அரசியல்
Published:Updated:

டீலா, நோ டீலா? - சங்கமத்தில் சங்கடம்!

சசிகலா
பிரீமியம் ஸ்டோரி
News
சசிகலா

சசிகலா தமிழகத்துக்குள் நுழையும்போது பிரமாண்ட வரவேற்பு கொடுக்க ஏற்பாடாகிறது. அனைத்து மாவட்டங்களிலிருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் புக் செய்யப்பட்டுள்ளன.

அ.தி.மு.க - அ.ம.மு.க இணைப்பை சசிகலா விடுதலை முக்கியப் பேசுபொருளாக்கியிருக்கிறது. இந்த இணைப்பை ரசிக்கலாமா, கலைக்கலாமா... என்ற தீவிர யோசனையிலிருக்கிறது பா.ஜ.க. ஒருவகையில் மூன்று தரப்புமே கடும் கொந்தளிப்பில் இருக்கின்றன... தேர்தலை எதிர்நோக்கிய இந்த அரசியல் சங்கமம், சந்தோஷத்தில் முடியுமா, சங்கடத்தில் சுழலுமா என்பதுதான் இன்று ஹாட் டாபிக்!

கொரோனா சிகிச்சையிலிருந்த சசிகலா, உடல்நலம் பெற்று ஜனவரி 31-ம் தேதி பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தார். ஜெயலலிதா பயன்படுத்திய டொயோட்டா லேண்ட் க்ரூஸர் காரில் அ.தி.மு.க கொடியுடன் மருத்துவமனையிலிருந்து அவர் புறப்பட்டார். ‘‘நூறு வார்த்தைகளில் சொல்ல வேண்டியதை, ஒற்றைக்கொடியில் சொல்லிவிட்டார் சசிகலா’’ என்று சிலாகித்தார்கள் அவரின் ஆதரவாளர்கள். அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளரான கே.பி.முனுசாமி, ‘‘அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டும்தான். அ.தி.மு.க-வில் இல்லாத சசிகலா, கட்சிக்கொடியைப் பயன்படுத்தியது தவறு’’ என்று பொங்கியிருக்கிறார். சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஒருபடி மேலே போய், ‘‘சசிகலாமீது வழக்கு பதியப்படும்’’ என்று சீறியிருக்கிறார். காரில் கட்டப்பட்ட ஒரே ஒரு கொடி, மொத்த அ.தி.மு.க கூடாரத்தையும் கலகலக்கவைத்திருக்கிறது.

‘‘தலைமைக் கழகத்துக்குச் செல்வோம்!’’

பெங்களூரு அருகே ஹெப்பலிலுள்ள ஒரு ரிசார்ட்டில் தங்கியிருக்கும் சசிகலா, ஏழு நாள்கள் ஓய்வுக்குப் பிறகு பிப்ரவரி 7-ம் தேதி சென்னை திரும்புவார் என்கிறார்கள். இந்த ஏழு நாள்களும் அ.தி.மு.க-வின் ரியாக்‌ஷன்களை உன்னிப்பாக கவனிக்கவிருக்கிறாராம். விக்டோரியா மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆவதற்கு முதல்நாள் இரவு, தினகரன் உள்ளிட்டவர்களுடன் சசிகலா ஆலோசனை நடத்தியிருக்கிறார். அப்போது, ‘‘அ.தி.மு.க-வை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டேன். அ.தி.மு.க கொடியுடன் அக்கா பயன்படுத்திய காரில்தான் எனது பயணம் இருக்கும்” என்று உறுதியாகக் கூறியிருக்கிறார். அதன் பிறகுதான் காரில் அ.தி.மு.க கொடி வைக்கப் பட்டது என்கிறார்கள், இந்த ஆலோசனையில் பங்கேற்றவர்கள். காரில் ஏறுவதற்கு முன்னதாக அங்கேயிருந்த வழக்கறிஞர் ஒருவரிடம், ‘‘சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் பொதுச்செயலாளர் பதவி தொடர்பான வழக்கைத் துரிதப்படுத்துங்கள்’’ என்றபடி ரிசார்ட்டுக்குக் கிளம்பியிருக்கிறார் சசிகலா.

சசிகலாவுக்கு நெருக்கமான பிரமுகர் ஒருவரிடம் பேசியபோது, ‘‘சசிகலா தமிழகத்துக்குள் நுழையும்போது பிரமாண்ட வரவேற்பு கொடுக்க ஏற்பாடாகிறது. அனைத்து மாவட்டங்களிலிருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் புக் செய்யப்பட்டுள்ளன. சென்னைக்குள் நுழைந்ததும் நேராக ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குச் செல்லும் சசிகலா, சமாதியில் கண்ணீர்விட்டு அஞ்சலி செலுத்தவிருக்கிறார். அவர்மீது அனுதாபம் ஏற்படுவதற்கு இந்த ஒரு காட்சியே போதும். அஞ்சலி செலுத்திய கையோடு, அவ்வை சண்முகம் சாலையிலுள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்குச் செல்லும் திட்டமும் சசிகலா தரப்பிடம் இருக்கிறது. பெங்களூரில் சசிகலாவை சந்தித்த ஒரு சீனியர், ‘அம்மா சமாதியில அஞ்சலி செலுத்திட்டு, நேரா கட்சி அலுவலகத்துக்கே போவோம்மா. யார் நம்மளைத் தடுக்க முடியும்? மீறி உங்களைக் கைது செஞ்சா தமிழ்நாடே கொந்தளிச்சுடும். அது நமக்கு பலமா மாறிடும்’ என்றிருக்கிறார். இதற்கு சசிகலா எந்த பதிலும் சொல்லவில்லை’’ என்றார்.

வாக்குவங்கி அரசியல்!

டீலா, நோ டீலா? - சங்கமத்தில் சங்கடம்!

பொங்கலுக்கு முன்பாக டெல்லி சென்ற தினகரன், பா.ஜ.க தேசியச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், அமித் ஷாவின் நண்பர் உள்ளிட்டவர்களிடம் அ.தி.மு.க - அ.ம.மு.க இணைப்பு தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தினார். ‘சசிகலா ஜெயிலுக்குச் சென்ற பிறகு தமிழகத்தில் நடந்த சட்டமன்ற இடைத்தேர்தல்கள், நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தலில் அ.ம.மு.க வாங்கிய ஓட்டுகள் விவரம், எந்தெந்தத் தொகுதியில் அ.தி.மு.க தோற்க அது காரணமாக இருந்தது’ உள்ளிட்டவற்றைப் புள்ளிவிவரங்களுடன் கொடுத்திருக்கிறார். ‘தென்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் சுமார் 60 தொகுதிகளில் அ.ம.மு.க இல்லாமல் அ.தி.மு.க ஜெயிக்க முடியாது’ என்றும் விளக்கியிருக்கிறார்.

ஆனால், ஜனவரி 18-ம் தேதி டெல்லி சென்ற எடப்பாடி மொத்த திட்டத்தையும் தவிடுபொடியாக்கும்விதமாக, ‘சசிகலாவுக்கும் அ.தி.மு.க-வுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அ.ம.மு.க-வை அ.தி.மு.க-வில் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை’ என்று பட்டவர்த்தனமாகக் கூறியிருக்கிறார். இதை சசிகலா தரப்பு எதிர்பார்க்கவில்லை. துணை முதல்வர் பன்னீர்செல்வம் தரப்பிடம் ஏற்கெனவே நல்ல உறவில் இருக்கிறது தினகரன் தரப்பு. சசிகலா தமிழகம் வந்ததும் 60 எம்.எல்.ஏ-க்கள், 20-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் சசிகலா பக்கம் வருவார்கள் என்றும் எதிர்பார்க்கிறது அவர் தரப்பு. தென் மாவட்டங்களைச் சேர்ந்த சில அமைச்சர்களிடம் பன்னீரைவைத்தே பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிட்டிருக் கிறாராம். தினகரன் தரப்பில், ‘அதிருப்தியிலிருக்கும் அ.தி.மு.க நிர்வாகிகளை நான் ஒருங்கிணைக்கிறேன்’ என்று சசிகலாவிடம் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு, ‘நம்மைத் தவிர்த்துவிட்டு தனியாகத் தேர்தலைச் சந்தித்தால், நிச்சயமாக அவர்கள் தோல்வியைச் சந்திப்பார்கள். இது பா.ஜ.க-வுக்கும் நன்றாகத் தெரியும். டெல்லியிலிருந்து முதலில் சிக்னல் வரட்டும்’ என்று அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டாராம் சசிகலா.

டெல்டாவைச் சேர்ந்த அ.தி.மு.க முக்கியத் தலைவர் ஒருவரிடம் பேசியபோது, ‘‘அன்று சசிலாவை ஒதுக்கிய பா.ஜ.க., இன்று அவரை அ.தி.மு.க-வுடன் இணைக்கத் துடிப்பதற்குக் காரணமே வாக்குவங்கிதான். தென் மாவட்டங்கள், டெல்டா பகுதியில் இதுவரை அ.தி.மு.க-வுக்குக் கிடைத்துவந்த கணிசமான வாக்குகள், சசிகலா பிரிந்து நின்றால் கிடைக்காது. தி.மு.க வெற்றியடைய இது வழிவகுத்துவிடும். இது தொடர்பாக சமீபத்தில் அமைச்சர் வேலுமணி தரப்புக்கும், மாநிலங்களவை எம்.பி வைத்திலிங்கம் தரப்புக்குமிடையே மோதல் வெடித்தது. வைத்திலிங்கம் தரப்பில், ‘உங்க ஏரியாவுல பாதிப்பு இல்லைங்க. ஆனா, டெல்டாவிலேயும் தென் மாவட்டங்களிலேயும் அ.ம.மு.க-வால பெரிய பின்னடைவு நமக்கிருக்கு. ஒரத்தநாடு தொகுதியிலேயே நாப்பதாயிரம் ஓட்டைப் பிரிப்பாங்க. சசிகலா விவகாரத்துல அவசரப்பட்டு எதுவும் பேசாதீங்க’ என்றிருக் கிறார்கள். அதற்கு வேலுமணி தரப்பு உடன் படவில்லை என்றதும், வாக்குவாதமாகியிருக்கிறது. சமீபத்தில் பன்னீரிடம் மூத்த அமைச்சர்கள் சிலர், ‘கொங்கு மண்டலத்திலேயே கட்சி நிலைமை சரியில்லை. அ.ம.மு.க-வுடன் இணையாவிட்டால், 60 தொகுதிகள் நமக்கு அடிவாங்கும். ஜெயிப்பதே கடினம்’ என்று ஓப்பனாகச் சொல்லியிருக்கிறார்கள்’’ என்றவர், தொடர்ந்தார்.

டீலா, நோ டீலா? - சங்கமத்தில் சங்கடம்!

டீலா, நோ டீலா?

‘‘சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்திய பன்னீரைவைத்தே, இம்முறை சசிகலா தரப்பு ஆட்டத்தை ஆரம்பிக்கப்போகிறது. எடப்பாடியிடம் இறங்கிப்போவதைவிட, சசிகலாவிடம் சரண்டராவது மேல் என்ற முடிவுக்கும் பன்னீர் வந்துவிட்டார். பெங்களூரில் தினகரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘அ.தி.மு.க-வை மீட்டெடுக்கத்தான் அ.ம.மு.க தொடங்கப்பட்டது. அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலாதான்’ என்றிருக்கிறார். இச்செய்தியின் பின்னால் ஆயிரம் அர்த்தங்கள் புதைந்திருக்கின்றன. சட்டப் போராட்டத்தை ஒரு பக்கம் தயார் செய்துகொண்டு, மற்றொரு பக்கம் டெல்லியின் சிக்னலுக்காகக் காத்திருக்கிறது சசிகலா தரப்பு. ‘அ.தி.மு.க - அ.ம.மு.க ஒன்றிணைந்தால் தி.மு.க-வுக்குக் கடும் நெருக்கடியைக் கொடுக்கலாம். கணிசமான தொகுதிகளையும் அள்ளலாம்’ என்பது டெல்லிக்கு தினகரன் மூலமாக சசிகலா கொடுத்திருக்கும் மெசேஜ். இந்த டீலுக்கு எடப்பாடி எப்படி உடன்படுகிறார் என்பதைப் பொறுத்துத்தான் அடுத்த காட்சிகள் அரங்கேறும்’’ என்றார்.

‘எத்தனை அச்சுறுத்தல் வந்தாலும் இணைப்புக்கு ஓகே சொல்லக் கூடாது’ என்ற உறுதியில் இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி. இணைப்பு சாத்தியப்பட்டால் ‘முதல்வர் வேட்பாளர்’ என்ற தன் அடையாளத்துக்குத்தான் முதல் ஆபத்து என்பது அவருக்குத் தெரியும். எனவே, இரட்டை இலைச் சின்னத்துக்கு கையெழுத்திடும் உரிமையையும், முதல்வர் வேட்பாளர் என்ற அடையாளத்தையும் விட்டுத்தர அவர் தயாராக இல்லை. சசிகலாவுக்கு ஆதரவான அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்களைச் சரிக்கட்டும் வேலையையும் ஆரம்பித்துவிட்டாராம். இது தொடர்பாக நம்மிடம் பேசிய எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏ ஒருவர், ‘‘இணைப்பு தொடர்பாக டெல்லியில் பேச்சுவார்த்தை நடந்தபோது, இணைப்பு ஏன் சாத்தியமாகாது... ஆகக் கூடாது, அதன் விளைவுகளை எப்படிச் சமாளிப்பது என்பது குறித்து மூன்று விஷயங்களை எடப்பாடி முன்வைத்திருக்கிறார்.

‘முதலாவது... சசிகலாவால் பிரியப்போகும் வாக்குகளைச் சரிக்கட்ட கவர்ச்சிகரமான திட்டங்கள். குறிப்பாக, பெண்களை மையப்படுத்தி வெளிவரப்போகும் அறிவிப்புகளாலும், எடப்பாடி ஒரு விவசாயி என்ற அடையாளத்தாலும் தென்மாவட்டங்களிலும் டெல்டாவிலும் வாக்குகள் சரிவதைக் கட்டுப்படுத்த முடியும். இரண்டாவது... ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக இப்போதும் தமிழகத்தில் பேச்சு நிலவுகிறது. இது சசிகலாவுக்குப் பெரிய பின்னடைவைத் தரும். இப்படிப்பட்டவரை நம்முடன் இணைப்பது பெண்கள் வாக்குகளில் சரிவை ஏற்படுத்தும். மூன்றாவது... கட்சியை மறுகட்டமைப்பு செய்து புதிய பொறுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. சசிகலாவை அனுமதிப்பதால், அதில் மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும். இதனால், கட்சிக்குள் பிளவு ஏற்படவும், கோஷ்டிகள் உருவாகவும் வாய்ப்பு உள்ளது’ என்றிருக்கிறார் எடப்பாடி.

மேலும், ‘சசிகலாவை முதல்வர் ஆகவிடாமல் தடுத்தது நீங்கள். அவரைக் கட்சியிலிருந்து வெளியேற்றச் சொன்னது நீங்கள். இப்போது நீங்களே, அவரை மீண்டும் சேர்க்க வேண்டுமென்று சொல்வது நியாயமா?’ என்று எடப்பாடி கேட்டதும், டீலுக்காகப் பேசிய டெல்லி பிரதிநிதிகள் வாயடைத்துப்போய்விட்டனர். டெல்லி எந்த முடிவும் எடுக்க முடியாத திரிசங்கு நிலையில் நிற்கிறது’’ என்றார்.

டீலா, நோ டீலா? - சங்கமத்தில் சங்கடம்!
டீலா, நோ டீலா? - சங்கமத்தில் சங்கடம்!

சங்கமத்தில் சங்கடம்!

இதே உருக்கமான உரையாடலை, ஜனவரி 29-ம் தேதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்திலும் எடப்பாடி ஒலித்தாராம். அமைச்சர்களிடம், “நான்கு வருடங்களாகக் கட்சியைக் கட்டிக்காத்த எனக்கு நீங்கள் கடைசி நேரத்தில் காட்டும் நன்றிக்கடன் என்ன... இதுவரை கட்சி நிதிக்காக உங்களிடம் பத்து ரூபாய் வாங்கியிருப்பேனா? கட்சியைக் கட்டுக்கோப்பாகக் கொண்டுபோனால் மட்டுமே தேர்தலில் ஜெயிக்க முடியும். ஏதேதோ கேள்விப்படுறேன்... எந்த மனக்குழப்பமும் இல்லாம இந்நேரம் நாம எல்லாம் ஒண்ணா நிக்கணும். நம்ம கட்சிக்காக...’’ என்று நெகிழ்ந்து தள்ளியிருக்கிறார்.

சசிகலாவுக்கு எதிரான கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் ஆகியோரின் பேட்டிகள் அடுத்தடுத்து களேபரக் காட்சிகளை அ.தி.மு.க-வுக்குள் அரங்கேற்றியிருக்கின்றன. ஒருவேளை எடப்பாடியே டெல்லி அழுத்தம் தாங்காமல் இணைப்புக்குச் சம்மதித்தாலும், சசிகலா, தினகரன் வகையறாக்களைக் கட்சிக்குள் இணைக்கவே கூடாது என்பதில் ஒரு அணி தீவிரமாக இருக்கிறது. டெல்லி பிரதிநிதிகளிடம், ‘இரு கட்சிகளின் சங்கமம் நிகழ்ந்து, அ.தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இரண்டரை வருடம் எடப்பாடி பழனிசாமி, மீதி இரண்டரை வருடம் நாங்கள் கைகாட்டும் நபர்தான் முதல்வராக இருக்க வேண்டும்’ என்று தினகரன் தரப்பு வைத்த கோரிக்கையும் எடப்பாடி அண்ட் கோவுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

டீலா, நோ டீலா? - சங்கமத்தில் சங்கடம்!

திரிசங்கு பா.ஜ.க!

பா.ஜ.க டெல்லி பொறுப்பாளர் ஒருவரிடம் பேசினோம். ‘‘இந்தத் தேர்தலில் மேற்கு வங்காளத்தில் மம்தாவையும், தமிழகத்தில் ஸ்டாலினையும் ஜெயிக்கவிடக் கூடாது என்பதுதான் எங்கள் இலக்கு. அதனால்தான் தி.மு.க-வுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்கச் சொல்கிறோம். பா.ம.க., தே.மு.தி.க என முரண்டு பிடிக்கும் கட்சிகளையும் அதற்காகத்தான் இழுத்துப் பிடிக்கிறோம். அ.தி.மு.க-வுடன் சசிகலா தரப்பையும் ஒருங்கிணைத்தால், அது கூடுதல் பலமாக இருக்கும் என்று நினைக்கிறோம். தேர்தல் நேரத்தில் ‘ஜெயிப்பது எப்படி’ என்றுதான் யோசிக்க வேண்டுமே தவிர, தனிப்பட்ட நபர்களின் விருப்பு வெறுப்புகளை ஒரு பொருட்டாகக் கருதக் கூடாது. இதுதான் எங்கள் நிலைப்பாடு.

ஜனவரி 30-ம் தேதி, ஜெயலலிதாவின் கோயிலைத் திறக்க மதுரை வந்திருந்தார் முதல்வர். அன்றைய தினம் பி.ஜே.பி தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவும் மதுரையில்தான் இருந்தார். ஆனாலும் இருவரும் சந்திக்கவில்லை. எங்கள் தொகுதிப் பங்கீடு பிரச்னையே இன்னும் ஓயாதபோது, இரண்டு கட்சிகள் இணைப்பு என்பது எளிதில் நடக்காத காரியமாக டெல்லி நினைக்கிறது’’ என்றார்.

ஏழு நாள்கள் ஓய்வை முடித்துவிட்டு சசிகலா ரிட்டர்ன் ஆகும்போது, பல சரவெடிகள் வெடிக்கக் காத்திருக்கின்றன என்பது மட்டும் நிச்சயம்!