Published:Updated:

பொன்விழா அ.தி.மு.க... வேகமெடுக்கும் சசிகலா... எடுபடுமா புது அஸ்திரம்?

சசிகலா
பிரீமியம் ஸ்டோரி
சசிகலா

தி.மு.க-விலிருந்து வெளியேற்றப்பட்ட எம்.ஜி.ஆர்., அனகாபுத்தூர் ராமலிங்கம் தொடங்கியிருந்த அ.தி.மு.க-வில் 1972, அக்டோபர் 16-ம் தேதியே இணைந்துவிட்டார்.

பொன்விழா அ.தி.மு.க... வேகமெடுக்கும் சசிகலா... எடுபடுமா புது அஸ்திரம்?

தி.மு.க-விலிருந்து வெளியேற்றப்பட்ட எம்.ஜி.ஆர்., அனகாபுத்தூர் ராமலிங்கம் தொடங்கியிருந்த அ.தி.மு.க-வில் 1972, அக்டோபர் 16-ம் தேதியே இணைந்துவிட்டார்.

Published:Updated:
சசிகலா
பிரீமியம் ஸ்டோரி
சசிகலா

தடபுடல் கொண்டாட்டத்தில் இருக்கவேண்டிய அ.தி.மு.க-வின் பொன்விழா ஆண்டு, சுழற்றியடிக்கும் அரசியல் சூறாவளியில் சிக்கி, சுணங்கிப்போயிருக்கிறது!

தொடரும் இரட்டைத் தலைமை களேபரம், சசிகலா அச்சுறுத்தல், பா.ஜ.க-வின் இரும்புப்பிடி, முன்னாள் அமைச்சர்களின் காலைச் சுற்றும் வழக்குகள், செலவழிக்க முடியாத நிர்வாகிகள் என அந்தக் கட்சியைச் சிதறடிக்க ஆயிரம் காரணங்கள் வரிசைகட்டுகின்றன. பொன்விழா கொண்டாட்டத்தைப் பற்றிப் பேச, அக்டோபர் 11-ம் தேதி நிகழ்ந்த கூட்டத்தில்கூட, கழக மகளிரணித் தலைவி வளர்மதியின் பேச்சால் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. சலசலப்பை ஒழுங்குபடுத்த வேண்டிய தலைவர்கள், செய்வதறியாது கையைப் பிசைந்துகொண்டிருந்தார்கள். இது போன்ற நெருக்கடியை இதற்கு முன்பும் அ.தி.மு.க சந்தித்திருக்கிறது.

பொன்விழா அ.தி.மு.க... வேகமெடுக்கும் சசிகலா... எடுபடுமா புது அஸ்திரம்?

1996-ம் ஆண்டு அ.தி.மு.க-வின் வெள்ளிவிழா கொண்டாட்டம் தொடங்கியபோது, அக்கட்சியின் தலைவராக இருந்த மறைந்த ஜெயலலிதாவின் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகள் ரவுண்டு கட்டின. கண்ணப்பன், முத்துசாமி, சைதை துரைசாமி ஆகியோர் கட்சியிலிருந்து பிரிந்து தனி அணியாக நின்றனர். ‘நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க’ என்று உரிமை கொண்டாடினர். மாநிலங்களவை எம்.பி-க்களில் ஆறு பேர் அந்த அணியின் வசமிருந்தனர். அன்று எம்.பி-யாக இருந்த நிறைகுளத்தான் மட்டும் திசைமாறியிருந்தால், இன்று அ.தி.மு.க என்கிற ஓர் இயக்கம் 50-வது ஆண்டு விழாவைக் கொண்டாடிக்கொண்டிருக்காது. பல்வேறு எதிர்ப்புகளையும் கசப்புகளையும் எதிர்கொண்டு கட்சியைக் கட்டிக்காத்தார் ஜெயலலிதா. இது நடந்து கால் நூற்றாண்டுக்குப் பிறகு மீண்டும் ஒரு சூறாவளியைச் சந்தித்திருக்கிறது அ.தி.மு.க. இந்தச் சூறாவளிக் காற்றைத் தனக்குச் சாதகமாகத் திசைதிருப்பி, கட்சியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப் பார்க்கிறார் சசிகலா. அ.தி.மு.க-வின் பொன்விழாவையொட்டி அவர் தரப்பு கசியவிட்டிருக்கும் நிகழ்ச்சி நிரல்கள்கூட, கட்சியை அவர் ‘கன்ட்ரோல்’ எடுப்பதற்குத் தேவையான திட்டங்களையே காட்டுகின்றன. ‘சசிகலாவின் வேகமும், அவர் எடுக்கும் புது அஸ்திரமும் கட்சியை அவர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வைக்குமா?’ என்பதுதான் இன்றைய அரசியல் ‘ஹாட் டாபிக்’!

சசியின் உள்ளாட்சி ரிசல்ட் கணக்கு... அஞ்சலி... கொடியேற்றம்!

அக்டோபர் 10-ம் தேதி, சென்னை ஹபிபுல்லா சாலையிலுள்ள தன் வீட்டில் அ.ம.மு.க மாவட்டச் செயலாளர்களை அழைத்துப் பேசிய சசிகலா, தன் திட்டங்கள் குறித்துப் பொடிவைத்துப் பேசியிருக்கிறார். இது குறித்து நம்மிடம் பேசிய சசிகலாவுக்கு நெருக்கமான ஒருவர், “மார்ச் 27, 2010-ல் பென்னாகரம் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், அ.தி.மு.க டெபாசிட் இழந்தது. தி.மு.க வெற்றிபெற்றது. பா.ம.க இரண்டாவது இடத்தைத் தட்டிச்சென்றது. அது ஜெயலலிதாவே எதிர்பார்க்காதது. இதைக் குறிப்பிட்டுப் பேசிய சசிகலா, ‘அக்கா இருந்தபோதே வடமாவட்டத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் பா.ம.க இரண்டாமிடம் பெற்றது. இப்போது ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் ஏழு வட மாவட்டங்களிலும் அ.தி.மு.க கரைசேரப்போவதில்லை. இதிலிருந்தே இரட்டைத் தலைமை வேலைக்கு ஆகாது என்பது கட்சியினருக்குத் தெரிந்துவிடும். இதுதான் நமக்கான சந்தர்ப்பம்’ என்றிருக்கிறார். ஊரக உள்ளாட்சித் தேர்தல் மட்டுமல்லாமல், அ.தி.மு.க-வில் நீடிக்கும் இரட்டைத் தலைமைக் குழப்பம், பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் தராதது, கொங்கு மண்டல ஆதிக்கத்தால் உஷ்ணமாகியிருக்கும் நிர்வாகிகள் எனச் சகல எதிர்ப்பையும் தனக்குச் சாதகமாக்கிக்கொள்ளப் பார்க்கிறார் சசி.

பொன்விழா அ.தி.மு.க... வேகமெடுக்கும் சசிகலா... எடுபடுமா புது அஸ்திரம்?

தி.மு.க-விலிருந்து வெளியேற்றப்பட்ட எம்.ஜி.ஆர்., அனகாபுத்தூர் ராமலிங்கம் தொடங்கியிருந்த அ.தி.மு.க-வில் 1972, அக்டோபர் 16-ம் தேதியே இணைந்துவிட்டார். ஆனால், அக்டோபர் 17-ம் தேதிதான் கட்சி தொடங்கப்பட்டதாக முறைப்படி அறிவிக்கப்பட்டது. இதெல்லாம், எம்.ஜி.ஆரின் விசுவாசிகளுக்கு நன்கு தெரியும். இதைக் கணக்கில் வைத்துத்தான், அக்டோபர் 16-ம் தேதி ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் சமாதிகளில் அஞ்சலி செலுத்தத் தீர்மானித்திருக்கிறார் சசி. எம்.ஜி.ஆர் இருந்தபோது தி.நகர், ராமாவரம் தோட்டத்திலுள்ள அவரின் இல்லங்கள், ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையிலுள்ள அலுவலகம்தான் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான அதிகார மையங்களாகச் செயல்பட்டன. வரும் அக்டோபர் 17-ம் தேதி தி.நகர் எம்.ஜி.ஆர் இல்லத்துக்குச் செல்லும் சசிகலா, அங்கு அ.தி.மு.க-வின் கொடியை ஏற்றவிருக்கிறார். அடுத்ததாக ராமாவரம் தோட்டத்திலுள்ள காது கேளாதோர் பள்ளிக் குழந்தைகளுடன் அவர் உணவருந்தவும் ஏற்பாடுகள் தூள்பறக்கின்றன. இதன் மூலமாக எம்.ஜி.ஆர் மீது தனக்கிருக்கும் விசுவாசத்தை அழுத்தமாக வெளிப்படுத்தவிருக்கிறார் சசிகலா.

“அக்காவைப் பார்க்கப்போறேன்... ஆட்களைத் திரட்டுங்க!”

தன் வீட்டில் ஆலோசனைக் கூட்டம் முடித்துவிட்டுக் கிளம்ப எழுந்த அ.ம.மு.க மாவட்டச் செயலாளர்களிடம், ‘வர்ற அக்டோபர் 16 எனக்கு ரொம்ப எமோஷனலான நாள். நான்கரை வருஷம் கழிச்சு அக்காவை நான் பார்க்கப்போறேன். நான் நினைச்சிருந்தா, ஜெயில்லருந்து வந்தப்பவே நினைவிடத்துக்குப் போயிருக்க முடியும். ஆனா, தேவையில்லாத பிரச்னையை அப்போ நான் வளர்க்க விரும்பலை. இப்போ சூழல் மாறியிருக்கு. அவங்க சமாதியில நான் என்ன சபதம் எடுத்தேனோ, அதை நிறைவேத்தியே தீருவேன். என் சொத்துகளை ஒவ்வொண்ணா முடக்கப் பார்க்கிறாங்க. பண்ணிக்கட்டும். எனக்கு அ.தி.மு.க என்கிற இயக்கம்தான் சொத்து. அதை யாரும் என்கிட்டருந்து பிரிச்சுட முடியாது. குறைஞ்சது பத்தாயிரம் பேராவது அன்னைக்கு அம்மா சமாதியில கூடணும். அப்பதான் நாம யாருன்னு எல்லாருக்கும் புரியும்’ என்றிருக்கிறார் சசிகலா. அவரின் ஆலோசனைப்படி தமிழகம் முழுவதுமிருந்து ஆட்களைத் திரட்டவும் ஏற்பாடாகிறது. அக்டோபர் 17-ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கான பொறுப்பை, அ.ம.மு.க-வின் தென்சென்னை மாவட்ட முன்னாள் துணைச் செயலாளர் வைத்தியநாதனிடம் ஒப்படைத்திருக்கிறார் சசிகலா. அவர் விரும்பியபடி, அக்டோபர் 16-ம் தேதி பெரும் கூட்டம் சசிகலாவுக்காக ஜெயலலிதா சமாதியில் கூடினாலோ, அக்டோபர் 17-ம் தேதி அ.தி.மு.க கொடியை அவர் வெற்றிகரமாக ஏற்றிவிட்டாலோ, அ.தி.மு.க-வின் தட்பவெப்பமே மாறிவிடும்” என்றார் விரிவாக.

கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் அ.தி.மு.க., அ.ம.மு.க தொண்டர்கள், நிர்வாகிகளிடம் சசிகலா போனில் பேசும் ஆடியோ உரையாடல்கள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டன. அப்போது, அ.ம.மு.க நிர்வாகிகளான காமராஜ், உமாதேவன் ஆகியோரிடம் சசிகலா பேசியபோது, ‘அக்கா சமாதிக்குப் போயிட்டு வந்தவுடனேயே தமிழ்நாடு முழுவதும் டூர் கிளம்பலாம்னு இருக்கேன்’ என்றார். அதற்கான தருணம் வந்துவிட்டதாகவே சொல்கிறது அவர் தரப்பு. அடுத்த சில மாதங்களில் தமிழகம் தழுவிய டூர் திட்டத்தைக் கையில் வைத்திருக்கும் சசிகலா, நான்கு பகுதியாகச் சுற்றுப்பயணம் செல்லவிருக்கிறாராம். முக்கியமான ஊர்களிலெல்லாம் அவர் அ.தி.மு.க கொடியை ஏற்றுவதற்கும் ஏற்பாடுகள் மும்முரமாகியிருக்கின்றன. டிசம்பரில் கூட்டத் திட்டமிடப்பட்டுள்ள அ.தி.மு.க-வின் செயற்குழு, பொதுக்குழுவுக்கு முன்னதாக இந்த டூர் திட்டத்தை முடித்துவிட்டு, எடப்பாடி பழனிசாமிக்குக் கிலியூட்டவும் திட்டம் வகுத்திருக்கிறாராம் சசி.

பொன்விழா அ.தி.மு.க... வேகமெடுக்கும் சசிகலா... எடுபடுமா புது அஸ்திரம்?

செக் வைக்கும் டெல்லி... ‘எல்லாம் நல்லதுக்கு’ சசி... நழுவிய பணிவானவர்!

ஒவ்வொரு முறை சசிகலா அரசியல்ரீதியாக நகரும்போதும், ஒவ்வொரு வகையில் அதற்கு மறைமுக ‘செக்’ வைக்கிறது டெல்லி. சசிகலா விடுதலையாவதற்கு முன்னதாக, அவர் தங்குவதற்காக போயஸ் கார்டனில் கட்டப்பட்டு வந்த வீடு உட்பட 64 சொத்துகள் மீது நோட்டீஸ் ஒட்டியது வருமான வரித்துறை. அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி இறப்புக்கு சசி துக்கம் விசாரித்துவிட்டுச் சென்ற சில நாள்களிலேயே, அவர் தொடர்புடைய பையனூர் பங்களா முடக்கப்பட்டது. தற்போது, அ.தி.மு.க கொடியை சசிகலா ஏற்றப்போகிறார் எனத் தகவல்கள் வெளிவந்தவுடனேயே, கொடநாடு மற்றும் கர்சன் எஸ்டேட்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இவையெல்லாமே சசிகலாவுக்கு விடுக்கப்படும் மறைமுக மிரட்டல்கள்தான் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அ.தி.மு.க-வைக் கபளீகரம் செய்யப் பார்க்கும் பா.ஜ.க., தங்கள் திட்டத்துக்கு இடையூறாக சசிகலா உட்பட யாரும் குறுக்கே வந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறது. சமீபத்தில் தன்னுடன் போனில் பேசிய அ.தி.மு.க-வின் பணிவான தலைவரிடம், தனக்கெதிராக பா.ஜ.க எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்துத் தீவிரமாகப் பேசியிருக்கிறார் சசி. அவரிடம், “அவங்க என்னை அடிப்பதுகூட ஒருவகையில் நல்லதுக்குத்தான். அப்போதான், பா.ஜ.க எதிர்ப்பாளர் என்கிற இமேஜ் என்மேல விழும். அ.தி.மு.க இழந்த சிறுபான்மையினர் வாக்குகளை என்னால மறுபடியும் திரட்ட முடியும். எல்லாம் நல்லதுக்குத்தான்” என்றிருக்கிறார் சசிகலா. ‘சரிம்மா... சரிம்மா...’ என அனைத்தையும் கேட்டுக்கொண்ட பணிவானவர், தன் தரப்பு என்ன என்பதை மட்டும் தெளிவாகச் சொல்லாமல் வழக்கம்போல நழுவினாராம்.

சசிகலாவின் இந்தப் புதிய அஸ்திரங்கள் குறித்து அ.தி.மு.க நிர்வாகிகள் சிலரிடம் கேட்டோம். “இதுவரைக்கும் அவங்க எடுத்த அஸ்திரங்கள் ஆனது மாதிரியே இதுவும் புஸ்வாணமாத்தான் முடியும். அம்மா சமாதியில் அஞ்சலி செலுத்துவதால், கொடியேற்றுவதால் அவர் அ.தி.மு.க-வைக் கைப்பற்றுவார் என்பதெல்லாம் மிகையான கற்பனை” என்றார்கள்.

செப்டம்பர் 5, 2018-ல், சென்னையில் அமைதிப் பேரணி நடத்தினார் முன்னாள் தி.மு.க தென்மண்டலச் செயலாளர் மு.க.அழகிரி. அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்குக் கடும் குடைச்சலை அழகிரி கொடுப்பார் என்று பேசப்பட்டது. அரசியல் வட்டாரத்தில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது அந்தப் பேரணி. ஆனால், எதிர்பார்த்த கூட்டத்தை அழகிரியால் கூட்ட முடியவில்லை. கூட்டம் பிசுபிசுத்துப்போனது. அரசியல் அலையில் அழகிரியும் காணாமல் போனார். அக்டோபர் 16-ம் தேதி, ஜெயலலிதா சமாதியில் புதிய பயணத்தைத் தொடங்க நினைக்கும் சசிகலா, தொண்டர்கள் கூட்டம், கட்சிக் கொடியேற்றம், டூர் திட்டம் உள்ளிட்ட புதிய அஸ்திரங்கள் மூலமாக அ.தி.மு.க-வில் தவறவிட்ட இடத்தைப் பிடிப்பாரா அல்லது அழகிரிபோல காணாமல்போவாரா என்பது இன்னும் சில நாள்களில் தெரிந்துவிடும்!

இவர்கள் என்ன சொல்கிறார்கள்?

“சசிகலாவின்
இந்த நடவடிக்கைகளால் நேரடியாகவோ, உடனடியாகவோ எந்தத் தாக்கமும் ஏற்படாது. அதேவேளையில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ஏற்கெனவே கட்சியில் இருக்கிற விரிசல்களை இவரின் நடவடிக்கைகள் அதிகப்படுத்தும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற வசீகரத் தலைமை இல்லாததே அ.தி.மு.க-வின் தோல்விக்குக் காரணமாகப் பார்க்கப்படும். அந்த இடத்தில் சசிகலா வருவார். அவரும் வசீகரமான தலைமை இல்லைதான். ஆனால், கட்சியில் அனைவரையும் ஒருங்கிணைக்கிற ஆற்றல் அவருக்கு இருக்கிறது. அ.தி.மு.க-வின் பின்புலமாக முக்குலத்தோர், கவுண்டர், அருந்ததியர், முத்தரையர், மீனவர் போன்ற சமூகங்கள்தான் இருக்கின்றன. அவற்றில் முக்குலத்தோர் சமூகம் தற்போது விலகி நிற்கிறது. அந்தச் சமூகத்தைச் சேர்ந்த மூன்றாம், நான்காம் கட்ட நிர்வாகிகள் தி.மு.க-வை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றனர். சசிகலாவின் இந்த நடவடிக்கைகளால், அது தடுக்கப்படும். இல்லையென்றால் முடிவுகளைத் தள்ளிப்போடுவதற்கு அது உதவும்!’’

- ஷ்யாம், மூத்த பத்திரிகையாளர்

ஷ்யாம்
ஷ்யாம்
துரை கருணா
துரை கருணா

“சசிகலா சுற்றுப்பயணத்தை ஆரம்பித்து, ஒவ்வொரு மாவட்டமாகச் செல்லும்போது எந்த அளவுக்கு ரெஸ்பான்ஸ் இருக்கிறதோ அதைப் பொறுத்துத்தான் நாம் எதையும் சொல்ல முடியும். பெங்களூரிலிருந்து வரும்போது இருந்ததைப்போலப் பெருந்திரள் வந்தால், கட்சி நிர்வாகிகள் கண்டிப்பாக யோசிப்பார்கள். சசிகலாவுக்கு ஆதரவாகப் பெருவாரியான நிர்வாகிகள் களமிறங்கினால், கட்சித் தலைமைகள் மறு சிந்தனைக்கு வந்தாகவேண்டிய சூழல் வரும். எம்.ஜி.ஆர் காலத்து ஆட்களைத் தேர்தலில் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்கிற அதிருப்தி கட்சிக்குள் நிலவுகிறது. அவர்களின் ஆதரவு நிச்சயமாக சசிகலாவுக்குக் கிடைக்கும்!’’

- துரை கருணா, அரசியல் விமர்சகர்