Published:Updated:

இலை இல்லாத களத்தில் தாமரை!

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் தி.மு.க-வை எதிர்க்கும் வல்லமை பா.ஜ.க-வுக்கு மட்டுமே இருக்கிறது என்பது போன்ற ஒரு அரசியல் களத்தை உருவாக்க முயல்கிறார்கள்.

இலை இல்லாத களத்தில் தாமரை!

தமிழகத்தில் தி.மு.க-வை எதிர்க்கும் வல்லமை பா.ஜ.க-வுக்கு மட்டுமே இருக்கிறது என்பது போன்ற ஒரு அரசியல் களத்தை உருவாக்க முயல்கிறார்கள்.

Published:Updated:
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க அதிகார சதுரங்கத்தின் முதல்பாதியில் விறுவிறுவெனக் காய்களை நகர்த்தி கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி, இப்போது வேகம் குறைத்திருக்கிறார். தொடர்ச்சியாக இறக்கத்தையே கண்டுகொண்டிருந்த ஓ.பன்னீர்செல்வம் இப்போது புதுப்புது அறிவிப்புகளை வெளியிட்டு வேகம் காட்டத் தொடங்கியிருக்கிறார். ‘எடப்பாடியின் சைலன்ஸுக்கு அவரின் டெல்லிப் பயண அனுபவமே காரணம். பன்னீரின் வேகத்துக்கும் டெல்லியிலிருந்து கொடுக்கப்பட்ட சிக்னலே பிரதான காரணம்' என்று ரகசியம் சொல்கிறது இலைக்கட்சி வட்டாரம். கட்சிக்குள் நடக்கும் இந்த யுத்தத்தில் இது பன்னீரின் காலம் என்றாலும், தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க-வின் எதிர்காலம் என்னாகும் என்பதே அனைவரின் முன் நிற்கும் கேள்வியாக இருக்கிறது.

வியக்க வைத்த பதவிகள்... வியர்க்க வைத்த ரெய்டுகள்!

ஜூன் 11-ம் தேதி சென்னையில் நடந்த சிறப்புப் பொதுக்குழுவில் இடைக்காலப் பொதுச் செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி. அதே கூட்டத்தில், கட்சியின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனை அறிவித்தார். அடுத்தடுத்து கட்சியின் சீனியர்களுக்கு பதவிகளையும் வாரி இறைத்து வியக்க வைத்தார். சீல் வைக்கப் பட்டிருந்த அ.தி.மு.க தலைமைக் கழகத்தின் சாவிக்கு பன்னீரும் முட்டி மோதிய வேளையில், அது எடப்பாடி வசம் வந்தது. அதேபோல, கட்சியின் வங்கிக் கணக்குகளை நிர்வகிப்பது தொடர்பாகப் பன்னீர் எழுதிய கடிதம் நிராகரிக்கப் பட்டு, அந்தப் பொறுப்பு திண்டுக்கல் சீனிவாசன் வசம் வந்தது.

இலை இல்லாத களத்தில் தாமரை!

எடப்பாடிக்குச் சாதகமாக ஒருபுறம் இதுபோன்ற விஷயங்கள் அரங்கேறிக்கொண்டிருந்தாலும் மறுபுறம் எடப்பாடிக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் நடந்த ரெய்டுகள் அவரைப் பதற்றத்திலேயே வைத்திருந்தன. பொதுக்குழுவுக்கு முன்பாகவே, அமைச்சர் வேலுமணியின் நிழலாக வலம்வரும் சந்திரசேகர், எடப்பாடிக்கு நெருக்கமான தொழிலதிபர் செய்யாதுரை ஆகியோரின் வீடுகளில் அதிரடி ரெய்டு நடத்தியது வருமான வரித்துறை. ஆனால், எப்படியாவது பொதுக்குழுவை நடத்தி பொதுச்செயலாளராகிவிட வேண்டும் என்பதில் மட்டுமே அப்போது எடப்பாடியின் கவனம் முழுவதும் இருந்தது. தொடர்ச்சியாக, மதுரை, நத்தம் என எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் ரெய்டு படலம் அரங்கேற, கொஞ்சம் அதிர்ந்துதான் போனார் எடப்பாடி. கூடவே, குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்ட பலரை விசாரிக்க தமிழ்நாடு அரசுக்கு சி.பி.ஐ கடிதம் எழுத... மற்ற மாஜிக்களுக்கும் குப்பென வியர்க்க ஆரம்பித்தது.

ஏமாற்றம் தந்த டெல்லிப் பயணம்... என்ன செய்வார் எடப்பாடி?

அந்த நேரத்தில்தான், முன்னாள் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரிவுபசார விழாவில் கலந்துகொள்ள எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், தேர்தல் ஆணையத்தில் இன்னும் அங்கீகரிக்கப்படாத பொதுக்குழுத் தீர்மானங்கள், அடுத்தடுத்த ரெய்டுகள் உள்ளிட்ட பஞ்சாயத்துகளைச் சரிக்கட்டுவதற்காகவே டெல்லி செல்கிறார் எனக் கட்சி வட்டாரத்தில் சொல்லப்பட்டது. ஐந்து நாள் பயணத்தில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட பலரைச் சந்திக்கத் திட்டமிட்டி ருந்ததாகவும் அ.தி.மு.க வட்டாரத்தில் செய்திகள் வெளியாகின. ஆனால், இரண்டு நாள்களிலேயே பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பியிருக்கிறார் எடப்பாடி.

டெல்லிப் புள்ளிகள் அவருக்கு நேரம் கொடுக்காததற்கு, ஜனாதிபதி பதவியேற்பு, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் உள்ளிட்ட பல காரணங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால், திட்டமிட்டுப் புறக்கணித்திருப்பதாகவே எடப்பாடி தரப்பு நினைக்கிறது. கூடவே, எடப்பாடி தமிழ்நாட்டுக்கு வந்திறங்கிய மறுநாளே ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகார் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் விரைந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. ‘‘இந்த வாரத்தில் தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியைச் சந்தித்து, கட்சிக்குழப்பங்கள் குறித்து விவரிக்க எடப்பாடி முயற்சி செய்வார். அப்போதும் கைமீறிப் போனால், டெல்லி கிழித்த எல்லைக்கோட்டைத் தாண்டி நடவடிக்கைகளில் இறங்க இருக்கிறோம்'' என்கிறார்கள் எடப்பாடி ஆதரவாளர்கள்.

இலை இல்லாத களத்தில் தாமரை!

ஆட்டம் இனிதான் ஆரம்பம்... பன்னீரின் பலே திட்டம்!

டெல்லியிலிருந்து எடப்பாடி தமிழ்நாட்டுக்குச் சோர்வாகத் திரும்பிய நாளில், மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி மிகவும் உற்சாகமாக வீட்டுக்கு வந்தார் பன்னீர்செல்வம். மத்திய அமைச்சர் ஒருவரின் நலம் விசாரிப்புடன் கூடிய கிரீன் சிக்னலே அதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. வீட்டுக்கு வந்த சில மணி நேரத்திலேயே சென்னை தொடங்கி ராமநாதபுரம் வரை 14 மாவட்டங்களுக்குச் செயலாளர்களை அறிவித்தார் பன்னீர். அடுத்த நாளே இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கத்தையும் துணை ஒருங்கிணைப்பாளர்களாக ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன், கு.ப.கிருஷ்ணன் ஆகியோரையும் அறிவித்தார். விரைவில், பிற மாவட்டங்களுக்கான பொறுப்பாளர்களும் அறிவிக்கப்பட இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொதுக்கூட்டங்களை நடத்தவும் திட்டமிட்டிருக்கிறது பன்னீர் தரப்பு. தவிர, ஓ.பி.எஸ்ஸின் மகன் ரவீந்திரநாத் குமார் அ.தி.மு.க எம்.பியாக மக்களவையில் தொடரக்கூடாது என எடப்பாடி பழனிசாமி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்குக் கடிதம் எழுதியும் அது ஏற்கப்படாதது பன்னீருக்குக் கூடுதல் டானிக்காக இருக்கிறது.

இது ஒருபுறமிருக்க, பொதுக்குழு நாளன்று காலை ஒன்பது மணிக்குக் கொடுக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார் பன்னீர். பொதுக்குழுவை ஏற்கக்கூடாது எனத் தேர்தல் ஆணையத்திடமும் முறையிட்டி ருக்கிறார். தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும்வரை, வங்கிக் கணக்குகளை முடக்க ஆர்.பி.ஐக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். தலைமைக் கழகச் சாவியைத் திரும்பப் பெற உச்ச நீதிமன்றம் செல்லவிருக்கிறார். இப்படி எடப்பாடியின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் எதிராக வேகம் காட்டுகிறார் பன்னீர்.

தமிழ்நாடு வரும் பிரதமரை பன்னீர் சந்திக்க இருப்பதாகவும், அதற்கு முன்பாகவே பன்னீரின் சார்பில் வைத்திலிங்கம் உள்ளிட்ட அவரின் ஆதரவாளர்கள் சென்று பா.ஜ.க தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷிடம் பேச இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், `கட்சியிலிருந்து பல்வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்டவர்கள் அவரவர் பொறுப்புகளில் தொடர்வார்கள்' என மருத்துவமனையில் இருந்தபடி அறிக்கை வெளியிட்டார் பன்னீர். அதைக் குறிப்பிட்டு `சசிகலா தொடங்கி அன்வர்ராஜா, பெங்களூர் புகழேந்தி என அனைவரும் இதில் அடங்குவார்கள். இனிதான் உண்மையான ஆட்டம் இருக்கிறது' எனக் கொக்கரிக்கிறது பன்னீர் தரப்பு.

இலை இல்லாத களத்தில் தாமரை!

எடப்பாடி ஆதரவு... எரிச்சலில் டெல்லி!

அ.தி.மு.க நிர்வாகிகளிடமும் தொண்டர்களிடமும் எடப்பாடிக்கு எழுந்திருக்கும் அமோக ஆதரவை டெல்லி பா.ஜ.க தலைமை துளியும் ரசிக்கவில்லை. ஜெயலலிதாவுக்குப் பிறகு அந்தக் கட்சியில் சக்திவாய்ந்த ஒரு தலைவர் உருவாவதையும் டெல்லி தலைவர்கள் விரும்பவில்லை. சசிகலா, டி.டி.வி.தினகரன் என்று பலரின் இமேஜை தொடர்ச்சியாக டேமேஜ் செய்ததன் பின்னால் இருக்கும் முக்கியக் காரணமும் இதுதான். அந்தவகையில், தங்களுக்குக் கைக்கு அடக்கமாக இருப்பார் என எதிர்பார்த்திருந்த எடப்பாடியின் திடீர் பாய்ச்சலைக் கண்டு ஷாக் ஆகியிருக்கிறது பா.ஜ.க தலைமை. மக்கள் மத்தியில் இல்லாவிட்டாலும் அ.தி.மு.க நிர்வாகிகளின் மத்தியில் எடப்பாடிக்குப் பெருகும் ஆதரவு அவர்களை எரிச்சலடையச் செய்திருக்கிறது. அதன் காரணமாகவே அழைப்பு விடுக்கப்பட்டு நோஸ்கட் செய்யப்பட்டிருக்கிறார் எடப்பாடி.

`பணம்தான் விளையாடுகிறது' என நோட் கொடுக்கப்பட்டு, பொதுக்குழுவுக்கு முன்பாகவே ரெய்டு பயத்தைக் காட்டியும் எடப்பாடி அசராமல் இருந்ததே அடுத்தடுத்த ரெய்டுகளுக்கும், வழக்குகள் வேகமெடுப்பதற்கும் காரணம் என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தில். இன்னும் சில நாள்களில் எடப்பாடி உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் பலர் வழக்குகளுக்குப் பின்னால் அலைய நேரிடலாம்.

இலை இல்லாத களத்தில் தாமரை!

குழப்பக் கட்சி... டெல்லிக் கணக்கு!

மகாராஷ்டிரா குழப்பங்களுக்குப் பிறகு ‘சிவசேனா கட்சி யாருக்குச் சொந்தம்' என்று கண்டுபிடிக்கும் விசாரணையில் இப்போது தேர்தல் ஆணையம் இறங்கியிருக்கிறது. இதுபோலவே அ.தி.மு.க விவகாரமும் தேர்தல் ஆணைய விசாரணை வளையத்துக்குள் விரைவில் வரக்கூடும்.

‘‘தமிழகத்தில் தி.மு.க-வை எதிர்க்கும் வல்லமை பா.ஜ.க-வுக்கு மட்டுமே இருக்கிறது என்பது போன்ற ஒரு அரசியல் களத்தை உருவாக்க முயல்கிறார்கள். இரட்டைத் தலைமை, வெவ்வேறு விதமான கருத்துகளை வெளியிடும் மூத்த தலைவர்கள் எனக் குழப்பத்தில் அ.தி.மு.க இருப்பது பா.ஜ.க-வுக்கு நல்லது. அ.தி.மு.க ஒற்றைத் தலைமையின் கீழ் வலுவடைவது நல்லதல்ல. அ.தி.மு.க வலுவாக இருக்கும்வரை தி.மு.க-வுக்கு நேரெதிரான கட்சியாக அ.தி.மு.க-வே பார்க்கப்படும். அதனால், அ.தி.மு.க நிர்வாகிகளைக் குழப்பி அவர்களைத் தங்கள் பக்கம் இழுக்கவும் தொண்டர்களைக் குழப்பி தங்கள் கட்சிக்கு ஆதரவு திரட்டவுமே பா.ஜ.க தலைமை திட்டமிடுகிறது. இலை இல்லாத களத்தில் தாமரையைத் தமிழக மக்கள் மனதில் பதியச் செய்வதே பா.ஜ.க தலைமையின் திட்டம்'' என்கிறார், எடப்பாடி பக்கம் இருக்கும் சீனியர் தலைவர் ஒருவர்.

பல மாநிலங்களில் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு புது ஆட்சி அமைப்பது பா.ஜ.க-வின் அரசியல் சதுரங்கம் என்றால், தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியைக் கலகலக்க வைத்துவிட்டு அந்த இடத்துக்கு வர முயல்வதே அவர்களின் அரசியல் கணக்காக இருக்கிறது. அ.தி.மு.க குழப்பங்கள் இதற்கு எந்த அளவு உதவும் என்பதுதான் இப்போது இருக்கும் அரசியல் கேள்வி.