Published:Updated:

தோல்விகள் தொடர்கதை... அஸ்தமனத்தில் அ.தி.மு.க?

அஸ்தமனத்தில் அ.தி.மு.க?
பிரீமியம் ஸ்டோரி
அஸ்தமனத்தில் அ.தி.மு.க?

ஜெயலலிதா விட்டுச் சென்ற ஆட்சியைக் காப்பாற்றவே அ.தி.மு.க-வினர் படாதபாடு பட்டனர். முதுகில் குத்தும் படலங்களை சமாளித்தே நான்காண்டு ஆட்சியை நகர்த்தி முடித்தார் எடப்பாடி பழனிசாமி.

தோல்விகள் தொடர்கதை... அஸ்தமனத்தில் அ.தி.மு.க?

ஜெயலலிதா விட்டுச் சென்ற ஆட்சியைக் காப்பாற்றவே அ.தி.மு.க-வினர் படாதபாடு பட்டனர். முதுகில் குத்தும் படலங்களை சமாளித்தே நான்காண்டு ஆட்சியை நகர்த்தி முடித்தார் எடப்பாடி பழனிசாமி.

Published:Updated:
அஸ்தமனத்தில் அ.தி.மு.க?
பிரீமியம் ஸ்டோரி
அஸ்தமனத்தில் அ.தி.மு.க?

அ.தி.மு.க-வினருக்கு தீபாவளி, பொங்கலைவிடப் பெரிய பண்டிகை, ஜெயலலிதாவின் பிறந்த நாள். மண்சோறு சாப்பிடுவது முதல் தீமிதிப்பது வரை அமர்க்களப்படுத்துவார்கள். தமிழகத்தின் அத்தனை நெடுஞ்சாலையோரச் சுவர்களும் ஜெயலலிதாவின் உருவத்தால் நிறைந்திருக்கும். ஆனால் இந்த ஆண்டு ஜெயலலிதா பிறந்த நாள் அப்படி இல்லை. இந்தப் பிறந்த நாளில் அவரும் இல்லை; தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சியும் இல்லை. பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் போரைப் பற்றியும், ‘வலிமை’ ரிலீஸ் பற்றியும் பேசிய அளவுக்குக்கூட ஜெயலலிதா பேசுபொருளாக இல்லை என்பதுதான் உண்மை.

“எனக்குப் பின்னும் இந்த இயக்கம் நூறாண்டுகள் இயங்கும்” என்று 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் சட்டமன்றத்தில் கம்பீரமாக முழங்கினார் ஜெயலலிதா. அ.தி.மு.க-வுக்கு இது ஐம்பதாம் ஆண்டு. பொன்விழா கொண்டாடும் நேரத்தில், அ.தி.மு.க-வின் வாக்கு வங்கி அஸ்தமனத்தை நோக்கிச் செல்ல ஆரம்பித்துவிட்டதோ என்கிற எண்ணத்தை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தியுள்ளன.

இந்தச் சறுக்கல்களால் நேரடியாகப் பலனடைந்தது தி.மு.க. 2019 நாடாளுமன்றத் தேர்தல், அப்போது நடந்த 23 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல், இப்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் என்று ஆறு தேர்தல்களில் அடுத்தடுத்து வெற்றி.

தோல்விகள் தொடர்கதை... அஸ்தமனத்தில் அ.தி.மு.க?

இந்தத் தேர்தல் முடிவுகளால் ஸ்டாலினைப் போலவே சசிகலாவும் உற்சாகத்தில் இருக்கக்கூடும். ஜெயலலிதா பிறந்த நாளில் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், ‘`அ.தி.மு.க கடந்த 50 ஆண்டுகளில் இப்படி அடுத்தடுத்து மோசமான தோல்விகளை அடைந்தது கிடையாது. நிலைமையை உணர்ந்து இயக்கத்தை வலிமைப்படுத்த அனைவரும் ஒன்றுசேர வேண்டும்’’ என்று அழைப்பு விடுத்தார் அவர். அ.தி.மு.க பலவீனமடையும்போது, அந்தக் கட்சியின் தொண்டர்களுக்குத் தனது நினைப்பு வரும் என்று சசிகலா எதிர்பார்க்கிறார்.

2016-ம் ஆண்டு ஜெயலலிதா மரணம் அடைந்தபோது தனிப்பெரும்பான்மையுடன் தமிழகத்தில் ஆட்சியிலிருந்தது அ.தி.மு.க. ஜெயலலிதா விட்டுச் சென்ற ஆட்சியைக் காப்பாற்றவே அ.தி.மு.க-வினர் படாதபாடு பட்டனர். முதுகில் குத்தும் படலங்களை சமாளித்தே நான்காண்டு ஆட்சியை நகர்த்தி முடித்தார் எடப்பாடி பழனிசாமி. ஆட்சியைக் காப்பாற்ற முடிந்த பழனிசாமியால் கட்சியைக் காப்பாற்ற முடியாமல்போனது. இன்றைக்குத் தொடர் தோல்விகளால் கலங்கி நிற்கிறார்கள் சாதாரண தொண்டர்கள்.

1972-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் என்ற ஹீரோவின் அடையாளத்துடன் உருவாக்கப்பட்ட கட்சி அ.தி.மு.க. கட்சி ஆரம்பித்து ஐந்தாண்டுகளில் ஆட்சியைப் பிடித்தது வரலாறு. சந்தித்த முதல் சட்டமன்றப் பொதுத்தேர்தலிலேயே 33 சதவிகித வாக்குகளைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக ஆட்சியில் அமர்ந்தது. தொடர்ச்சியாக மூன்று சட்டமன்றத் தேர்தல்களிலும் வென்று, மறையும் வரை முதல்வராகவே இருந்தார் எம்.ஜி.ஆர்.

தமிழகத்திலேயே அதிகமான வாக்கு வங்கியைத் தன்வசம் வைத்திருந்த கட்சி அ.தி.மு.க. எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து சராசரியாக 33 சதவிகித வாக்குவங்கியைத் தன்வசம் வைத்திருந்த கட்சி. அதேபோல் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாகவும் அ.தி.மு.க வலம் வந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அந்தக் கட்சி சந்தித்த தேர்தல்களில் எல்லாம் வாக்கு வங்கி குறைந்துகொண்டே வந்ததுபோல, அதன் வீழ்ச்சியும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

அ.தி.மு.க ஒன்றும் தோல்வியே சந்திக்காத இயக்கமும் இல்லை. ஆனால், தோல்வியைச் சந்திக்கும்போது, அதிலிருந்து பீனிக்ஸ் பறவையாக மீண்டு வரும் வரலாறு அ.தி.மு.க-விற்கு உண்டு. 1977-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் முதல்முறையாக முதல்வராகப் பொறுப்பேற்றதுமே ஆட்சியில் சில குளறுபடிகள் அரங்கேறின. குறிப்பாக அவரே நிலையான முடிவுகளை எடுக்க முடியாமல் தவித்தார். ‘முதல்வராக நான் இருப்பதைவிட நடிகராக இருப்பதே எனக்கு சரியாகப் படுகிறது’ என்று பொதுவெளியில் பேசினார். பிறகு அவரே `முதல்வர் பதவியில் தொடர்வதே சரி’ என்றும் சொன்னார். அந்த ஆட்சியில் அவர் எடுத்த சில முடிவுகள் பின்னடைவை ஏற்படுத்தின. விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்கியது, மதுவிலக்கு அறிவிப்புகளால் ஏற்பட்ட நெருக்கடி, இட ஒதுக்கீட்டுக் குழப்பம் என்று பல விஷயங்களால் 1980-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க படுதோல்வியைச் சந்தித்தது. அந்தத் தேர்தல் முடிவுக்குப் பிறகு எம்.ஜி.ஆர் ஆட்சி கலைக்கப்பட, மீண்டும் தேர்தலைச் சந்திக்க வேண்டிய நெருக்கடி எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது. அந்த நேரத்தில் எம்.ஜி.ஆர்., நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குக் காரணம் என்று கட்சி நிர்வாகிகளிடமும், மூத்த பத்திரிகையாளர் களிடமும் ஆலோசனை நடத்தினார். ஆறு மாதங்களில் தேர்தல் அறிவிப்பு வந்தது. மக்களிடம் சென்றார் “நான் என்ன தவறு செய்தேன்?” என்று தழுதழுத்த குரலில் பேசினார். திரையில் கம்பீரமாகப் பார்த்த தலைவர், தழுதழுத்த குரலில் நம்மிடம் பேசுகிறாரே என்று உருகினார்கள் வாக்காளர்கள். அந்தத் தேர்தலில் 129 இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தார் எம்.ஜி.ஆர்.

தோல்விகள் தொடர்கதை... அஸ்தமனத்தில் அ.தி.மு.க?

அதேபோன்ற ஒரு படுதோல்வியை அ.தி.மு.க 1996 சட்டமன்றத் தேர்தலில் சந்தித்தது. ஜெயலலிதாவே பர்கூரில் தோற்றார். தோல்விக்குப் பிறகு கட்சியில் உள்ள தன் நம்பிக்கைக்குரியவர்களை போயஸ் கார்டன் வீட்டிற்கு அழைத்து, தோல்விக்கான காரணத்தைக் கேட்டார் ஜெயலலிதா. ‘வளர்ப்பு மகன் திருமணமும், சசிகலா தரப்பினரின் ஆதிக்கமுமே பிரதான காரணம்’ என்றார்கள். சசிகலா குடும்பத்தினரைத் தள்ளி வைப்பதாக ஜெயலலிதா அறிவித்தார். சுதாகரனைத் தத்து எடுத்த அறிவிப்பையும் ரத்து செய்தார். அதன்பிறகு சசிகலாவைச் சேர்த்துக்கொண்டது தனிக்கதை என்றாலும், தவற்றை அப்போது சரி செய்யும் பக்குவம் ஜெயலலிதாவிடம் இருந்தது. அதன்பின் அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்றது அ.தி.மு.க.

இப்படி ஒவ்வொரு முறையும் அந்தக் கட்சி தோல்வியைத் தழுவியபோது, அந்தத் தோல்விக்கான காரணத்தைச் சரிசெய்யத் தலைமை முயன்றது. ஆனால் இன்று தலைமைக்கே கட்சிக்குள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தொண்டர்களுக்குள் கட்டுப்பாடு எப்படி இருக்கும்? எம்.ஜி.ஆர் என்ற பிம்பத்தினால் சாம்ராஜ்ஜியத்தை அடைந்த கட்சி அது. கட்சியின் அடுத்த பிராண்டாக ஜெயலலிதா தன்னை உருவாக்கிக்கொண்டார். இப்படிக் கட்சியின் முகமாக ஒருவரையே பார்த்துப் பழகிய தொண்டர்கள் நிறைந்த கட்சிக்கு இன்று முகமாக யாரும் இல்லாமல் இருப்பதே வேதனைதான். எடப்பாடி தன்னைக் கட்சியின் முகமாகக் காட்டிக்கொள்ள ஒவ்வொருமுறையும் முகமூடியை அணிந்தாலும், அவரால் அனைத்துத் தரப்பு தொண்டர்களையும் சென்றடைய முடியவில்லை. பன்னீரின் நிலையோ பரிதாபம். இரண்டாம் இடத்திலிருந்தே பழகியவர், தலைமைக்குத் தன்னை முழுமையாகத் தகவமைத்துக்கொள்ள முடியாமல் திணறுகிறார். மாவட்டச் செயலாளர்களைக் கட்டுப் படுத்தக்கூடத் தலைமையால் முடியவில்லை. தவறு செய்பவர்களையும் யாரும் கண்டிப்பதில்லை. `நாம் கூப்பிட்டுக் கண்டித்தால், அவர் பன்னீர் பக்கம் போய்விடுவார்’ என்று பழனிசாமி நினைக்கிறார். ‘நம்மிடம் வருவதே ஒன்றிரண்டு மாவட்டச் செயலாளர்கள்தான். நமக்கு எதற்கு வம்பு’ என்று பன்னீர் ஒதுங்கிக் கொள்கிறார். இதனால் கட்சியின் நிர்வாகம் கட்டுப்பாடு இல்லாமல் போய்விட்டது என்று வருத்தப்படுகிறார் மூத்த நிர்வாகி ஒருவர்.

கட்சியின் தலைவர்களாக இருக்கிற இருவருமே ஆட்சி போனபிறகு தலைநகர் பக்கம் தலைகாட்டுவது குறைந்துவிட்டது. தடுக்கி விழுந்தால் சேலத்திற்குச் செல்வது எடப்பாடிக்கு வழக்கமாகிவிட்டது. பதினைந்து நாள்களுக்கு ஒருமுறை பிக்னிக் வருவதுபோல பன்னீர்செல்வம் சென்னை வந்து செல்கிறார். தலைமையின் மீதான நம்பகத்தன்மைதான் அந்தக் கட்சியின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும். ஆனால். அ.தி.மு.க-வின் தலைமைமீது அந்தத் தொண்டர்களுக்கே நம்பிக்கையில்லாத நிலையில் வாக்காளர்கள் எப்படி நம்புவார்கள் என்று கேட்கிறார் மூத்த தலைவர் ஒருவர்.

ஆட்சியில் இருக்கும் தி.மு.க-வை நோக்கிப் பலர் படையெடுக்க, “அ.தி.மு.கவில் இருப்பவர்கள் எல்லோருமே தி.மு.க-வில் சங்கமிக்கும் காலம் விரைவில் வரும்” என்று தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி கிண்டலாகச் சொல்கிறார். ‘`தி.மு.க என்பது ஆறு; அ.தி.மு.க என்பது கடல். ஆறுதான் கடலில் கலக்குமே தவிர கடல் சென்று ஆற்றில் கலக்காது’’ என்று இதற்குப் பதிலடி கொடுத்திருக்கிறார் பன்னீர்.

ஆறுகள் வற்றுவது போலவே, கடல்கள் காணாமல்போன வரலாறும் இந்த பூமியில் இருக்கிறது.‘

தோல்விகள் தொடர்கதை... அஸ்தமனத்தில் அ.தி.மு.க?

சுயபரிசோதனை தேவை!’

‘`அ.தி.மு.க தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய நேரம் இது. தொண்டர்களும், மக்களும் ஒருசேர விரும்பும் ஒற்றைத் தலைமையே கட்சிக்கு அவசர, அவசியத் தேவையாக உள்ளது. ‘அ.தி.மு.க-வுடன் கூட்டணி இல்லை’ என்று பா.ஜ.க தமிழகத் தலைவர் அண்ணாமலை முதல் நாள் சொல்கிறார். மறுநாளே ‘தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அ.தி.மு.க உள்ளது’ என்கிறார். இதனால் தொண்டர்கள் வெடித்த பட்டாசு எல்லாம் புஸ்வாணமாகிவிட்டது. அ.தி.மு.க தலைவர்கள் கட்சியைக் காப்பாற்ற எண்ணாமல், தங்களைக் காப்பாற்றிக்கொள்ள இப்போது கட்சியை ஒரு கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள். இதனாலேயே இந்தத் தோல்விகளை எல்லாம் சந்திக்க வேண்டியுள்ளது. ஆனால் இந்த நிலை மாறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது’’ என்கிறார், அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சரான அன்வர் ராஜா.

அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கே.பி.முனுசாமி, ‘`தொடர் தோல்விகளைச் சந்தித்த காரணத்தினால் கட்சி ஒன்றும் கலகலத்துப் போய்விடவில்லை. வெற்றியும் தோல்வியும் அரசியலில் இயல்புதான். அ.தி.மு.க தொண்டர்கள் அரசியல் களத்தில் அனுபவம் மிக்கவர்கள். கட்சியை வலுப்படுத்தி எதிர்கால வெற்றிக்கான வியூகங்களை வகுப்போம். குறிப்பாக ஆளுங்கட்சியின் பல தவறுகள் வெளியில் தெரியாமல் உள்ளன. அந்த விவகாரங்களை நாங்கள் கையில் எடுத்து அரசுக்குச் சுட்டிக்காட்டுவோம். அந்தத் தவறுகளை அவர்கள் திருத்திக்கொள்ளாவிட்டால் மக்களே அவர்களுக்குப் பாடம் புகட்டுவார்கள். அ.தி.மு.க தொண்டர்கள் இந்தத் தோல்வியால் எந்தச் சலனத்திற்கும் உள்ளாக மாட்டார்கள்” என்கிறார்.

*******

ஜெ. கால வளர்ச்சியும் அதன்பிறகான வீழ்ச்சியும்!

* 2011 சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு அ.தி.மு.க விஸ்வரூபம் எடுத்தது. அந்தத் தேர்தலில் 165 இடங்களில் மட்டுமே போட்டியிட்டு 150 இடங்களில் வென்றது அ.தி.மு.க. பெற்ற வாக்குகள்: 38.4%

* 2014 நாடாளுமன்றத் தேர்தலில் ‘மோடியா, இந்த லேடியா’ என்று பிரதமர் கனவுடன் தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டார் ஜெயலலிதா. 39-ல் 37 இடங்களில் வெற்றி. பெற்ற வாக்குகள்: 44.3%

* 2016 சட்டமன்றத் தேர்தலிலும் தனித்தே போட்டியிட்டார் ஜெயலலிதா. 234 தொகுதிகளில் போட்டியிட்டு 136 இடங்களில் வெற்றி. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாறும் வரலாற்றை அவர் புரட்டிப்போட்டார். பெற்ற வாக்குகள்: 40.88%

* ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க சந்தித்த முதல் தேர்தல், 2019 நாடாளுமன்றத் தேர்தல். மெகா கூட்டணி அமைத்து 20 தொகுதிகளில் மட்டுமே நின்ற அ.தி.மு.க., ஒரே ஓர் இடத்தில் மட்டுமே ஜெயித்தது. பெற்ற வாக்குகள்: 31.26%

* 2020 ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க-வே அதிக இடங்களில் வென்றது.

* 2021 சட்டமன்றத் தேர்தலில் 191 இடங்களில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு 66 இடங்களில் வென்றது. பெற்ற வாக்குகள்: 33.29%

* ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் மோசமான தோல்வி. இப்போது நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்டு மிக மோசமான தோல்வி. பெற்ற வாக்குகள்: 25.15%