அரசியல்
சமூகம்
அலசல்
Published:Updated:

காலாவதியான பதவிகள்... தலையில்லாத அ.தி.மு.க!

எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம்
பிரீமியம் ஸ்டோரி
News
எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம்

`இடைக்காலப் பொதுச்செயலாளர்’ என்கிற பதவி அ.தி.மு.க-வின் சட்டவிதிகளில் இல்லை. பொதுச்செயலாளர் பதவிக்குச் சிக்கல் வரும்போது, தற்காலிக ஏற்பாடு செய்துகொள்ளலாம் என்று மட்டுமே இருக்கிறது.

`அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளர்’ என்கிற அடையாளத்தோடு நாமக்கல், கிருஷ்ணகிரி எனத் தமிழகம் முழுவதும் வலம் வந்துகொண்டிருக்கிறார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், ``அந்தப் பதவிக்கான எக்ஸ்பயரி தேதி முடிந்துவிட்டது. இப்போது அவர் வெறும் அ.தி.மு.க உறுப்பினர் மட்டுமே. கட்சியில் இ.பி.எஸ்-ஸுக்கு எந்த அதிகாரமும் இல்லை’’ என்று சரவெடியைப் பற்றவைத்திருக்கிறார்கள் ஓ.பி.எஸ் தரப்பினர்.

உண்மைநிலை என்ன, எடப்பாடி இப்போது எந்தப் பதவியில் இருக்கிறார்?

பல்வேறு களேபரங்களுக்கு மத்தியில் அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளராக கடந்த ஜூலை 11-ம் தேதி சென்னை வானகரத்தில் நடந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மறுபுறம் `கட்சியின் ஒருங்கிணைப்பாளரின் அனுமதியின்றி இந்தப் பொதுக்குழு நடந்திருக்கிறது. எனவே, இந்தப் பொதுக்குழு செல்லாது, சட்டவிரோதமானது என்று அறிவித்து அதில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்துசெய்ய வேண்டும்’ என உச்ச நீதிமன்றத்தை நாடினார் பன்னீர்செல்வம்.

காலாவதியான பதவிகள்... தலையில்லாத அ.தி.மு.க!

இதைத் தொடர்ந்து இந்த வழக்கை உயர் நீதிமன்றத்திலேயே முடித்துக்கொள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்த, உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. விசாரணையை முடித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன், “அ.தி.மு.க-வில் கடந்த ஜூன் 23-ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையையே பின்பற்ற வேண்டும்’ எனத் தீர்ப்பளித்தார். அதாவது பழைய ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் முறையே தொடரும் என்பது தீர்ப்பின் சாராம்சம். இதனால், எடப்பாடி தரப்பு நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் என இரு நீதிபதிகள்கொண்ட அமர்விடம் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உடனடியாக மேல்முறையீடு செய்தனர். மேல்முறையீட்டின் விசாரணை முடிவில், `தனி நீதிபதியின் தீர்ப்பு செல்லாது’ என்று அறிவிப்பு வெளியாக, மீண்டும் எடப்பாடியின் கை ஓங்கியது.

அதேநேரத்தில், இரு நீதிபதிகளின் தீர்ப்பை எதிர்த்து மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் ஓ.பி.எஸ் அவரின் வழக்கு விசாரணை நவம்பர் 21-ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது. மேலும் வழக்கின் விசாரணை முடியும்வரை, கட்சியின் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தவும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது ஒருபுறமிருக்க, ஜூலை 11-ல் நடந்த பொதுக்குழுவில், அடுத்த நான்கு மாதங்களுக்குள் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்கிற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருந்தது. தற்போது, அந்தப் பொதுக்குழு தீர்மானத்தையும், தீர்ப்பையும் சுட்டிக்காட்டித்தான் எடப்பாடியின் இடைக்காலப் பொதுச்செயலாளர் பதவி காலாவதியாகிவிட்டதாக கருத்து தெரிவித்துவருகின்றனர் ஓ.பி.எஸ் தரப்பினர்.

காலாவதியான பதவிகள்... தலையில்லாத அ.தி.மு.க!

இது குறித்து மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம் நம்மிடம் பேசும்போது, ``ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழுவில் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியைத் தேர்வுசெய்ததோடு, `நான்கு மாதங்களுக்குள் தேர்தலை நடத்தி பொதுச்செயலாளரைத் தேர்தெடுப்போம்’ எனத் தீர்மானம் நிறைவேற்றினார்கள். அந்த காலக்கெடு நவம்பர் 11-ம் தேதியோடு முடிவடைந்துவிட்டது. இதனால், எடப்பாடி பழனிசாமி தற்போது இடைக்காலப் பொதுச்செயலாளர் பதவியில் இல்லை. அதுமட்டுமல்ல, 2017-ல் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வுசெய்யப்பட்டதும் 2022 செப்டம்பரோடு காலாவதியாகிவிட்டது. அதனால், எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் இருவருமே தற்போது அ.தி.மு.க-வின் எந்தப் பதவியிலும் இல்லை. அதுமட்டுமல்ல, எடப்பாடி பழனிசாமி பதவிக்கு வந்து நிர்ணயம் செய்த எந்தப் பதவியும் இப்போது செயல்பாட்டில் இல்லை.

மேலும், `இடைக்காலப் பொதுச்செயலாளர்’ என்கிற பதவி அ.தி.மு.க-வின் சட்டவிதிகளில் இல்லை. பொதுச்செயலாளர் பதவிக்குச் சிக்கல் வரும்போது, தற்காலிக ஏற்பாடு செய்துகொள்ளலாம் என்று மட்டுமே இருக்கிறது. ஆகவே, நான்கு மாதங்கள் என காலக்கெடு நிர்ணயித்தது ஒரு தவறான முடிவு. ஒருவேளை, நவம்பர் 21-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில், கட்சியின் நிலைமையைச் சுட்டிக்காட்டி, தன்னை இடைக்காலப் பொதுச்செயலாளராகத் தொடர அனுமதிக்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்து, நீதிமன்றம் ஒப்புக்கொண்டால் மட்டுமே எடப்பாடி பழனிசாமி அந்தப் பதவியில் தொடர முடியும். ஆனால், இரு தரப்பிலும் மனுத்தாக்கல் செய்தால், தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும் என இழுபறி நிலையே ஏற்படும். உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி தரப்புக்குச் சாதகமான தீர்ப்பு வந்தால் மட்டுமே இந்தச் சிக்கல்கள் ஒரு முடிவுக்குவரும்’’ என்கிறார்.

காலாவதியான பதவிகள்... தலையில்லாத அ.தி.மு.க!

இந்த நிலையில், ``உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, பொதுக்குழு என்கிற பெயரில் அவர்கள் நடத்திய ஜனநாயகப் படுகொலைக்கு எதிராகத்தான் வரும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்’’ என்கிறார் ஓ.பி.எஸ் ஆதரவாளரும், அவர் அணியின் கொள்கை பரப்புச் செயலாளருமான மருது அழகுராஜ். மேலும் அவர் பேசும்போது, ``இடைக்காலப் பதவியின் ஆயுள் நவம்பர் 11-ம் தேதியோடு முடிந்துவிட்டது. இடைக்காலம் மட்டுமல்ல, அ.தி.மு.க-வின் எதிர்காலமும் அவர் இல்லை என்பதுதான் உண்மை. `அ.தி.மு.க சட்டவிதிகளின்படி பொதுக்குழு நடந்திருக்கிறதா என்று பார்ப்போமே தவிர, யாருக்கு எத்தனை பேர் ஆதரவாக இருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்க மாட்டோம்’ என உச்ச நீதிமன்றம் தெளிவாகச் சொல்லிவிட்டது. இதனால், எடப்பாடியின் ஜனநாயகத்துக்கு மாறான அபகரிப்பு முயற்சிகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டுவிட்டன” என்றார் அவர்.

காலாவதியான பதவிகள்... தலையில்லாத அ.தி.மு.க!

இந்த விவகாரம் குறித்து, அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் கல்யாணசுந்தரத்திடம் பேசினோம்.

``நான்கு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தி பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுப்போம் எனத் தீர்மானம் நிறைவேற்றினோம்தான். ஆனால், அதற்குள் தேர்தல் நடத்தாவிட்டால் இந்தப் பதவி காலாவதியாகிவிடும் எனத் தீர்மானத்தில் எங்கேயும் சொல்லவில்லை. தேர்தல் நடத்தி பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுக்கும்வரை, இடைக்காலப் பொதுச்செயலாளராக அவர் நீடிப்பார். தேர்தல் நடத்துவதை நீதிமன்ற நடைமுறைகளுக்காகத் தள்ளிவைத்திருக்கிறோம். இதனால் எங்களுக்கு எந்தப் பின்னடைவும் இல்லை’’ என்கிறார் உறுதியாக.