அரசியல்
Published:Updated:

விழிபிதுங்கும் இரட்டைத் தலைமை... அ.தி.மு.க குளறுபடிகள்!

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
News
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

கன்ட்ரோல் செய்யும் மாஜிக்கள்... கண்ணீர்விடும் மகளிர் அணி...

மாஜிக்கள் மீதான ரெய்டு, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் யார் செலவழிப்பது என்கிற பஞ்சாயத்து, கட்சியில் ஆளாளுக்குச் செய்யும் நாட்டாமை, கட்சித் தலைமையகத்திலேயே தள்ளுமுள்ளு என நாற்புறமும் பிரச்னைகள் சூழ கலகலத்துப் போயிருக்கிறது எதிர்க்கட்சியான அ.தி.மு.க!

``அம்மா தலைமையில் ராணுவக் கட்டுப்பாட்டோடு இருந்த கழகம், இரட்டைத் தலைமைகளால் கையாள முடியாத அளவுக்கு எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாம இருக்கு. நிலைமை இப்படியே போனா, இனி எப்போதும் கட்சியைக் கரைசேர்க்கிறது கஷ்டம்’’ என்கிறார்கள் உட்கட்சி விவகாரத்தை அறிந்த ரத்தத்தின் ரத்தங்கள்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி விரைவில் வெளியாகவிருக்கிறது. ஆளுங்கட்சி முதல் அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர் நேர்காணலை நடத்தி, பட்டியலையும் தயார்செய்துவிட்டன. ஆனால், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க-வில் இன்னும் தெளிவான முடிவுக்கு வராத சூழலே நிலவுகிறது. அவசர அவசரமாக முன்னாள் அமைச்சர்கள் தங்கள் மாவட்டத்தில் நேர்காணலை நடத்திவருகின்றனர். கட்சித் தலைமை ஒன்று சொல்ல, “நாங்கள் விருப்பப்பட்டதைத்தான் செய்வோம். நாங்க எல்லாரும் சேர்ந்துதான் உங்கள் ரெண்டு பேரையும் தலைமைப் பொறுப்புல உட்காரவெச்சுருக்கோம். நீங்க ஒண்ணும் புரட்சித்தலைவர் மாதிரியோ அல்லது அம்மா மாதிரியோ மக்கள் தலைவர்கள் கிடையாது’’ எனக் கட்சிக்குள்ளேயே ஓர் அணி போர்க்கொடி உயர்த்துவதுதான் இந்தச் சிக்கலுக்குக் காரணம் என்கிறார்கள் சில அ.தி.மு.க நிர்வாகிகள்.

விழிபிதுங்கும் இரட்டைத் தலைமை... அ.தி.மு.க குளறுபடிகள்!

முன்னணி நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ``அம்மா இருக்கும்போது ஒவ்வொரு மாவட்டத்துலயும் மாவட்டச் செயலாளர், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில குழு அமைப்பாங்க. அந்தக் குழு ரெண்டு மூணு வேட்பாளர்கள் பட்டியலைத் தயார் செஞ்சு அம்மாகிட்ட கொடுக்கும். அம்மா அந்த லிஸ்ட்லருந்து வேட்பாளர்களை ஃபைனல் பண்ணுவாங்க. தேர்தல் தேதி அறிவிச்சவுடனேயே வேட்பாளர் பட்டியலும் வந்துடும். இப்ப, கட்சித் தலைமை அப்படியொரு யோசனையைச் சொல்ல, சி.வி.சண்முகம், தங்கமணி, வேலுமணி போன்ற முன்னாள் அமைச்சர்கள் பலரும் அந்த முடிவுக்கு உடனடியா எதிர்ப்பு தெரிவிச்சுட்டாங்க. ‘நாங்க முடிவு செஞ்சு ஒரு பட்டியலைத் தருவோம். அவங்கதான் வேட்பாளர்கள்’னு கறாராச் சொல்லிட்டாங்க.

கட்சியில், ‘வேட்பாளர்களுக்குச் செலவழிக்க இப்போது நிதி இல்லை’னு தலைமையும் கைவிரிச்சுடுச்சு. கடந்த ஆட்சியில் நன்றாகச் சம்பாதித்த மாஜிக்களிடம் ‘செலவு பண்ணுங்க’ எனத் தலைமை சொல்ல, ‘எங்ககிட்ட பணம் எதுவும் இல்லை. எங்களால செலவழிக்க முடியாது’னு அவங்களும் தடாலடியா சொல்லிட்டாங்க. கட்சித் தலைமையின் மீதான நம்பிக்கை நாளுக்கு நாள் கீழ்மட்ட நிர்வாகிகளுக்குக் குறைஞ்சுக்கிட்டே வருது. அதனால, இப்போ கைக்காசைப் போட்டு ஜெயிக்குற நிர்வாகிகள், தேர்தலுக்குப் பிறகு அப்படியே ஆளுங்கட்சிக்குத் தாவுறதுக்கும் அதிகமான வாய்ப்பிருக்கு. உள்ளாட்சித் தேர்தல் விஷயத்துல மட்டும் இல்லை, உட்கட்சித் தேர்தல் நடத்துனதுலயும் ஏகப்பட்ட குளறுபடிகள்’’ என்றவர்கள், அது தொடர்பாகச் சில தகவல்களையும் பகிர்ந்துகொண்டனர்.

``தலைமைக்கான தேர்தல் முடிஞ்சதும், மற்ற நிர்வாகிகளுக்கான தேர்தல் நடந்தது. ஆனா, அந்த முடிவுகளை அறிவிக்கவிடாம, ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ உள்ளிட்ட சிலபேர் போர்க்கொடி உயர்த்துனாங்க. அதனாலதான் தமிழ்நாடு முழுக்க இன்னும் ரிசல்ட் அறிவிக்காம கெடக்கு. சட்டமன்றத் தேர்தல்லயே ஜெயிக்கற வேட்பாளர்களை விட்டுட்டு, வேண்டப்பட்டவங்களை நிறுத்துனதாலதான் பல மாவட்டங்கள்ல ஜெயிக்க முடியாமப் போச்சு. அதேதான் இப்பவும் நடக்கப்போகுது. உண்மையைச் சொல்லணும்னா, ஒவ்வொரு மாவட்டத்துலயும் முன்னாள் அமைச்சர்கள் குறுநில மன்னர்களாகத்தான் செயல்பட்டுட்டு வர்றாங்க. இதைவிட முக்கியமான பஞ்சாயத்து ஒண்ணு கட்சிக்குள்ள போய்க்கிட்டிருக்கு..."

சிவசங்கரி
சிவசங்கரி

அம்மா இருக்கும்போது மகளிரணி நிர்வாகிகளுக்குக் கட்சியில உரிய மரியாதை இருக்கும். ஆனா, இப்போ நிலைமையே தலைகீழாயிடுச்சு. மகளிரணி நிர்வாகிகளுக்குக் கட்சியில சுத்தமா மரியாதை இல்லை. பல நிர்வாகிகள், மகளிரணி நிர்வாகிகளை மட்டும் குறிவெச்சு கண்டபடி கேள்வி கேட்குறது, தரக்குறைவான வார்த்தைகளைப் பேசுறதுமா இருக்காங்க. அதனாலதான் விஜிலா சத்யானந்த், புவனேஸ்வரி, வசந்தி முருகேசன்னு பலர் கட்சியைவிட்டு விலகி தி.மு.க-வுல சேர்ந்துட்டாங்க. எம்.ஜி.ஆர் பிறந்தநாள் அன்னிக்கு, தலைமையகத்துலயே இப்படி ஒரு பிரச்னை நடந்தது. மகளிரணி நிர்வாகி ஒருவர் கண்ணீர் வழிய அந்தப் பிரச்னையைக் கட்சி ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸ்-கிட்ட புகார் சொல்ல, அவர் `இ.பி.எஸ்-கிட்ட சொல்லுங்க’னு சொன்னாரு. கடைசியில அந்தப் பிரச்னைல எந்த நடவடிக் கையும் எடுக்கப்படலை. உண்மையைச் சொல்லணும்னா, ஒரு மாவட்டச் செயலாளர் மேல நடவடிக்கை எடுக்குற நிலைமையிலகூட ரெண்டு தலைகளும் இல்லை. இவங்க எப்படி கட்சியைச் சரியா வழிநடத்தி கரைசேர்க்கப் போறாங்க?’’ என்கிறார்கள் வேதனையாக.

அ.தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர் சிவசங்கரியிடம் இது குறித்துக் கேட்டபோது, “தற்போதைய சூழலில் ஜனநாயகமாகச் செயல்படும் ஒரே கட்சி அ.தி.மு.க-தான். ஒன்றிரண்டு பேர் தங்கள் சுயலாபத்துக்காகப் பேசுவதையெல்லாம் வைத்துக்கொண்டு ஒரு பெரிய கட்சியை விமர்சிப்பது தவறு. இரட்டைத் தலைமையின் கீழ் எங்கள் கட்சி சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள நாங்கள் முழுவீச்சில் தயாராகிவருகிறோம்” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

‘ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இருவரும் அதிகாரபூர்வமாகத் தங்களைக் கட்சியின் இரட்டைத் தலைமையாக நிறுவிக்கொண்டாலும், யதார்த்தத்தில் அவர்களது அதிகாரம் கட்சிக்குள் செல்லுபடியாகவில்லை. அ.தி.மு.க வண்டியின் இரு அச்சாணிகளும் பலவீனமாக இருக்கின்றன’ என்பதுதான் கட்சிக்குள்ளிருந்து வரும் விமர்சனக் குரல்!