
அ.தி.மு.க-வுக்கும் பா.ஜ.க-வுக்கும் இடையே ஓர் அதிகாரப் போட்டி நிகழ்ந்துகொண்டிருக்கிறது
``அ.தி.மு.க பிளவுபட்டிருக்கிறது. அந்தக் கட்சிப் பிரச்னை தேர்தல் ஆணையத்திலும், நீதிமன்றத்திலும் இருக்கிறது. எனவே எடப்பாடி பழனிசாமியா, ஓ.பன்னீர்செல்வமா... என்று அவர்கள் பின்னால் சென்றுகொண்டிருக்க முடியாது. அந்த அவசியமும் இல்லை. அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைப்பதை மக்கள் விரும்ப மாட்டார்கள்’’ எனக் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் பேசியதாக வெளியான செய்திகள், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் அனலைக் கிளப்பியிருக்கின்றன. ``எங்கள் தலைமையில்தான் கூட்டணி’’ என்று ஏற்கெனவே பா.ம.க தலைவர் அன்புமணி ஒவ்வொரு மேடையிலும் கூறிவரும் நிலையில், இந்த விவகாரமும் இணைந்து, தமிழ்நாட்டில் அ.தி.மு.க தலைமையிலான ‘தேசிய ஜனநாயகக் கூட்டணி’ என்ற ஒன்று தற்போது இருக்கிறதா, இல்லையா... என்கிற மிகப்பெரிய கேள்வி எழுந்திருக்கிறது!
தமிழ்நாட்டில், கடந்த 2019-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2021-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் ஒரே கூட்டணியில் தேர்தலைச் சந்தித்தன. ‘தேசிய ஜனநாயகக் கூட்டணி’ என அழைக்கப்படும் அந்தக் கூட்டணிக்குத் தமிழகத்தில் தலைமை வகித்தது அ.தி.மு.க. தொடர்ந்து நடைபெற்ற ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களின்போது பா.ம.க தனித்துக் களமிறங்கியது. பா.ஜ.க-வும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மட்டும் தனித்துக் களம் கண்டது. ஆனாலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறியதாக பா.ம.க அறிவிக்கவில்லை.அதேபோல, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அ.தி.மு.க-வுடன் ஒன்றாகப் பயணித்துவருகிறோம் என பா.ஜ.க மாநிலத் தலைவரும் அப்போது கருத்து தெரிவித்திருந்தார்.

அ.தி.மு.க-வின் 51-ம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு நாமக்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில், `நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும்’ என எடப்பாடி பழனிசாமி பேசியதற்குக்கூட, அதை ஆமோதிக்கும்விதமாக, “அ.தி.மு.க தலைமையில் கூட்டணி என்பதில் எந்தவொரு குழப்பமும் இல்லை. எப்போதும் குழப்பம் இருந்ததும் கிடையாது. அதனால், அ.தி.மு.க இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதில் எந்தவொரு தவறும் இல்லை” என்றே அண்ணாமலை கருத்து தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது நாடாளுமன்றத் தேர்தலில் `தனித்துப் போட்டி’ என அண்ணாமலையும், `எங்கள் தலைமையில்தான் கூட்டணி’ என அன்புமணியும் தொடர்ந்து பேசிவருகிறார்கள். 2024 தேர்தல் ஒருபுறமிருக்கட்டும். தற்போதைய சூழலில், தமிழ்நாட்டில் ‘தேசிய ஜனநாயகக் கூட்டணி’ என்ற ஒன்று உயிரோடு இருக்கிறதா, எந்தெந்தக் கட்சிகள் இன்னும் கூட்டணியில் மிச்சமிருக்கின்றன... கட்சி நிர்வாகிகளிடமே நேரடியாகக் கேட்டோம்.
முதலில், பா.ம.க மாநிலப் பொருளாளர் திலகபாமாவிடம் பேசினோம். ``கூட்டணி என்பதே தேர்தலுக்கானதுதான். நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து, தேர்தல் காலத்தில் பொதுக்குழு கூட்டப்பட்டு முடிவு செய்யப்படும்’’ என்றவரிடம், `தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தற்போது பா.ம.க அங்கம் வகிக்கிறதா, இல்லையா?’ என்று கேட்க, ``கூட்டணி விஷயத்தில் யாரையும் முறித்துக்கொள்ளவோ, பகைத்துக்கொள்ளவோ இல்லை. கூட்டணியிலிருந்து வெளியேறுவதற்கான தேவையும் எழவில்லை. ஆனால், இந்தக் கூட்டணியில் இருக்கிறோமோ, இல்லையா என்பதைப் பொதுக்குழுதான் முடிவுசெய்யும். 2026 தேர்தலில் நாங்கள் தனித்து நின்று ஆட்சி அமைக்க விரும்புவதால், அ.தி.மு.க., பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பிருக்காது. ஒருவேளை, எங்கள் தலைமையை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாராக இருந்தால் தலைமை யோசிக்கும்” என்றார் சீரியஸாக.
பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜனிடம் பேசினோம். `` `கூட்டணி தொடர்கிறது’ என மாநிலத் தலைவர் பலமுறை சொல்லியிருக்கிறார். ஆனால், `நாங்கள் இன்றைக்கும் தனித்துப் போட்டியிடத் தயாராக இருக்கிறோம். எங்களுக்கு முழுபலம் இருக்கிறது’ என அ.தி.மு.க மூத்த தலைவர் செங்கோட்டையன் கூறுகிறார். அவர் சொல்வதுபோல, பா.ஜ.க-வும் தனித்துப் போட்டியிடத் தயாராக முழுபலத்துடன் இருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் யார் என்பதை நிரூபித்திருக்கிறோம். அதனால், எந்த நேரத்திலும், எதற்கும் தயாராகவே இருக்க வேண்டும் என நிர்வாகிகளை ஊக்கப்படுத்தவே தலைவர் அவ்வாறு பேசினார். என்ன நடந்தாலும் அது நல்லது என நாங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்’’ என்றார் அவர்.

இந்த நிலையில், அ.தி.மு.க-வின் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமாரிடம் பேசினோம். ``பா.ம.க-வும், பா.ஜ.க-வும் எங்களின் தோழமைக் கட்சிகள்தான். `தனித்துப் போட்டியிடுவோம்’ எனச் சொல்வதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், எங்கள் தலைமையை ஏற்றுக்கொண்டு வருகிற கட்சிகளுக்குத்தான் எங்கள் கூட்டணியில் இடம் உண்டு. மற்ற கட்சிகளின் தலைமையில் நாங்கள் ஒருபோதும் அங்கம் வகிக்க மாட்டோம்’’ என்றவரிடம், ‘தி.மு.க கூட்டணி பலமாக இருக்கிறது. ஆனால், உங்கள் கூட்டணியில் எல்லோருமே குழப்பத்தில் இருப்பதாகத் தெரிகிறதே?’ என்று கேட்க, ``இல்லை. ஒற்றுமையாக இருப்பதைப்போல அவர்கள் வெளியில் காண்பித்துக்கொள்கிறார்கள். உள்ளே புகைச்சல் இருக்கிறது. அது எப்போது வெடிக்கும் என்று தெரியாது. தேர்தல் நெருங்கும்போது அது உங்களுக்கே தெரியும்’’ என்றார்.
மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் இது குறித்துப் பேசும்போது, “அ.தி.மு.க-வுக்கும் பா.ஜ.க-வுக்கும் இடையே ஓர் அதிகாரப் போட்டி நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அ.தி.மு.க பிளவைப் பயன்படுத்திக்கொண்டு அப்பர்ஹேண்ட் எடுக்க பா.ஜ.க முயல்கிறது. அண்ணாமலையின் பேச்சிலும் கண்ணோட்டத்திலும் அதையே பார்க்கிறேன். பா.ஜ.க தனியாக நிற்பதற்கான வாய்ப்புகளே கிடையாது. பா.ம.க-வைப் பொறுத்தவரை நடுநிலையான ஒரு தோற்றத்தைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். தி.மு.க கூட்டணியில் அவர்களை இணைத்துக்கொள்ள வாய்ப்பில்லை. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வியூகம் வகுப்போம் என அன்புமணி பேசிவருவது ஒரு பேரத்துக்காகத்தான்’’ என்றார் அவர்.
கடைசிவரைக்கும் இருக்கா இல்லையான்னே சொல்ல மாட்டேங்கிறீங்களே?