Published:Updated:

பில்டப் சசிகலா... பல்டி பன்னீர்... க்ளியர் எடப்பாடி... அ.தி.மு.க-வின் அரங்கு நிறைந்த காட்சிகள்!

அ.தி.மு.க-வின் அரங்கு நிறைந்த காட்சிகள்!
பிரீமியம் ஸ்டோரி
அ.தி.மு.க-வின் அரங்கு நிறைந்த காட்சிகள்!

அ.தி.மு.க-வில் சிலர் சொல்வதுபோல பன்னீருக்கும், அவர் தம்பி ராஜாவுக்கும் இடையே எந்தப் பிரச்னையும் இல்லை. பன்னீரின் அனுமதியைப் பெற்றுத்தான் சசிகலாவை ராஜா சந்தித்தார்.

பில்டப் சசிகலா... பல்டி பன்னீர்... க்ளியர் எடப்பாடி... அ.தி.மு.க-வின் அரங்கு நிறைந்த காட்சிகள்!

அ.தி.மு.க-வில் சிலர் சொல்வதுபோல பன்னீருக்கும், அவர் தம்பி ராஜாவுக்கும் இடையே எந்தப் பிரச்னையும் இல்லை. பன்னீரின் அனுமதியைப் பெற்றுத்தான் சசிகலாவை ராஜா சந்தித்தார்.

Published:Updated:
அ.தி.மு.க-வின் அரங்கு நிறைந்த காட்சிகள்!
பிரீமியம் ஸ்டோரி
அ.தி.மு.க-வின் அரங்கு நிறைந்த காட்சிகள்!

மாசி மாதம் பிறந்துவிட்டாலே, கிராமங்களில் கோயில் திருவிழாக்கள் களைகட்டும். ஆட்டம், பாட்டம் கொண்டாட்டங்களோடு நாடகங்கள் அரங்கேறும். அந்த நாடகங்களுக்கெல்லாம் ‘டஃப் ஃபைட்’ கொடுக்கும்விதமாக, அ.தி.மு.க-வில் இப்போது நாடகம் களைகட்டுகிறது. ஜெயலலிதாவின் கார், புடவை, ஹேர் ஸ்டைலோடு பவனிவரும் சசிகலா, ‘அ.தி.மு.க-வைக் காப்பாற்றுவோம்’ என்று ஒருபக்கம் ‘பில்டப்’ கொடுத்துவருகிறார். மற்றொருபுறம், சசிகலாவை வரவேற்று தேனி மாவட்ட நிர்வாகிகளைத் தீர்மானம் நிறைவேற்றச் செய்த பன்னீர்செல்வம், வழக்கம்போல அந்தர் பல்டி அடித்திருக்கிறார். இவர்களுக்கு இடையே, ‘ஒற்றைத் தலைமை நான்தான்’ என ‘க்ளியராக’ இருக்கிறார் எடப்பாடி. இவர்களுக்குள் நடக்கும் நாடக அரசியல் அ.தி.மு.க தொண்டர்களைக் குழப்ப ஆரம்பித்திருக்கிறது. அரங்கம் நிறைந்த காட்சிகளாக நகரும் இந்த நாடகத்தில், ரணகளக் காட்சிகளுக்குப் பஞ்சமில்லை!

பில்டப் சசிகலா... பல்டி பன்னீர்... க்ளியர் எடப்பாடி...  அ.தி.மு.க-வின் அரங்கு நிறைந்த காட்சிகள்!

சசிகலாவை ஏன் சந்தித்தார் ஓ.ராஜா?

டிசம்பர், 2016-ல் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க-வின் தற்காலிகப் பொதுச் செயலாளராக சசிகலா கொண்டுவரப்பட்டார். அந்தக் காலகட்டத்தில், போயஸ் கார்டன் இல்லத்தில் தினந்தோறும் 50 நிர்வாகிகள் ஒன்றுகூடி, ‘சின்னம்மா, நீங்கதான் கட்சியை வழி நடத்தணும்’ என்று கோரஸ் பாடுவது வழக்கமாக இருந்தது. சசிகலாவை யாரும் நெருங்கிவிட முடியாதபடி, கயிறுகட்டி அதற்குள்ளே நிர்வாகிகள் நிற்கவைக்கப்பட்டனர். ஆனால், கடந்த ஐந்து வருடங்களில் காட்சிகள் எவ்வளவோ மாறிவிட்டன. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரின் தலைமையின்கீழ் அ.தி.மு.க சென்றிருக்கிறது. கட்சியில், ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் குறுநில மன்னர்களாக மாறியிருக்கின்றனர். ஆனால், சசிகலாவின் மனநிலைதான் மாறவில்லை. “ஐந்து வருடங்களுக்கு முன்பு தனக்கிருந்த அதிகாரம் இப்போதும் இருப்பதாகக் கருதும் சசிகலா, நிர்வாகிகள் தனக்குப் பணிந்து நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். அவர் சறுக்குவதற்கு முதன்மையான காரணம் இதுதான்” என்கிறார்கள் அவருடன் பயணிப்பவர்கள். மார்ச் 4-ம் தேதி திருச்செந்தூரில், சசிகலாவை, பன்னீரின் தம்பி ஓ.ராஜா சந்தித்தபோதும், அப்படியான ‘ஈகோ’ காட்சிகள் அரங்கேறியிருக்கின்றன.

இந்தச் சந்திப்பு குறித்து சசிகலாவுக்கு நெருக்கமான சிலருடன் பேசினோம். “அ.தி.மு.க-வில் சிலர் சொல்வதுபோல பன்னீருக்கும், அவர் தம்பி ராஜாவுக்கும் இடையே எந்தப் பிரச்னையும் இல்லை. பன்னீரின் அனுமதியைப் பெற்றுத்தான் சசிகலாவை ராஜா சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது ராஜாவின் பேச்சு, பாவனையெல்லாம் சசிகலாவை உஷ்ணமாக்கியதுதான் மிச்சம். திருச்செந்தூர் சரவணபவன் ஹோட்டலில், சசிகலா தங்கியிருந்த அறைக்குள் சென்றதுமே, ‘வணக்கங்கம்மா. நல்லா இருக்கீங்களா?’ என்று நலம் விசாரித்தார் ராஜா. அவர் தலைகுனிந்து வணங்கவில்லை என்றதுமே சசிகலாவின் முகத்தில் இருள் சூழ்ந்துவிட்டது.

பில்டப் சசிகலா... பல்டி பன்னீர்... க்ளியர் எடப்பாடி...  அ.தி.மு.க-வின் அரங்கு நிறைந்த காட்சிகள்!

“என் முன்னாடியே உட்காருவாரா?” ‘பில்டப்’ சசிகலா

சந்திப்பின்போது, ‘கட்சியை நீங்கதாம்மா வழிநடத்தணும். நீங்க சரின்னு மட்டும் சொல்லுங்க, நிர்வாகிகளைத் திரட்டுற வேலையை நான் பார்த்துக்குறேன்’ என்றார் ராஜா. முக மலர்ச்சியடையாத சசி, ‘எல்லாரும் ஒண்ணு சேரணுங்கறதுதான் என்னுடைய விருப்பமும். எல்லாரும் தானா வருவாங்க’ என்றார். அதற்கு ராஜா, ‘அவங்களா வர மாட்டாங்கம்மா. நீங்க ரெண்டு கட்சி சீனியர்கள்கிட்ட பேசுங்க. நான் லைன் எடுத்துத் தர்றேன். நீங்க பேசுனா, இன்னைக்கே அவங்க திருச்செந்தூர் வந்துடுவாங்க’ என்று தன் செல்போனை எடுத்தார். உடனே கைநீட்டி அதைத் தடுத்த சசிகலா, ‘இப்ப ஆன்மிகப் பயணமாகத்தான் வந்திருக்கேன். சென்னை போன பிறகு பார்த்துக்கலாம்’ என்றுவிட்டு, ‘கோயில் நடை சாத்திருவாங்க. அப்புறம் பேசுவோம்’ என்று விருட்டெனக் கிளம்பினார். இதை ராஜா எதிர்பார்க்கவில்லை. இருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை 20 நிமிடங்கள்கூட நீடிக்கவில்லை. தன்னோடு நீண்ட நேரம் உரையாடுவார் என்று நம்பிவந்த ராஜாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

சசி தங்கியிருந்த அறைக்குள் சில நாற்காலிகள் மட்டுமே போடப்பட்டிருந்தன. ராஜாவுடன் வந்தவர்கள் நின்றுகொண்டிருக்க, சசிகலா முன்னால் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தார் ராஜா. இது சசிகலாவுக்குப் பிடிக்கவில்லை. ராஜாவோடு வந்திருந்த கட்சி நிர்வாகிகள், பயமில்லாமல் தன்னருகில் நின்றபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்ததையும், கையைப் பின்னால் கட்டிக்கொண்டு, ராஜா ‘பணிவு காட்டாமல்’ நின்றதையும் அவர் விரும்பவில்லை. தன்னுடன் வந்திருந்த இளவரசியிடம், ‘ராஜா என் முன்னாடியே உட்கார்றாரு. அவரோட வந்தவங்க இடிச்சுக்கிட்டு நிக்குறாங்க. அக்காகிட்ட இவங்க இப்படித்தான் நடந்துப்பாங்களா?’ என்று கொதித்திருக்கிறார் சசி. சசிகலாவின் இந்த ‘பில்டப்’ மனநிலைதான், கட்சியை அவர் ‘கன்ட்ரோல்’ எடுப்பதற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது.

‘தான் ஜெயலலிதா அல்ல’ என்பதை முதலில் சசி உணர வேண்டும். தவிர, மன்னார்குடிக் குடும்பம் மீதான அச்சம் இன்னும் அ.தி.மு.க-விலிருந்து விலகவில்லை. சமீபத்தில் சசிகலாவைச் சந்தித்த மூத்த பத்திரிகையாளர் ஒருவர், ‘என் குடும்பம் கட்சி விவகாரங்களில் தலையிடாதுனு அறிக்கை வெளியிடலாமே’ என்று ஆலோசனை சொல்ல, ‘அதெப்படிச் சொல்ல முடியும்... எனக்காக தினகரன் எவ்வளோ கஷ்டப்பட்டிருக்காரு... அவரைக் கட்சியில சேர்க்காம இருக்க முடியுமா?’ என்று குண்டை வீசியிருக்கிறார் சசி. சசிகலா பின்னால் விவேக், டாக்டர் வெங்கடேஷ், மருது எனக் குடும்ப உறவுகளே சூழ்ந்திருப்பது கட்சி நிர்வாகிகள் மத்தியில் கலக்கத்தை உண்டு பண்ணியிருக்கிறது. அனைவரும் ஒன்றுசேர வேண்டும் என விரும்புபவர்கள்கூட, ‘மீண்டும் அந்தக் குடும்பத்தின் பிடியில் கட்சி செல்லக் கூடாது’ என்பதில் தீர்மானமாக இருக்கிறார்கள். இதை சசிகலா புரிந்துகொள்ளவில்லை” என்றனர்.

சசிகலாவின் தென் மாவட்டச் சுற்றுப்பயணத்தில் ஓரளவே கூட்டம் திரண்டது. எதிர்பார்த்த அளவு நிர்வாகிகள் வராதது அவர் தரப்பை ஏமாற்றமடையச் செய்திருக்கிறது. சசிகலாவைச் சந்தித்த ஷெரீப், ஓ.ராஜா உள்ளிட்ட நிர்வாகிகளைக் கட்சி கட்டம் கட்டியதால், மற்ற நிர்வாகிகளெல்லாம் சத்தமில்லாமல் ஒடுங்கிவிட்டனர். நம்மிடம் பேசிய முன்னாள் தென் மாவட்ட அமைச்சர் ஒருவர், “சசிகலாவைக் கட்சியில் சேர்க்கணும்னு தீர்மானம் நிறைவேற்ற நாங்க ரெடிதான். ஆனா, அதற்கு அந்தம்மா இறங்கி வரணும்ல... ‘எல்லாரும் என் வீட்டு வாசல்ல வந்து நில்லுங்க. பழையபடி கோரஸ் பாடுங்க’னு சொன்னா, யார் கேட்பாங்க? காலம் மாறிப்போச்சு. தேனி மாவட்டத்துல தீர்மானம் இயற்றச் சொன்ன பன்னீரே, கடைசி நேரத்துல ‘பல்டி’ அடிச்சுட்டாரு. பிறகு யாருக்கு தைரியம் வரும்?” என்றார்.

பில்டப் சசிகலா... பல்டி பன்னீர்... க்ளியர் எடப்பாடி...  அ.தி.மு.க-வின் அரங்கு நிறைந்த காட்சிகள்!

‘தீர்மான’ மிரட்டல்... ‘பல்டி’ பன்னீர்!

அ.தி.மு.க-வுக்குள் நடக்கும் இந்த நாடகத்தில் ‘ட்விஸ்ட்டுக்கு மேல் ட்விஸ்ட் கொடுப்பது பன்னீர்தான். ‘தனக்காகத் தீர்மானம் இயற்றிய தேனி மாவட்டச் செயலாளர் சையது கானைக் காப்பாற்ற, சொந்தத் தம்பி ஓ.ராஜாவைப் பலிகடா ஆக்கியிருக் கிறார் பன்னீர்’ என்ற தேனி மாவட்ட அ.தி.மு.க பிரமுகர்கள், பன்னீரின் மனநிலையைப் புட்டுப் புட்டு வைத்தார்கள்.

“அ.தி.மு.க அடுத்தடுத்து தேர்தல் தோல்விகளைச் சந்தித்தாலும், தன்னுடைய பிரசாரங்கள் மூலமாக ‘ஸ்கோர்’ செய்துவிட்டார் எடப்பாடி. கட்சிக்குள் ‘ஒற்றை ஆளுமை’ என்கிற விவாதத்தைச் சூடாகவே வைத்திருக்கிறது அவர் தரப்பு. இது பன்னீருக்குக் குடைச்சலை உருவாக்கிவிட்டது. தன்னுடைய இருப்பைத் தக்கவைப்பதற்காக, சசிகலாவைக் கட்சிக்குள் கொண்டுவரும் ‘அசைன்மென்ட்டை’ கையிலெடுத்தார் பன்னீர். மார்ச் 5-ம் தேதி தேனி மாவட்டம், பி.சி.பட்டியில் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தி, சசிகலாவுக்கு ஆதரவாகக் கையெழுத்து இயக்கம் நடத்தவும் ஆயத்தமானார். ஆனால், அதற்குள் எடப்பாடி தரப்பு உஷாராகிவிட்டது. சேலத்தில் அவசரக் கூட்டத்தைக் கூட்டிய எடப்பாடி, அங்கிருந்தபடியே சையது கானிடம் பேசி, பி.சி.பட்டி செயல்வீரர்கள் கூட்டத்தை ரத்துசெய்ய வைத்துவிட்டார். இதைப் பன்னீரால் தடுக்க முடியவில்லை.

எடப்பாடி தரப்பிலிருந்து, ‘தேவைப்பட்டால் பன்னீரை நீக்கச் சொல்லி மாவட்டவாரியாகத் தீர்மானம் இயற்றப்படும்’ என்று மறைமுக மிரட்டல் விடுக்கப்படவும், ‘பல்டி’ அடித்துவிட்டார் பன்னீர். இதன் தொடர்ச்சியாகத்தான், சசிகலாவைச் சந்தித்தவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். முதல்வர் வேட்பாளர் பஞ்சாயத்து, கட்சி ஒருங்கிணைப்பாளர் தகராறு, எதிர்கட்சித் தலைவர் அந்தஸ்து என ஏதாவது விவகாரம் வரும்போதெல்லாம், அதைவைத்து அரசியல் நடத்தி, தன் இருப்பைக் காட்டிக்கொள்வது பன்னீரின் நடைமுறை. ஆனால், தேனியைத் தாண்டி அவருக்கென ஆதரவு வட்டம் இல்லை என்பதுதான் உண்மை. அவரை நம்பிவந்த மா.பா.பாண்டியராஜன், கே.பி.முனுசாமி, சண்முகநாதன், செம்மலை ஆகியோர் எடப்பாடி பக்கம் போய்விட்டனர். பொன்னையன், மைத்ரேயன் உள்ளிட்டோர் தீவிரமாக இல்லை. அரசியலில், தான் அடித்த கணக்கு வழக்கில்லாத ‘பல்டி’களால், ஆதரவாளர்களே இல்லாத நிலையில்தான் இருக்கிறார் பன்னீர். இந்தமுறை அடித்த ‘பல்டி’யால், தேனிக்குள் இருந்த சொச்ச ஆதரவாளர்களும் கழன்றுகொண்டது தான் மிச்சம்” என்றனர்.

பில்டப் சசிகலா... பல்டி பன்னீர்... க்ளியர் எடப்பாடி...  அ.தி.மு.க-வின் அரங்கு நிறைந்த காட்சிகள்!

“நான்தான் தலைவன்!” - ‘க்ளியர்’ எடப்பாடி

நடந்துவரும் இந்த அ.தி.மு.க நாடகத்தில், எடப்பாடி தரப்பு க்ளியராக இருக்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் 30-ம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க செயற்குழுவில், ‘அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதை மாற்றுவதற்குப் பொதுக்குழுவுக்கும், ஒருங்கிணைப்பாளர்களுக்கும் அதிகாரமில்லை’ என்று திருத்தம் செய்யப்பட்டது. மார்ச் 3-ம் தேதி, சேலத்தில் எடப்பாடி கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தில் இது குறித்து விரிவாகப் பேசியிருக்கிறார்கள்.

நம்மிடம் பேசிய கழக அமைப்புச் செயலாளர்கள் சிலர், “இப்போதிருக்கும் கட்சி விதிப்படி, ‘ஒற்றைத் தலைமை’ என்பது சாத்தியமல்ல. ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடத்தப்பட்டு, எடப்பாடி, பன்னீர் இருவரும் சமீபத்தில்தான் தேர்வாகியிருக்கிறார்கள். இரட்டை இலைக்குக் கையெழுத்திடும் உரிமையை விட்டுக்கொடுக்க இவர்கள் இருவருமே தயாராக இல்லை. சேலத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், ‘சசிகலா இல்லாமலேயே 33.5 சதவிகித வாக்குகளைக் கடந்த சட்டமன்றத் தேர்தல்ல வாங்கிக் கொடுத்திருக்கிறேன். கட்சியை எப்படிக் கொண்டு போகணும்னு எனக்குத் தெரியும்’ என்றிருக்கிறார் எடப்பாடி. கட்சி விதி இரட்டைத் தலைமைக்கு ஆதரவாக இருந்தாலும், ‘ஒற்றை ஆளுமை’யாக உருவெடுக்கும் திட்டத்தில் இருக்கிறார் அவர். ‘நான்தான் தலைவன்’ என்கிற இந்தத் ‘தெளிவு’தான் அவரை சசிகலாவுக்கு எதிராக உறுதியாக நிற்கவைத்திருக்கிறது.

சசிகலாவுக்கு ஆதரவாகத் தனது பெரியகுளம் பண்ணை வீட்டில் கூட்டம் நடப்பதுகூட பன்னீருக்குத் தெரியாதா? சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் நான்கு வருடங்கள் இருக்கின்றன. அதுவரை, இன்னும் பல விஷயங்களில் பன்னீர் ‘எக்ஸ்போஸ்’ ஆகட்டும் என்று நினைக்கிறார் எடப்பாடி. இந்த அரசியல் நாடகம் ஒருகட்டத்தில் முற்றி, பன்னீர் மீது கட்சி நடவடிக்கை எடுத்தாலும், பெரிய அளவில் எதிர்ப்பு இருக்காது. அதற்காகத்தான் எடப்பாடி மௌனம் காக்கிறார்” என்றனர் விரிவாக.

பில்டப் சசிகலா... பல்டி பன்னீர்... க்ளியர் எடப்பாடி...  அ.தி.மு.க-வின் அரங்கு நிறைந்த காட்சிகள்!

தன்னை ஓர் ஆளுமையாக எடப்பாடி காட்டுவதற்கு முயன்றாலும், கொங்கு ஏரியாவைத் தாண்டி இதர பகுதிகளில் அவருக்கென ஆதரவு வட்டம் இல்லை யென்பதும் இந்த விவகாரத்தில் கண்கூடாகி விட்டது. சசிகலா விவகாரம் சூடு பறந்த நேரத்தில், எடப்பாடிக்கு ஆதரவாக செம்மலை, தங்கமணி, அருண்மொழித்தேவன் உள்ளிட்ட ஒரு சிலரே நேரில் வந்து ஆதரவு தெரிவித்திருக் கின்றனர். சென்னையில் தனி ஆளாக ஆதிராஜாராம் மட்டும் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். மற்றவர்கள் ‘கப்சிப்’ ஆகிவிட்டனர். முக்கியப்புள்ளிகளான சி.விஜயபாஸ்கர், ஓ.எஸ்.மணியன், வேலுமணி, ராஜேந்திர பாலாஜி, வைத்திலிங்கம், தளவாய் சுந்தரம், செல்லூர் ராஜூ, ஆர்.காமராஜ், சி.வி.சண்முகம் ஆகியோரிடமிருந்து எந்தச் சலனமும் இல்லை. ‘யார் பக்கம் செல்வது?’ என்கிற குழப்பம் தொண்டர்களிடம் மட்டுமல்ல, கட்சி நிர்வாகிகளிடமும் இருப்பது தெளிவாகத் தெரிகிறது.

இந்த விவகாரத்தில் அமைதி காட்டும் முன்னாள் அமைச்சர் ஒருவர், “ஒற்றைத் தலைமை என்கிற விவாதம் இன்னும் சூட்டோடுதான் இருக்கிறது. அதுதான் கட்சியை இப்படி ஒரு நாடக அரசியலுக்குள் கொண்டுவந்துவிட்டது. இந்த விவகாரத்தில் டெல்லி யார் பக்கமும் இல்லை. சசிகலா தரப்பினரிடம், ‘அ.தி.மு.க விவகாரத்தில் தலையிட மாட்டோம். கட்சியைக் கட்டுக்குள் எடுப்பது உங்கள் சாமர்த்தியம். அமலாக்கத் துறை, வருமான வரித்துறை வழக்குகளைத் தூசு தட்டாமல் பார்த்துக்கொள்கிறோம்’ என நம்பிக்கை அளித்திருக்கிறார்கள். இதனால், சசி தரப்பு தெம்பாகியிருக்கிறது. ஆனால், சசிகலா எதிர்பார்ப்பதுபோல, நிர்வாகிகள் யாரும் தாமாக முன்வந்து அவர் காலில் விழப்போவதில்லை. எனவே, இந்த ‘ஷோ’ இப்போதைக்கு முடியாது” என்றார்.

அ.தி.மு.க-வில் நடக்கும் நாடகத்தில் உச்சகட்ட காட்சிகள் நடந்துகொண்டிருக் கின்றன. எப்போது திரை விழும் என்பதுதான் தெரியவில்லை!