Published:Updated:

டெட்லைன்... அட்வான்ஸ்... டீலிங்... ஒற்றைத் தலைவலி!

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

ஒற்றைத் தலைமை விவகாரம் முற்றுவது தெரிந்தவுடன், மாவட்டச் செயலாளர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாகப் பேசினார் எடப்பாடியின் வலதுகரமான சேலம் இளங்கோவன்.

டெட்லைன்... அட்வான்ஸ்... டீலிங்... ஒற்றைத் தலைவலி!

ஒற்றைத் தலைமை விவகாரம் முற்றுவது தெரிந்தவுடன், மாவட்டச் செயலாளர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாகப் பேசினார் எடப்பாடியின் வலதுகரமான சேலம் இளங்கோவன்.

Published:Updated:
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி
டெட்லைன்... அட்வான்ஸ்... டீலிங்... ஒற்றைத் தலைவலி!

அ.தி.மு.க-வுக்குள் ஒற்றைத் தலைமை விவகாரம் கிளம்பி ஒரு வாரமாகச் சுற்றிச் சுழன்றடிக்கிறது. அசாதாரண சூழலைக் காரணம் காட்டி, பொதுக்குழுவையே தள்ளிவைக்க வேண்டுமெனக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கடிதம் எழுதும் அளவுக்கு நிலைமை முற்றியிருக்கிறது. ‘பொதுக்குழுவில் கலவரம் ஏற்பட வாய்ப்பிருப்பதால், பாதுகாப்பு தர வேண்டும்’ என அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்தி தமிழ்நாடு டி.ஜி.பி-யிடம் மனு அளித்திருக்கிறார். இந்தச் சூழலில், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில், ஒற்றைத் தலைமை விவாதத்தை விட்டுத்தரத் தயாராக இல்லை. பன்னீரைக் கட்சிப் பொறுப்பிலிருந்து விலக்குவதில் உறுதியாக நிற்கிறது எடப்பாடி தரப்பு. அ.தி.மு.க-வின் கடைக்கோடி தொண்டர்கள் வரை பற்றிக்கொண்டிருக்கும் இந்த ‘ஒற்றைத் தலைவலி’, எடப்பாடி, பன்னீர் இருவரின் பிடிவாதத்தால் கூடிக்கொண்டே போகிறது!

“தோத்துப் போறதுக்கு ஏன் மல்லுக்கட்டணும்?”

ஒற்றைத் தலைமை விவகாரத்தில், பன்னீர், எடப்பாடி இருவருமே ஆளுக்காள் ‘டெட்லைன்’ கொடுத்தது கட்சியையே களேபரமாக்கிவிட்டது. ஜூன் 18-ம் தேதி தன்னிடம் சமாதானத் தூதுக்கு வந்திருந்த கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரையிடம், “அவருக்காக வக்காலத்து வாங்கிட்டு வராதீங்கண்ணே. கட்சிக்காக அவர் மட்டும்தான் உழைச்சாரா... \64 எம்.எல்.ஏ-க்களும் அவர் முகம் காட்டுனதுனாலதான் ஜெயிச்சாங்களா... பணம் மட்டுமே எல்லா இடத்துலயும் பேசிடாது” என்று சூடாகவே பேசி, இரட்டைத் தலைமை நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்பதை உறுதியாகச் சொல்லியிருக்கிறார் பன்னீர். இதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சமாதானம் பேச பன்னீர் வீட்டுக்கு வந்தார். அவரிடமும் பிடியை விட்டுக் கொடுக்காமல் பேசியிருக்கிறார் பன்னீர்.

அப்போது பேசப்பட்டவை குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க-வின் மாவட்டச் செயலாளர்கள் சிலர், “கட்சியின் சீனியர்களிலேயே செங்கோட்டையன்தான் சூப்பர் சீனியர். மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில்கூட, இரட்டைத் தலைமையை மாற்றக் கூடாது என்று அவர் பேசியிருந்தார். ஆனால், அவரையே மனம் மாற்றி தங்கள் கையில் எடுத்துவிட்டது எடப்பாடி தரப்பு. அவரைவைத்தே பன்னீரிடம் சமாதானம் பேசச் செய்தார்கள். ‘பேசாம அவைத்தலைவர் பதவியை வாங்கிக்கங்க. மாவட்டச் செயலாளர்கள், கழக அணி நிர்வாகிகள், பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பக்கம்தான் நிக்கிறாங்க. தோத்துப் போற போட்டியில ஏன் மல்லுக்கட்டணும்... அமைதியா வழிவிடுங்கண்ணே’ என்றார் செங்கோட்டையன்.

டெட்லைன்... அட்வான்ஸ்... டீலிங்... ஒற்றைத் தலைவலி!

ஆறு மணி டெட்லைன்!

இதைக் கேட்டதும் பன்னீர் சூடாகிவிட்டார். ‘நான் எதுக்குண்ணே வழிவிடணும்... 2017-ல அணிகள் ஒன்றிணைந்தபோது, நானா இரட்டைத் தலைமை வேணும்னு சொன்னேன். ‘ஒருங்கிணைப்பாளர் பதவி தர்றோம். அதுதான் அதிகாரமிக்கது’னு அணியை இணைக்கச் சொன்னாங்க. கடைசியில, இரண்டு பேரும் கையெழுத்திட்டாத்தான் அதிகாரம்னு சட்டவிதியை மாத்துனாங்க. இப்ப, மறுபடியும் ‘ஒற்றைத் தலைமை’ வேணுங்கறாங்க. என் ஆதரவாளர் தர்மருக்கு எம்.பி பதவி வாங்கிக் கொடுத்ததையே அவங்களால தாங்கிக்க முடியலை. இப்ப இருக்குற அதிகாரமும் போயிட்டா, நான் போட்டியிட சீட் கேட்குறதா இருந்தாலும் சேலம் வீட்டுலதான் தவம் கிடக்கணும். நாளை, ஜூன் 19-ம் தேதி மாலை ஆறு மணி வரைக்கும் டெட்லைன். அதுக்குள்ள, ‘ஒற்றைத் தலைமை தேவையில்லை; இரட்டைத் தலைமையே நீடிக்கும்’னு எடப்பாடி பழனிசாமி மீடியாகிட்ட சொல்லணும். இல்லைன்னா, பொதுக்குழுவே நடக்காது. பாத்துக்கலாம்’ என்று செங்கோட்டையனிடம் தெளிவாகச் சொல்லிவிட்டார் பன்னீர். இதற்கிடையே, பொதுக்குழுக் கூட்டத்துக்குத் தடை கோரி வழக்கு தாக்கல் செய்ய 200 பொதுக்குழு உறுப்பினர்களையும் தயார் செய்தது பன்னீர் தரப்பு.

பன்னீரின் நடவடிக்கை எடப்பாடி முகாமை உஷ்ணமாக்கிவிட்டது. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், இன்பதுரை, பாபு முருகவேல் ஆகியோர் தலைமையில் கட்சியின் வழக்கறிஞரணி நிர்வாகிகள் கூடி, பொதுக்குழுவை நடத்துவதற்குத் தடை கோரப்பட்டால், அதை எதிர்கொள்வதற்கான சட்டப் பணிகளில் மும்முரமாகினர். எடப்பாடி வீட்டில் நடந்த அந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து பன்னீரை எப்படி நீக்குவது என்பது குறித்தும் தீவிரமாக விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் இன்பதுரை, ‘பொதுக்குழுவுக்கே சகல அதிகாரங்களும் உள்ளன. சசிகலாவைத் தற்காலிகப் பொதுச்செயலாளராக அமர்த்திய அதே பொதுக்குழுதான், பின்னாளில் அவரை அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கவும் செய்தது. அதே வழிமுறையில், பன்னீரின் பதவியை காலி செய்துவிடலாம்’ என்றிருக்கிறார். இதைத் தொடர்ந்து, கடைசி வாய்ப்பாக ஜூன் 20-ம் தேதி மாலை ஆறு மணிக்குள், ‘அவைத் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, ஒற்றைத் தலைமைக்கு ஆதரவாக அறிக்கைவிட வேண்டும்’ என பன்னீருக்கு ‘டெட்லைன்’ விதித்தது எடப்பாடி தரப்பு. இதை பன்னீர் ஏற்கவில்லை. தனக்கு டெட்லைன் விதிக்கப்பட்ட தகவல் கிடைத்தவுடனேயே, பொதுக்குழு நடத்தக் கூடாதென எடப்பாடிக்கு முறைப்படி கடிதம் எழுதியதோடு, அதை மீடியாக்களிடமும் வைத்திலிங்கம் மூலமாகத் தெரியப்படுத்திவிட்டார்.

ஜூன் 22-ம் தேதி தன்னுடைய ஆதரவாளர்கள் அனைவரையும் சென்னைக்கு வரச் சொல்லியிருக்கிறார் பன்னீர். பொதுக்குழு கூட்டுவதற்கு ஒப்புதல் வழங்கிய பன்னீரே, இப்போது வேண்டாமெனக் கூறுவதால், சட்டச் சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகியிருக்கிறது. சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில், பொதுக்குழுவுக்குத் தடைவிதிக்க வேண்டுமென திண்டுக்கல் சூரியமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனுவில், எடப்பாடிக்கு பன்னீர் எழுதிய கடிதம் ஆவணமாகச் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. பொதுக்குழு நடப்பதே நீதிமன்றத்தின் உத்தரவில்தான் இருக்கிறது. அப்படி, திட்டமிட்டபடி பொதுக்குழு நடந்தாலும் களேபரங்கள் வெடிக்கும். ஆனால், அவை அத்தனையையும் சமாளிக்கும் முடிவில் தீவிரமாக இருக்கிறார் எடப்பாடி” என்றனர் விரிவாக.

டெட்லைன்... அட்வான்ஸ்... டீலிங்... ஒற்றைத் தலைவலி!

ஸ்வீட் பாக்ஸ் அட்வான்ஸ்... பன்னீருக்கு ஆப்சென்ட்!

இதற்கிடையே, ஒற்றைத் தலைமை கோரி, தூத்துக்குடி வடக்கு அ.தி.மு.க-வில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ. ‘அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியைத் தேர்வுசெய்ய வேண்டும்’ என புதுச்சேரி கிழக்கு மாநில அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில், பன்னீர் பக்கம் சொல்லிக்கொள்ளும்படியாக மாவட்டச் செயலாளர்கள், கழக முன்னணி நிர்வாகிகள் பெருமளவில் திரளவில்லை. “பன்னீருக்கு 30 மாவட்டச் செயலாளர்களின் ஆதரவிருக்கிறது. பொறுத்திருந்து பாருங்கள்” என வைத்திலிங்கம் பொடிவைத்துப் பேசினாலும், பன்னீர் தரப்பு வீக்காகத்தான் இருக்கிறது என்கிறார்கள்.

எடப்பாடியின் தீவிர விசுவாசியான மாவட்டச் செயலாளர் ஒருவரிடம் பேசினோம். “ஒற்றைத் தலைமை விவகாரம் முற்றுவது தெரிந்தவுடன், மாவட்டச் செயலாளர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாகப் பேசினார் எடப்பாடியின் வலதுகரமான சேலம் இளங்கோவன். அ.தி.மு.க ஆட்சியில் அந்த நிர்வாகிகள் பலன் பெற்றதும், எடப்பாடிக்குப் பக்கபலமாக இருக்கவேண்டியதன் அவசியம் குறித்தும் பேசினார். இதைத் தொடர்ந்து, மாவட்டச் செயலாளர்கள், சார்பு அணிகளின் நிர்வாகிகளுக்கு ஐந்து ஸ்வீட் பாக்ஸ்கள் உறுதியளிக்கப்பட்டன. அட்வான்ஸாக தலா இரண்டு ஸ்வீட் பாக்ஸ்கள் அளிக்கப்பட்டன. இந்த இனிப்பு பார்சலால் திக்குமுக்காடிப்போன நிர்வாகிகள், ஜூன் 20-ம் தேதி காலை முதல், எடப்பாடியின் கிரீன்வேஸ் சாலை வீட்டில் குவியத் தொடங்கினர். எடப்பாடியின் இந்த வேகம் பன்னீரிடம் இல்லை. எடப்பாடி, வேலுமணி மீதான கோபத்தால் பன்னீருக்கு ஆதரவளிக்கிறார் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம். இந்தவகையில், வைத்திலிங்கம் கட்டுப்பாட்டிலிருக்கும் சில மாவட்டச் செயலாளர்கள்தான் பன்னீருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கிறார்கள். வைத்திலிங்கமும் எடப்பாடி பக்கம் சாய்ந்துவிட்டால், பன்னீர் கூடாரம் முற்றிலுமாக காலியாகிவிடும்.

சட்டம்-ஒழுங்கைக் காரணம் காட்டி, பொதுக்குழுவைத் தள்ளிப்போட முயல்கிறது பன்னீர் தரப்பு. அதேசமயம், ‘பிரச்னை ஏற்படாமல் இருக்க, கூடுதல் பாதுகாப்பு தர வேண்டும்’ என எடப்பாடி தரப்பிலிருந்து திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளர் பெஞ்சமின் உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருக்கிறார். எந்தத் தடையுமில்லாமல் பொதுக்குழு நடத்த சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுக்குழுவுக்கு வரும் உறுப்பினர்களிடம் படிவம் வழங்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது. அந்தப் படிவத்தில், ‘ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமியைக் கொண்டுவர வேண்டும்’ என்கிற கோரிக்கை இடம்பெறவிருக்கிறது. பூர்த்தி செய்யப்பட்ட பிறகு அந்தப் படிவங்களை அஃபிடவிட்டாகத் தயார் செய்ய இன்பதுரை, பாபு முருகவேல் தலைமையில் தனி டீம் அமைத்திருக்கிறார் எடப்பாடி.

இதைத் தொடர்ந்து, பொதுக்குழுவில் பொது வாக்கெடுப்பு நடத்தி, ‘ஒற்றைத் தலைமை’ தீர்மானம் கொண்டுவரப்படும். நிரந்தர பொதுச்செயலாளர் பதவி ஜெயலலிதாவுக்கென ஒதுக்கப்பட்டுவிட்டதால், ‘கட்சியை வழிநடத்த ஒற்றைத் தலைமையாக ஒருங்கிணைப்பாளர் பதவி மட்டும் போதும். 30 நாள்களுக்குள் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் நடைபெற வேண்டும்’ எனத் தீர்மானம் நிறைவேற்றப்படவிருக்கிறது. இப்படிச் செய்வதால், ஒற்றை வாக்கின் அடிப்படையில் சமீபத்தில் தேர்வுசெய்யப்பட்ட ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்தாகும். தன் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தலில் எடப்பாடி போட்டியிடுவார். இந்தப் போட்டியில் பன்னீர் கலந்துகொள்ள தடையேதும் இல்லை. ஆனால், தன் பக்கம் தொண்டர்களும் நிர்வாகிகளும் இல்லாத காரணத்தால்தான், பொதுக்குழுவை எதிர்கொள்ள முடியாமல், அதை முடக்குவதற்குத் தீவிரமாகிறார் பன்னீர். பொதுக்குழுவுக்கு அவர் வராமல் புறக்கணித்தாலும், அவருக்கு ஆப்சென்ட் போட்டுவிட்டு பொதுக்குழு திட்டமிட்டபடி நடக்கும்” என்றார்.

‘கழகத்தின் சட்டவிதிகளை மாற்றக் கூடாது; ஆனால், பொதுக்குழுவை நடத்திக்கொள்ளலாம்’ என சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் அனுமதி வழங்கும்பட்சத்தில், ஒற்றைத் தலைமைக்கான மாற்றுவழியைத் திட்டமிட்டிருக்கிறது எடப்பாடி தரப்பு. ‘கழகத்தின் சட்டவிதிகளுக்கு முரணாகச் செயல்பட்டார். குழப்பம் விளைவிக்க முயன்றார் பன்னீர்’ என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைச் சபையில் ஏற்றி, ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்தே பன்னீரை நீக்க தீர்மானம் நிறைவேற்றும் திட்டமும் இருக்கிறதாம். அந்தச் சமயத்தில், ‘ஒருங்கிணைப்பாளர் பதவி கூடுதல் பொறுப்பாக எடப்பாடிக்கு அளிக்கப்படும்’ என்கிறார்கள் விவரமறிந்த சீனியர் அ.தி.மு.க தலைவர்கள்.

டெட்லைன்... அட்வான்ஸ்... டீலிங்... ஒற்றைத் தலைவலி!

மருமகன்கள் டீல்!

இந்தக் களேபரக் காட்சிகளுக்கு நடுவே, ஜூன் 18-ம் தேதி இரவு நடந்த ஒரு சந்திப்பும் பரபரப்பாக அ.தி.மு.க வட்டாரங்களில் பேசப்படுகிறது. பன்னீர் தரப்பிலிருந்து ஒரு மருமகனும், ஆளும் தரப்பிலிருந்து ஒரு மருமகனும் ரகசியமாகச் சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது.

நம்மிடம் பேசிய முன்னாள் அ.தி.மு.க அமைச்சர்கள் சிலர், “பொதுக்குழு நடந்தால், அது பன்னீரின் அரசியலையே சிதைத்து நிர்மூலமாக்கிவிடும். அதனால், ‘சட்டம்-ஒழுங்கைக் காரணம் காட்டி பொதுக்குழுவுக்குத் தடைவிதிக்க, தமிழ்நாடு அரசு ஒத்துழைக்க வேண்டும்’ என பன்னீர் தரப்பிலிருந்து மருமகன் ஒருவர், ஆளும் தரப்பு மருமகனுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். ‘எடப்பாடி கையில் அ.தி.மு.க முழுவதுமாகப் போய்விட்டால், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-வுக்குப் பாதகங்கள் இருக்கின்றன. இப்போது வரை, காங்கிரஸ் கட்சி நீங்கள் கொடுக்கும் எண்ணிக்கையில் சீட் பெறும் நிலையில்தான் இருக்கிறது. எடப்பாடி ஒற்றைத் தலைமையாகும் பட்சத்தில், அதைவைத்து காங்கிரஸ் கட்சி ‘பவர் பாலிடிக்ஸ்’ செய்யும். அ.தி.மு.க பக்கம் தாவிவிடுவதாக பூச்சாண்டி காட்டியே, கூட்டணியில் கூடுதல் சீட்டுகளைப் பெற முயல்வார்கள். தன்னுடைய ஆளுமையை நிலைநாட்ட, பா.ஜ.க-வை ஒதுக்கிவிட்டு, காங்கிரஸ் கட்சியைக் கூட்டணியில் இணைத்துக்கொள்ள எடப்பாடியும் முடிவெடுக்கலாம். அ.தி.மு.க-வில் இரட்டைத் தலைமை இருந்தால், இவையெல்லாம் நிகழ வாய்ப்பில்லை. ஆகவே, பொதுக்குழு நடக்காமல் இருப்பதற்கு உதவி செய்யுங்கள்’ என்று டீல் பேசப்பட்டிருக்கிறது. அனைத்தையும் கேட்டுக்கொண்ட ஆளும் தரப்பு மருமகன், எந்த உறுதியும் அளிக்கவில்லை” என்றனர்.

அ.தி.மு.க பொதுக்குழுவுக்குத் தடை கேட்டு போடப்பட்ட வழக்குகள், ‘சட்டம்-ஒழுங்கு பிரச்னை’ மற்றும் ‘சிறப்பு அழைப்பாளர்கள்’ வியூகம் உள்ளிட்ட விஷயங்களால் பொதுக்குழு நடப்பது பெரும் சிக்கலாகியிருக்கிறது. ஈரோட்டைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்திருக்கும் வழக்கில், ஜூன் 22-ம் தேதி பன்னீர், எடப்பாடி இருவரும் பதிலளிக்க உத்தரவிட்டிருக்கிறது நீதிமன்றம். அதேசமயம், பெரும்பான்மை அ.தி.மு.க முக்கியத் தலைகளின் ஆதரவால், தன்னம்பிக்கையின் உச்சத்திலிருக்கும் எடப்பாடி, ‘பன்னீர் கட்சியிலிருந்து வெளியேறி, அதனால் இரட்டை இலைச் சின்னமே முடங்கினாலும் சரி, ஒற்றைத் தலைமை ஆகியே தீருவது’ என்பதில் உறுதியாக இருக்கிறார். ஜனாதிபதி தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல்களைக் கணக்குவைத்து, தன் பாதையில் பா.ஜ.க குறுக்கிடாது என்று கணக்கு போடுகிறார் அவர். நொடிக்கு நொடி காட்சிகள் மாறிக்கொண்டேயிருக்கும் அ.தி.மு.க-வின் அரசியலில், ஜூன் 23-ம் தேதி முக்கிய நாளாக இருக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism