Published:Updated:

கெத்து காட்டும் பொதுக்குழு! - பலிக்குமா டி.டி.வி-யின் திட்டம்?

டி.டி.வி.தினகரன்
பிரீமியம் ஸ்டோரி
டி.டி.வி.தினகரன்

அ.ம.மு.க தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்யப்பட்ட கட்சி என்பதால், ஒவ்வொரு வருடமும் பொதுக்குழு நடத்தப்பட வேண்டும்.

கெத்து காட்டும் பொதுக்குழு! - பலிக்குமா டி.டி.வி-யின் திட்டம்?

அ.ம.மு.க தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்யப்பட்ட கட்சி என்பதால், ஒவ்வொரு வருடமும் பொதுக்குழு நடத்தப்பட வேண்டும்.

Published:Updated:
டி.டி.வி.தினகரன்
பிரீமியம் ஸ்டோரி
டி.டி.வி.தினகரன்

ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில், புழுதி பறக்கவிட்ட அ.தி.மு.க பொதுக்குழுச் சர்ச்சைகளே இன்னும் அடங்கவில்லை... அதற்குள்ளாக அதே மண்டபத்தில் வருகிற 15-ம் தேதி, ‘அ.ம.மு.க பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும்’ என்று அறிவித்து கவனம் ஈர்த்திருக்கிறார் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்!

அ.தி.மு.க இரண்டாகப் பிளவுபட்டிருக்கும் இந்தச் சூழலைப் பயன்படுத்தி, அ.ம.மு.க-வின் ‘மாஸ்’ காட்டுவதற்காகவே பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகளை மிகப்பெரிய அளவில் செய்துவருகிறார் டி.டி.வி.தினகரன் என்கிறார்கள்.

இது தொடர்பாக, அ.ம.மு.க மூத்த நிர்வாகி களிடம் விசாரித்தபோது, ‘‘அ.ம.மு.க-வின் 2,300-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவிருக்கின்றனர். முதலில், தனக்கு செல்வாக்கிருக்கும் திருச்சியில்தான் பொதுக்குழுவை நடத்தத் திட்டமிட்டார் தினகரன். ஆனால், ‘அம்மாவைப் போல் ஸ்ரீவாரு மண்டபத்தில் பொதுக்குழுவை நடத்தினால்தான் சென்டிமென்ட் வொர்க்அவுட் ஆகும்’ என நிர்வாகிகள் பலரும் கூறியதால், தனது முடிவை மாற்றிக்கொண்டார்.

டி.டி.வி.தினகரன்
டி.டி.வி.தினகரன்

அ.ம.மு.க தொடங்கி ஐந்து ஆண்டுகள் ஆனபோதிலும் எதிர்பார்த்த எழுச்சியோ, வளர்ச்சியோ இல்லை. எனவே 2024 நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைப்பது உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படவிருக்கின்றன. அ.தி.மு.க முழுமையாக முடங்கிக் கிடக்கும் இந்தச் சூழலில், அ.ம.மு.க-வை வலுப்படுத்தும் வகையில் இந்தப் பொதுக்குழு இருக்கும். ஜெயலலிதாவுக்குக் கொடுக்கப்படும் அதே மாதிரியான வரவேற்பு, மரியாதையை டி.டி.வி.தினகரனுக்கும் கொடுத்து, ‘கெத்து’ காட்டவிருக்கிறோம். 13-ம் தேதி இரவுக்குள் அனைத்துப் பொதுக்குழு நிர்வாகிகளும் சென்னைக்கு வந்துவிட வேண்டும் என டி.டி.வி அறிவுறுத்தியிருக்கிறார். உறுப்பினர்களுக்கு பிரியாணி விருந்து அளிப்பதற்காகவே மதுரையிலிருந்து 20 சமையல் மாஸ்டர்கள் வரவழைக்கப்படவுள்ளனர்” என்று ஏகத்துக்கும் ‘பில்டப்’ கொடுத்தனர்.

பொதுக்குழு ஏற்பாடுகளைச் செய்துவரும் செங்கல்பட்டு வடக்கு மாவட்டச் செயலாளர் கரிகாலன் நம்மிடம், ‘‘அ.ம.மு.க தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்யப்பட்ட கட்சி என்பதால், ஒவ்வொரு வருடமும் பொதுக்குழு நடத்தப்பட வேண்டும். கொரோனா காரணமாகக் கடந்த ஆண்டு ஆன்லைனில் பொதுக்குழு நடத்தப்பட்டது. இந்த முறை நாங்கள் கேட்டுக்கொண்டதால், ஸ்ரீவாரு மண்டபத்தில் பொதுக்குழு நடைபெறவிருக்கிறது. அம்மா காலத்தில் என்ன செய்தோமோ அதேபோல் பிரமாண்டமாக பொதுக்குழுவை நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம்” என்றவர், “ஆனாலும் மாநகராட்சி மற்றும் காவல்துறை தரப்பில்தான் அதிக கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள்’’ என்பதை அழுத்திச் சொன்னார். (எதிர்பார்த்த கூட்டம் வரவில்லையென்றால், தப்பிப்பதற்குக் காரணம் வேண்டுமில்லையா?!)

கரிகாலன்,   சி.ஆர்.சரஸ்வதி, வைகைச்செல்வன்
கரிகாலன், சி.ஆர்.சரஸ்வதி, வைகைச்செல்வன்

அ.ம.மு.க கொள்கை பரப்புச் செயலாளரான சி.ஆர்.சரஸ்வதியோ, ‘‘அம்மாவின் ஆட்சியைத் தமிழகத்தில் கொண்டுவருவதுதான் எங்களுடைய எண்ணம். எனவே அம்மா பாணியில், அம்மா வழியில் இந்தப் பொதுக்குழு இருக்கும். தேசிய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து தலைமைதான் முடிவு செய்யும். எது எப்படி இருந்தாலும் மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைப்பதே எங்கள் எண்ணம்” என்றார் அசராமல்.

அ.ம.மு.க பொதுக்குழுவுக்குக் கொடுக்கப்படும் ‘பில்டப்’ குறித்து அ.தி.மு.க செய்தித் தொடர்புச் செயலாளர் வைகைச்செல்வனிடம் கேட்டபோது, ‘‘நாங்கள் நடத்திய அதே இடத்தில் பொதுக்குழுவை நடத்துவதால் மட்டும் அ.ம.மு.க., அ.தி.மு.க-வாகிவிடாது. அவர்கள் நடத்தும் பொதுக்குழு அ.தி.மு.க தலைமை மற்றும் தொண்டர்களிடையே எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. தடுமாறிக்கொண்டிருக்கும் அ.ம.மு.க ஒரு சிறு குழுவாகச் செயல்படுமே தவிர, ஒருபோதும் பெரிய கட்சியாக வளராது. இருக்கிற கொஞ்ச நஞ்ச நிர்வாகிகளை ஏமாற்றி, தக்கவைக்க மட்டுமே இந்தப் பொதுக்குழு உதவும்” என்றார்.

பொறுத்திருந்து பார்ப்போம்!