Published:Updated:

“ஒருவருக்கு ஒரு பதவி!” - அ.தி.மு.க பொதுக்குழு ‘கடா முடா’

அ.தி.மு.க பொதுக்குழு
பிரீமியம் ஸ்டோரி
அ.தி.மு.க பொதுக்குழு

கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட விவகாரத்தில், தி.மு.க., காங்கிரஸ் மீதுதான் அனைத்துப் பழிகளும் விழுந்திருக்கின்றன.

“ஒருவருக்கு ஒரு பதவி!” - அ.தி.மு.க பொதுக்குழு ‘கடா முடா’

கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட விவகாரத்தில், தி.மு.க., காங்கிரஸ் மீதுதான் அனைத்துப் பழிகளும் விழுந்திருக்கின்றன.

Published:Updated:
அ.தி.மு.க பொதுக்குழு
பிரீமியம் ஸ்டோரி
அ.தி.மு.க பொதுக்குழு

அந்தா இந்தாவென இழுத்துக் கொண்டிருந்த அ.தி.மு.க செயற்குழு, பொதுக்குழு ஒருவழியாக ஜூன் 23-ம் தேதி கூடவிருக்கின்றன. இந்தப் பொதுக்குழுவில் சிறப்பு அழைப் பாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதோடு, கூட்டத்துக்கு வரும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு முதன்முறையாக அடையாள அட்டை வழங்கவும் ஏற்பாடுகள் தடதடக்கின்றன. “அ.தி.மு.க பொதுக்குழுவில் என்னென்ன தீர்மானங்கள் நிறைவேற்றப்படவிருக்கின்றன... சலசலப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறதா?” என்கிற கேள்விகளுடன் கட்சியின் சீனியர்களிடம் பேசினோம்!

“கழகத்தின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியுடன் கலந்தாலோசித்து, பொதுக்குழு தீர்மானங்களைக் கட்சின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்தான் வடிவமைத்துவருகிறார். இதற்காக, ஜூன் 11-ம் தேதி தீர்மானக்குழு கூடி, எந்தெந்தத் தீர்மானங்கள் முதலில் இடம்பெற வேண்டும், அவற்றில் எந்த மாதிரியான வார்த்தைகள் பிரயோகிக்கப்பட வேண்டும் என்பதையெல்லாம் விவாதித்தனர். காவிரிப் பிரச்னை முதல் கச்சத்தீவு வரை பொதுக்குழுவில் மொத்தம் 15 தீர்மானங்கள் நிறைவேற்றத் திட்டமிடப்பட்டிருக்கிறது.

“ஒருவருக்கு ஒரு பதவி!” - அ.தி.மு.க பொதுக்குழு ‘கடா முடா’

‘காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவராக, இரு மாநிலங்களுக்கும் சம்பந்தப்படாத ஓர் ஐ.ஏ.எஸ் அதிகாரியைத் தலைவராக நியமிக்க வேண்டும்’ என்கிற தீர்மானம் முக்கியமாக இடம்பெறவிருக்கிறது. தி.மு.க அரசு ஓராண்டு ஆட்சியை நிறைவுசெய்தும், தேர்தல் சமயத்தில் தாங்கள் கொடுத்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. குறிப்பாக, `குடும்பப் பெண்களுக்கு 1,000 ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும்’ என்று உறுதியளித்ததை, தமிழ்நாடு அரசின் பொருளாதார நிலையைக் காரணம் காட்டி, கிடப்பில் போட்டுவிட்டனர். இதை கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற இயக்கங்கள் கேள்விக் கேட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான், அவர்களைக் கூட்டணியில் வைத்துக்கொண்டு, பேசவிடாமல் தி.மு.க தடுக்கிறது. வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க அரசைக் கண்டித்தும், அதை மெளனமாக வேடிக்கை பார்க்கும் அதன் கூட்டணிக் கட்சிகளைக் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்படவிருக்கிறது.

கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட விவகாரத்தில், தி.மு.க., காங்கிரஸ் மீதுதான் அனைத்துப் பழிகளும் விழுந்திருக்கின்றன. தங்கள் மீதுள்ள கறையை மறைப்பதற்காக, பிரதமரிடம் ‘கச்சத்தீவை மீட்க இதுவே சரியான தருணம்’ என்று பேசியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். தி.மு.க-வின் நாடகத்தைத் தோலுரிக்கும் வகையிலும், கச்சத்தீவை மீட்டுத் தரும்படி பிரதமருக்குக் கோரிக்கைவைத்தும் ஒரு தீர்மானம் கொண்டுவரப்படவிருக்கிறது. இத்துடன், தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டிருப்பதைக் கண்டித்தும், இந்து வழிபாட்டு இடங்கள், மடங்களில் தமிழ்நாடு அரசு அத்துமீறுவதைக் கண்டித்தும் தீர்மானங்கள் முன்மொழியப்படவிருக்கின்றன. 1, டிசம்பர் 2021-ல் கூடிய அ.தி.மு.க செயற்குழுவில், ‘கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை ஒற்றை வாக்கின் அடிப்படையில் கழக அடிப்படை உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பார்கள். இந்த விதியைத் திருத்துவதற்கு, மாற்றுவதற்கு யாருக்கும் அதிகாரமில்லை’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்துக்கு, நடைபெறவிருக்கும் பொதுக்குழுவில் ஒப்புதல் பெறவிருக்கிறோம். பொதுக்குழு உறுப்பினர்களாக, 2018-க்குப் பிறகு எடப்பாடியால் நியமிக்கப்பட்ட நபர்கள்தான் அதிகமானோர் இருக்கிறார்கள். அதனால், அவர் வார்த்தையை மீறி சசிகலாவுக்கு ஆதரவான கோஷம் பொதுக்குழுவில் எழ வாய்ப்பில்லை” என்றனர் விரிவாக.

இதற்கிடையே, ‘ஒருவருக்கு ஒரு பதவி’ விவகாரமும், கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களிடையே சீரியஸாக விவாதிக்கப்படுகிறது. நம்மிடம் பேசிய டெல்டாவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர், “கழகத்தின் ஒருங்கிணைப்பாளர், பொருளாளர், தலைமைச் செயற்குழு உறுப்பினர் பதவிகளில் ஓ.பி.எஸ் இருக்கிறார். அதேபோல, இணை ஒருங்கிணைப்பாளர், தலைமை நிலையச் செயலாளர், தலைமைச் செயற்குழு உறுப்பினர் பதவிகளில் எடப்பாடி பழனிசாமி நீடிக்கிறார். 40-க்கும் மேற்பட்டோருக்கு அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. இவர்களில் பலர் மாவட்டச் செயலாளர்களாகவும், அணிகளின் செயலாளர்களாகவும் இருக்கிறார்கள். இப்படி ஒருவருக்கே பல பதவிகள் வழங்கப் பட்டிருப்பதால், கட்சிக்காக உழைத்த நிர்வாகிகள் பலர் இன்னும் போஸ்டர் மட்டுமே ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழலில், அ.தி.மு.க நிர்வாகிகள் தற்போது பதவி வகிக்கும் கூட்டுறவு சங்கங்கள், ஆவின் பதவிகளுக்கும் வேட்டுவைக்க தி.மு.க தீவிரமாகி வருகிறது. கூட்டுறவுப் பதவி காலியானால், இவர்களும் கட்சிப் பதவி எதிர் பார்ப்பார்கள். இதனால், வரும் பொதுக் குழுவில் ‘ஒருவருக்கு ஒரு பதவி’ என்கிற முழக்கத்தை இரண்டாம் கட்டத் தலைவர்கள் எழுப்ப விருக்கின்றனர். இந்த நடைமுறை அமலுக்கு வந்தால், கட்சிப் பதவி கிடைக்காத பலருக்குப் பதவி கிடைக்கும். அதேநேரம், பதவி பறிபோகும் சிலர் உஷ்ணமாகி சலசலப்பை ஏற்படுத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை” என்றார்.

“பொதுக்குழுவில், ‘எட்டாண்டு மோடி ஆட்சியைப் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றலாம்’ என்று முதலில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு, எடப்பாடி பழனிசாமி முட்டுக்கட்டை போட்டுவிட்டதால், பன்னீரும் அவர் கருத்துக்கு உடன்பட்டிருக்கிறார். வெறும் சம்பிரதாயச் சடங்காகப் பொதுக்குழுவை முடித்துவிட எடப்பாடி தீர்மானித்திருக்கிறார். ‘ஒருவருக்கு ஒரு பதவி’ கோஷம் வலுப்பெற்றால், பொதுக்குழுவில் வார்த்தைப் போர் மூள்வது நிச்சயம்” என்கிறார்கள்.

பஞ்சாயத்துகள் இல்லாத அ.தி.மு.க கூட்டமா?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism