Published:Updated:

அராஜகம்... அவமதிப்பு... ஆக்ரோஷம்... மீண்டும் பிளவுபடும் அ.தி.மு.க?

அ.தி.மு.க
பிரீமியம் ஸ்டோரி
அ.தி.மு.க

‘ஓ.பி.எஸ் ஓடிப் போ, ஒற்றைத் தலைமை வேண்டும், துரோகி ஓ.பி.எஸ்’ என கோஷங்கள் ஒலித்தன

அராஜகம்... அவமதிப்பு... ஆக்ரோஷம்... மீண்டும் பிளவுபடும் அ.தி.மு.க?

‘ஓ.பி.எஸ் ஓடிப் போ, ஒற்றைத் தலைமை வேண்டும், துரோகி ஓ.பி.எஸ்’ என கோஷங்கள் ஒலித்தன

Published:Updated:
அ.தி.மு.க
பிரீமியம் ஸ்டோரி
அ.தி.மு.க

ஜூன் 23-ம் தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு வந்தவர்களை வரவேற்று, ‘வரலாற்றுச் சிறப்புமிக்க பொதுக்குழுவுக்கு வருபவர்களை வருக, வருக என வரவேற்கிறோம்’ என சென்னை வானகரம் முழுவதும் போஸ்டர்களால் திணறடித்திருந்தனர் கட்சி நிர்வாகிகள். உண்மைதான்... முதன்முறையாக, பொதுக்குழுவில் கொண்டுவந்த 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டன, கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் வெளிநடப்பு செய்தார், கூச்சல், குழப்பம், அவமதிப்புகள் நிறைந்த காட்சிகளுடன் பொன்விழா காணும் அ.தி.மு.க-வின் வரலாற்றில், இந்தப் பொதுக்குழு புதிய சாதனையைப் (?) பதிவுசெய்திருக்கிறது. தமிழ்நாட்டை 33 ஆண்டுகள் ஆண்ட ஒரு கட்சி, மீண்டுமொரு பிளவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது!

அராஜகம்... சர்வாதிகாரம்... கொதித்த பன்னீர்!

ஜூன் 21-ம் தேதியே, அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துடன் மேற்கொண்டிருந்த சமாதானத் தூதுப் படலத்தை நிறுத்திக்கொண்டது இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பு. அதேசமயம், பன்னீர் வசமிருந்த வேளச்சேரி அசோக், மைத்ரேயன், தச்சை கணேசராஜா உள்ளிட்ட ஆதரவாளர்களைச் சத்தமில்லாமல் தங்கள் பக்கம் எடப்பாடி தரப்பினர் இழுத்துக்கொண்டனர். எடப்பாடியின் வீட்டுக்குப் படையெடுப்பவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது. விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே தன் வீட்டு வாசலில் அமர்ந்திருந்ததால் வெலவெலத்துப் போனார் பன்னீர். ஒருகட்டத்தில் தன் ட்விட்டர் பதிவு மூலமாக, “கழகத்தில் அராஜக, சர்வாதிகாரப் போக்கு நிலவுகிறது” என்று வெடித்துத் தீர்த்தார். “பணத்தால் நிர்வாகிகளை விலை பேசுகிறார். அராஜகப் போக்கைக் கட்டவிழ்த்துவிடுகிறார்” என எடப்பாடியை விமர்சித்து பன்னீர் வீட்டு வாசலில் குழுமியிருந்த தொண்டர்களெல்லாம் கொந்தளித்தனர். அதேநேரம், “தொண்டர்களின் குரலுக்கு மதிப்பளிக்காமல் பன்னீர்தான் அராஜகம் செய்கிறார். கட்சியின் ஒருமித்த முடிவுக்கு எதிராக, வழக்கு போடச்சொல்லித் தொண்டர்களைத் தூண்டிவிடுகிறார்” என பதிலுக்குச் சாட்டையைச் சுழற்றியது எடப்பாடி தரப்பு.

இந்தக் களேபரங்களுக்கு இடையே, ‘பொதுக்குழு நடக்குமா... நடக்காதா?’ என்கிற கேள்விக்கான விடை உயர் நீதிமன்றத்தின் பதிலில் ஒளிந்திருந்தது. பரபரப்புகளுக்கு மத்தியில், அ.தி.மு.க பொதுக்குழுவுக்குத் தடைவிதிக்கக் கோரி, ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிச்சாமி, தணிகாச்சலம், பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் ஆகியோர் தாக்கல் செய்திருந்த வழக்குகளை ஜூன் 22-ம் தேதி விசாரித்தார் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி. மாலை 3 மணிக்குத் தொடங்கி, மூன்று மணி நேரம் காரசார வாதங்கள் நடந்தன. நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, இரவு 8:30 மணிக்குத் தீர்ப்பளித்த நீதியரசர் கிருஷ்ணன் ராமசாமி, “பொதுக்குழு நடத்த எந்தத் தடையுமில்லை. பொதுக்குழுவில் என்ன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை முடிவு செய்யவேண்டியது கட்சிதான். அதில் நீதிமன்றம் தலையிட முடியாது” என்று உத்தரவிட்டார். தீர்ப்பைத் தொடர்ந்து குஷி மூடுக்குச் சென்றது எடப்பாடி தரப்பு. பன்னீர் வீட்டில் லட்டுகளோடும் பட்டாசுகளோடும் காத்திருந்தவர்களெல்லாம் ஒருவர் பின் ஒருவராகக் கிளம்பினர். ‘ஒருங்கிணைப்பாளர் பதவி இன்றே கடைசி நாள்’ என எடப்பாடி ஆதரவாளர்களெல்லாம் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்திருந்த வேளையில், இரவு 11 மணிக்கு வந்தது ‘ட்விஸ்ட்.’

விடியலில் வந்த தீர்ப்பு!

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் மேல்முறையீடு செய்தார். அவரின் மேல்முறையீடு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, நீதியரசர்கள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வில் நள்ளிரவே விசாரணையும் நடத்தப்பட்டது. இந்த வழக்கில், பன்னீர், எடப்பாடி தரப்பிலும் வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிட்டனர். நம்மிடம் பேசிய அ.தி.மு.க வழக்கறிஞரணி நிர்வாகிகள் சிலர், “வாதத்தில், பொதுக்குழுவை ரத்துசெய்ய வேண்டுமென்பதைக் கைவிட்டு, ஒற்றைத் தலைமைத் தீர்மானம் கொண்டுவரக் கூடாது என்பதில் கவனம் செலுத்தியது பன்னீர் தரப்பு. அதற்குக் கைமேல் பலனும் கிடைத்தது. பன்னீர் தரப்புக்கு ஆதரவாக, ‘புதிதாக எந்தத் தீர்மானமும் நிறைவேற்றக் கூடாது’ என்கிற கட்டுப்பாட்டுடன், ஜூன் 23-ம் தேதி விடியற்காலை 4:10 மணிக்குப் பொதுக்குழுவுக்கு அனுமதியளித்தது நீதியரசர்கள் அமர்வு. இன்பதுரை, பாபு முருகவேல் எனப் பல வழக்கறிஞர்களைத் தன் பக்கம் வைத்திருந்தாலும், சட்டரீதியாக வாதங்களை எடுத்துவைப்பதில் எடப்பாடி கோட்டைவிட்டுவிட்டார்” என்றனர்.

உயர் நீதிமன்ற அமர்வின் உத்தரவைத் தொடர்ந்து, பன்னீர் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தனர். எடப்பாடி பழனிசாமி வீட்டில் அவரது ஆதரவாளர்கள் திரளத் தொடங்கினர். இதற்குப் பிறகுதான் பிரச்னையே தீவிரமானது. விடிய விடிய யாகத்தில் இருந்த பன்னீர், குளித்து முடித்து மஞ்சள் நிற வேட்டி, வெள்ளைச் சட்டையுடன் கோ பூஜை நடத்தினார். திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலிலிருந்து வந்த பிரசாதங்களை பயபக்தியுடன் ஏற்றுக்கொண்டார். அதேவேளையில், எடப்பாடி வீட்டிலும் யாகம் வளர்க்கப்பட்டது. யாகத்தின் முடிவில் தன் நெற்றியில் வைக்கப்பட்ட ‘மை’ கலையாமல், கவனமாகப் பார்த்துக்கொண்டார் எடப்பாடி. இருவர் வீட்டிலிருந்தும் கிளம்பிய யாகப் புகையைவிட, பொதுக்குழுவில் கிளம்பிய புகைதான் அ.தி.மு.க-வையே ஆட்டங்காணச் செய்துவிட்டது.

அராஜகம்... அவமதிப்பு... ஆக்ரோஷம்... மீண்டும் பிளவுபடும் அ.தி.மு.க?

“வராரு... வராரு...” கிளப்பிவிட்ட சி.வி.சண்முகம்!

வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடந்த பொதுக்குழுவுக்கு எடப்பாடியும் பன்னீரும் தனித் தனிப் பாதையில் பயணித்தனர். மண்டபத்துக்கு பன்னீர் போய்ச் சேர்ந்த கதையே, சிந்துபாத்தின் சாகசப் பயண ரகம். பொதுக்குழுவில் கலந்துகொண்ட அ.தி.மு.க சீனியர் நிர்வாகிகள் சிலர், “பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகளை எடப்பாடியின் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்தான் செய்திருந்தார். பொதுக்குழுவுக்கு பன்னீர் வரும் காரை வழிமறித்து கோஷமிடுவது, அவரோடு வரும் இதர கார்களை உள்ளே அனுமதிக்காமல் சுற்றலில்விடுவது என பெஞ்சமின் தரப்பு திட்டமிட்டது. மதுரவாயல் - வானகரம் சாலையில் ஆட்களும் களமிறக்கப்பட்டனர். இதையறிந்த பன்னீரின் ஆதரவாளர் கிருஷ்ணமூர்த்தி, பன்னீர், வைத்திலிங்கம் உள்ளிட்ட முக்கியமானவர்களை ஒரே பிரசார வேனில் ஏற்றி, அம்பத்தூர்- வானகரம் சாலை வழியாக, மாற்றுவழியில் மண்டபத்துக்குள் கொண்டுவந்துவிட்டார். ஆனால், மண்டபத்தில் கட்சி சார்பாக பன்னீரை யாருமே வரவேற்கவில்லை. அப்போதே பன்னீரின் முகம் வாடிப்போனது.

அவர் வந்திருப்பது தெரிந்தவுடன் வேகமாக எழுந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ‘வராரு... வராரு’ என்றபடி சைகை காட்ட, ‘ஓ.பி.எஸ் ஓடிப் போ, ஒற்றைத் தலைமை வேண்டும், துரோகி ஓ.பி.எஸ்’ என கோஷங்கள் ஒலித்தன. இதனால், 10:25 மணிக்கெல்லாம் மண்டபத்துக்கு வந்த பன்னீர், மேடைக்கே வராமல் பக்கத்து அறையில் இருந்தார். அவரோடு வந்த வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் மட்டும் மேடையில் அமர வந்தனர். அவர்களுக்கு எதிராக கோஷம் எழ, மேடையைவிட்டு இறங்கி பன்னீர் அமர்ந்திருந்த அறைக்குள் சென்றார்கள். இதற்கிடையே, ‘பன்னீர் வந்தால் எழுந்து நிற்கக் கூடாது’ என்று முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன், கே.சி.வீரமணி, செல்லூர் ராஜூ, அன்பழகன் உள்ளிட்டவர்கள் மேடையிலிருந்தவர்களிடம் தகவலை பாஸ் செய்தனர்.

எடப்பாடியின் வாகனம் மண்டபத்துக்கு வந்து சேர இரண்டு மணி நேரமானது. வழியெங்கும் வாழ்த்து மழையில் நனைந்தபடியே வந்துசேர்ந்தார் எடப்பாடி. பொதுக்குழு மேடையில் எடப்பாடி ஏறியதும், ‘ஒற்றைத் தலைமை எடப்பாடியார்’ கோஷம் மண்டபத்தையே அதிரச்செய்தது. நிர்வாகிகள் அனைவரும் எழுந்து நின்று வரவேற்றனர். ஆனால், சற்று நேரத்தில் பன்னீர் மேடைக்கு வந்தபோது, மேடையிலிருந்தவர்கள் யாருமே எழுந்து வணக்கம்கூட வைக்கவில்லை.

பொதுக்குழுவில், மறைந்த அ.தி.மு.க நிர்வாகிகள் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து, பொதுக்குழுவுக்கான அழைப்பை முன்மொழிய வருமாறு பன்னீருக்கு அழைப்புவிடுத்தார் வைகைச்செல்வன். பன்னீர் பேசத் தொடங்கும்போது, அரங்கிலிருந்தவர்கள் கூச்சலிட ஆரம்பித்தனர். இறுக்கமான முகத்தோடு முன்மொழிந்தார் அவர். அப்போதே நிலைமை கட்டுக்கடங்காமல் போனது. சி.வி.சண்முகம், வேலுமணி, தி.நகர் சத்யா ஏற்பாட்டில் சுமார் 300 பவுன்சர்கள் மண்டபப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். பொதுக்குழு உறுப்பினர்களை மட்டுமே அடையாள அட்டையுடன் அனுமதிக்க வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும்கூட, அது பின்பற்றப்படவில்லை. பொதுக்குழு உறுப்பினர்களாக இல்லாத நூற்றுக் கணக்கானோரை மண்டபத்துக்குள் பவுன்சர்கள் அனுமதித்ததால் கூச்சல், குழப்பம் அதிகரித்தது. வழக்கமாகப் பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையொப்பம் பெறப்படுவது வழக்கம். இந்த முறை அந்த நடைமுறையும் காற்றில் பறக்கவிடப்பட்டது.

அவமதிப்பு... ஆக்ரோஷம்... வெடித்த பொதுக்குழு!

அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனைக் கொண்டுவரும் தீர்மானம் வழிமொழியப்பட்டவுடன், திடீரென மைக் நோக்கி வந்த சி.வி.சண்முகம், ‘23 தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிக்கிறது... நிராகரிக்கிறது’ என்று ஆக்ரோஷமாகக் கத்தினார். உடனே, அரங்கு முழுவதுமே ரணகளமானது. இதற்குப் பின்னரே, ‘ஒற்றைத் தலைமை நாயகன்’ என்று ஜெயக்குமாரும், ‘நேற்றைய முதல்வர், நம் நாளைய தலைவர் எடப்பாடியார்’ என்று திண்டுக்கல் சீனிவாசனும் எடப்பாடியைப் புகழ ஆரம்பித்தனர்.

ஆர்ப்பரிக்கும் கூட்டத்துக்கு இடையே ‘மைக்’ பிடித்த துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, ‘பொதுக்குழுவில் நிறைவேற்றத் திட்டமிடப்பட்ட 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டன. தற்போது ஒற்றைக் கோரிக்கையாக, ஒற்றைத் தலைமை குறித்து பொதுக்குழு விவாதிக்க வேண்டும். அடுத்த பொதுக்குழு எப்போது கூட வேண்டுமென்பதையும் இப்போதே தீர்மானிக்க வேண்டும். அந்தப் பொதுக்குழுவில் தற்போது நிராகரிக்கப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றிக்கொள்ளலாம்’ என்றார். இதைத் தொடர்ந்து, ஒற்றைத் தலைமை கோரி 2,190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதங்களைத் தமிழ்மகன் உசேனிடம் அளித்தார் சண்முகம். இதையடுத்து பேசிய தமிழ்மகன் உசேன், ‘ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்து விவாதிக்க அடுத்த பொதுக்குழு ஜூலை 11-ம் தேதி காலை 9:15 மணிக்கு நடத்தப்படும்’ என்றார்.

அவர் பேசிக்கொண்டிருந்தபோதே, இருக்கையைவிட்டு எழுந்துவிட்டார் பன்னீர். அவருடன் கிளம்பிய வைத்திலிங்கம் மைக் அருகே சென்று, ‘கட்சிக்கு அநீதி பண்ணுறீங்க’ என்று பேசும்போதே மைக் ஆஃப் செய்யப்பட்டது. விடாமல் பேசிய வைத்திலிங்கம், ‘இந்தப் பொதுக்குழு செல்லாது. நாங்கள் புறக்கணிக்கிறோம்’ என்று ஆக்ரோஷமாகக் கத்தியபடி மேடையைவிட்டு இறங்கினார். தொடர்ந்து, மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோரும் கோஷமிட்டனர். மேடையிலிருந்து பன்னீர் இறங்கும்போது, கூட்டத்திலிருந்து தண்ணீர் பாட்டில்கள் அவர்மீது எறியப்பட்டதுதான் அவமதிப்பின் உச்சம். இதைப் பார்த்ததும் கூட்டத்தைச் சைகையால் கண்டித்த எடப்பாடி, மறுகணமே கே.பி.முனுசாமியிடம் கைகளை உயர்த்திக் காட்டி, ஏதோ ஒன்றைச் சொல்லிச் சிரித்தார்.

கட்சியின் ஒருங்கிணைப்பாளரை இந்த அளவுக்கு அவமானப்படுத்தியிருக்க வேண்டியதில்லை. வரும் செப்டம்பர் மாதத்தோடு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்காலம் முடிவடைகிறது. அந்தப் பதவிகளுக்கு நடந்த தேர்தல் முடிவுகள்கூட பொதுக்குழுவில் இன்னும் ஒப்புதல் பெறப்படவில்லை. இந்தச் சூழலில், அவர்கள் முன்மொழிந்த அவைத்தலைவர் தீர்மானம் மட்டும் ஏற்படையதாக இருக்குமா... மீண்டும் பொதுக்குழு கூட வேண்டுமானால், பன்னீரின் ஒப்புதல் அவசியம். தன்னுடைய கோரிக்கை நிறைவேற்றப்படாமல், ஒப்புதல் வழங்க மாட்டார் பன்னீர். அடுத்தடுத்த சட்டச் சிக்கலில் சிக்கியிருக்கிறது பொதுக்குழு” என்றனர் விரிவாக.

தன்னை வரவேற்க ஒருவர்கூட இல்லாத விரக்தியின் விளிம்பில் நின்ற பன்னீர், சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக மண்டபத்தில் இருந்தும் தண்ணீர்கூட அருந்தவில்லை. பாதியிலேயே வெளியேறி வீட்டுக்கு வரும் வழியில்தான், ஹோட்டலில் உணவருந்தியிருக்கிறார். எடப்பாடியும் மண்டபத்தில் உணவருந்தவில்லை.

அராஜகம்... அவமதிப்பு... ஆக்ரோஷம்... மீண்டும் பிளவுபடும் அ.தி.மு.க?

சசிகலாவுக்கும் எடப்பாடிக்கும் என்ன வித்தியாசம்... பிளவுபடுகிறதா அ.தி.மு.க?

பொதுக்குழு குழப்பங்களைத் தொடர்ந்து பன்னீர் - எடப்பாடியின் அடுத்தகட்ட நகர்வுதான் அ.தி.மு.க-வில் பேசுபொருளாகியிருக்கிறது. நம்மிடம் பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஒருவர், “இப்போது தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை என்பதால், அ.தி.மு.க உட்கட்சித் தேர்தல் நடத்துவதற்கு முன்பிருந்த நிலையே தொடரும். கட்சிக்கு ஒற்றைத் தலைமை தேவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், பன்னீரை நடத்தியவிதத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. பன்னீரிடமிருந்து நாகரிகமான முறையில் ஒற்றைத் தலைமையைப் பெற்றிருக்க வேண்டுமே தவிர, இப்படி அராஜகமாக நடந்துகொண்டிருக்கக் கூடாது. அவரின் வயது, அனுபவத்தை நிச்சயமாக மதித்திருக்க வேண்டும். வலுக்கட்டாயமாக முதல்வர் பதவியைப் பறித்த சசிகலாவுக்கும், கட்சித் தலைமையைப் பறிக்க முயலும் எடப்பாடிக்கும் எந்த வேறுபாடும் இல்லை. தற்போது, இரு தரப்புமே தங்கள் நிலைப்பாட்டிலிருந்து இறங்கிவருவதாகத் தெரியவில்லை. இதேநிலை நீடித்தால், கட்சி நிச்சயமாகப் பிளவுபடும். அப்படி நடக்கும் சூழலில், இரட்டை இலைச் சின்னம் முடக்கப்படலாம். கட்சியே சின்னாபின்னமாகும்” என்றார்.

இதற்கிடையே, இந்தியத் தேர்தல் ஆணையத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் ‘பொதுக்குழுவைச் செல்லாது’ என அறிவிக்கக் கோரி, பன்னீர் தரப்பு மனு அளிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக பன்னீர் தலைமையில், அவர் தரப்பினர் டெல்லி செல்கிறார்கள். ‘கட்சியின் சட்டவிதி 19(3)-ன்படி, பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலோடு மீண்டும் பொதுக்குழுவைக் கூட்டலாம். ஒற்றைத் தலைமை குறித்துப் பெருவாரியான பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கியிருப்பதால், அதைவைத்தே நீதிமன்றத்திடம் அனுமதி பெறலாம்’ என்று திட்டமிடுகிறது எடப்பாடி தரப்பு.

சின்ன சின்ன மனக் கசப்புகளோடு எழுந்த முரண்கள் இன்று அதன் உச்சகட்டத்தை அடைந்திருக்கின்றன. கடந்த 10 நாள்களாக நடந்த பேரங்கள், அணித் தாவல்கள், வார்த்தைப் போர்கள், அவமரியாதைகள் மீண்டும் இணைவதற்குச் சாத்தியமில்லாத இடைவெளியை இரு தரப்புக்கு இடையிலும் உருவாக்கியிருக்கின்றன. அ.தி.மு.க-வில் நிலவும் இந்தக் குழப்பங்களுக்கான தீர்வு காலத்திடம் அல்ல, எடப்பாடி - பன்னீர் இருவர் கைகளிலும்தான் இருக்கிறது!