Published:Updated:

அ.தி.மு.க ஸ்டன்ட்!

ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி

To EPS - "ப்ளீஸ்” - To OPS - "நோ!”

அ.தி.மு.க ஸ்டன்ட்!

To EPS - "ப்ளீஸ்” - To OPS - "நோ!”

Published:Updated:
ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில் திரைப்படங்கள் நூறு நாள்கள் ஓடுகின்றனவோ, இல்லையோ... அ.தி.மு.க-வில் நடக்கும் ஸ்டன்ட் காட்சிகள் நூறாவது நாளை எட்டிவிடும்போலிருக்கிறது. ‘அ.தி.மு.க-வில் ஜூன் 23-ம் தேதி என்ன நிலை இருந்ததோ, அதுவே தொடரும்’ என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதால், ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற நிலையே அ.தி.மு.க-வில் தொடர்கிறது. எடப்பாடி சூட்டிக்கொண்ட, ‘இடைக்காலப் பொதுச்செயலாளர்’ என்கிற கிரீடத்தைப் பறித்துவிட்டது நீதிமன்றம். இந்தச் சூழலில், செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், “நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும். கசப்புகளைத் தூக்கி எறிந்துவிட்டு அ.தி.மு.க-வினர் அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும்’’ என வெளிப்படையாகவே எடப்பாடி பழனிசாமிக்குச் சமாதானத் தூதுவிட்டார். தூதுப்புறா பறக்கவிடப்பட்ட சில மணி நேரத்திலேயே, “கட்சிக்கு விரோதமாகச் செயல்பட்டதால், பன்னீருடன் இணைந்து செயல்பட முடியாது” என்று வார்த்தைகளால் அதைச் சுட்டு வீழ்த்திவிட்டார் எடப்பாடி. கட்சித் தலைமைக்கான அதிகாரப் போட்டியில் இருவருக்குமிடையே நடக்கும் மோதல், நீதிமன்றப் படிகளில் கொளுந்துவிட்டு எரிய ஆரம்பித்திருக்கிறது. அ.தி.மு.க-வில் அடுத்தது என்ன?

சாதகத்திலும் பாதகம்!

சென்னை உயர் நீதிமன்றத்தில், அ.தி.மு.க பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு வெளிவருவதற்கு முன்னதாக பன்னீர் இல்லத்தில் ஆலோசனைகள் களைகட்டின. ஆகஸ்ட் 14-ம் தேதி, சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள பன்னீரின் இல்லத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், “இரண்டு தரப்பும் இணைஞ்சு போனால் என்ன... அவங்க நம்ம ரூட்டுக்கு வருவாங்களா, மாட்டாங்களா... இப்படியே போனா கட்சி வீணாகிடுங்க” என்றிருக்

கிறார் பன்னீர். அதற்கு மனோஜ் பாண்டியன், “லீகலாக நாம தெம்பா இருக்கோம்ணே. தீர்ப்பு எப்படியும் நமக்குச் சாதகமாகத்தான் வரும். அதற்குப் பிறகு எந்த முடிவா இருந்தாலும் எடுத்துக்கலாம்” என்று ஆலோசனை சொல்ல, ‘இணைந்து செயல்படுவது’ என்கிற வாதம் அப்போதே உருவாகிவிட்டது. அதை ஆரம்பத் திலேயே எடப்பாடி உடைத்துவிட்டார் என்பது தான் ‘ட்விஸ்ட்.’ மனோஜ் பாண்டியனின் வாய் முகூர்த்தமாக, ஆகஸ்ட் 17-ம் தேதி பன்னீருக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தது உயர் நீதிமன்றம். ‘இந்தச் சாதகத்திலும் பன்னீருக்குப் பாதகங்கள் இருக்கின்றன’ என்கிறார்கள் பன்னீரின் ஆதரவாளர்கள்.

அ.தி.மு.க ஸ்டன்ட்!

கூட்டுத் தலைமை முழக்கம்... ஒருங்கிணைந்த புதிய அ.தி.மு.க!

இது குறித்து நம்மிடம் பேசிய பன்னீர் ஆதரவு மாவட்டச் செயலாளர் ஒருவர், “ஜூலை 11-ம் தேதிக்குப் பிறகு, பன்னீருடன் தொடர்பிலிருந்த பலரும் எடப்பாடியால் கட்சியிலிருந்து நீக்கப் பட்டனர். பதிலுக்கு, எடப்பாடிக்கு ஆதரவாக இருந்தவர்களை பன்னீர் கட்சியைவிட்டு நீக்கினார். புதிதாக நியமனங்கள் இரு தரப்பிலும் போடப்பட்டன. உயர் நீதிமன்ற உத்தரவால், அவை எதுவுமே செல்லாது என்றாகிவிட்டது. இதில் பெரிதாக பாதிக்கப்பட்டது பன்னீருக்கு ஆதரவாக நின்றவர்கள்தான். சுமார் 20 மாவட்டங்களில் புதிதாகச் செயலாளர்களை நியமித்தார் பன்னீர். வைத்திலிங்கத்துக்கு இணை ஒருங்கிணைப்பாளர், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியனுக்கு துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் அளிக்கப் பட்டன. இப்போது, அவர்களின் புதிய பதவி களெல்லாம் காலாவதியாகிவிட்டன. எடப்பாடிக்கு ஆதரவு தெரிவிக்கும் பழைய மாவட்டச் செயலாளர்களே கட்சிப் பதவியில் தொடர்கிறார்கள். தர்மர் இப்போது முதுகுளத்தூர் ஒன்றியச் செயலாளர்தான், கோவை செல்வராஜ் கழகச் செய்தித் தொடர்பாளர்தான். பன்னீருக்கு ஆதரவாகக் கூட்டம் நடத்த வேண்டுமென்றாலும், அவர் ஆதரவாளர்களுக்கு அமைப்புரீதியிலான பெரிய அடையாளம் ஏதுமில்லை.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளிவந்த பிறகு, பன்னீரின் வீட்டில் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது, ‘கூட்டுத் தலைமை என்கிற முழக்கத்தை முன்வைப்போம். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இருந்தாலும், கட்சியை வழிநடத்த ஆட்சிமன்றக்குழு போன்ற ஓர் அமைப்பை உருவாக்கச் சொல்வோம். அதில் சரிபாதி உறுப்பினர்கள் நம் தரப்பினருக்குக் கேட்போம்ணே’ என்று வைத்திலிங்கம் கூறினார். அதற்கு பன்னீரும் ஒப்புக்கொண்டார். அதனால் தான், இதுவரை இரட்டைத் தலைமை என்று பேசிவந்த பன்னீர், முதன்முறையாக கூட்டுத் தலைமை என்கிற விஷயத்தை முன்வைத்திருக்கிறார். மதில் மேல் பூனையாக இருக்கும் சிலரை இந்த வார்த்தைப் பிரயோகம் தன் பக்கம் சாயவைக்கும் என்பது பன்னீருக்குப் புரிந்திருக்கிறது. எடப்பாடி பக்கம் நிர்வாகிகளின் ஆதரவும் பணமும் இருக்கின்றன. அதேநேரம், சமூகரீதியிலான ஆதரவைத் தக்கவைத்துக்கொள்ள சசிகலா, தினகரன் ஆகியோரின் அனுசரணையும் பன்னீருக்குத் தேவை. அதனால்தான், ‘அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்’ என்று அழைப்பு விடுத்தார். இரட்டை இலைக்குக் கையெழுத்திடும் உரிமையை எதற்காகவும் விட்டுக்கொடுக்க பன்னீர் தயாராக இல்லை. அனைவரையும் ஒருங்கிணைப்ப தற்கு வைத்திலிங்கம் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்படவிருக்கிறது. எடப்பாடியே ஒத்துழைக்காவிட்டாலும், ஒருங்கிணைந்த அ.தி.மு.க விரைவில் புத்துயிர் பெறுவது நிச்சயம்” என்றார் விரிவாக.

மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர், தர்மர், சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன்
மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர், தர்மர், சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன்

“வேலுமணியை மீறி வளர்ந்துடுவீங்களா..?” - தூபம் போட்ட வைத்தி!

பொதுக்குழுத் தீர்ப்பை நீதிபதி ஜெயச்சந்திரன் எழுதுவதற்கு முன்னதாகவே, மொபைலைக் கையில் எடுத்துவிட்டாராம் வைத்திலிங்கம். ஆகஸ்ட் 14-ம் தேதி தஞ்சையிலிருந்து சென்னைக்கு காரில் வரும் வரை, எடப்பாடி ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் நான்கு பேரிடம் பேசியிருக்கிறார் வைத்தி. கோவை யைச் சேர்ந்த ‘வில்’ பிரமுகரிடம், “வேலுமணியை மீறி நீங்க வளர்ந்துடுவீங்களா... என் மாவட்டத் துக்குள்ள வந்து பகுதிச் செயலாளர் பதவிக்கு அவர் ஆள் போட்டதுனாலதானே பிரச்னையே வந்தது... எனக்கே இந்த நிலைமைன்னா, நீங்கள்லாம் கடைசிவரைக்கும் அவர்கிட்ட அடிமைப்பட்டு நிக்கவேண்டியதுதான். நம்ம பக்கம் வந்துடுங்க. ஒண்ணா சேர்ந்து செயல்படலாம்” என்று அழைப்பு விடுத்திருக்கிறார் வைத்தி. சிலர் நேசக்கரத்தை ஏற்க மறுத்த நிலையில், சிலர் தீர்ப்பையொட்டி யோசிப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

ஏற்கெனவே திட்டமிட்டபடி, செப்டம்பர் 15-ம் தேதி கோவையில் பிரமாண்டப் பொதுக்கூட்டத் துக்குத் தயாராகிறது பன்னீர் தரப்பு. அதற்குள்ளாக, எடப்பாடி பக்கமிருக்கும் மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ-க்கள் சிலரைத் தங்கள் பக்கம் கையிலெடுக்க பகீரதப் பிரயத்தனம் செய்கிறது பன்னீர் தரப்பு. வரலாற்றிலேயே முதன்முறையாக பன்னீர் பர்ஸைத் திறந்திருப்பதால், ஆதரவாளர்கள் முகத்தில் வெளிச்சமும் தெரிகிறது. செப்டம்பர் 1-ம் தேதி நெற்கட்டும்செவலில் பூலித்தேவர் ஜயந்தி கொண்டாடப்படவிருக்கிறது. அப்போது, பன்னீர் - சசிகலா - தினகரன் ஆகியோர் பொதுவெளியில் சந்திப்பது நிகழலாம் என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருக்கிறது. அந்த நிகழ்ச்சியின்போது, தென்மாவட்டங்களில் உள்ள எடப்பாடி ஆதரவு அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர்கள் சிலரை பன்னீரைச் சந்தித்து ஆதரவு தெரிவிக்கவைக்க, முதுகுளத்தூர் தர்மர், மனோஜ் பாண்டியன், சிவகங்கை கே.ஆர்.அசோகன் ஆகியோரிடம் ‘அசைன்மென்ட்டும்’ ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

“பன்னீரோட தோல்வி தள்ளிப்போயிருக்கு..!”

பன்னீர் தரப்புக்கு நிகராக, எடப்பாடி பக்கமும் ‘ஸ்டன்ட்’ காட்சிகள் களைகட்டுகின்றன. ஜூன் 24-ம் தேதி நடந்த பொதுக்குழுவில் அவைத்தலைவர் பதவிக்கு தமிழ்மகன் உசேன் முன்மொழியப்பட்டார். அந்தத் தீர்மானத்தை பன்னீர்தான் முன்மொழிந்தார். அந்தத் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்னதாக, ‘அனைத்துத் தீர்மானங்களும் ரத்து செய்யப்படுகின்றன’ என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் முழங்கியதால், அவைத்தலைவர் தீர்மானமும் ரத்தாகிப்போனது. இதைத்தான் எடப்பாடி வீட்டில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிக் கொதித்திருக்கிறார்கள்.

எடப்பாடி ஆதரவு அமைப்புச் செயலாளர்கள் சிலரிடம் பேசினோம். “ஆகஸ்ட் 17-ம் தேதி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்ததும், சண்முகம் எடப்பாடியைச் சந்திக்க வந்தார். அப்போது, ‘உங்க அவசரத்தால பாருங்க... அப்பவே பொறுமையாக இருங்கனு சொன்னேன். நீங்க கேட்கலை’ என்று வருத்தப்பட்டார் எடப்பாடி. தீர்ப்பு எதிராக வந்தாலும், தெம்பாக இருக்கிறார் எடப்பாடி. இன்றுவரை, 2,532 பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடிக்கு ஆதரவாக நிற்கிறார்கள். ‘ஒற்றைத் தலைமை’ வேண்டுமென அவர்களிடம் கையெழுத்தும் பெறப்பட்டிருக்கிறது. ‘தேவர் ஜயந்திக்கு நான் தங்கக் கவசத்தை எடுத்துக் கொடுக்கலாம்னு இருந்தேன். அது நடக்காது போலயே’ எனத் திண்டுக்கல் சீனிவாசன் வருத்தப்பட்டபோது, ‘மூணு நாள்ல முடியுற பிரச்னைண்ணே. நீங்கதான் கவசத்தை எடுத்துக் கொடுக்குறீங்க’ என்று தெம்பூட்டினார் எடப்பாடி.

தீர்ப்பு வெளிவந்த பிறகு, வழக்கறிஞர்கள் விஜயநாராயணன், பாலமுருகன் உள்ளிட்டோர் எடப்பாடியுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது, ‘சட்டரீதியாகவே போவோம். உயர் நீதிமன்ற மேல்முறையீட்டில் தடை கேட்கலாம். உச்ச நீதிமன்றம் வரை நமக்கு வாய்ப்பு இருக்கிறது. எதுவுமே நமக்குச் சாதகமாக நடக்கலைன்னா, பொதுக்குழு உறுப்பினர்கள் மூலமாக மீண்டும் பொதுக்குழு நடத்தக் கோரிக்கை வைக்கச் சொல்லலாம். நீதிமன்ற உத்தரவால், பன்னீர் ஒப்புதல் வழங்கித்தான் ஆகணும். அவர் முரண்டுபிடித்தால், நீதிமன்றம் நியமிக்கும் ஆணையர் முன்னிலையில் பொதுக்குழுவை நடத்துவோம். அப்படி நடக்கும் பட்சத்தில் சட்டரீதியாக அது நமக்குக் கூடுதல் பாதுகாப்புதான். பன்னீரோட தோல்வி தள்ளிப்போயிருக்கு... அவ்வளவுதான்’ என்றார் எடப்பாடி. அவர் ஆலோசனையில்தான் மேல்முறையீடும் செய்யப்பட்டது. தற்போதைய தீர்ப்பைவைத்து பன்னீரிடம் நாங்கள் இறங்கிப்போனால், எங்கள் படையில் பாம்பு புகுந்த கதையாகச் சலசலப்பு ஏற்பட்டுவிடும். பன்னீரின் பின்னால் பா.ஜ.க ஆதரவுப் பத்திரிகையாளர் ஒருவரும், சசிகலா, தினகரனும் இருக்கிறார்கள். அவர்களின் திட்டத்துக்கு கீழ்ப்படிவதால், எடப்பாடிக்கு மட்டுமல்ல, அவரை நம்பிப் பின்னால் நிற்கும் அனைவருக்குமே ஆபத்துதான். தான்தான் பொதுச்செயலாளர் என்கிற முடிவிலிருந்து பின்வாங்கும் முடிவில் எடப்பாடி இல்லை” என்றனர் தெளிவாக.

‘ப்ளீஸ்’ பன்னீர்... ‘நோ’ எடப்பாடி!

‘கட்சியின் பொதுக்குழுவை இரண்டு ஒருங்கிணைப்பாளர்களும் இணைந்தேதான் கூட்ட வேண்டும்’ என்றிருக்கிறது நீதிமன்றத்தின் தீர்ப்பு. ஒருங்கிணைப்பாளர்கள் ஒத்துழைக்கவில்லை என்றால், பொதுக்குழு உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினர்களின் கையெழுத்தைப் பெற்று பொதுக்குழுவைக் கூட்டலாம். பன்னீருடன் மனோஜ் பாண்டியன் பேசியபோது, “பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தால், நீங்கள் ‘மாட்டேன்’ என்று சொல்ல முடியாது. மறுப்பதற்கு நீதிமன்றத்துக்கு நியாயமான காரணத்தைச் சொல்லியாக வேண்டும்’’ என்றிருக்கிறார். அதற்கு பன்னீரோ, “அவ்வளவு தூரத்துக்கெல்லாம் போகாது. மீண்டும் இணைந்து பணியாற்றுவதற்கான சூழல் வரும்’’ என்று நம்பிக்கையாகப் பேசியிருக்கிறார்.

பன்னீர் முதலில் சட்டத்தை நம்பினார், இப்போது சமாதானப் பேச்சுவார்த்தைக்கு முயல்கிறார். ஆனால், எடப்பாடி முதலில் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு முயன்றார், இப்போது சட்டத்தை நம்புகிறார். மீண்டும் ஒன்றிணைந்து, இழந்த அதிகாரத்தை மீட்டெடுக்க எடப்பாடியிடம் ‘அன்புச் சகோதரர்’ என்று ‘ப்ளீஸ்’ போடும் நிலைக்கு வந்துவிட்டார் பன்னீர். அதற்கு ஆரம்பத்திலேயே ‘நோ’ சொல்லி முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் எடப்பாடி. இருவருக்கும் இடையே நடக்கும் ‘ஸ்டன்ட்’ காட்சிகள், இனி நீதிமன்றத்தில்தான் பரபரக்கப்போகின்றன. இரு தலைமையும் அடுத்தடுத்து உற்சாகமாக ஸ்டன்ட் செய்துவருகின்றன. சோர்வடைந்து கொண்டிருப்பதென்னவோ அ.தி.மு.க தொண்டர்கள்தான்!

*****

அ.தி.மு.க ஸ்டன்ட்!

“தி.மு.க-வின் பின்னணியில் எடப்பாடி!”

“கொடநாடு வழக்கு, டெண்டர் முறைகேடு உள்ளிட்ட வழக்குகளில் தி.மு.க-விடம் எடப்பாடி வசமாகச் சிக்கியிருக்கிறார். அவற்றிலிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்ள எடப்பாடி முயல்கிறார். அ.தி.மு.க பலமாக இருந்தால் தி.மு.க-வுக்கு அது அச்சுறுத்தலாக மாறிவிடும். எனவேதான்

அ.தி.மு.க-வை உடைத்து பின்னுக்குத் தள்ளி, அதன் மூலம் ஓர் அரசியல் வசந்தகாலத்தை தி.மு.க-வுக்குக் கொடுக்க மறைமுகமான வேலைகளை எடப்பாடி செய்துவருகிறார். எனவேதான் `ஒன்றுபடுவோம்’ என்று ஓ.பி.எஸ் அழைத்தும், தி.மு.க-வின் பின்னணியால் எடப்பாடி அதை மறுக்கிறார்” - மருது அழகுராஜ், ஓ.பி.எஸ் ஆதரவாளர்.

அ.தி.மு.க ஸ்டன்ட்!

“எடப்பாடியாரின் கருத்தை அப்படியே ஏற்கிறோம்!”

“சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் எனப் பெரும்பாலான நிர்வாகிகளும் தொண்டர்களும் எடப்பாடியார் தலைமையைத்தான் ஏற்றிருக்கிறார்கள். இருந்தபோதும், பொதுக்குழு தொடர்பாக நீதிமன்றத்தின் தீர்ப்பு எங்களுக்குச் சாதகமாக வரவில்லை. தீர்ப்புக்கு நாங்கள் முழுமையாகத் தலைவணங்குகிறோம். அதேநேரத்தில், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடும் செய்திருக்கிறோம். அண்ணன் ஓ.பி.எஸ்-ஸுடன் இணைவது தொடர்பாக, எடப்பாடியாரின் கருத்தை நாங்கள் அப்படியே ஏற்கிறோம். அதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. அவர் மிக தீர்க்கமாக முடிவெடுத்திருக்கிறார். இது ஒருபுறமிருக்க, நீதிமன்றத்தின் தீர்ப்பு எங்களின் களப்பணிக்குத் தடையாக இருக்காது. எடப்பாடியார் உட்பட நாங்கள் அனைவரும் தொண்டர்களையும் மக்களையும் சந்திக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபடுவோம். தி.மு.க அரசின் அராஜகச் செயலை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் எடப்பாடியார் மிகத் துணிவோடு வழக்கம்போல எதிர்ப்பார்.” - ஆர்.பி.உதயகுமார், முன்னாள் அமைச்சர்.