Published:Updated:

மிரண்ட எடப்பாடி... வெகுண்ட செங்கோட்டையன்... தடித்த வார்த்தைகள்... அ.தி.மு.க கேங் வார்!

அ.தி.மு.க கேங் வார்!
பிரீமியம் ஸ்டோரி
News
அ.தி.மு.க கேங் வார்!

‘கட்சிக்கு சீனியருங்க அவரு. மரியாதையாப் பேசுங்க...’ என்று சொன்னதும்தான் தாமதம், சண்முகம் மேலும் சூடாகிவிட்டார்.

அ.தி.மு.க-வின் தலைமைக் கழக அலுவலகத்துக்கு ‘எம்.ஜி.ஆர் மாளிகை’ என்று சமீபத்தில்தான் பெயர் சூட்டினார்கள். எம்.ஜி.ஆர் பெயரை வைத்ததுதான் தாமதம், அவரின் படங்களில் இடம்பெறும் சிலம்பம், வாள்வீச்சு, மல்யுத்தம் போன்ற அதிரடி சண்டைக் காட்சிகளைத் தாண்டிய அதகளம் தலைமைக் கழகத்தில் அனல் பறந்திருக்கிறது. அச்சிலேற்ற முடியாத தடித்த வார்த்தைகளுக்கும், உரத்த கோஷங்களுக்குமிடையே பெருங்குழப்பத்துடன் முடிந்திருக்கிறது சமீபத்திய மாவட்டச் செயலாளர்கள் கூட்டம். “தொண்டர்கள் வாழ்த்து மழையோடு கூட்டத்துக்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி, இவ்வளவு தூரம் தனது பவருக்கே பங்கம் ஏற்படும் என்பதை நிச்சயம் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். ‘என்னதான் நடக்கிறது அ.தி.மு.க-வில்?’ விவரமறிய களமிறங்கினோம். நம்மிடம் கட்சிக்காரர்கள் கொட்டிய தகவல்களெல்லாம் ‘தெறி’ ரகம்!

ஆரம்பமே ‘அதகளம்’... ‘ஷாக்’ கொடுத்த சண்முகம்!

‘அ.தி.மு.க-வின் மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நவம்பர் 24-ம் தேதி நடைபெறும்’ என்கிற அறிவிப்பு வெளியானபோதே, கட்சிக்குள் பரபரப்பு தொற்றிக்கொண்டது. உறுப்பினர் சேர்க்கை, உட்கட்சித் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கத்தான் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில், இரட்டைத் தலைமைக்கு எதிராக வலுவான கருத்துகளை முன்வைக்க சில அ.தி.மு.க நிர்வாகிகள் முடிவெடுத்திருந்தனர். ஆனாலும், கூட்டத்தில், ‘பூனைக்கு யார் மணி கட்டுவது?’ என்கிற தயக்கம் இருந்தது. யாரும் எதிர்பாராத திருப்பமாக, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீசிய வெடி, கட்சிக்குள் களேபரத்தை உருவாக்கியிருக்கிறது. இது குறித்து அ.தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர்கள் சிலரிடம் பேசினோம். நிர்வாகிகள் கூட்டத்தில் நடந்த விஷயங்களை ‘லைவ்’வாகக் கொட்டினார்கள்.

“கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக, முதல் வரிசையில் வந்தமர்ந்தார் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம். கைகளைக் கட்டிக்கொண்டு ஒரு தினுசாக அவர் அமர்ந்திருந்ததைப் பார்த்ததுமே, கழக முன்னோடிகளுக்கு ‘இன்னைக்கு நேரம் சரியில்லை’ என்பது புரிந்துவிட்டது. கூட்டம் தொடங்கியதும், வழக்கம்போலத் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி வரவேற்புரை ஆற்றினார். அஜெண்டாவை மட்டும் பேசிவிட்டு, சிறிது நேரத்திலேயே கூட்டத்தை முடித்துக்கொள்ள எடப்பாடி பழனிசாமி விரும்பினார். சம்பிரதாயத்துக்காக, ‘யாராவது பேச விரும்புகிறீர்களா?’ என்று அவர் கேட்கவும், கட்சியின் மூத்த உறுப்பினரும் முன்னாள் எம்.பி-யுமான அன்வர் ராஜா பேச எழுந்தார். அதுவரை அமைதியாக இருந்த சி.வி.சண்முகம், திடீரென ஆக்ரோஷமாகி, ‘கட்சிக்கே துரோகம் பண்ணினவன். அவனை எதுக்கு பேசச் சொல்றீங்க... இவன் சசிகலா ஆளு’ என்று ஒருமையில் எகிற, அன்வர் ராஜா உட்பட அனைத்து நிர்வாகிகளும் ‘ஷாக்’ ஆகிவிட்டனர்.

மிரண்ட எடப்பாடி... வெகுண்ட செங்கோட்டையன்... தடித்த வார்த்தைகள்... அ.தி.மு.க கேங் வார்!

“சத்தம் போடலைய்யா... சண்டை போடுறாங்க” - உடைந்த சேர்... எகிறிய உஷ்ணம்!

அன்வர் ராஜா அருகிலிருந்த மனோஜ் பாண்டியன் எழுந்து, ‘கட்சிக்கு சீனியருங்க அவரு. மரியாதையாப் பேசுங்க...’ என்று சொன்னதும்தான் தாமதம், சண்முகம் மேலும் சூடாகிவிட்டார். தடித்த வார்த்தைகளால் அன்வர் ராஜாவை அர்ச்சித்தவர், ‘எடப்பாடியைக் கண்டபடி பேசிட்டுத் திரியுறான்... அவனுக்காக வக்காலத்து வாங்குறீங்களா? முதல்ல அவனை மன்னிப்புக் கேட்கச் சொல்லுங்க...’ என்று மீண்டும் ஒருமையில் காய்ச்சி எடுத்தார். டென்ஷனான துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், ‘யோவ் சண்முகம், நீ உட்காருய்யா முதல்ல...’ என்று சொன்னதும், ‘என்னை உட்காரச் சொல்ல நீ யாருய்யா?’ என்று வைத்திலிங்கம் பக்கம் பாய்ந்தார் சண்முகம். ஒருகட்டத்தில் சண்முகத்துக்கும் வைத்திலிங் கத்துக்கும் இடையே வார்த்தை உஷ்ணமாகி, கைகலப்பாகும் நிலை ஏற்பட்டது.

டென்ஷனின் உச்சத்திலிருந்த சண்முகம், ‘என்னய்யா கூட்டம் நடத்துறீங்க?’ என்று அருகிலிருந்த சேரைத் தூக்கி வீச, சேர் உடைந்துவிட்டது. அதுவரை அந்த சேரில் அமர்ந்திருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘சேர் போச்சே’ என வருத்தப்பட்டது தனிக்கதை. இவ்வளவு களேபரங்களும் கழக ஒருங்கிணைப்பாளர்கள் முன்னிலையில்தான் நடந்தன. நிலைமை கைமீறிப்போவதைப் பார்த்த ஓ.பி.எஸ்., ‘ஏம்ப்பா, சத்தம் போடாம அமைதியா இருங்க’ என்றார். அதற்கு, ‘அவுங்க சத்தம் போடலைய்யா, சண்டை போடுறாங்க’ என்று தென்மாவட்டச் செயலாளர்கள் சிலர் டைமிங்கில் ரைமிங்காக கமென்ட் அடித்தது பெரிய பிளாக் காமெடி. கூட்டம் தொடங்கிய அரை மணி நேரத்துக்குள்ளாகவே தலைமைக் கழகத்தின் முதல் மாடி ரணகளமானது. திருத்தணி ஹரி எழுந்து, ‘இரண்டு தலைவர்களும் பேசி முடிச்சுட்டு கூட்டத்தை முடிங்க’ என்றார்.

அதுவரை அமைதியாக இருந்த செங்கோட்டையன் எழுந்து, ‘நான் சில கருத்துகளைப் பேச வேண்டும். அதற்குப் பிறகு கூட்டத்தை முடிங்க...’ என்றதும், ‘இப்ப எதுக்குண்ணே நீங்க பேசணும்... அப்புறம் பேசலாமே’ என்று கெஞ்சலாகக் கேட்டார் எடப்பாடி. அதற்கு, ‘பேச அனுமதிச்சா நான் இருக்கேன். இல்லைன்னா கிளம்புறேன்’ என்று செங்கோட்டையன் காட்டமாகச் சொல்லவும், எடப்பாடியால் தடுத்துப் பேச முடியவில்லை.

வெகுண்ட செங்கோட்டையன்... கடுமைகாட்டிய மனோஜ் பாண்டியன்!

செங்கோட்டையன் பேச ஆரம்பிக்கவும், கூட்டத்தில் அமைதி ஏற்பட்டது. ‘கட்சிக்குள் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. தலைவர்களுக்குள் ஒற்றுமை இல்லை. கட்சி இப்படி இருப்பதைப் பார்க்க எனக்கு வேதனையாக இருக்கிறது. இந்தக் கட்சியை வலுவாக்க ஒரு குழுவை அமைக்க வேண்டும்’ என்றதும், பன்னீர் குறுக்கிட்டு, ‘அதான் ஏற்கெனவே வழிகாட்டுதல்குழு ஒன்று இருக்கிறதே’ என்றார். அதற்கு செங்கோட்டையன், ‘அந்தக் குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லாமல் இருப்பதுதான் பிரச்னையே. வேண்டுமானால், வழிகாட்டுதல்குழுவின் எண்ணிக்கையை 18-ஆக உயர்த்திக்கொள்ளலாம். கூட்டணி தொடர்பான முடிவுகள், வேட்பாளர் தேர்வு, கட்சி உறுப்பினர் சேர்க்கை, நீக்கம் உள்ளிட்டவற்றை அந்தக் குழுதான் முடிவெடுக்க வேண்டும். அந்தக் குழுவுக்கு இனி ஒருங்கிணைப்பாளர்கள் கட்டுப்பட வேண்டும். இந்த மாற்றங்களைச் செய்துவிட்டு உள்ளாட்சித் தேர்தல், உட்கட்சித் தேர்தல்களைச் சந்தித்தால் மட்டுமே கட்சிக்கு நல்லது’ என்று சொல்லிவிட்டு அமர்ந்தார். இதுவரை கட்சி விவகாரங்களில் செங்கோட்டையன் எந்தக் கருத்தையும் இப்படி முன்வைத்ததில்லை. ஒதுங்கியே இருந்த செங்கோட்டையன், இப்போது திடீரென விஸ்வரூபம் எடுத்ததை யாரும் எதிர்பார்க்கவுமில்லை.

செங்கோட்டையன் பேசி முடித்ததும், ஆலங்குளம் எம்.எல்.ஏ-வான மனோஜ் பாண்டியன் மைக் பிடித்தார். ‘மேடையில் இருக்கிற நீங்க ரெண்டு பேருமே மாஸ் லீடரா?’ என்று பன்னீரையும் பழனிசாமியையும் பார்த்துக் கேட்டதும், எந்த பதிலையும் சொல்லாமல் அவர்கள் அமைதியாக இருந்தனர். தொடர்ந்த மனோஜ் பாண்டியன், ‘ஒருங்கிணைப்பாளர்கள் நாலு பேர் மட்டும் எப்போதும் மேடையில இருக்கணும்னு நினைக்காதீங்க. இந்தக் கூட்டத்தில முன்வரிசையில் உட்காந்திருக்கிறவங்களும் மேடையில் வந்து உட்காரணும். மூணு தேர்தல்கள்ல தொடர்ந்து தோல்வியடைஞ்சுக்கிட்டு இருக்கோம். இதுவரை ஏன் தோத்தோம்னு விசாரணை நடந்துருக்கா?” என்றதும், முன்வரிசையில் இருந்த வேலுமணி எதிர்க்கருத்து சொல்ல எழுந்தார். அவரைப் பார்த்து மனோஜ் பாண்டியன், ‘நான் பேசிக்கிட்டு இருக்கேன். நீங்க குறுக்க பேச வேண்டாம்’ என்று கடுமைகாட்ட, அதோடு அமைதியாக உட்கார்ந்த வேலுமணி, கூட்டம் முடியும்வரை வாய் திறக்கவில்லை.

வெடித்த விஜயபாஸ்கர்... மிரண்ட எடப்பாடி!

மனோஜ் பாண்டியன் பேசியதும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் எழுந்தார். ‘ஆளும் தரப்பிலிருந்து எங்களுக்கு இவ்வளவு நெருக்கடிகள் கொடுத்தபோதும், எங்களின் பின்னால் கட்சித் தலைமை சப்போர்ட்டாக இல்லையே... அ.தி.மு.க இனி ஆட்சிக்கு வராது என்கிற எண்ணம் அதிகாரிகளுக்கு ஏற்பட்டிருக்கிறது. தலைவர்களாக இருப்பவர்கள்தான் எங்களுக்கு தைரியம் கொடுக்க வேண்டும். ஆனால், நம்மைக் காப்பாற்றிக்கொண்டால் போதும் என்கிற எண்ணமே பலரிடம் உள்ளது’ என்று வெடித்துச் சீறியவர், செங்கோட்டையன் முன்வைத்த கருத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறினார். அதை முன்னாள் அமைச்சர்கள் பலரும் ஆமோதித்தனர். இப்படி, அடுத்தடுத்து தனக்கெதிராக அம்புகள் எய்யப்பட்டதால், எடப்பாடி மிரண்டுபோனார். ஒற்றைத் தலைமையாக விரும்பியவரை, பத்தோடு பதினொன்றாக அமரவைக்க அவர் முன்னாலேயே காய்கள் நகர்த்தப்பட்டன.

அப்போது சி.வி.சண்முகம் பேச எழுந்ததும், மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. ‘இப்போது குழு அமைப்பது தேவையில்லாதது. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்து, பா.ம.க-வைக் கூட்டணிக்குள் எடப்பாடியார் கொண்டுவந்ததால்தான் நாம ஜெயிச்சோம்’ என்றதும், கூட்டத்தில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது. தென்மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், ‘அந்த இட ஒதுக்கீடு விவகாரத்தால்தான் எங்களுக்குச் சிக்கலே வந்தது. குழு அமைப்பதுதான் சரியான வழிமுறை’ என்று கூச்சலிட, முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் உட்பட வன்னியர் சமூக நிர்வாகிகள் எழுந்து எடப்பாடிக்கு ஆதரவாகக் கோஷமிட்டனர். விவகாரம் சமூகரீதியாகச் செல்வதைப் பார்த்து அரண்ட எடப்பாடி, ‘கொடநாடு விவகாரத்தைவைத்து என்னை முடக்க நினைக்கிறார்கள். அதற்கெல்லாம் வாய்ப்பில்லை. இதற்கெல்லாம் நான் அஞ்ச மாட்டேன், நான் எதற்கும் துணிந்தவன்’ என்று பேசி கூட்டத்தில் அனுதாபம் தேட முயன்றார். ஆனாலும் அது எடுபடவில்லை.

மிரண்ட எடப்பாடி... வெகுண்ட செங்கோட்டையன்... தடித்த வார்த்தைகள்... அ.தி.மு.க கேங் வார்!

போட்டுடைத்த பன்னீர்... முகம் கறுத்த முனுசாமி!

கூட்டத்தில் இறுதியாகப் பேச எழுந்தார் பன்னீர். ‘தினகரனை நான் ஒருமுறை சந்தித்தது குறித்து என்மீது விமர்சனம் எழுந்தது. இப்போது சொல்கிறேன், தினகரனை நானாகச் சந்திக்கவில்லை. என்னைச் சந்திக்க வேண்டும் என்று அவர்கள் தரப்பிலிருந்து தொடர்ந்து அழைப்பு வந்தது. அப்போது என்னுடன் இருந்த கே.பி.முனுசாமியிடம் நான் இது குறித்துக் கேட்டதும், ‘நீங்க போய்ப் பாருங்க’ என்று அவர்தான் சொன்னார்’ என்று சொல்ல, முனுசாமியின் முகம் கறுத்துவிட்டது. தொடர்ந்த பன்னீர், ‘நமது தோல்விக்கு வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரமும் ஒரு காரணம். இதனால், தென் மாவட்டங்களில் நமக்கு மிகப்பெரிய சரிவு ஏற்பட்டது. செங்கோட்டையன் அண்ணன் சொன்னதுபோல, குழுவை விரிவாக்கலாம் என்பதே என்னுடைய கருத்து. நத்தம் விசுவநாதன், தளவாய்சுந்தரம் போன்றவர்களையும் அந்தக் குழுவில் இணைத்துவிடலாம்’ என்று போகிற போக்கில் சிலர் பெயரைச் சொல்ல, கட்சிக்குள் அதிகாரம் இல்லாமல் இத்தனை காலம் எடப்பாடியை நம்பியிருந்தவர்களெல்லாம் பன்னீரின் பேச்சால் மனம் குளிர்ந்தனர். எடப்பாடிக்கு எந்தவகையிலாவது ‘செக்’ வைக்க வேண்டுமென பன்னீர் துடித்துக்கொண்டிருந்த நிலையில், ‘ஓரிடத்தில் குவிந்திருக்கும் அதிகாரங்களைப் பரவலாக்க வேண்டும்’ என்று செங்கோட்டையன் போட்டுக்கொடுத்த ‘ரூட்டை’ கெட்டியாகப் பிடித்துக்கொண்டார் பன்னீர். இப்போது, எடப்பாடி பின்னாலிருந்த சில மூத்த தலைவர்களே பன்னீர் பக்கம் சாய ஆரம்பித்துள்ளனர்” என்றனர் அந்த அமைப்புச் செயலாளர்கள்.

கொரோனாவைக் காரணம் காட்டி உட்கட்சித் தேர்தலை அடுத்த ஆறு மாதங்களுக்குத் தள்ளிப்போட, தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கவும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. டிசம்பர் 1-ம் தேதி, அ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் நடைபெற விருக்கிறது. இந்தக் கூட்டத்தில் 18 பேர் கொண்ட வழிகாட்டுதல்குழுவாக விரிவுபடுத்துவது பற்றி ஆலோசனை நடக்கவிருக்கிறதாம். இதற்கான தீர்மானத்தைக் கொண்டுவர பன்னீர் ‘கேங்’ தீவிரமாகியிருக்கும் நிலையில், அதைத் தடுப்பதற்கான வேலையில் தீவிரமாகியிருக்கிறது எடப்பாடி ‘கேங்.’ 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவிலிருந்த சோழவந்தான் மாணிக்கம், பா.ஜ.க-வில் இணைந்துவிட்டதால், அவர் இடத்தையும் சேர்த்து எட்டு இடங்களுக்கு, தானே ஆட்களைத் தருவதாக அடுத்த வெடியைப் பற்றவைத்திருக்கிறார் பன்னீர். இதுவும் கட்சிக்குள் புகைச்சலை உருவாக்கியிருக்கிறது.

“அ.தி.மு.க-வின் அதிகார மையங்களாக இருந்த எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, தங்கமணி ஆகிய மூவரின் குரல்களும் இந்தக் கூட்டத்தில் கொஞ்சமும் எடுபடவில்லை. தங்களுக்கு எதிராகக் கட்சி சீனியரான செங்கோட்டையனே வெடித்துக் கிளம்புவார் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. செங்கோட்டையனை அவைத்தலைவர் பதவிக்குக் கொண்டுவர வேண்டும் என்கிற பேச்சும் அ.தி.மு.க கூட்டத்தில் எழுந்தது. இதனால், எடப்பாடி தரப்பு கடும் அப்செட்” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். அ.தி.மு.க-வுக்குள் ‘கேங்’ வார் உச்சமடைந்திருக்கிறது. இன்று தடித்த வார்த்தைகளால் அடித்துக்கொண்டவர்கள், நாளை நிஜமாகவே அடித்துக்கொள்ளலாம். ‘அடுத்து நடைபெறவிருக்கிற செயற்குழுக் கூட்டத்திலாவது கட்சியை வலுப்படுத்தும் நல்ல முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்’ என்பது அ.தி.மு.க தொண்டர்களின் விருப்பமும் எதிர்பார்ப்பும்.

“தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்
ஓர் வழி நின்று நேர் வழி சென்றால்
நாளை நமதே...
என்கிற பாடலை ஒலிக்கவிட்டு அடுத்த கூட்டத்தை ஆரம்பிக்கச் சொல்லுங்க” என்கிறார்கள் தொண்டர்கள். சண்டைக் காட்சிகள் மாறி, சென்ட்டிமென்ட் காட்சிகள் அரங்கேறுமா... பார்ப்போம்!