Published:Updated:

“பாத்துக்கலாம்!”

அ.தி.மு.க
பிரீமியம் ஸ்டோரி
அ.தி.மு.க

ஒற்றைத் தலைமை என்பது அம்மாவுக்குச் செய்யும் துரோகம். அவர் மட்டுமே அ.தி.மு.க-வின் நிரந்தரப் பொதுச்செயலாளர்.

“பாத்துக்கலாம்!”

ஒற்றைத் தலைமை என்பது அம்மாவுக்குச் செய்யும் துரோகம். அவர் மட்டுமே அ.தி.மு.க-வின் நிரந்தரப் பொதுச்செயலாளர்.

Published:Updated:
அ.தி.மு.க
பிரீமியம் ஸ்டோரி
அ.தி.மு.க

சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். எந்தப் பக்கமும் நகர முடியாமல், சூழல் முற்றி நெருக்கடியில் நிற்கும் கமல்ஹாசன், “இந்த மாதிரி நேரத்துல வீரர்கள்லாம் அடிக்கடி சொல்ற வார்த்தை என்ன தெரியுமா... பாத்துக்கலாம்” என ‘பன்ச்’ வசனம் பேசுவார். கிட்டத்தட்ட ‘ஒற்றைத் தலைமை’ விவகாரத்தில் அ.தி.மு.க தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் அதே க்ளைமாக்ஸ் பதற்றத்தில்தான் இருக்கிறார்கள். ‘இவ்வளவு செக் பாயின்ட் இருக்கே... என்ன பண்றது?’ எனக் கேட்கும் தனது ஆதரவாளர்களிடம் ‘விக்ரம்’ கமல்போல இருவருமே “பாத்துக்கலாம்” என ‘அசால்ட்’ முகம் காட்டுவதால் கழகத்தில் கனல் பறக்கிறது. அ.தி.மு.க-வின் ஒற்றைத் தலைமையாக முடிசூடிக்கொள்ள எடப்பாடியும், அதைத் தடுத்து தற்போதிருக்கும் இரட்டைத் தலைமையே தொடர பன்னீரும் கடும் பகீரதப் பிரயத்தனம் செய்கிறார்கள். இருவருக்கும் இடையேயான இந்த யுத்தத்தால், பொன்விழா காணும் கழகத்துக்குள் புழுதி பறக்கிறது!

ஜூன் 14-ம் தேதி நடந்த அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில்தான், ஒற்றைத் தலைமை விவாதம் வெடித்து விவகாரமானது. கூட்டத்தின் தொடக்கத்தில், பொதுக்குழுவில் நிறைவேற்றப்படவேண்டிய தீர்மானங்கள், அடையாள அட்டையுடன் வருபவர்களை மட்டுமே பொதுக்குழுவில் அனுமதிப்பது, மாவட்டம்தோறும் தி.மு.க-வுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டம் முடியும் தறுவாயில்தான், திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் மாதவரம் மூர்த்தி எழுந்து ‘ஒற்றைத் தலைமை’ விவகாரத்துக்குத் திரி கொளுத்தியிருக்கிறார். அவரைத் தொடர்ந்து, சி.வி.சண்முகம், பரஞ்சோதி, பி.குமார், குமரகுரு என 30-க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள் ‘ஒற்றைத் தலைமை’ குறித்துப் பேசியதால், மாவட்டச் செயலாளர்கள் கூட்டமே அதிரிபுதிரியானது.

“பாத்துக்கலாம்!”

ஒற்றைத் தலைமை கோஷம்... கலகலத்த மா.செ கூட்டம்!

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட மாவட்டச் செயலாளர்கள் சிலரிடம் பேசினோம். “ஒற்றைத் தலைமை வேண்டும் என மாதவரம் மூர்த்தி திடீரென முடிவெடுத்து கூட்டத்தில் பேசவில்லை. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சென்னையில் வைத்து எடப்பாடியை மூன்று முறை மூர்த்தி சந்தித்திருந்தார். அப்போதே, ‘ஒற்றைத் தலைமை’க்கான ஸ்கிரிப்ட் ரெடியாகிவிட்டது. அதேபோல, திருச்சி கண்டன ஆர்ப்பாட்டத்துக்குச் சென்ற எடப்பாடி, அந்த மாவட்ட அ.தி.மு.க சீனியர்கள் வெல்லமண்டி நடராஜன், பி.குமார், பரஞ்சோதி, சிவபதி ஆகியோரிடம் இரண்டு மணி நேரம் ஆலோசனை நடத்தியிருக்கிறார். இந்த நிகழ்வுகளின் தொடர்ச்சியாகத்தான், அவர்கள் ‘ஒற்றைத் தலைமை’ கோஷத்தைக் கூட்டத்தில் முன்வைத்தனர்.

மூர்த்தியைத் தொடர்ந்து பேசிய சி.வி.சண்முகம், ‘சட்டமன்றத்துலயும், வாக்கு சதவிகித அடிப்படையிலயும் நாமதான் பிரதான எதிர்க்கட்சி. ஆனா, போற வர்ற கட்சியெல்லாம் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்துக்குப் போட்டி போடுது. இதையெல்லாம் சமாளிக்க, ஒற்றைத் தலைமையாக ஒருவர் வேண்டும். அம்மா மறைவுக்குப் பிறகு நாம உருவாக்கிக்கிட்டதுதான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளெல்லாம். அதைக் கலைச்சுட்டு, பழையபடி ஒற்றைத் தலைமையாகப் பொதுச்செயலாளர் பதவியைக் கொண்டுவரணும்’ என்றார். இதை அவர் அருகில் அமர்ந்திருந்த ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் ஆமோதித்தனர்.

கட்சி சீனியரான திண்டுக்கல் சீனிவாசன் எழுந்து, ‘ஒற்றைத் தலைமை வேணும்கறதை நானும் ஆமோதிக்கிறேன். கட்சிமீதும், நம்ம ஆட்சிமீதும் கற்கள் வீசப்பட்டபோது, அதைத் திறம்படச் சமாளித்தவர் எடப்பாடி. குடும்ப அரசியலுக்கு முக்கியத்துவம் தராதவர். அவரைப்போல ஒரு தலைமை வேண்டுமென்பதே என் விருப்பம்’ என்று எடப்பாடிக்கு ஆதரவாக ‘கோல்’ போட்டுவிட்டு அமர, கூட்டம் சூடுபிடித்தது. அதுவரை அமைதியாக இருந்த துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், ‘இப்ப எதுக்கு வீண் விவாதம்... ஒற்றைத் தலைமைக்கான தேவை எங்கிருந்து வந்தது... இரட்டைத் தலைமையில் கட்சி நன்றாகத்தான் செயல்படுகிறது. தேவையில்லாமல் பேசி வம்பை வளர்க்காதீர்கள்’ என்று கண்டித்தார். ஆனாலும், சில மாவட்டச் செயலாளர்கள் அமைதியாகவில்லை. நடப்பதையெல்லாம் பன்னீரும் எடப்பாடியும் அமைதியாக வேடிக்கை பார்க்க, கே.பி.முனுசாமி, ‘இருங்கப்பா பேசிக்கலாம்’ என்று சத்தத்தைக் குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டாரே ஒழிய, தன்னுடைய கருத்தாக எதையும் அவர் பேசவில்லை. ஆனால், எடப்பாடியின் சேலம் வீட்டுக்கு ரகசியமாகச் சென்று ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

“பாத்துக்கலாம்!”

“அவர் ஏன் விட்டுத்தரணும்?” - சூடுபறந்த விவாதம்!

உச்சபட்சமாக, திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எழுந்து, ‘எதுக்கு வளவளனு பேசிக்கிட்டு... எடப்பாடி பழனிசாமிதான் ஒற்றைத் தலைமையாக அ.தி.மு.க-வுக்கு வரணும். அவரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தித்தான் 33 சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்கிறோம். தலைவர் பதவியேற்க அவர்தான் தகுதியானவர்’ என்று படபடவென வெடித்தவர், பன்னீரைப் பார்த்து, ‘நீங்க விட்டுக்கொடுத்தா என்னண்ணே..?’ என்றார். இதை, பன்னீர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பன்னீர் தடுமாறிய வேளையில், தடாலென எழுந்த தென்சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டச் செயலாளர் வேளச்சேரி அசோக், ‘கட்சி நலனுக்காக முதல்வர் பதவி, எதிர்க்கட்சித் தலைவர் பதவினு எல்லாத்தையும் விட்டுக்கொடுத்துட்டார். இனி இருக்குறது இரட்டை இலைக்குக் கையெழுத்திடும் பதவி மட்டும்தான். இப்ப அதையும் கேட்குறீங்களே நியாயமா... அம்மாவால் அடையாளம் காட்டப்பட்டவர் அவர். அவர் ஏன் விட்டுத்தரணும்?’ என்று ஆதங்கப்பட்டார். பன்னீருக்கு ஆதரவாக நத்தம் விசுவநாதன், ஜே.சி.டி.பிரபாகரன், தச்சை கணேசராஜா ஆகியோர் வாதாடினர். செங்கோட்டையன் பேசும்போது, ‘இரட்டைத் தலைமை நல்லாத்தானே செயல்படுது... அதை ஏன் மாத்தணும்னு பேசுறீங்க?’ என்றார். மதியம் 3:15 வரை கூட்டம் நடந்தும், எந்த முடிவும் எட்டப்படவில்லை. முடிவாக, ஜூன் 23-ம் தேதி நடைபெறவிருக்கும் பொதுக்குழுவில், ஒற்றைத் தலைமை குறித்து விவாதம் நடத்தி முடிவெடுத்துக்கொள்வதென தீர்மானிக்கப்பட்டு, மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கலைந்தது” என்றனர்.

கடந்த டிசம்பர் 2021-ல் நடந்த செயற்குழுவில், ‘கழகத்தைத் தலைமையேற்று நடத்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளே நிரந்தரமானவை. இதை யாராலும் மாற்ற முடியாது’ எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்துக்குப் பொதுக்குழுவில் ஒப்புதல் பெற வேண்டும். ஒப்புதல் அளிக்கப்படும் பட்சத்தில், ‘ஒற்றைத் தலைமை’ என்கிற கேள்வியே எழ முடியாது. அதற்கு முன்னதாகவே ஒற்றைத் தலைமை விவாதத்தை எழுப்பி, தன்னைக் கட்சியின் பொதுச்செயலாளராக அமர்த்திக்கொள்ள முனைகிறார் எடப்பாடி.

மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முடிந்தவுடன் விருட்டென முதல் ஆளாக வீட்டுக்குப் புறப்பட்ட பன்னீர், தன்னுடைய வீட்டில் ஆதரவாளர்கள் கூட்டத்தை நடத்தினார். இரவு 11 மணி வரை நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், வைத்திலிங்கம், தச்சை கணேசராஜா, ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது, ‘ஒற்றைத் தலைமை தீர்மானத்தைப் பொதுக்குழுவில் கொண்டுவரவிடாமல் தடுப்பது... தடுக்க முடியவில்லையென்றால், பொதுக்குழுவையே நடத்தவிடாமல் முடக்குவது’ எனப் பேசப்பட்டிருக்கிறது. ஜூன் 15-ம் தேதி, இரு தலைவர்களின் கிரீன்வேஸ் சாலை இல்லங் களிலும் ஆலோனைக் கூட்டங்கள் தடதடத்தன.

“பாத்துக்கலாம்..!” - முறுக்கிக்கொண்ட தலைமைகள்

நம்மிடம் பேசிய முன்னாள் அ.தி.மு.க அமைச்சர்கள் சிலர், “ஜூன் 15-ம் தேதி சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வந்த திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமாரிடம், ‘பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை குறித்து யாரும் பேசக் கூடாது என்று அறிக்கைவிடச் சொல்லுங்கள். பிறகு பேசலாம்’ என கட் அண்ட் ரைட்டாக பன்னீர் சொல்லிவிட்டார். அதற்கு எடப்பாடி உடன்படவில்லை. தன்னிடம் ஆலோசனை நடத்தவந்த சி.வி.சண்முகம், தங்கமணி, வேலுமணி, தளவாய் சுந்தரம், எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம், ‘ஒரு சண்டையை ஆரம்பிச்சுட்டோம். முடிவு தெரியாம போகக் கூடாது. அவைத்தலைவர், வழிகாட்டுதல் குழுத் தலைவர்னு எந்தப் பதவியை வேண்டுமானாலும் அவர் எடுத்துக்கட்டும். ஆனா, கட்சியை என்கிட்ட கொடுக்கணும். செலவு செஞ்சதெல்லாம் நான். லாபத்தில மட்டும் அவருக்குப் பங்கு கொடுக்கணுமா... பொதுக்குழுவுல ‘ஒற்றைத் தலைமை’ தீர்மானம் கொண்டுவந்தால், நாமதான் ஜெயிப்போம். யார் பக்கம் அதிக நிர்வாகிகள் இருக்காங்கனு அவருக்கே தெரியும். பாத்துக்கலாம்...’ என்று பன்னீருக்கு ‘டெட் லைன்’ கொடுத்துவிட்டு சேலத்துக்குச் சென்றுவிட்டார்.

இதே மனநிலையில்தான் பன்னீரும் இருக்கிறார். ஒன்றிய, மாவட்ட அளவிலான நிர்வாகிகளில் எடப்பாடிக்குத்தான் ஆதரவு அதிகம். இந்தப் பதவிகளுக்கு நடந்த தேர்தலில், பலரும் விருப்பமனு அளித்திருந்தனர். ஆனால், பழைய நிர்வாகிகளே பதவிகளில் தொடர தலைமை அனுமதித்தது. இதில், களம் காண புறப்பட்ட பல சீனியர்களுக்கு வருத்தம். இந்த வருத்தத்தைத் தனக்கு ஆதரவாக மாற்றிக்கொள்ளத் தீர்மானித்திருக்கும் பன்னீர் தரப்பு, ‘நியாயமாக ஒன்றிய, மாவட்டத் தேர்தல்கள் நடைபெறவில்லை. இந்தச் சூழலில், புதிதாகத் தேர்வாகி யிருப்பவர்களுக்கு அனுமதி வழங்க பொதுக்குழு கூட்டுகிறார்கள். இந்தப் பொதுக்குழு கூட்டுவதற்குத் தடைவிதிக்க வேண்டும்’ என்று பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை அணுக ஆலோசனை வழங்கியிருக்கிறது. நிலைமை கைமீறினால், வழக்குகள் பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களில் தொடுக்கப்படலாம். ஆர்.காமராஜ், தூத்துக்குடி சண்முகநாதன், ராஜேந்திர பாலாஜி என சீனியர் புள்ளிகளையும் தங்களுக்கு ஆதரவாகத் திரட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். தனக்கு நெருக்கமான முன்னாள் அமைச்சர் ஒருவரிடம், ‘இந்தக் கட்சி என் கையைவிட்டுப் போகாது. என்ன வேணா நடக்கட்டும். பாத்துக்கலாம்...’ என்று திடமாகச் சொல்லியிருக்கிறார் பன்னீர்.

2017-ல் கட்சி இரண்டாகப் பிளவுபட்டு பிறகு ஒன்றிணைந்தபோது, ஓ.பி.எஸ்., மதுசூதனன் தலைமையிலான ‘புரட்சித்தலைவி அம்மா அணி’க்குத்தான் இரட்டை இலைச் சின்னத்தைத் தேர்தல் ஆணையம் வழங்கியது. மதுசூதனன் மறைந்துவிட்ட நிலையில், பன்னீர்தான் இரட்டை இலைக்கு உரிமையாளர். கட்சியில், பன்னீருக்கென இருப்பது ‘பி ஃபார்ம்’-ல் கையெழுத்திடும் அதிகாரம் மட்டும்தான். அதையே விட்டுக்கொடுத்துவிட்டால், அவர் கார்கூடத் தலைமைக் கழகத்துக்குள் நிற்க அனுமதிக்க மாட்டார்கள். தான் மொத்தமாக ஓரங்கட்டப்படுவோம் என்பது பன்னீருக்கு நன்றாகத் தெரியும். இந்த ‘ஒற்றைத் தலைமை’ மனத்தாங்கல் அதிகரித்து, ஒருவேளை கட்சியிலிருந்து பன்னீர் வெளியேறினால், இரட்டை இலைச் சின்னம் முடக்கப்படலாம். இது எடப்பாடிக்கும் லாபமல்ல.

ஜூன் 16-ம் தேதி, தீர்மானக்குழுக் கூட்டம் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், பொன்னையன், செம்மலை, வளர்மதி உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு பன்னீர் வருவதாகத் தகவல் தெரிந்தவுடன் அவசர அவசரமாக ஜெயக்குமார், சி.வி.சண்மும், வளர்மதி ஆகியோர் அங்கிருந்து கிளம்பிவிட்டனர். கூட்டம் முடிந்து வந்த பொன்னையன், ‘ஒற்றைத் தலைமை குறித்து நாங்கள் எதுவும் பேசவில்லை. திட்டமிட்டபடி பொதுக்குழு நடக்கும்’ என்று விளக்கமளித்தார். இதற்கிடையே, கட்சி உடைந்துவிடக் கூடாது என்பதில் தீவிரமாக இருக்கும் சில தலைவர்கள், இரு தரப்பையும் சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். “பொதுக்குழு நடந்து, ஒற்றைத் தலைமைக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டால், பிறகு பன்னீர் என்ன செய்தாலும் அதை மாற்ற முடியாது. ஏனென்றால், பொதுக்குழுவைக் கூட்டுவதற்கும், சிறப்பு அழைப்பாளர்களை அழைக்கக் கூடாது என்பதற்கும் பன்னீர் ஒப்புதல் அளித்திருக்கிறார். இதனால்தான், வேறு வழியில்லாமல் பொதுக்குழு நடத்த முட்டுக்கட்டை போடப் பார்க்கிறது பன்னீர் தரப்பு. கட்சியின் நலன் கருதி, ‘செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைப் பொதுக்குழுவில் சமர்ப்பிக்க வேண்டாம். அதேபோல, ஒற்றைத் தலைமை தீர்மானத்தையும் முன்மொழிய வேண்டாம். இது இருவருக்குமே லாபம்’ எனப் பிரச்னையைச் சுமுகமாக முடிக்க சீனியர்கள் சிலர் ஆலோசனை வழங்கியிருக்கிறார்கள். இனி முடிவெடுக்க வேண்டியது கட்சித் தலைமைகள்தான்” என்றார்கள்.

இந்தக் களேபரங்களுக்கிடையே ஜூன் 16-ம் தேதி இரவு, செய்தியாளர்களைச் சந்தித்த பன்னீர், “ஒற்றைத் தலைமை என்பது அம்மாவுக்குச் செய்யும் துரோகம். அவர் மட்டுமே அ.தி.மு.க-வின் நிரந்தரப் பொதுச்செயலாளர். தேவையற்ற இப்படியான விவாதங்களால் தொண்டர்களைச் சஞ்சலப்படுத்தக் கூடாது. இப்போது நடக்கும் நிகழ்வுகள் எனக்கு மிகப்பெரிய வருத்தத்தைத் தருகின்றன. ஒற்றைத் தலைமை குறித்து நானும் எடப்பாடியும் இதுவரை பேசிக்கொண்டதில்லை. தற்போதைய பிரச்னை குறித்து அவருடன் பேச நான் தயார். இந்தப் பிரச்னையைக் கிளப்பியவர்களைக் கண்டிக்க வேண்டும். அ.தி.மு.க-விலிருந்து என்னை ஒருபோதும் ஓரங்கட்ட முடியாது. 14 பேர் கொண்ட உயர்மட்ட ஆலோசனைக்குழு அமைத்து, இந்தப் பிரச்னைகள் தொடர்பாக விவாதித்து, முடிவெடுக்கப்பட்டால் அதற்கு நான் கட்டுப்படுவேன்” என்றார்.

“பாத்துக்கலாம்!”

இதுவரை அமைதியாக இருந்த பன்னீர், திடீரென மௌனம் கலைத்திருக்கிறார். இந்த விவகாரத்தில் அவருக்கு நெருக்கடி முற்றியிருப்பது, இருபது நிமிடங்களுக்கும் மேலாக அவர் அளித்த பதிலில் பிரதிபலித்தது. ஒரு பிரச்னையும் இல்லை என்று பேசத் தொடங்கியவர், முழுக்க பிரச்னைகளை மட்டுமே பேசினார். ஆனாலும், கடைசிவரை சமாதானத்தை நோக்கியே அவரது வார்த்தைகள் இருந்தன.

‘ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, இதைவிட உஷ்ணமான காட்சிகளெல்லாம் அ.தி.மு.க-வில் அரங்கேறியிருக்கின்றன. ஆனால், இம்முறை நடப்பது கட்சியின் உச்ச அதிகாரப் பதவிக்கான யுத்தம். இதில் விட்டுக்கொடுக்க பன்னீர், எடப்பாடி இருவருமே தயாராக இல்லை. பொதுக்குழு நடக்கவிருக்கும் 23-ம் தேதி வரையிலான காலத்தில் முன்னெடுக்கப்படும் சமாதானப் பேச்சுவார்த்தைகளால் கொஞ்சம் உஷ்ணம் குறையலாம்; சில காட்சிகள் மாறலாம். ஆனால், ஒற்றைத் தலைமை எனக் கொளுத்தப்பட்ட சர்ச்சை நெருப்பை அவ்வளவு சீக்கிரத்தில் அணைக்க முடியாது. பொதுக்குழுவில் அந்தத் தீ எழுந்தால் அதை மிகச் சாதுர்யமாக எடப்பாடி பயன்படுத்திவிடுவார் என்பதுதான் யதார்த்த நிலையாக இருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism