சமூகம்
அரசியல்
அலசல்
Published:Updated:

கூட்டணி... சிக்னல்... சமரசம்... வலைவிரிப்பு... அ.தி.மு.க க்ளைமேட் சேஞ்ச்!

எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
News
எடப்பாடி பழனிசாமி

இந்தியாவிலேயே மிக வலிமையான மாநிலக் கட்சியாக இருந்த அ.தி.மு.க-வைத் தனது சுயநலத்துக்காக நான்கு துண்டுகளாக உடைத்தவர் எடப்பாடி.

தமிழகத்தின் பருவகாலத்தில் மட்டுமல்ல, தமிழக அரசியல் களத்திலும் தட்பவெட்ப மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலை மையப்படுத்தி, அ.தி.மு.க-வின் கூட்டணிக் கணக்குகளை இப்போதே உடைத்துப் பேசியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. நாமக்கல்லில் நடந்த அ.தி.மு.க-வின் 51-வது ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டத்தில், “அ.தி.மு.க தலைமையில் மெகா கூட்டணி அமைப்போம்” எனச் சூளுரைத்திருக்கிறார் அவர். அதேவேளையில், “தி.மு.க-வை வீழ்த்த யாருடனும் கூட்டணிவைக்கத் தயார்” என அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவித்திருப்பதும் பேசுபொருளாகியிருக்கிறது. டெல்லிக்கான சிக்னல், தி.மு.க கூட்டணிக் கட்சிகளுக்கு வலை விரிப்பு, சமரசத்துக்கான முன்னெடுப்புகள் என அடுத்தடுத்து காய்களை நகர்த்த ஆரம்பித்திருக்கிறது அ.தி.மு.க வட்டாரம். இந்த ‘க்ளைமேட் சேஞ்ச்’ அ.தி.மு.க-வுக்குச் சாதகமாக இருக்குமா... அவர்களின் வியூகம் என்ன... எம்.ஜி.ஆர் மாளிகையில் விசாரித்தோம். தகவல்களை மழையாகப் பொழிந்தார்கள்!

நாமக்கல் பொதுக்கூட்டத்துக்குத் தேதி குறிக்கப்பட்டு, மழை, சட்டமன்றச் சலசலப்பு காரணமாக இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. இந்த முறை கூட்டத்தை நடத்தியே தீருவது என்பதில் விடாப்பிடியாக இருந்த முன்னாள் அமைச்சரும், நாமக்கல் மாவட்டச் செயலாளருமான தங்கமணி, எடப்பாடி பழனிசாமி தலைமையில் பிரமாண்டப் பொதுக்கூட்டத்தை ஒருவழியாக நடத்தியேவிட்டார். பொம்முக்குட்டைமேட்டில் நடந்த இந்தப் பொதுக்கூட்டத்தில்தான், மெகா கூட்டணிக் கணக்கை உடைத்திருக்கிறார் எடப்பாடி. “இந்தக் கூட்டணி விதை அக்டோபர் 19-ம் தேதியே தூவப்பட்டுவிட்டது” என்கிறார்கள் அ.தி.மு.க-வின் இரண்டாம் கட்டத் தலைவர்கள்.

கூட்டணி... சிக்னல்... சமரசம்... வலைவிரிப்பு... அ.தி.மு.க க்ளைமேட் சேஞ்ச்!

டெல்லிக்கான சிக்னல்!

இது குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர்கள் சிலர், “சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி விவகாரம் தொடர்பாக, அக்டோபர் 19-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியது அ.தி.மு.க. ஆனால், போலீஸ் அனுமதி வழங்காததால் போராட்டத்தில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம், தங்கமணி உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டனர். எடப்பாடி கைதுசெய்யப்பட்டவுடன், அவரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் ‘புதிய தமிழகம்’ கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி. ‘தமிழ் மாநில காங்கிரஸ்’ கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், ‘தமிழக மக்கள் முன்னேற்றக் கழக’த் தலைவர் ஜான் பாண்டியன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களும் எடப்பாடிக்கு நேரில் ஆதரவு தெரிவித்தனர். அப்போதே, கூட்டணிக் கணக்குகளைத் தொடங்கிவிட்டார் எடப்பாடி.

நாமக்கல்லில், ‘அ.தி.மு.க தலைமையில் மெகா கூட்டணி’ என எடப்பாடி பேசியிருப்பதில் ஆயிரம் அர்த்தங்கள் புதைந்திருக்கின்றன. இது ஒருவகையில் டெல்லிக்குக் கொடுக்கப்படும் ‘சிக்னல்’தான். டெல்லி பா.ஜ.க தலைமைக்கு, தமிழகத்தைச் சேர்ந்த சில அரசியல் புள்ளிகள் ஆலோசனைகளை அளித்திருக்கிறார்கள். அதில், ‘இரட்டை இலைச் சின்னத்தை முடக்கிவிட்டால், எடப்பாடி தரப்பு 10 சதவிகித வாக்குகளுக்குள் சுருங்கிவிடும். எடப்பாடியால் நமக்கு எந்த லாபமும் இல்லை. 2019 நாடாளுமன்றத் தேர்தலில், அவரால் நமக்கு வெற்றியைத் தேடித்தர முடியவில்லை. அதனால், தே.மு.தி.க., த.மா.கா., பா.ம.க., அ.ம.மு.க., பன்னீர் அணி உள்ளிட்டவர்களுடன் ஒரு கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலை பா.ஜ.க எதிர்கொள்ளலாம்’ என்று அவர்கள் ஆலோசனை அளித்திருக்கிறார்கள். நடைமுறையில் அது வெற்றியைத் தராது. எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க-வுடன் கரம் கோத்தால் மட்டுமே, பா.ஜ.க-வுக்கு லாபம். அதற்குக் காரணங்களும் இருக்கின்றன.

கூட்டணி... சிக்னல்... சமரசம்... வலைவிரிப்பு... அ.தி.மு.க க்ளைமேட் சேஞ்ச்!

எடப்பாடியிடம்தான் நிர்வாகிகள் பலம், கட்சியின் கட்டமைப்பு இருக்கிறது. 12,500-க்கும் அதிகமான கிராமங்களில், மொத்தமாக 85,000 கிளைக் கழக அமைப்புகள் இருக்கின்றன. நகரம், வட்டக் கழக அமைப்புகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், இதன் எண்ணிக்கை உயரும். 72,000 பூத் கமிட்டிகளுக்கும் அ.தி.மு.க-வில் முகவர்கள் இருக்கிறார்கள். எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க ஒரு வலுவான அடித்தளத்தின்மீது நிற்கிறது. அதனால்தான், நாமக்கல் பொதுக்கூட்டத்துக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோரைத் திரட்ட முடிந்தது. கேட்பார் பேச்சைக் கேட்டுக்கொண்டு, இரட்டை இலைச் சின்னத்தை முடக்கி இந்த அடித்தளத்தைச் சிதைக்க டெல்லி முயன்றால், அதனால் சரிந்து விழப்போவது பா.ஜ.க-வும்தான். இதைப் புரியவைக்கும் படியாகத்தான், ‘எங்கள் தலைமையில் கூட்டணி அமையும்’ என்று மறைமுகமாக டெல்லிக்கு ‘சிக்னல்’ அனுப்பியிருக்கிறார் எடப்பாடி.

சிக்னலை பா.ஜ.க-வும் புரிந்துகொண்டு விட்டது. பா.ஜ.க தலைவராக எல்.முருகன் இருந்தபோது, நான்கு எம்.எல்.ஏ-க்களை அவர் ஜெயித்துக் கொடுத்தார். அதற்குப் பிரதிபலனாக, மத்திய இணை அமைச்சர் பொறுப்பும் அவருக்கு வந்தது. அந்த வெற்றிக்கு, அ.தி.மு.க-வின் வாக்குவங்கிதான் பிரதான காரணம். இப்போது 2024 நாடாளுமன்றத் தேர்தலில், ஐந்து எம்.பி-க்களையாவது ஜெயித்துக் கொடுக்க வேண்டிய பொறுப்பு அண்ணாமலைக்கு இருக்கிறது. பொறுப்பை உணர்ந்ததால்தான், ‘அ.தி.மு.க தலைமையிலேயே கூட்டணி அமையும்’ என்று இறங்கிவந்திருக்கிறார் அண்ணாமலை. எடப்பாடி அனுப்பிய சிக்னல் வொர்க்அவுட் ஆகிவிட்டது” என்றனர் விரிவாக.

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

எடுபடுமா சமரசம்?

எடப்பாடியின் நாமக்கல் பொதுக்கூட்டம், யாரும் எதிர்பாராத திசையிலும்கூட கூட்டணிக் கதவுகளைத் திறந்துவிட்டிருக்கிறது. கடந்த நவம்பர் 7-ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், “தி.மு.க என்ற தீயசக்தியை வீழ்த்துவதற்கு, சட்டமன்றத் தேர்தலின்போதே நான் விட்டுக்கொடுத்தேன். தி.மு.க-வை வீழ்த்த அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அது யாராக இருந்தாலும், எங்கு இருந்தாலும், எந்த ‘மெகா கூட்டணி’ அமைப்பவர்களாக இருந்தாலும் சரி, அவர்களுடன் கூட்டணி நேசக்கரம் நீட்டுவோம்” என்றிருக்கிறார். தினகரனின் இந்த அதிரடி, சமரசத்துக்கான விதைகளைத் தூவியிருக்கிறது.

இது குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர்கள் சிலர், “2021 சட்டமன்றத் தேர்தலில், ஏறத்தாழ 34 சட்டமன்றத் தொகுதிகளில் அ.தி.மு.க-வின் வெற்றி வாய்ப்பு அ.ம.மு.க-வால் பறிபோனது. அ.ம.மு.க-வால் தனித்து வெற்றிபெற முடியவில்லை என்றாலும், அந்தக் கட்சி ஒரு ‘Spoiler’-ஆக அ.தி.மு.க-வுக்கு மாறிவிட்டது. தேர்தல் அரசியலில் வெற்றிபெறவில்லை என்றால், அ.ம.மு.க என்கிற கட்சி கரைந்துபோய்விடும். அ.ம.மு.க-வைச் சேர்த்துக்கொள்ளவில்லை என்றால், அ.தி.மு.க-வுக்கு பலமிருக்காது. இந்த நெருக்கடியை தினகரனும் எடப்பாடியும் நன்கு உணர்ந்தேயிருக்கிறார்கள். அதனால்தான், இருவரும் ஒரு நேர்க்கோட்டுக்கு இப்போது வரத் தொடங்கியிருக்கிறார்கள்.

தினகரன்
தினகரன்

தி.மு.க-வைப் பொது எதிரியாக முன்னிறுத்தி, அவர்கள் இருவரும் சமரச உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டுமென்பது கட்சி சீனியர்களின் எதிர்பார்ப்பு. அதற்கான சமரசப் பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறது. அதனால்தான், ‘எந்த மெகா கூட்டணி அமைப்பவர்களாக இருந்தாலும் சரி, அவர்களுடன் நேசக்கரம் நீட்டுவோம்’ என எடப்பாடியைக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார் தினகரன். தேர்தல் கணக்குகளைப் போட்டுப் பார்த்த எடப்பாடியும் சமரச முடிவை நெருங்கிவிட்டார்” என்றனர்.

“செப்டம்பர் 2017-ல் நடந்த அ.தி.மு.க பொதுக்குழுவில், கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர்தான் தினகரன். அவரோடு எப்படி சமரசமாவீர்கள்?” என்றோம். அதற்கு, “வைகோவுக்கும் தி.மு.க-வுக்கும் இல்லாத தகராறா.. அவர்களே கைகுலுக்கிக்கொண்டு தேர்தலைச் சந்திக்கிறார்கள். இன்று தினகரன் வேறொரு கட்சியை நடத்திவருகிறார். அவருடன் கூட்டணி உடன்படிக்கையைச் செய்வதில் எந்தத் தவறும் இல்லையே” என்றனர் புன்னகைத்தபடி.

கூட்டணி... சிக்னல்... சமரசம்... வலைவிரிப்பு... அ.தி.மு.க க்ளைமேட் சேஞ்ச்!

கட்சிகளுக்கு வலைவிரிப்பு... அ.தி.மு.க க்ளைமேட் சேஞ்ச்!

அ.தி.மு.க-வின் கூட்டணிக் கணக்குகள் இதோடு முடியவில்லை. உள்ளாட்சித் தேர்தலின்போது, தனித்துக் களம்கண்ட பா.ம.க-வை மீண்டும் அரவணைப்பதற்கும் முயற்சிகள் ஆரம்பமாகியிருக்கின்றன. தொடர்பு அறுந்து போய்விடக் கூடாது என்பதற்காகத்தான், மாநிலங்களவை எம்.பி-யாக சி.வி.சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், அவரைத் தைலாபுரம் தோட்டத்துக்கு வாழ்த்து வாங்க அனுப்பினார் எடப்பாடி. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரத்தில், ‘பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடி பக்கம்தான் இருக்கிறார்கள். சபாநாயகர் நடுநிலையோடு செயல்பட வேண்டும்’ எனப் பாசக்கரம் நீட்டினார் அன்புமணி ராமதாஸ். இந்த நட்பு, தேர்தல் வரை மலரும் என்கிற நம்பிக்கையோடு இருக்கிறது அ.தி.மு.க வட்டாரம். அதேவேளையில், தி.மு.க கூட்டணியிலிருக்கும் கட்சிகளுக்கும் வலையை மெல்ல விரிக்கிறது இலைத் தரப்பு.

திருமாவளவன்
திருமாவளவன்

அ.தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர்கள் சிலரிடம் பேசினோம். “தி.மு.க கூட்டணியிலும் கருமேகங்கள் சூழ்ந்திருக்கின்றன. தி.மு.க ஆட்சிக்கு வந்தது முதலே, குடியிருப்பு அகற்ற விஷயத்தில் தொடர்ந்து தனது எதிர்ப்பைக் காட்டி வருகிறார்கள் கம்யூனிஸ்ட்டுகள். முதல்வரின் சொந்தத் தொகுதியான கொளத்தூரில், நீர்நிலை புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்ததாகக் கூறி 3,000 குடும்பங்களை அப்புறப்படுத்துகிறது நீர்வளத்துறை. இதற்குக் கண்டனம் தெரிவித்திருக்கும் சி.பி.எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசின் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தச் சொல்லி முதல்வருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். உள்ளாட்சித் தேர்தல் சமயத்திலிருந்தே தி.மு.க - வி.சி.க இடையே ஒருவித மனக்கசப்பு இருந்துவருகிறது. இந்தித் திணிப்புக்கு எதிராகப் போராட்டம் நடத்திய ‘விடுதலைச் சிறுத்தைகள்’ கட்சியின் தலைவர் திருமாவளவன், ‘வி.சி.க தலைமையில்தான் மொழிப்போர் நடக்கும்’ என்றிருக்கிறார். இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்களின் பிரதிநிதியாக தி.மு.க உரிமை கொண்டாடிவரும் நிலையில், திருமாவளவனின் பேச்சு கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மற்றொரு பக்கம், துரை வைகோ தெலங்கானாவுக்குச் சென்று ராகுலின் பயணத்தில் பங்கேற்றார். இது தி.மு.க தயவின்றி, நேரடியாக காங்கிரஸ் தலைமையை அணுகும் டெல்லி அரசியலாகச் சர்ச்சை ஓடுகிறது.

கே.பாலகிருஷ்ணன்
கே.பாலகிருஷ்ணன்

2024 நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, கூட்டணிக் கட்சிகளுக்கு மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே சீட்டுகளை ஒதுக்க முடிவெடுத்திருக்கிறது அறிவாலயம். கர்நாடகா மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றால், அந்த வெற்றியைக் கைகாட்டி, தமிழ்நாட்டில் அதிக சீட்டுகளை அந்தக் கட்சி எதிர்பார்க்கும். வி.சி.க., கம்யூனிஸ்ட், ம.தி.மு.க உள்ளிட்ட இயக்கங்களும் உரிய மரியாதையை எதிர்பார்க்கும். அந்தச் சமயத்தில், தி.மு.க கூட்டணியில் சலசலப்பு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. அதை அ.தி.மு.க சரியாகப் பயன்படுத்திக்கொண்டால், எங்கள் பக்கம் அவர்கள் சாயவும் வாய்ப்பிருக்கிறது. பா.ஜ.க-வுடன் நாங்கள் கூட்டணியில் இருப்பது, அவர்களுக்கு நெருடலை ஏற்படுத்தும் என்பது தெரியும். நீதிமன்றத் தீர்ப்பு, தேர்தல் ஆணையத்திலிருக்கும் சின்னம் என அனைத்து ரூட்டுகளும் க்ளியராகும் பட்சத்தில் அ.தி.மு.க கையிலெடுக்கும் பிளான் ‘பி’-யில் அதற்கான தீர்வுகளை வைத்திருக்கிறார் எடப்பாடி. வலையை விரித்திருக்கிறோம். விழுவதெல்லாம் லாபம்தான்” என்றனர்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருட காலம் அவகாசமிருந்தாலும், கூட்டணிக்கான முன்னெடுப்புகள் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றன. ஒவ்வொரு தேர்தலின்போதும், கூட்டணி சீட் பங்கீட்டை முதல் ஆளாக முடித்துவிட்டு, பிரசாரத்தை ஜரூராகத் தொடங்கிவிடுவார் ஜெயலலிதா. அதே பாணி அரசியலை எடப்பாடியும் கையில் எடுத்திருக்கிறார். தினகரனுடன் சமரசம், தி.மு.க கூட்டணிக் கட்சிகளுக்கு வலை விரிப்புகளோடு, டெல்லிக்கும் ‘க்ளீன் சிக்னல்’-ஐ அனுப்பியிருக்கிறார் அவர். வருகிற நவம்பர் 21-ம் தேதி, உச்ச நீதிமன்றத்தில் பொதுக்குழு தொடர்பான வழக்கில் விசாரணை நடக்கவிருக்கிறது. பெரும்பாலும் அன்றே தீர்ப்பு வெளியாகலாம் என்கிறார்கள். அதையொட்டி, அ.தி.மு.க-வின் தட்பவெப்பத்தில் பல மாற்றங்கள் வர வாய்ப்பிருக்கிறது!

****

பொள்ளாச்சி ஜெயராமன்
பொள்ளாச்சி ஜெயராமன்

“பல ட்விஸ்ட்டுகள் இருக்கின்றன!”

“இந்திரா காந்தி காலத்திலிருந்து வாஜ்பாய் காலம் வரை தமிழகத்தில் அ.தி.மு.க தலைமையில்தான் கூட்டணி அமைக்கப்பட்டிருக்கிறது. அதன்படிதான் தற்போது, `நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணியும் அ.தி.மு.க தலைமையில் அமையும்’ என்று எடப்பாடி தெளிவாகக் கூறியிருக்கிறார். தி.மு.க-வின் ஒன்றரையாண்டு ஆட்சியில் மக்கள் மட்டுமல்லாமல், அவர்களின் கூட்டணிக் கட்சியினரும் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். பொதுவுடைமைக் கட்சியினர், ஆட்சிக்கு எதிராகக் கண்டங்களைத் தொடர்ந்து பதிவுசெய்துவருகிறார்கள். அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை மெகா கூட்டணியோடுதான் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறது. கூட்டணி தொடர்பாக மூத்த நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டு வருவதால், அது குறித்து வெளிப்படையாகப் பேச முடியாது. ஆனால், பல ட்விஸ்ட்டுகள் இருக்கின்றன!”

- பொள்ளாச்சி ஜெயராமன், பொள்ளாச்சி மாநகர மாவட்டச் செயலாளர், இ.பி.எஸ் அணி.

****

கோவை செல்வராஜ்
கோவை செல்வராஜ்

“எடப்பாடியின் முடிவை பா.ஜ.க நம்பாது!”

“இந்தியாவிலேயே மிக வலிமையான மாநிலக் கட்சியாக இருந்த அ.தி.மு.க-வைத் தனது சுயநலத்துக்காக நான்கு துண்டுகளாக உடைத்தவர் எடப்பாடி. ஆனால் இப்போது, `வலிமையாக இருந்து தேர்தலைச் சந்திக்க மெகா கூட்டணி அமைப்போம்’ என்று பேசுகிறார். தொண்டர்களையும் நிர்வாகிகளையும் ஏமாற்றவே அவர் இது போன்று பேசுகிறார். அவரின் பேச்சைத் தொண்டர்கள் மட்டுமல்ல, அரசியல் கட்சியினரும் நம்ப மாட்டார்கள். சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்து எடப்பாடிதான் முடிவுசெய்தார். அதனால்தான், தேர்தலில் பெரிய தோல்வியைச் சந்தித்தோம். எனவே, எடப்பாடியின் எந்த முடிவையும் பா.ஜ.க விரும்பாது, நம்பாது!”

- கோவை செல்வராஜ், செய்தித் தொடர்பாளர், ஓ.பி.எஸ் அணி.