Published:Updated:

எட்டிப் பிடிக்கும் எடப்பாடி... இருப்பதை இழக்கும் பன்னீர்!

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி ஆட்சி இன்னும் மூன்று மாதத்தில் கலைந்துவிடும், ஆறு மாதத்தில் காணாமல் போய்விடும் என ஏராளமான ஆரூடங்கள் சொல்லப்பட்டன

எட்டிப் பிடிக்கும் எடப்பாடி... இருப்பதை இழக்கும் பன்னீர்!

எடப்பாடி ஆட்சி இன்னும் மூன்று மாதத்தில் கலைந்துவிடும், ஆறு மாதத்தில் காணாமல் போய்விடும் என ஏராளமான ஆரூடங்கள் சொல்லப்பட்டன

Published:Updated:
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

‘இப்போ நடக்கும், அப்போ நடக்கும்’ என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த அ.தி.மு.க உட்கட்சி மோதல் வெளிப்படையாகவே வெடித்துவிட்டது. ஜெ. படத்துடன் எடப்பாடியும் பன்னீரும் இருக்கும் போட்டோவை பாக்கெட்டில் வைத்து சுற்றிக்கொண்டிருந்த ரத்தத்தின் ரத்தங்கள் இப்போது அணிபிரிந்துவிட்டனர். ‘ஒற்றைத்தலைமையா, இரட்டைத்தலைமையா?’ என்பதே ‘தர்மயுத்தம் 2.0’-ன் டாப்பிக். அ.தி.மு.க-வில் நடந்துவரும் இந்த உட்கட்சி யுத்தம் குறித்த பின்னணியைப் பார்ப்போம்.

முதல் ஸ்கெட்ச்:

ஜெயலலிதாவின் மரணத்தைத் தொடர்ந்து மூன்றாவது முறையாகத் தமிழ்நாட்டின் முதல்வராகும் வாய்ப்பு கிடைத்தது ஓ.பன்னீர்செல்வத்துக்கு. ஆனால், சசிகலாவின் முதல்வர் கனவால், ‘கைக்குக் கிடைத்தது வாய்க்கு எட்டலை’ என்ற ஆவேசத்தில் தர்மயுத்தத்தைத் தொடங்கினார் பன்னீர்செல்வம். மறுபுறம், நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக சசிகலா சிறைக்குச் செல்ல, யாருமே எதிர்பாராமல் முதல்வரானார் எடப்பாடி பழனிசாமி.

ஜெயலலிதாவால் இருமுறை முதல்வராக முன்னிறுத்தப்பட்டதால் பன்னீர்செல்வத்தைத் தமிழகத்துக்குத் தெரியும். ஆனால் கட்சியில் எங்கோ ஒரு மூலையில் இருந்த எடப்பாடி திடீர் முதல்வராக, இரண்டு அணிகள் உருவாயின. எடப்பாடி தலைமையிலான ஆட்சிக்கு எதிரான தீவிரமான பிரசாரங்களைத் தமிழகமெங்கும் முன்னெடுத்தார் பன்னீர்செல்வம். ஆனால், ஒருகட்டத்தில் அணிகள் இணைப்புக்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன. பன்னீர் தரப்பு முதல்வர் இருக்கையை எவ்வளவு கேட்டும் எடப்பாடி தரப்பு விட்டுத்தரவேயில்லை. கடைசியில் ‘எனக்கு ஆட்சி, கட்சிக்கு நீங்கள்’ எனப் பேசி முடிக்கப்பட்டது. ஆனாலும், கட்சியிலும் இருவரும் கையெழுத்திடும் வகையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒரு அதிகாரமும் இல்லாத துணை முதல்வர் பதவி பன்னீருக்குத் தரப்பட்டது. அதற்குப் பிறகு, முதல்வர் வேட்பாளர், எதிர்க்கட்சித் தலைவர் என எல்லா விஷயங்களிலும் வலுக்கட்டாயமாக விட்டுக் கொடுக்க வைக்கப்பட்டார் பன்னீர். இப்போது அந்தக் கையெழுத்திடும் அதிகாரத்தையும் விட்டுக்கொடுத்துவிட வேண்டும் என பன்னீரிடம் எடப்பாடி தரப்பு ஆளனுப்ப, பொதுக்குழுவை நடத்தவிடக்கூடாது என்பதில் கங்கணம் கட்டிக் களமிறங்கியிருக்கிறது பன்னீர் தரப்பு.

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

ஒற்றைத் தலைமை இப்போதைய திட்டமல்ல:

எடப்பாடி ஆட்சி இன்னும் மூன்று மாதத்தில் கலைந்துவிடும், ஆறு மாதத்தில் காணாமல் போய்விடும் என ஏராளமான ஆரூடங்கள் சொல்லப்பட்டன. ஆனால், கட்சியிலும் ஆட்சியிலும் கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னை மட்டுமே முன்னிறுத்தும் வேலைகளை ஆரம்பம் முதலே மிகத் தீவிரமாகச் செய்துவந்தார் எடப்பாடி. ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கே மாதத்தில், தன்னை முதல்வராக்கிய சசிகலாவுக்கு செக் வைக்க பன்னீர் அணியைத் தன்னோடு இணைத்துக்கொண்டதில் தொடங்குகிறது எடப்பாடியின் அரசியல் விளையாட்டு. ஆட்சியைத் தக்கவைக்க, மாநிலத்திலும் மத்தியிலும் யாரையெல்லாம் சரிக்கட்ட வேண்டுமோ அத்தனை பேரையும் சரிக்கட்டி நான்காண்டுக் காலத்தையும் வெற்றிகரமாகக் கடந்தார் எடப்பாடி பழனிசாமி. சசிகலாவின் முன்பாக மிகவும் பவ்யமான முகத்தை வைத்துக்கொண்டு நின்றிருந்த எடப்பாடி பழனிசாமிக்கும், சசிகலாவுக்கும் இந்தக் கட்சிக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என டெல்லியில் நின்று சொன்ன எடப்பாடிக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன. அச்சு அசல் அமாவாசையை நேரில் கண்டது தமிழகம். சசிகலாவைச் சாய்த்துவிட்டு, தினகரனை வெளியேற்றிவிட்டு ‘அடுத்த இலக்கு பன்னீர்தான்’ என்று எப்போதோ முடிவுக்கு வந்துவிட்டார் எடப்பாடி.

முதல்வர் பதவியில் இருந்த நேரத்தில் ஒற்றைத் தலைமைக்கான முன்னெடுப்பைச் செய்தால், எங்கே ஆட்சிக்குச் சிக்கல் வருமோ என்பதால் பொறுமையாக இருந்த எடப்பாடி, இதுதான் சரியான தருணம் எனத் தற்போது களமிறங்கவும் பல காரணங்கள் இருக்கின்றன. ஆட்சியில் இருந்தபோதே பெருவாரியான அமைச்சர்களை, மாவட்டச் செயலாளர்களை உரிய முறையில் ‘கவனித்து’ தன்னுடைய ஆதரவாளர்களாக மாற்றிக்கொண்டார் எடப்பாடி. அணிகள் இணைந்த சமயத்தில் முதல்வர் பதவியை விட்டுத்தர மறுத்த எடப்பாடி, பல்வேறு கணக்குகளுடன் 2021 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் என்கிற விஷயத்தையும் விட்டுத் தரவில்லை. கண்டிப்பாக இந்தமுறை தோற்றுத்தான் போவோம் என நினைத்த பன்னீர், முதல்வர் வேட்பாளராக நிற்பவரே தேர்தல் செலவுகளைப் பார்த்துக்கொள்ளட்டும் என ஒதுங்கிக்கொண்டார். எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றிவர, தன் தொகுதிக்குள்ளேயே சுருங்கிக்கொண்டார் பன்னீர்செல்வம். தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க-வுக்குச் சாதகமாக வராதபோதும், வெற்றிபெற்ற பெரும்பாலான எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடியின் ஆதரவாளர்களாக இருந்தனர். அதை வைத்தே எதிர்க்கட்சித் தலைவராகவும் ஆனார் எடப்பாடி. நிச்சயமாக தேர்தலில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களைப் பிடித்துவிடலாம் எனக் கனவு கண்டிருந்த எடப்பாடிக்கு, தென் தமிழகத்தில் அந்தக் கட்சியின் வெற்றிகுறித்துப் பெரிய அக்கறை இல்லாமல்தான் இருந்தது. ஆனால், எடப்பாடியின் அக்கறையின்மைக்கும் பன்னீரின் அக்கறையின்மைக்கும் இருக்கும் வேறுபாடுதான் கட்சியில் இன்று பெருவாரியான நிர்வாகிகள் எடப்பாடியின் பக்கம் நிற்கக் காரணமாக இருக்கிறது. முதல்வர் வேட்பாளர் பதவியை விட்டுக்கொடுக்க பன்னீர்முன்வைத்த கோரிக்கை, வழிகாட்டுதல் குழு. அதுவே இப்போது வழி தெரியாமல்தான் நிற்கிறது, பன்னீரை நம்பி வந்தவர்களைப்போல. காரணம், கட்சிக்குள் எடப்பாடி தன் ஆதரவாளர்களை எப்போதும் விட்டுக்கொடுத்ததில்லை. அதேவேளை பன்னீரை நம்பி வந்தவர்கள் பலர் நட்டாற்றில் விடப்பட்டனர். தர்மயுத்த காலத்தில் பன்னீருக்குப் பக்கபலமாக நின்ற கே.பி.முனுசாமி, இப்போது எடப்பாடியின் ஆதரவாளர். திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட பெருவாரியான தென்மாவட்ட எம்.எல்.ஏ-க்கள் இப்போது எடப்பாடி பக்கம். இப்போது திடீரென பன்னீர் பக்கம் நிற்கும் வைத்திலிங்கம்கூட கடைசிவரை நிற்பாரா என்பது கேள்விக்குறிதான்.

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

ஓங்கிய பன்னீர் கை -சாதுர்யமாக சமாளித்த எடப்பாடி:

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு சுதாரித்துக்கொண்ட பன்னீர், தனியாக அறிக்கைகள் விட ஆரம்பித்தார். உள்ளாட்சித் தேர்தல் தோல்வி, கொடநாடு விவகாரம் கட்சிக்குள் சோர்வை உண்டாக்கியிருந்த நிலையில், கட்சி நிர்வாகிகளைச் சென்று சந்திக்க ஆரம்பித்தார் பன்னீர். எடப்பாடியின் ஆதரவோடு, தங்களின் மாவட்டத்தில் சுய சாம்ராஜ்யம் நடத்திக்கொண்டிருந்த முன்னாள் அமைச்சர்கள் கம் மாவட்டச் செயலாளர்களுக்கு எதிரான நிர்வாகிகளைத் தன் பக்கம் ஈர்க்க பம்பரமாகச் சுழன்றுவந்தார். கட்சியில் பொதுக்குழு உறுப்பினர்களாக இருப்பவர்களைத் தன் பக்கம் இழுக்கும் வேலைகளை ஓ.பி.எஸ் தரப்பு ஆரம்பிக்க, ‘பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்தெடுக்கப்பட்டுவந்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை இனி கழகத்தின் அடிப்படை உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பார்கள், அதுவும் ஒற்றை வாக்கின் மூலம்’ எனத் தீர்மானம் நிறைவேற்றி, செல்வாக்கை இழந்திருந்த நேரத்தில் சாதுர்யமாகக் கட்சிக்குள் தன் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொண்டார் எடப்பாடி. அதேவேளையில், பன்னீரின் பின்னால் திரண்டிருந்தவர்களுக்கும், திரளலாமா என யோசித்துக்கொண்டிருந்தவர்களுக்கும் மீண்டும் தயக்கத்தை உண்டாக்கியது இந்த நிகழ்வு.

அப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நடைமுறைக்கு வர பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்படவேண்டும். ஆனால், அதற்குள்ளாகவே தன்னை ஒற்றைத் தலைமையாக நிலைநிறுத்தும் தீர்மானத்தை நிறைவேற்றத் துடித்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. பல வாய்ப்புகளைக் கைவிட்ட பன்னீருக்குக் கடைசி வாய்ப்பாக இருந்தது சமீபத்தில் நடந்துமுடிந்த உட்கட்சித் தேர்தல். மாவட்டச் செயலாளர், ஒன்றியச் செயலாளர் பதவிகளை தன் ஆதரவாளர்களுக்குக் கேட்டுப் பெற்றிருந்தால், இப்போது பொதுக்குழுவைத் தள்ளிவைக்க வேண்டும் எனக் கெஞ்சும் நிலை பன்னீருக்கு ஏற்பட்டிருக்காது. இப்போதிருக்கும் மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள். பொதுக்குழுவுக்கு இரண்டு பேர் சேர்ந்து அழைக்க வேண்டும். அதற்கான கையெழுத்தை பன்னீர் போட்டுவிட்டார். சிறப்பு அழைப்பாளர்களை அழைக்கவேண்டாம் என்பதற்கும் ஒப்புதல் கொடுத்துவிட்டார். இனி பன்னீர் பொதுக்குழுவுக்கு வராமல் புறக்கணித்தாலும்கூட பெரும்பான்மை ஆதரவோடு தீர்மானம் நிறைவேற்றப்படும் என்கிறது கட்சி வட்டாரம். இந்தமுறை விட்டுக்கொடுக்க வாய்ப்பே இல்லை என பன்னீர் கங்கணம் கட்டிக்கொண்டு நின்றாலும், தும்பை விட்டு வாலைப் பிடித்த கதை என்கிற சொலவடை நிச்சயமாக தமிழக அரசியலில் அவருக்குத்தான் பொருந்தும்.

ஜெயலலிதாவுக்குக் குனிந்து, சசிகலாவுக்குப் பணிந்து வாழ்ந்த பன்னீர் இனி எடப்பாடிக்கும் தணிந்துபோவாரா, தர்மயுத்தத்தை வீரியமாக ஆரம்பிப்பாரா என்பதை வரும் வாரம் சொல்லிவிடும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism