Published:Updated:

வைப்ரேஷன் எடப்பாடி... சைலன்ட் பன்னீர் - டெல்லி சிக்னல் யாருக்கு?

எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம்
பிரீமியம் ஸ்டோரி
எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம்

அ.தி.மு.க-வை வீழ்த்தி கட்சியை வளர்க்க நினைக்கும் பா.ஜ.க-வின் திட்டத்தை எடப்பாடி தெளிவாகப் புரிந்துவைத்திருக்கிறார். அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்பதிலும் திடமாக இருக்கிறார்.

வைப்ரேஷன் எடப்பாடி... சைலன்ட் பன்னீர் - டெல்லி சிக்னல் யாருக்கு?

அ.தி.மு.க-வை வீழ்த்தி கட்சியை வளர்க்க நினைக்கும் பா.ஜ.க-வின் திட்டத்தை எடப்பாடி தெளிவாகப் புரிந்துவைத்திருக்கிறார். அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்பதிலும் திடமாக இருக்கிறார்.

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம்
பிரீமியம் ஸ்டோரி
எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம்

பத்து நாள்களுக்குப் பிறகு, அ.தி.மு.க தலைமைக் கழகமான எம்.ஜி.ஆர் மாளிகையின் சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. வங்கிகள், அ.தி.மு.க கணக்குகளைக் கையாள பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு அனுமதியளித்திருக்கின்றன. ஆனாலும், எடப்பாடி தரப்பு முழுமையாக உற்சாகமடையவில்லை. நிலுவையிலிருக்கும் வழக்குகள், அடுத்தடுத்த ரெய்டுகள் எடப்பாடியை வைப்ரேஷன் மோடிலேயே வைத்திருக்க, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழாவைக் காரணமாகவைத்து டெல்லிக்குப் பறந்திருக்கிறார் எடப்பாடி. தலைமைக் கழகச் சாவியும், பொருளாளர் அதிகாரமும் போனாலும், `சட்டமும் தேர்தல் ஆணையமும் தன்னைக் கைவிடாது’ என்கிற நம்பிக்கையில் வழக்கமான தனது சைலன்ட் மோடிலேயே இருக்கிறார் பன்னீர். ஆனாலும், தன் பங்குக்கு டெல்லியின் ஆதரவைப் பெறத் தொடர்ந்து முயன்றுவருகிறார். இரு தரப்பிடமும் கண்ணாமூச்சி ஆடும் டெல்லியின் சிக்னல் யாருக்குக் கிடைக்கும்..?

அகற்றப்பட்ட சீல்... வங்கிகள் தந்த உற்சாகம்!

கடந்த ஜூலை 11-ம் தேதி, வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் பொதுக்குழு நடந்துகொண்டிருக்க, சென்னை ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமைக் கழகத்துக்கு வெளியே எடப்பாடி தரப்புக்கும், பன்னீர் தரப்புக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இரு தரப்பினரும் மோதிக்கொண்டதில், அந்த இடமே வன்முறைக் களமாகக் காட்சியளித்தது. சுமார் 47 பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வருவாய்க் கோட்ட அலுவலர் அ.தி.மு.க அலுவலகத்துக்குச் சீல் வைத்தார். ‘சீலை அகற்றி தங்களிடம் அலுவலகத்தை ஒப்படைக்க வேண்டும்’ என ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இரு தரப்புமே நீதிமன்றத்தை அணுகின. இந்த வழக்கில் ‘எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் அலுவலகச் சாவியை ஒப்டைக்க’ கடந்த புதன்கிழமை நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே

நாளில், `கட்சியின் வங்கிக் கணக்கு விவகாரங்களை யாரிடமும் ஒப்படைக்கக் கூடாது’ என அ.தி.மு.க-வின் கணக்குகள் உள்ள வங்கிகளுக்கு ஓ.பி.எஸ் எழுதிய கடிதமும் நிராகரிக்கப்பட்டது. `எடப்பாடி பழனிசாமியிடமிருந்து ஆதாரங்களுடன்கூடிய கடிதம் பெறப்பட்டிருக்கிறது. ஆனால், ஓ.பி.எஸ் தரப்பிலிருந்து கடிதம் மட்டுமே தரப்பட்டிருக்கிறது. ஓ.பி.எஸ் தரப்பின் போதிய ஆதாரமின்மையால், வங்கிக் கணக்குகளைக் கையாள, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது’ என வங்கித் தரப்பிலிருந்து சொல்லப்பட்டிருக்கிறது. தொண்டர்கள் மத்தியில் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் தென்பட்டாலும், அடுத்தடுத்த ரெய்டு காட்சிகளால் எதையும் கொண்டாட முடியாமல் முன்னணி நிர்வாகிகள் கலக்கத்தில்தான் இருக்கிறார்கள்.

வைப்ரேஷன் எடப்பாடி... சைலன்ட் பன்னீர் - டெல்லி சிக்னல் யாருக்கு?

இன்னும் காத்திருக்கும் ரெய்டுகள்... முக்கிய நிர்வாகிகளுக்குக் குறி!

பொதுக்குழுவுக்கு முன்பாக, அமைச்சர் வேலுமணியின் நிழலாக வலம்வரும் சந்திரசேகர், எடப்பாடிக்கு நெருக்கமான தொழிலதிபர் செய்யாதுரை ஆகியோரின் வீட்டில் அதிரடி ரெய்டு நடத்தியது வருமான வரித்துறை. `அ.தி.மு.க நிர்வாகிகளுக்கு உங்கள் தரப்பிலிருந்து பணம் கொடுக்கப்பட்டதா?’ எனச் செய்யாதுரையிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. பொதுக்குழுவை நடத்தவிடாமல் எங்களை எச்சரிக்கை செய்யவே சோதனைகள் நடத்தப்படுவதாக எடப்பாடி தரப்பு கொந்தளித்தது. இந்த நிலையில், கடந்த புதன்கிழமை (20.07.2022) மதுரையிலுள்ள கிளாட்வே, ஜெயபாரத், அன்னை பாரத், கிளாட்வே கிரீன் சிட்டி, ஆர்.ஆர்.கன்ஸ்ட்ரக்‌ஷன் உள்ளிட்ட கட்டுமான நிறுவனங்களுக்குச் சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். பல கோடி ரூபாய் பணம் மற்றும் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் அன்னை பாரத் என்கிற நிறுவனம் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கும், ஆர்.ஆர்.கன்ஸ்ட்ரக்‌ஷன் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான ஒருவருடன் தொடர்புள்ள நிறுவனம் என்றும் சொல்லப்படுகிறது.

இது தவிர, குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்ட பலரை விசாரிக்க தமிழ்நாடு அரசுக்கு சி.பி.ஐ கடிதம் எழுதியிருக்கிறது. இன்னும் சில நாள்களில் நத்தம் விசுவநாதன், ராஜன் செல்லப்பா, கே.பி.முனுசாமி உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகளின் வீடுகளிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெறவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எல்லாவற்றுக்கும் உச்சமாக, எடப்பாடி பழனிசாமி ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகார் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு விரைவில் வரவிருக்கிறது. இப்படி டெல்லி அடுத்தடுத்த பல தாக்குதல்களைத் தொடுக்கவே, ஜனாதிபதி பிரிவு உபசார விழாவைப் பயன்படுத்தி டெல்லிக்குப் பயணப்பட்டிருக்கிறார் எடப்பாடி என்கிறார்கள்.

வைப்ரேஷன் எடப்பாடி... சைலன்ட் பன்னீர் - டெல்லி சிக்னல் யாருக்கு?

டெல்லி பயணமும்... பிளான் ‘பி’யும்!

டெல்லி செல்லும் எடப்பாடி, ஐந்து நாள்கள் அங்கே தங்கவிருப்பதாகச் சொல்கிறார்கள். பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகவும், அதற்கான ஏற்பாட்டை, கட்சியின் சீனியரான தம்பிதுரை செய்துவருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இது தொடர்பாக எடப்பாடி ஆதரவு முன்னாள் அமைச்சர்கள் சிலரிடம் பேசினோம். “2017-ம் ஆண்டு ஓ.பி.எஸ் வலிமையாக இருந்ததால் ஆட்சியைக் காப்பாற்ற சில சமரசங்களைச் செய்யவேண்டியிருந்தது. அதைப்போலவே, கட்சியில் நடக்கும் எல்லா விஷயங்களையும் டெல்லி மேலிடம் உன்னிப்பாக கவனித்துவந்தது. அன்றைக்குச் சூழல் வேறு. எனவே, ஆட்சியைத் தக்கவைக்க அவர்களுக்கு இணங்கிச் செல்லவேண்டிய நிர்பந்தம் அப்போது ஏற்பட்டது. ஆனால், இப்போது எங்களுக்கு எந்த நிர்பந்தமும் இல்லை. இடைக்காலப் பொதுச்செயலாளராக வலிமையாக இருக்கிறார் எடப்பாடி.

அ.தி.மு.க-வை வீழ்த்தி கட்சியை வளர்க்க நினைக்கும் பா.ஜ.க-வின் திட்டத்தை எடப்பாடி தெளிவாகப் புரிந்துவைத்திருக்கிறார். அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்பதிலும் திடமாக இருக்கிறார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கூட்டணி என்றால், அது அ.தி.மு.க தலைமையில்தான் இருக்கும். இந்த விஷயம், டெல்லி மேலிடத் தூதுவர்களிடமே தெளிவாகச் சொல்லப்பட்டுவிட்டது. ஒற்றைத் தலைமை விவகாரத்தில், டெல்லி தலையீடுகளைத் தாண்டி அடுத்தடுத்து வெற்றிபெற்றுவருகிறோம். அதனால்தான், முன்னாள் அமைச்சர்கள்மீது வருமான வரித்துறை, சி.பி.ஐ மூலம் எங்களுக்குக் குடைச்சல் கொடுக்கத் தொடங்கியிருக்கிறது டெல்லி. அதேநேரம், அம்மா போன்று முரண்டுப்பிடியாக எடப்பாடி யாரையும் எதிர்க்க மாட்டார். இறங்கிப் போகவேண்டிய நேரத்தில் இறங்கிப்போவார். டெல்லி எங்கள் பக்கம்தான் என ஓ.பி.எஸ் தரப்பு போடும் வேஷத்தைக் கலைத்து, தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் நம்பிக்கையளிக்கவும், பொதுக்குழுத் தீர்மானங்களைத் தேர்தல் ஆணையத்தை அங்கீகரிக்க வைக்கவும்தான் எடப்பாடியின் இந்த டெல்லி பயணம். நிச்சயமாக இந்தப் பயணத்தில் சுமுக முடிவு எட்டப்படும். ஒருவேளை டெல்லி எங்களிடம் இணக்கம் காட்டவில்லையென்றால் ‘பிளான் பி’ எங்களிடம் இருக்கிறது. அதற்கான வேலைகளும் நடக்கின்றன. சாவி எங்கள் கைக்கு வந்ததுபோல, கட்சியின் மொத்த அதிகாரமும் எங்கள் கைக்கு வரும். அதற்கு முன்பாக, கட்சியின் தொண்டர்கள் அனைவரையும் அணிதிரட்டும் பணியையும் செய்துவருகிறோம்” என்றார்கள்.

புதிய நிர்வாகிகள் நியமனம்... பிரமாண்டப் பொதுக்கூட்டம்!

உடல்நிலை பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பன்னீர், மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனதும் நிர்வாகிகளைச் சந்திக்கத் திட்டமிட்டிருக்கிறார். எடப்பாடி தரப்பு அடுத்தடுத்து தெளிவாகக் காய்நகர்த்தி, தங்களுக்குச் சாதகமாகக் காரியம் சாதித்துவரும் நிலையை ஓ.பி.எஸ்-ஸின் ஆதரவாளர்கள் அவரிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், `இது போன்ற சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் நீங்கள் அலட்டிக்கொள்ள வேண்டாம். நிர்வாகிகளைச் சந்தியுங்கள். ஆதரவாளர்களைத் திரட்டுங்கள்’ என்பது மட்டுமே ஓ.பி.எஸ்-ஸிடமிருந்து பதிலாக வந்திருக்கிறது.

இது குறித்து நம்மிடம் பேசிய அவரின் ஆதரவாளர்கள், ``பொதுக்குழு நடத்தத் தடையில்லை என உயர் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் இருக்கிறது. தவிர, பொதுக்குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச்செயலாளராகத் தேர்வானதை ஏற்கக் கூடாது என்றும் ஓ.பி.எஸ் தேர்தல் ஆணையத்தில் ஒரு மனு கொடுத்திருக்கிறார். நிச்சயமாக, கட்சியில் ஒரு பிரிவினர், அதிலும் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்த ஒருவரே எதிர்ப்பு தெரிவிக்கும்போது, நிச்சயமாகத் தேர்தல் ஆணையம் அவ்வளவு எளிதில் தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளாது. இரு தரப்பும் சமாதானம் ஆனால் மட்டுமே அடுத்தகட்ட நகர்வு இருக்கும். அந்த நம்பிக்கையில்தான் ஓ.பி.எஸ் இருக்கிறார். அலுவலகத்தைத் திரும்பப் பெற்றதிலும், வங்கிக் கணக்கைக் கையாளும் உரிமையைப் பெற்றதிலும் எடப்பாடியின் வழக்கமான ‘கவனிப்புகள்’தான் பிரதானமாக இருந்தன என்பதை அவரிடம் எடுத்துச் சொன்னோம். கூடவே டெல்லி தரப்பிலும் அவர்கள் முயல்வதைக் குறித்துச் சொன்னோம். `டெல்லி தரப்பு அவ்வளவு சீக்கிரம் நம்மைக் கைவிட மாட்டார்கள். தேர்தல் ஆணையத்திலும் நமக்குச் சாதகமாகத்தான் காரியம் நடக்கும். பொறுத்திருங்கள்’ என்பதே அவரின் பதிலாக இருந்தது. ஓ.பி.ரவீந்திரநாத் தொடர்ச்சியாக டெல்லியில் பா.ஜ.க தலைவர்களைச் சந்தித்துவருகிறார். பிரதமர் மோடி சென்னைக்கு வரும்போது, அவரைச் சந்திக்க நேரம் கேட்டோம். அதுவும் கிடைத்திருக்கிறது. விரைவில் எங்கள் தரப்பில் மாநில, மாவட்ட அளவில் நிர்வாகிகள் நியமனம் நடக்கவிருக்கிறது. பிரமாண்ட பொதுக்கூட்டங்களையும் நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். எங்கள் பக்கம் நியாயம் இருக்கிறது. நாங்கள் எதற்கும் அவசரப்பட வேண்டியதில்லை. அதனால்தான் நாங்கள் அமைதியாக இருக்கிறோம்’’ என்கிறார்கள்.

வைப்ரேஷன் எடப்பாடி... சைலன்ட் பன்னீர் - டெல்லி சிக்னல் யாருக்கு?

யார் பார்ட்னர்... என்ன முடிவு?

பா.ஜ.க வட்டாரத்தில் பேசினோம். ``நீதித்துறை சார்ந்து எடப்பாடி தரப்புக்கு ஆதரவாகச் சில தீர்ப்புகள் வருவதற்கு, பல காரணங்கள் இருக்கின்றன. எங்கள் தலைமைக்கு நெருக்கமான ஒரு முன்னாள் நீதிபதிதான் எடப்பாடிக்கு மிகவும் பக்கபலமாக இருந்து செயல்பட்டுவருகிறார். அந்த வழியில் சுமுகப் பேச்சுவார்த்தை நடத்த முயன்றுவருகிறார். தவிர, பா.ஜ.க தேசியப் பொறுப்பில் இருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் நிர்வாகியும், மாநிலப் பொறுப்பில் இருக்கும் ஒருவரும் எடப்பாடிக்கு ஆதரவாக இருக்கிறார்கள். பன்னீரை நம்பினால் ஒன்றும் வேலைக்கு ஆகாது, எடப்பாடிதான் நமக்கு எல்லா வகையிலும் `Valuable Partner’-ஆக இருப்பார் என்கிற செய்தியை அமித் ஷாவின் காதுக்குக் கொண்டுபோயிருக்கிறார்கள்.

அதேவேளையில் தமிழ்நாட்டிலிருந்து பிரதமர் மோடிக்கு ஒரு ரிப்போர்ட்டும் சென்றிருக்கிறது. அதில், `2024 தேர்தலில் தி.மு.க-வுக்கு எதிராக நாம் என்ன கூட்டணி அமைத்தாலும், அதிக இடங்களில் வெல்வது சாத்தியமில்லை. தவிர, அ.தி.மு.க கூட்டணியில் 5-லிருந்து 8 சீட்டுகளைத் தாண்டி ஒதுக்கவும் மாட்டார்கள். அப்படியே ஒதுக்கினாலும், உள்ளடி வேலைகள் செய்து பா.ஜ.க வேட்பாளர்களைத் தோற்கடிக்கத்தான் பார்ப்பார்கள். அதனால், கட்சியின் வாக்குவங்கியும் குறையும். எனவே, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இரட்டை இலையை முடக்கி, அ.தி.மு.க (பன்னீர் அணி), டி.டி.வி., தே.மு.தி.க., பா.ம.க உள்ளிட்ட கட்சிகளைச் சேர்த்து பா.ஜ.க தலைமையில் ஒரு கூட்டணி அமைத்து நம் கட்சியின் வாக்குவங்கியை அதிகரிக்கும் வேலையைச் செய்யலாம். சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட பத்து தொகுதிகளைக் குறிவைத்தால், நிச்சயமாக ஐந்து இடங்களிலாவது வெற்றிபெற முடியும். மும்முனைப் போட்டிதான் பா.ஜ.க-வின் எதிர்காலத்துக்கு நல்லது. அதேபோல, இரட்டை இலை இல்லாவிட்டால் அந்தத் தேர்தலோடு எடப்பாடியும் காணாமல் போய்விடுவார்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. எடப்பாடியின் அடுத்தடுத்த வெற்றிகரமான மூவ்களை எங்கள் தலைமை கூர்மையாகவே கவனித்து வருகிறது. அதனால்தான், அவருக்கான நெருக்கடிகளையும் கொடுத்துவருகிறது. பன்னீருக்கு ஆதரவாகச் செயல்பட தலைமைக்குப் பெரிய காரணங்கள் எதுவுமில்லை என்றாலும், எடப்பாடியை கட்டுக்குள்வைக்க பன்னீர் ஒரு நல்ல துருப்புச்சீட்டு என்கிற வகையில் தலைமை பன்னீரையும் அவ்வளவு சீக்கிரம் கைவிடாது. 2017-ல் இப்படியான ஒரு சந்தர்ப்பம் அமைந்தபோது, அ.தி.மு.க-வைச் சரியாக நாங்கள் பயன்படுத்திக்கொள்ளவில்லை. இந்த முறை தவறவிட மாட்டோம்” என்றார்கள்.

அ.தி.மு.க-வின் தலைமை பீடத்துக்கான இந்த யுத்தத்தில், ‘அடுத்தடுத்து வெற்றிவாகை சூடிவரும் எங்களுக்கு டெல்லி மட்டுமே தடையாக இருக்கிறது’ என்கிறது எடப்பாடி தரப்பு. அதேவேளையில், எல்லாவற்றிலும் தொடர்ச்சியாகப் பின்னடைவைச் சந்தித்துவரும் பன்னீர் தரப்பும் ‘கடைசி நம்பிக்கையாக எங்களுக்கு டெல்லிதான் இருக்கிறது’ என்கிறது. டெல்லி தங்கள் கூட்டல், கழித்தல் கணக்குகளையெல்லாம் போட்டு ஒரு முடிவுக்கு வருவதற்குள், அ.தி.மு.க-வின் இரண்டு தரப்பிலுமே பல சலசலப்புகள் உண்டாகி, யூகிக்க இயலாத காட்சிகள் அரங்கேறலாம்!