
பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நாங்கள் வேலை செய்தோம். அதற்கான பலன்களை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். ஒரு வேலையும் செய்யாத காங்கிரஸ் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது
இந்தியா முழுவதும் அதிகம் கவனிக்கப்பட்ட கட்சியாக உருவெடுத்திருக்கிறது ஆம் ஆத்மி. டெல்லி, பஞ்சாப், கோவா, குஜராத் என நான்கு மாநிலங்களில் ஆறு சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குவங்கியைப் பெற்று, மிகக் குறுகியகாலத்தில் தேசியக்கட்சியான பெருமையையும் பெற்றிருக்கிறது. அதேநேரத்தில், `காங்கிரஸ் வலுவாக இருக்கும் மாநிலங்களில் கால்பதித்து, அவர்களை வலுவிழக்கச் செய்வதே ஆம் ஆத்மியின் பிரதான வேலை. பா.ஜ.க-வின் `பி’ டீமாகச் செயல்படுகிறார் அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால்’ என்கிற குற்றச்சாட்டுகளும் எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படுகின்றன. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம், ``கோவா, உத்தரகாண்ட்டில் செய்ததைப்போலவே, குஜராத்திலும் ஆம் ஆத்மி ஸ்பாய்லராகச் செயல்பட்டிருக்கிறது. குஜராத்தில் 33 இடங்களில் காங்கிரஸின் வெற்றி வாய்ப்பை ஆம் ஆத்மி தகர்த்துவிட்டது’’ என்றிருக்கிறார்.சமீபத்தில் வெளியான குஜராத் தேர்தல் முடிவுகளின் தரவுகள் இந்தக் கருத்தை மேலும் வலுப்படுத்துகின்றன!

காங்கிரஸ் வாக்குவங்கியை காலி செய்ததா ஆம் ஆத்மி?
நடந்து முடிந்த குஜராத் தேர்தலில், மொத்தமுள்ள 182 தொகுதிகளில், 156 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றிபெற்றது பா.ஜ.க. கடந்த தேர்தலில், 77 இடங்களில் வென்று வலுவான எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸுக்கு, இந்த முறை வெறும் 17 தொகுதிகள் மட்டுமே கிடைத்திருக்கின்றன. புதுவரவான ஆம் ஆத்மி, 5 இடங்களில் மட்டுமே வென்றிருந்தாலும், பல இடங்களில் காங்கிரஸின் வாக்குவங்கியைப் பதம் பார்த்திருக்கிறது. எப்போதும் குஜராத்தின் நகர்ப்புறத்தில், பா.ஜ.க-வின் வாக்குவங்கி பலமாக இருக்கும். எனவே, 2022 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, `நகர்ப்புறத்தில் தாக்கத்தை ஏற்படுத்திவரும் ஆம் ஆத்மி, காங்கிரஸின் வாக்குவங்கியை மட்டுமல்ல... பா.ஜ.க-வின் வாக்குவங்கியையும் பதம் பார்க்கும்’ என்ற கருத்துகள் நிலவிவந்தன.
2017 சட்டமன்றத் தேர்தலில் 49.1% வாக்குகளைப் பெற்றிருந்த பா.ஜ.க, இந்த முறை 52.5% வாக்குகளை அறுவடை செய்திருக்கிறது. அதேநேரம், கடந்த தேர்தலில் 41.4% வாக்குகளைப் பெற்றிருந்த காங்கிரஸுக்கு இந்த முறை கிடைத்தது 27.3% வாக்குகள் மட்டுமே. அதுவே, ஆம் ஆத்மிக்கு 12.9% வாக்குகள் கிடைத்திருக்கின்றன. இந்தத் தரவுகளைவைத்துப் பார்க்கும்போது, ஆம் ஆத்மியின் வருகையால் பா.ஜ.க-வின் வாக்குவங்கிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதும், காங்கிரஸின் வாக்குவங்கி பெரும் வீழ்ச்சியைச் சந்தித்திருப்பதும் தெளிவாகிறது.
இந்தத் தேர்தலில், மொத்தம் 35 தொகுதிகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறது ஆம் ஆத்மி. இவற்றில் ஒன்பது தொகுதிகள் பழங்குடி வேட்பாளர்களுக்காகவும், இரண்டு தொகுதிகள் பட்டியலின வேட்பாளர்களுக்காகவும் ஒதுக்கப்பட்டவை. குஜராத்தில், எப்போதும் ரிசர்வ் தொகுதிகளில் வலுவாக இருப்பது காங்கிரஸ் கட்சிதான். ஆனால், இந்த முறை பழங்குடிகளுக்காக ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகளில் ஆம் ஆத்மி, காங்கிரஸின் வாக்குகளைப் பிரித்ததால், 23 தொகுதிகளை பா.ஜ.க கைப்பற்றியிருக்கிறது. போன முறை இவற்றில் 15 தொகுதிகளைக் கைப்பற்றிய காங்கிரஸ், இந்த முறை மூன்றில் மட்டுமே வென்றிருக்கிறது. மீதமுள்ள ஒரு தொகுதி ஆம் ஆத்மிக்குக் கிடைத்திருக்கிறது.

அதேபோல, குஜராத் சட்டமன்றத் தொகுதிகளில் சௌராஷ்டிரா பகுதி முக்கியமானது. மொத்தம் 48 தொகுதிகள் அந்தப் பகுதியில் இருக்கின்றன. 2017 தேர்தலில், இந்தப் பகுதியிலுள்ள 28 தொகுதிகளைக் கைப்பற்றிய காங்கிரஸுக்கு, இந்த முறை மூன்று தொகுதிகள்தான் கிடைத்திருக்கின்றன. அதேநேரம் செளராஷ்டிராவில், ஆம் ஆத்மி நான்கு இடங்களைக் கைப்பற்றி முன்னேறியிருக்கிறது. சோட்டிலா (Chotila), லிம்படி (Limbdi), தசதா (Dasada), ராபர் (Rapar) உள்ளிட்ட தொகுதிகளில் கடந்த முறை அமோக வெற்றிபெற்றது காங்கிரஸ். ஆனால், இந்த முறை ஆம் ஆத்மி வாக்குகளைப் பிரித்ததால், அந்த இடங்களில் தோல்வியையே சந்தித்திருக்கிறது.
உதாரணத்துக்கு, காங்கிரஸ் கோட்டையான ராபர் தொகுதியில், 577 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருக்கிறது காங்கிரஸ். அந்தத் தொகுதியில் ஆம் ஆத்மி பெற்றிருக்கும் வாக்குகள் 2,434. மேலும், ஆம் ஆத்மி வெற்றிபெற்றிருக்கும் ஐந்து இடங்களில், இரண்டு காங்கிரஸ் வசமும், ஒன்று காங்கிரஸ் கூட்டணியிலிருந்த பாரதிய பழங்குடிகள் கட்சியின் வசமும் இருந்தவை.
குஜராத்தில், பா.ஜ.க-வின் மற்றொரு `பி’ டீம் என எதிர்க்கட்சிகளால் சொல்லப்படும் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி, இந்த முறை காங்கிரஸ் வாக்குவங்கியிலிருக்கும் சிறுபான்மையினரின் வாக்குகளைப் பிரித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆம் ஆத்மி, பா.ஜ.க-வின் `பி’ டீமா..?
குஜராத்தில் ஆம் ஆத்மி ஏற்படுத்தியிருக்கும் தாக்கங்கள் குறித்துப் பேசும் அரசியல் பார்வையாளர்கள், ``2013-ம் ஆண்டு டெல்லி மக்கள் மத்தியில் செல்வாக்கு மிகுந்த தலைவராக இருந்த காங்கிரஸ் கட்சியின் ஷீலா தீக்ஷித்தை வீட்டுக்கு அனுப்பி, ஆட்சியைப் பிடித்தது ஆம் ஆத்மி. டெல்லியை அடுத்து காங்கிரஸ் ஆட்சியிலிருந்த பஞ்சாப்பில் கால்பதித்து, அங்கும் வெற்றிகண்டது. அதேபோல, காங்கிரஸ் பலமாக இருக்கும் கோவா, உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலத் தேர்தல்களில் தீவிரமாகக் களமிறங்கி அவர்களின் வாக்குகளைப் பிரித்திருக்கிறது ஆம் ஆத்மி. அடுத்ததாக, காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானிலும், காங்கிரஸ் எதிர்க் கட்சியாக இருக்கும் கர்நாடகாவிலும் களமிறங்கத் திட்டமிட்டிருக்கிறது. பா.ஜ.க, காங்கிரஸ் நேரடியாக மோதிக்கொள்ளும் மாநிலங்களில் களமிறங்கி, அங்கு காங்கிரஸ் வாக்குவங்கியை உடைக்கும் வேலைகளைத்தான் ஆம் ஆத்மி செய்துவருகிறது. எந்த மாநிலத்திலும் பா.ஜ.க-வின் வாக்குவங்கியைப் பதம் பார்க்காத ஆம் ஆத்மி, அந்தக் கட்சியின் `பி’ டீமாக இருக்குமோ என்கிற சந்தேகம் எழாமல் எப்படி இருக்கும்?’’ என்கிறார்கள்.

ஆம் ஆத்மியினரோ, ``பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நாங்கள் வேலை செய்தோம். அதற்கான பலன்களை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். ஒரு வேலையும் செய்யாத காங்கிரஸ் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. தேசிய அளவில் காங்கிரஸுக்கு மாற்று நாங்கள்தான். பா.ஜ.க-வை வலுவாக எதிர்க்கும் நாங்கள் எப்படி அவர்களின் `பி’ டீமாக இருக்க முடியும்?’’ என்கின்றனர்.
காங்கிரஸ் வாக்குகளை, ஆம் ஆத்மி வெகுவாகப் பிரித்திருப்பதை குஜராத் தேர்தல் முடிவின் தரவுகள் காட்டுகின்றன. அதேநேரம், `ஆம் ஆத்மி வாக்குகளைப் பிரித்துவிட்டதால்தான் நாங்கள் தோற்றுவிட்டோம்’ என்று காங்கிரஸால் சப்பைக்கட்டுக் கட்ட முடியாது. களத்தில் இறங்கி, மக்களைச் சந்தித்து உருப்படியாக வேலை செய்தால் மட்டுமே காங்கிரஸ் கட்சியால் இந்தியா முழுவதும் விட்டதையாவது பிடிக்க முடியும்!