபோல, மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் நடைமுறை தடுக்கப்பட்டதாக 2021-ல் மத்திய அரசு அறிவித்தது. ஆனால், நாடு முழுதும் 58,098 பேர் (அதிகாரபூர்வமாகவே) இன்னும் அந்தத் தொழிலில் ஈடுபட்டிருப்பதாக, சமீபத்திய தரவுகள் வெட்ட வெளிச்சமாகியிருக்கின்றன.

15 லட்சம் ரூபாய் எங்கே?

பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்திருப்பதால், அதையொட்டிய சரக்குப் போக்குவரத்தின் கட்டணமும் உயர்ந்திருக்கிறது. பொருள்களின் விலை உயர்வுக்கு இது பிரதான காரணம். காடுகளின் பரப்பளவை அதிகரித்து காற்று மாசின் அளவைக் குறைத்தல், சுகாதாரத்துறையில் மருத்துவர்கள், செவிலியர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், இந்தியத் தொழிலாளர் சந்தையில் பெண்களின் பங்களிப்பு விகிதத்தை அதிகரித்தல், உயர்கல்வியில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரித்தல் எனப் பல்வேறு விவகாரங்களில் நிர்ணயித்த இலக்கை அடைய முடியவில்லை என்பதால், `புதிய இந்தியா’ கனவை இன்னும் 25 ஆண்டுகளுக்குத் தள்ளிவைத்திருக்கிறது மத்திய அரசு. ‘2022-ல் புதிய இந்தியாவை உருவாக்குவோம்’ என்று அறிவித்த மோடி, அந்தக் கனவைத் தள்ளிவைத்திருப்பது பெரும் சறுக்கல்தான். கறுப்புப் பணத்தை மீட்டு, ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்ச ரூபாய் கொண்டுசேர்ப்பதாகச் சொன்ன மோடி, இதுவரை ஒரு ரூபாயைக்கூட அளிக்கவில்லை.

கடந்த எட்டாண்டுகளில் நாடு வளர்ச்சி பெற்றதோ இல்லையோ, மதக் கலவரங்களின் எண்ணிக்கை வளர்ச்சியடைந்திருக்கிறது. உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மாட்டுக்கறியை மையமாகவைத்து நடந்த கலவரங்களால் பலர் கொல்லப்பட்டனர். கர்நாடகாவில் ஹிஜாப்பைவைத்துப் பெரும் பிரச்னையை உருவாக்கியது பா.ஜ.க. `ஆக்கிரமிப்பு அகற்றம்’ என்கிற பெயரில் சிறுபான்மையினர் வீடுகளை மத்தியப் பிரதேசத்தில் புல்டோசரால் இடித்து புதிய வன்முறைக் கலாசாரம் கொண்டுவரப்பட்டது. தேர்தல் சமயங்களில் கலவரத்தைத் தூண்டுவதுபோலப் பேசுவது, கலவரத்தில் ஈடுபட்டு, சிறையிலிருந்து வெளிவருபவர்களை ராஜ மரியாதையுடன் வரவேற்பது, மத, இன, சமூகரீதியாக வன்முறைச் சம்பவங்கள் என பா.ஜ.க-வினர் அடிக்கும் கொட்டத்துக்கு அளவில்லை. இவற்றில் எதையும் மோடி அரசு கண்டிப்பதில்லை.

நாட்டுக்கு மட்டுமல்ல, ஜனநாயகத்துக்கும் பா.ஜ.க-வின் சில செயல்பாடுகள் ஆபத்தை உருவாக்கியுள்ளன. கோவா, கர்நாடகாவில் தொடங்கி வடகிழக்கு மாநிலங்கள் வரை ஆட்சியைப் பிடிப்பதற்காக எம்.எல்.ஏ-க்களை விலை பேசுவது, எதிர்க்கட்சியையே கபளீகரம் செய்வது என ஜனநாயகத்துக்கு எதிரான அத்தனை விஷயங்களையும் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது மோடி அரசு. இதற்கு சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அமைப்புகளையும் பயன்படுத்துவதால் அநியாயத்துக்குப் பெயர் கெட்டுப்போயிருக்கிறது.

கடந்த எட்டாண்டுக்கால மோடி அரசு சில சாதனைகளையும், அதைவிட அதிகமாகச் சறுக்கல்களையும் எதிர்கொண்டிருக்கிறது. இன்று, மத்தியில் உறுதியான எதிர்க்கட்சி இல்லாததாலும், மாநிலக் கட்சிகளை மிரட்டிப் பணியவைக்க முயல்வதாலும் தன்னை ஒரு முடிசூடா மன்னனாகக் கருதிக்கொள்கிறார் மோடி. இந்த ஆட்சிக்கான மதிப்பெண்ணை, மக்களின் வாக்குகளும், காலமும் 2024-ல் வழங்கும்!

*****

இவர்கள் என்ன சொல்கிறார்கள்?

மோடி 8 ஆண்டுகள்! - ப்ளஸ்... மைனஸ்

“20 கோடி மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே சென்றிருக்கிறார்கள். இதற்கு நேர்மாறாக அதானியின் சொத்து மதிப்பு 1,830 சதவிகிதமும், அம்பானி சொத்து மதிப்பு 840 சதவிகிதமும் அதிகரித்துள்ளன. இந்தியாவில் பொருளாதாரம் ஆட்டம் கண்டுகொண்டிருக்கிறது. இதை இவர்கள் புரிந்துகொண்டு செயல்படவில்லையென்றால், இலங்கையின் நிலை இந்தியாவுக்கு ஏற்படும் நாள் தூரத்தில் இல்லை!”

- கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், செய்தித் தொடர்பாளர், தி.மு.க.

மோடி 8 ஆண்டுகள்! - ப்ளஸ்... மைனஸ்

``ஏழை, எளிய மக்களின் பிரச்னைகளைப் புரிந்துகொண்ட ஒரு தலைவரின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை பேணிக் காக்கப்பட்டுவருகிறது. இந்தியாவின் நன்மதிப்பு உலக அரங்கில் மேன்மேலும் உயர்ந்துகொண்டு செல்கிறது. பண மதிப்பிழப்புக்குப் பிறகும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது அனைவருக்குமானதாக இருக்கிறது. வரும் 2024-ம் ஆண்டுத் தேர்தலிலும் பா.ஜ.க-வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் பெருவாரியான வெற்றியை அடையும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது!’’

- கோகுல இந்திரா, முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.

மோடி 8 ஆண்டுகள்! - ப்ளஸ்... மைனஸ்

“காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களின் பெயர்களை மாற்றிவிட்டு, நன்றாகச் செயல்பட்டுவந்த திட்டத்தையும் நாசம் செய்ததுதான் எட்டு ஆண்டுக்கால சாதனை. 2014-ம் ஆண்டு எட்டு சதவிகிதமாக இருந்த நாட்டின் ஜி.டி.பி., 2019-ம் ஆண்டு நான்கு சதவிகிதமானது. அதுவே கொரோனா காலகட்டத்தில் மைனஸ் 24 சதவிகிதத்துக்குச் சென்றது. இந்த மைனஸிலிருந்து மீண்டுவருவதைத்தான் இப்போது இவர்கள் வளர்ச்சி என்று பெருமை பேசிக்கொண்டிருக்கிறார்கள்!”

- சசிகாந்த் செந்தில், மாநில ஒருங்கிணைப்பாளர், காங்கிரஸ்.

மோடி 8 ஆண்டுகள்! - ப்ளஸ்... மைனஸ்

“மதச்சார்பு கொள்கைக்கு எதிராக மக்களைப் பிளவுபடுத்தி, அவர்களை மோதவிட்டு, இவர்கள் குறுகிய அரசியல் ஆதாயத்தைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். தேர்தல் ஆணையம், நீதிமன்றம், ரிசர்வ் வங்கி போன்ற சுதந்திரமாகச் செயல்படவேண்டிய அமைப்புகள் அனைத்தையும் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். முன்பு பாபர் மசூதியை இடித்தவர்கள், இப்போது இஸ்லாமியர்களின் வீடுகளை இடித்துவருகிறார்கள்!’’

- முத்தரசன், மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

மோடி 8 ஆண்டுகள்! - ப்ளஸ்... மைனஸ்

முதல் ஐந்தாண்டு நல்லாட்சியின் காரணமாகத்தான், 2019-ம் ஆண்டில் இரண்டாவது முறையாக மீண்டும் பெரும்பான்மையோடு ஆட்சிப் பொறுப்பேற்றார் பாரத பிரதமர் மோடி. நாட்டின் உட்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி, பாதுகாப்பு என்று அனைத்துமே வளர்ச்சியடைந்துள்ளன. நல்லரசாகச் செயல்படும் பா.ஜ.க., இந்தியாவை வல்லரசாக மாற்ற உழைத்துக்கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியின்மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நம்பிக்கையின் விளைவாக, உறுதியாக மூன்றாவது முறையாக பா.ஜ.க ஆட்சியில் அமரும்!’’

- ஜி.கே.வாசன், தலைவர், தமிழ் மாநில காங்கிரஸ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism