Published:Updated:

“பங்கைப் பிரி!” - அ.தி.மு.க பங்காளிச் சண்டை

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

கட்சியில் அமைப்புரீதியாக 75 மாவட்டக் கழகங்கள் இருக்கின்றன. இவற்றில் கிட்டத்தட்ட 60-க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள் எடப்பாடி ஆதரவு நிலைப்பாட்டில்தான் இருக்கிறார்கள்.

“பங்கைப் பிரி!” - அ.தி.மு.க பங்காளிச் சண்டை

கட்சியில் அமைப்புரீதியாக 75 மாவட்டக் கழகங்கள் இருக்கின்றன. இவற்றில் கிட்டத்தட்ட 60-க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள் எடப்பாடி ஆதரவு நிலைப்பாட்டில்தான் இருக்கிறார்கள்.

Published:Updated:
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

கிராமங்களில் ஊர்த் திருவிழா நடத்தப்படுவதற்கு முன்பாக, ஒரு முக்கியமான உப நிகழ்வாக ஊர்ப் பெரியவர்கள் ஒன்றுகூடி ``திருவிழா முடியுற வரைக்கும் பங்காளிங்களெல்லாம் பழைய சண்டை சச்சரவுகளை மறந்து ஒத்துமையா இருக்கணும்ப்பா’’ எனச் சமாதானம் பேசுவார்கள். அப்படியொரு சமாதானக் கூட்டத்துக்கான ஏற்பாடாகத்தான், ஏப்ரல் 6-ம் தேதி, அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்குக் கழக நிர்வாகிகள் அழைக்கப்பட்டனர். ஆனால், அந்தச் சமாதானக் கூட்டத்திலேயே பங்காளிச் சண்டை பற்றிக்கொண்டது. எடப்பாடி - பன்னீர் தரப்பு மட்டுமல்லாமல், வந்திருந்த முக்கிய நிர்வாகிகள் அனைவருமே ‘பங்கைப் பிரி’ என அதிகாரத்தைப் பங்கிட்டுக்கொள்ள, ஆளுக்கொரு கணக்கோடு முஷ்டியை முறுக்கியதால் அதிரிபுதிரி ஆனது எம்.ஜி.ஆர் மாளிகை!

அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை முதலில் பொதுச்செயலாளருக்கான தேர்தல் நடைபெறும். அதைத் தொடர்ந்து, கிளைக் கழகம் முதல் மாவட்டக் கழகம் வரையில் கீழ்மட்ட நிர்வாகப் பதவிகளுக்கான தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கட்சியின் விதிகள் மாற்றப்பட்டதால் கடந்த 2021, டிசம்பர் 7-ம் தேதி, ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடந்தது. அதில், ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இருவரும் போட்டியின்றித் தேர்வாகினர். அடுத்ததாக, ஏப்ரல் 11 முதல் 21-ம் தேதி வரை பல்வேறு கட்சிப் பொறுப்புகளுக்குத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் `மாவட்டச் செயலாளர் பதவிகளுக்குத் தேர்தல் கண்டிப்பாக நடைபெற வேண்டும்` என பன்னீர் பஞ்சாயத்தைக் கூட்டியிருப்பதால், கழகத்துக்குள் கலகம் மூண்டு எரிகிறது!

மாவட்டச் செயலாளர் தேர்தல்... பர்சன்டேஜ் கேட்கும் பன்னீர்!

ஏப்ரல் 8-ம் தேதி சட்டமன்றம் முடிந்த பிறகு, பன்னீரிடம் உட்கட்சித் தேர்தல் தொடர்பாகத் தீவிரமாக ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள். குறிப்பாக, எடப்பாடியின் ஆதரவாளராக அறியப்பட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டதுதான் பலரது புருவத்தையும் உயர வைத்திருக்கிறது. இது குறித்து, தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஓ.பி.எஸ் ஆதரவு மாவட்டச் செயலாளர் ஒருவரிடம் பேசினோம்.

“பங்கைப் பிரி!” - அ.தி.மு.க பங்காளிச் சண்டை

“கட்சியில் அமைப்புரீதியாக 75 மாவட்டக் கழகங்கள் இருக்கின்றன. இவற்றில் கிட்டத்தட்ட 60-க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள் எடப்பாடி ஆதரவு நிலைப்பாட்டில்தான் இருக்கிறார்கள். ஏப்ரல் 8-ம் தேதி ஆலோசனைக் கூட்டத்தில் இதையெல்லாம் பட்டியலிட்டுப் பேசிய ஆர்.பி.உதயகுமார், `மாவட்டச் செயலாளர் பதவிக்குத் தேர்தல் நடத்தித்தான் நிர்வாகிகளைத் தேர்வுசெய்ய வேண்டும். அப்போதுதான், நமக்கு ஆதரவான நிர்வாகிகளைத் திரட்ட முடியும். தென் மாவட்டங்களில் தற்போது ஒருசிலரைத் தவிர்த்து, பெரும்பாலான மா.செ-க்கள் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், ஒன்றிய, நகரச் செயலாளர்களில் கணிசமானோர் நம் ஆதரவு மனநிலையில் இருக்கிறார்கள். அவர்களை மாவட்டப் பொறுப்புக்குக் கொண்டுவர வேண்டும். ஒருவேளை, தேர்தலுக்கு எடப்பாடி ஒப்புக்கொள்ளாவிட்டால், சரி பாதி நிர்வாகிகளை நாமே நியமித்துக்கொள்ள, அவரிடம் கறாராகப் பேசிவிட வேண்டும்’ என்றார்.

அணிகள் இணைந்ததிலிருந்து முதல்வர் வேட்பாளர் தேர்வு, வழிகாட்டுதல் குழு, எதிர்க்கட்சித் தலைவர் தேர்வு, வேட்பாளர் தேர்வு என எந்த விவகாரத்திலும் பன்னீரின் கை ஓங்கியதே இல்லை. சசிகலாவைப் பயன்படுத்தி அவர் செய்துபார்க்கும் அரசியலும் இனி கட்சிக்குள் எடுபடப்போவதில்லை. இப்போது வாய்த்திருக்கும் இந்த உட்கட்சித் தேர்தல் விவகாரத்திலும் பன்னீர் கோட்டைவிட்டுவிட்டால் கட்சிக்குள் அவருக்கென ஆதரவு நிர்வாகிகளே இல்லாமல் போய்விடுவார்கள். இதையெல்லாம், அந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவருக்கு அடிக்கோடிட்டுக் காட்டினோம். இதைத் தொடர்ந்தே, ‘மாவட்டச் செயலாளர் பொறுப்புக்குத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்’ என பன்னீர் கோரினார். அதற்கு எடப்பாடி தொடக்கத்திலேயே மறுத்துவிட்டார். `சரி... தேர்தல் வேண்டாம். அப்படியானால், பாதி மாவட்டச் செயலாளர்களாக நான் கொடுக்கும் பட்டியலில் இருப்பவர்களை நியமிக்க வேண்டும்’ என்று அடுத்த அஸ்திரத்தை முன்வைத்தார் பன்னீர். அதற்கும் எடப்பாடி எந்த பதிலும் சொல்லவில்லை. சட்டமன்றப் பணிகளை முடித்துவிட்டு, ஏப்ரல் 9-ம் தேதி பெரியகுளத்தில் கட்சி ஆலோசனைக் கூட்டத்தை நடத்திய பன்னீர், அங்கேயும் இந்தப் பாகப்பிரிவினை குறித்து மீண்டும் கலந்தாலோசித்திருக்கிறார். இது ஒருபுறமிருக்க, மண்டலவாரியாக சீனியர்கள் ஒவ்வொருவரும் ஒரு பட்டியலைத் தூக்கிக்கொண்டு வருவதால், உட்கட்சித் தேர்தல் நடத்துவதே ரணகளமாகியிருக்கிறது’’ என்றார் அந்த மாவட்டச் செயலாளர்.

“டபுள் கேம் ஆடுறீங்களா... பங்கைப் பிரிங்க..!” - எடப்பாடியை நெருக்கும் சீனியர்கள்!

அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள பன்னீர் எப்படி போர்க்கொடி உயர்த்துகிறாரோ அதே பாணியில், கட்சியின் சீனியர்களும் ஆளாளுக்குக் கொடிபிடிக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தங்களது மண்டலத்துக்குள் தாங்கள் சொல்பவர்களுக்கே கட்சிப் பதவி கொடுக்க வேண்டும் என கச்சைகட்டுவதால் கழகத்துக்குள் குழப்பம் அதிகரித்திருக்கிறது. சமீபத்தில், தன்னிடம் போனில் பேசிய வட மாவட்ட முன்னாள் அமைச்சர் ஒருவரிடம், ``மாவட்டச் செயலாளர் பொறுப்புக்குத் தேர்தல் வேண்டாம்னு நான் எவ்வளவோ சொல்லியும் பன்னீர் கேட்க மாட்டேங்கிறாரு. நீயே அவர்கிட்ட பேசுப்பா’’ என்றிருக்கிறார் எடப்பாடி. பதிலுக்கு அந்த முன்னாள் அமைச்சர் போனிலேயே எடப்பாடியிடம் அனல் கக்கினாராம்.

அ.தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர் ஒருவரிடம் அப்படி என்ன பேசினார் என விசாரித்தோம். ``அந்த வடமாவட்ட முன்னாள் அமைச்சர் அனுப்பிய சிபாரிசுக் கடிதங்களையெல்லாம் தலைமைக் கழகம் ஓரத்தில் தூக்கிவைத்ததை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மொத்தக் கோபத்தையும் எடப்பாடி மீது காட்டிவிட்டார். `என்ன விளையாடுறீங்களா... நீங்க ரெண்டு பேரும் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் மாதிரி மக்கள் செல்வாக்குள்ள தலைவர்கள் கிடையாது. கட்சியை வழிநடத்துறதுக்காக உங்களை நாங்கதான் அமர்த்தியிருக்கோம். எங்ககிட்டயே டபுள் கேம் ஆடுறீங்களா? பன்னீரோட சண்டை போடுறதா வெளியே காமிச்சுக்கிட்டு உங்க காரியத்தை நீங்க சாதிச்சுக்கிட்டீங்க. ஒருங்கிணைப்பாளர் & இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலைப் போட்டியே இல்லாம நடத்தி, நீங்க ரெண்டு பேருமே பதவிக்கு வந்துட்டீங்க. இன்னும் மூணு வருஷத்துக்கு உங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனா, உங்களுக்குச் சாமரம் வீசிய நாங்கல்லாம் `தேர்தலைச் சந்திச்சுதான் கட்சிப் பதவிக்கு வரணும்’னு சொல்றது எந்தவிதத்துல நியாயம்... பன்னீர்கிட்ட நான் ஏன் பேசணும்? நீங்களே பேசி இந்த விவகாரத்தை சுமுகமா முடிச்சு எங்க பங்கைப் பிரிச்சுத் தர்ற வழியைப் பாருங்க’ என்று கடுகடுத்திருக்கிறார் அந்த வடமாவட்ட முன்னாள் அமைச்சர். இது அவர் ஒருவரின் மனநிலை மட்டுமில்லை. கட்சி சீனியர்கள் அனைவரின் மனநிலையும் அதுதான்.

“பங்கைப் பிரி!” - அ.தி.மு.க பங்காளிச் சண்டை

துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கமும் எடப்பாடியிடம் ஏப்ரல் 6-ம் தேதி தலைமைக் கழகத்தில் நடந்த கூட்டம் முடியும் தறுவாயில் சில வார்த்தைகள் பேசியிருக்கிறார். `என்னைக் கட்சியிலிருந்தே காலி பண்ணச் சிலர் முயற்சி பண்ணாங்க. ஒரத்தநாட்டில் நான் ஜெயிச்சுடக் கூடாதுனு அ.ம.மு.க வேட்பாளருக்கு 20 கோடி ரூபாய் பணம் கொங்கு மண்டலத்துலருந்துதான் வந்தது. அதைக் கொடுத்தது யாருன்னு உங்களுக்கும் தெரியும். நான் பிரச்னையைப் பெருசு பண்ண விரும்பலை. ஆனால், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய நான்கு மாவட்டங்களிலும் நான் சொல்பவர்களுக்கே கட்சிப் பதவியைக் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் எனக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும்’ என எடப்பாடியிடமே பங்கைக் கேட்டிருக்கிறார் வைத்தி. இதே பாணியிலான பாகப்பிரிவினையைத்தான், கொங்கு மண்டலத்தில் வேலுமணியும் தங்கமணியும், வட மாவட்டங்களில் சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி, கே.சி.வீரமணி ஆகியோரும், தென் மாவட்டங்களில் தளவாய் சுந்தரமும், சென்னையில் ஜெயக்குமாரும் கேட்கிறார்கள்” என்றார்.

விசுவாசக் குழப்பமும்... எடப்பாடியின் வியூகமும்!

இந்தக் களேபரங்களுக்கு இடையே ‘எடப்பாடியின் மூவ் என்னவாக இருக்கிறது?’ என்பதை அறிய அவர் தரப்பில் விசாரித்தோம்... அவருக்கு நெருக்கமான இரண்டாம் கட்டத் தலைவர் ஒருவர், ``கட்சியில் தற்போது இருக்கும் மாவட்டச் செயலாளர்களிடம் நீங்கள் பன்னீர் பக்கமா, எடப்பாடி பக்கமா என்று கேட்டால், பெரும்பாலானவர்கள் யோசிக்காமல் ‘எடப்பாடி பக்கம்’ என்று சொல்லிவிடுவார்கள். ஆனால், குறிப்பிட்ட ஒரு மண்டலத்தைச் சொல்லி, அந்த மண்டலத்தின் சீனியர் தலைவர் பக்கமா அல்லது எடப்பாடி பக்கமா என்று கேட்டால், பெரும்பான்மையானவர்கள் அந்த மண்டலத்தின் ‘சீனியர் தலைவரும் முக்கியம்.. எடப்பாடியும் முக்கியம்’ என்று குழம்புவார்கள். இந்த விசுவாசக் குழப்பத்தில்தான் இப்போது பல முன்னாள் அமைச்சர்களும் மீன்பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த டபுள் கேம் அரசியல்தான் எடப்பாடிக்குத் தொடர் அச்சுறுத்தலாகியுள்ளது.

பன்னீர் எப்படி சசிகலாவை முன்னிறுத்தி அரசியலில் விளையாடுகிறாரோ அதேபோல, அவ்வப்போது பன்னீர் பக்கம் சாய்வதுபோலச் சில நிர்வாகிகள் எடப்பாடியிடம் போக்குக் காட்டுகிறார்கள். எடப்பாடியின் ஆதரவாளராக வெளிக்காட்டிக்கொள்ளும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மறுபுறம் பன்னீரைச் சந்தித்து தனியே ஆலோசனை நடத்துகிறார். ஆர்.பி.உதயகுமார் மணிக்கொரு முறை அணி தாவுகிறார். சி.வி.சண்முகம் தன் சகோதரர் ராதாகிருஷ்ணன் மூலமாக, பன்னீருடன் நெருக்கத்தை வளர்த்துக்கொள்கிறார். அதேபோல, வேலுமணி, வீரமணி ஆகியோரும் பன்னீருடன் அளவளாவுகிறார்கள். இவர்களுடன் கே.பி.அன்பழகன், எம்.சி.சம்பத், வெல்லமண்டி நடராஜன், ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன் என எவருக்குமே ஒற்றைத் தலைமை வர வேண்டும் என்பதில் விருப்பமில்லை. இரட்டைத் தலைமை இருந்தால்தான் கட்சிக்குள் தாங்கள் காலா காலத்துக்கும் ஆதிக்கம் செலுத்த முடியும் என்பதில் தீர்மானமாக இருக்கிறார்கள். காலப்போக்கில், இதுவே எடப்பாடியின் அரசியலுக்கு ஆபத்தாக வந்துவிடும். அதனால்தான் இந்த உட்கட்சித் தேர்தல் வாய்ப்பைப் பயன்படுத்தி, தனக்கான அணியை வலுப்படுத்திக்கொள்வதிலும் ஒற்றைத் தலைமையாகத் தன்னை உருவாக்கிக்கொள்வதிலும் தீவிரம் காட்டுகிறார் எடப்பாடி. பன்னீர் கேட்பதுபோல மாவட்டச் செயலாளர் பொறுப்புக்குத் தேர்தல் நடத்தவோ, அல்லது பதவிகளைப் பங்குபோட்டுக்கொள்ளவோ எடப்பாடி தயாராக இல்லை.

தற்போது பொதுக்குழுவில் அவருக்கு இருக்கும் 60 சதவிகித ஆதரவு வட்டத்தை அதிகப்படுத்திக்கொண்டு, கழக அமைப்புகள் மூலமாகவே ஒற்றைத் தலைமை கோஷத்தை உருவாக்கிவிட அவர் திட்டமிட்டிருக்கிறார். இந்த அமைப்புகள் மூலமாக இதற்கான தீர்மானங்களைக் கொண்டுவரவும் தீர்மானித்திருக்கிறார். அ.தி.மு.க-வுக்குள் ஒற்றைத் தலைமைதான் எடப்பாடியின் அதிகாரத்தை நிலைநிறுத்தும். இல்லையென்றால் ஒவ்வொரு முறை கட்சியில் வேட்பாளர் தேர்வு, முதல்வர் வேட்பாளர் பஞ்சாயத்துகள் தலைதூக்கும்போதெல்லாம் ‘ஒரு முடிவே இல்லாமல்’ எடப்பாடி அதற்கான விலையைக் கொடுக்கவேண்டியிருக்கும். இதற்கு அவர் இனி தயாராக இல்லை” என்றார்.

வைத்திலிங்கம், சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, ஆ.பி.உதயகுமார்
வைத்திலிங்கம், சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, ஆ.பி.உதயகுமார்

லெட்டர் பேடும் போச்சு!

இந்த பவர் பாலிடிக்ஸில் சசிகலா பெயரைப் பயன்படுத்தி, பன்னீர், தேனி சையது கான், செல்லூர் ராஜூ, வைத்திலிங்கம் ஆகியோர் கட்சிக்குள் அவ்வப்போது சலசலப்பை ஏற்படுத்தி வந்தார்கள். அதற்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம். பொதுச்செயலாளர் பதவி குறித்த வழக்கில் சசிகலாவுக்கு எதிராகத் தீர்ப்பு வந்திருப்பதால், இனி அ.தி.மு.க கொடியையோ, லெட்டர் பேடையோ அவரால் பயன்படுத்த முடியாது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டுக்குச் சென்றாலும், தீர்ப்பு வரும்வரை சென்னை உரிமையியல் நீதிமன்றம் அளித்த தீர்ப்புதான் நடைமுறையில் இருக்கும். இதனால், `அ.தி.மு.க-வைக் கைப்பற்றியே தீருவேன்’ என்று சசிகலா ஏற்ற சூளுரை இனி வேலைக்கு ஆகாது என்கிறார்கள் அ.ம.மு.க நிர்வாகிகள்.

``இந்தத் தீர்ப்பு வெளிவந்தபோது முசிறி அருகே பெரமூர் கிராமத்தில் நீர்மோர்ப் பந்தலை திறந்துவைத்துக்கொண்டிருந்தார் சசிகலா. தீர்ப்பு குறித்து அவரிடம் சொல்லப்பட்டபோது, எந்த ரியாக்‌ஷனையும் அவர் காட்டவில்லை. ஆனால், அவருடன் வந்தவர்கள்தான் கட்சிக்கொடியைத் தூக்கிப் பிடிப்பதா, வேண்டாமா என்கிற குழப்பத்தில் திணறினார்கள். சசிகலா பெயரில் வெளிவந்த அறிக்கைகளெல்லாம் `அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர்’ என்கிற பெயரில்தான் வெளிவந்தன. இனி அதற்கும் வாய்ப்பில்லை என்பதால் லெட்டர்பேடு அரசியல்கூட செய்ய முடியாத நிலையில் இருக்கிறார் சசிகலா. இனி தினகரனை அரசியல்ரீதியாக வலுப்படுத்தினால் மட்டுமே சசிகலாவுக்கு அரசியல் எதிர்காலம் உண்டு’’ என்றனர் அ.ம.மு.க நிர்வாகிகள்.

அதிகாரத்தைப் பங்கு போட்டுக்கொள்வதற்காக, அ.தி.மு.க-வுக்குள் நடக்கும் இந்தப் பங்காளிச் சண்டை எப்போதுமில்லாத அளவுக்குத் தீவிரமாகியிருக்கிறது. அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள பன்னீரும், ஒற்றைத் தலைமையாக நிலைக்க எடப்பாடியும் உக்கிரமாகக் காய்நகர்த்துகிறார்கள். இவர்களுக்கிடையே குறுநில மன்னர்களாக மாறியுள்ள முன்னாள் அமைச்சர்கள் தங்கள் பங்குக்காக குஸ்தியில் இறங்க, முக்கோண மோதலில் அனலடிக்கிறது அ.தி.மு.க கூடாரம்.

“பங்கைப் பிரி!” - அ.தி.மு.க பங்காளிச் சண்டை

உள்ளே கசப்பு... வெளியே இனிப்பு!

பொதுச்செயலாளர் விவகாரத்தில் தீர்ப்பு வந்த 11.04.2022 அன்று மாலையில், எம்.ஜி.ஆர் மாளிகையில் கூடிய தலைவர்கள், தீர்ப்பைக் கொண்டாடும்விதமாக இனிப்புகளைப் பரிமாறிக்கொண்டு பட்டாசுகளை வெடித்தார்கள். ஆனால், உள்ளுக்குள் கசப்பும், வெளியில் இனிப்புமாக ஒரு சம்பிரதாயத்துக்குக் கூடிக் கலைந்ததுபோலவே இருந்தது அந்நிகழ்வு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism