அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

‘மனித வேட்டை’ - ‘நரிகள் கொன்றுவிடும்’ - ஆணையம் அரசியல்

ஜெயலலிதா
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயலலிதா

தமிழ்நாடு அரசியலை, கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பரபரப்பாக நகர்த்தியதில் ஆறுமுகசாமி ஆணையத்தின் பங்கு பெரிது

தமிழகத்தை உலுக்கிய இரண்டு முக்கியச் சம்பவங்களைக் குறித்த இரண்டு ஆணைய அறிக்கைகள் வெளியாகியிருக்கின்றன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையும் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. அந்த இரு அறிக்கைகளிலும் பல முக்கியமான வரிகள் மிக அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ‘தூத்துக்குடிச் சம்பவத்தில் விலங்குகளை வேட்டையாடுவதுபோல, காவல்துறை போராட்டக்காரர்களைச் சுட்டுத்தள்ளியிருக்கிறது’ என்கிற வரியையும், ஆறுமுகசாமி ஆணையத்தின் இறுதிப் பகுதியில் மேற்கோள்காட்டப்பட்டிருக்கும் ‘போர் வீரர்களைக் கோத்தெடுத்த கொம்பை உடைய யானையும்கூட கால் ஆழும் சேற்று நிலத்தில் அகப்படும்போது நரிகள் கொன்றுவிடும்’ என்ற ‘முத்தாய்ப்பு’ வரியையும் அவ்வளவு எளிதாகக் கடந்து சென்றுவிட முடியாது. இரு அறிக்கைகளும் இன்று பெரும் விவாதப்பொருளாக மாறியிருக்கின்றன. இந்த அறிக்கைகள் யாரைக் குற்றவாளிகளாக முன்னிறுத்துகின்றன... என்ன உண்மைகளின் மீது வெளிச்சமிட்டிருக்கின்றன... தமிழக அரசியலில் இந்த அறிக்கைகள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் என்ன?

 அருணா ஜெகதீசன் - ஆறுமுகசாமி
அருணா ஜெகதீசன் - ஆறுமுகசாமி

ஆஞ்சியோ செய்யாதது ஏன்... ஜெயலலிதா இறந்தது எப்போது?

தமிழ்நாடு அரசியலை, கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பரபரப்பாக நகர்த்தியதில் ஆறுமுகசாமி ஆணையத்தின் பங்கு பெரிது. 14 முறை கால அவகாசம் நீட்டிப்பு, 151 பேரிடம் விசாரணை என `தடதடத்த’ இந்த ஆணையம், 608 பக்கங்கள்கொண்ட அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறது. அறிக்கையில், ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சசிகலாவின் உறவினர் டாக்டர் கே.எஸ்.சிவக்குமார், அப்போதைய சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோரைக் குற்றம் செய்தவர் களாக முடிவுசெய்து விசாரணைக்குப் பரிந்துரைத் திருக்கிறது ஆணையம். அதேபோல, ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிகழ்வுகளையும், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும் விரிவான விசாரணையைப் பதிவுசெய்திருக்கிறது.

ஆறுமுகசாமி அறிக்கையில், ‘2016, செப்டம்பர் 22-ம் தேதி இரவு, தனது அறையிலுள்ள குளியலறை யிலிருந்து படுக்கைக்கு வந்த ஜெயலலிதா மயக்க மடைந்தார். அருகிலிருந்த சசிகலாவும், டாக்டர் சிவக்குமாரும் அவரைத் தாங்கிப் பிடித்திருக்கிறார்கள். அப்போலோ மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஐ.சி.யூ-வுக்கு மாற்றப்பட்டபோது ஜெயலலிதாவுக்கு சுயநினைவு திரும்பியது.

ஜெயலலிதாவுக்கு முறையான மருத்துவம் தரப்படவில்லை. இதய அறுவை சிகிச்சை செய்யப் பரிந்துரை செய்தும், அதைச் செயல்படுத்தவில்லை. மருத்துவமனையில் யாரையும் சந்திக்க அனுமதிக்கவில்லை. சசிகலாவின் உறவினர்களால், மருத்துவமனையிலிருந்த பத்து அறைகளும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்திருக்கின்றன. ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ அல்லது இதய அறுவை சிகிச்சை செய்ய அமெரிக்க மருத்துவர் உட்பட பல மருத்துவர்கள் பரிந்துரைத்தும் அது வழங்கப்படாதது ஏன்?

2016, நவம்பர் 25-ம் தேதி, மருத்துவமனையில் ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்தபோது, ஆஞ்சியோ செய்வதைப் பற்றி அமெரிக்க மருத்துவர் சமின் ஷர்மா விளக்கினார். ஜெயலலிதாவின் இதயத்தில் வெஜிடேஷன், பெர்ஃபொரேஷன், டயஸ்டோலிக் டிஸ்ஃபங்ஷன் ஆகிய பிரச்னைகளுக்காக பிரிட்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே, அமெரிக்க மருத்துவர் ஸ்டூவர்ட் ரஸ்ஸல் ஆகியோரும் ஆஞ்சியோ செய்ய பரிந்துரைத்தனர். ஜெயலலிதாவும் அதற்கு ஒத்துக்கொண்டார். ஆனால், கடைசிவரை ஆஞ்சியோ ஏன் செய்யவில்லை?’ எனப் பல கேள்விகளை எழுப்பியிருக்கும் ஆணையம், ஜெயலலிதா மரணித்த தேதியிலும் தன் மாறுபட்ட கருத்தை முன்வைத்திருக்கிறது.

‘மனித வேட்டை’ - ‘நரிகள் கொன்றுவிடும்’ - ஆணையம் அரசியல்

அப்போலோ மருத்துவமனை வெளியிட்டிருந்த அறிக்கையில் 5 டிசம்பர், 2016 இரவு 11:30 மணிக்குச் சிகிச்சை பலனளிக்காமல் ஜெயலலிதா இறந்துவிட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், `ஆணையத்தின் பார்வையில் 4 டிசம்பர், 2016 பிற்பகல் 3:50 மணிக்கு ஜெயலலிதா காலமானார்’ என அதைப் பதிவு செய்திருக்கிறது ஆறுமுகசாமி ஆணையம். அன்றைய தினம், பிற்பகல் 2 மணிக்கு சசிகலாவின் அலறல் சத்தம் கேட்டதாகப் பதிவுசெய்திருக்கும் ஆணையம், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் அளித்த தகவலின்படி, ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு நாளை டிசம்பர் 4-ம் தேதிதான் தீபக் அனுசரித்தார் என்றும் கூறியிருக்கிறது. அறிக்கை முழுவதும் பல கேள்விகளை முன்வைத்திருக்கும் ஆறுமுகசாமி ஆணையம், இறுதிப் பக்கத்தில், ‘யானையும்கூட கால் ஆழும் சேற்று நிலத்தில் அகப்படும்போது நரிகள் கொன்றுவிடும்’ என்று குறிப்பிட்டிருப்பது, மொத்த அறிக்கையின் குறியீட்டு முடிவாக முன்வைக்கப்பட்டிருக்கிறது.

கட்டைவிரல் ரேகை... எய்ம்ஸ் அறிக்கை முரண்கள்!

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில், அப்போலோ மருத்துவமனைக்கும், ஆறுமுகசாமி ஆணையத்துக்கும் இடையே உரசல் ஏற்பட்டது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வரையில் வழக்குகளும் சென்றன. எய்ம்ஸ் மருத்துவக்குழு தனி விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டது. அதன்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் டாக்டர் சந்தீப் சேத் தலைமையிலான ஏழு பேர்கொண்ட எய்ம்ஸ் மருத்துவக்குழு தங்கள் அறிக்கையைத் தாக்கல் செய்தது. அதில், “ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை சரியான மருத்துவ நடைமுறையின்படியே இருந்தது. அதில் எந்தப் பிழையும் இல்லை. மேலும், அவருக்கு உடலில் கட்டுப்பாடற்ற நீரிழிவு, இதயச் செயலிழப்புக்கான ஆதாரமும் இருந்தன. டிசம்பர் 5, 2016 வரை ஜெயலலிதாவுக்குச் சிறந்த சிகிச்சையே வழங்கப்பட்டது” எனக் கூறப்பட்டிருக்கிறது.

‘டிசம்பர் 4, பிற்பகல் 3:50 மணிக்கு ஜெயலலிதா இறந்தார்’ என ஆறுமுகசாமி ஆணையம் கூறிய நிலையில், அதற்கு முற்றிலும் முரணாக, டிசம்பர் 5-ம் தேதி வரை ஜெயலலிதாவுக்குச் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டதாகச் சொல்கிறது எய்ம்ஸ் அறிக்கை. சர்க்கரைநோய் அதிகமானதால், ஜெயலலிதாவின் கால் விரல்களும், காலும் அகற்றப்பட்டதாகச் சர்ச்சைகள் எழுந்தன. ஆனால், அது குறித்து ஆறுமுகசாமி அறிக்கையில் எதுவும் இடம்பெறவில்லை. திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலின்போது, ஜெயலலிதாவின் கட்டைவிரல் ரேகையைப் பதிவுசெய்துதான், அ.தி.மு.க வேட்பாளர் ஏ.கே.போஸுக்கு இரட்டை இலைச் சின்னம் வழங்கப்பட்டது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தி.மு.க வேட்பாளர் டாக்டர் சரவணன் தரப்பு, ‘கட்டை விரல் ரேகை பதிவுசெய்யப்பட்டபோது ஜெயலலிதா உயிருடனேயே இல்லை’ என வாதாடியது. ‘கட்டைவிரல் பதிவுசெய்தபோது ஜெயலலிதா உயிரோடு இருந்தார்’ என அந்தச் சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது ஆறுமுகசாமி ஆணையம்.

‘மனித வேட்டை’ - ‘நரிகள் கொன்றுவிடும்’ - ஆணையம் அரசியல்

3,000 பக்க அறிக்கை... மெத்தனமான மாவட்ட நிர்வாகம்!

ஆறுமுகசாமி ஆணையத்துக்குச் சற்றும் குறையாத விசாரணை விவரங்களை அருணா ஜெகதீசன் ஆணையமும் தன் 3,000 பக்க அறிக்கையில் பதிவுசெய்திருக்கிறது. அதில், ‘2018, மே 21 முதல் மே 23 வரை பொதுக்கூட்டம் நடத்தவோ, ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் கூடவோ, ஊர்வலமாகச் செல்லவோ கூடாது என்று தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் தடை உத்தரவைப் பிரகடனப்படுத்தியது. ஆனால், அந்தப் பிரகடனம் முறையாக மக்களிடம் கொண்டுசேர்க்கப்பட்டதா என்பது கேள்விக்குறி. ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராட்டம் நடக்கும், வன்முறை நடக்கும் என்று உளவுத்துறை எச்சரித்தபோதும் அது குறித்து எந்த நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் எடுக்கவில்லை. மெத்தனமாகவே அதைக் கையாண்டிருக்கின்றனர். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் நடத்த எஸ்.ஏ.வி பள்ளியைத் தேர்வுசெய்து, காவல்துறை அனுமதி அளித்தது தவறு. அனுமதியளித்துவிட்டு, போராட்டக்காரர்கள் அங்கே நுழைய முடியாதபடிக்கு 144 தடை உத்தரவு போட்டனர். ஆனால், தடை உத்தரவு போடப்பட்டிருப்பது போராட்டக்காரர்களுக்கு உரிய முறையில் தெரிவிக்கப்படவில்லை. இதனால், தடை உத்தரவை மீறிக் கூட்டம் கூடிவிட்டது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட படித்த இளைஞர்களை மட்டுமே குறிவைத்துக் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். சீருடை அணிந்த மற்றும் அணியாத காவலர்கள், வீட்டுக்குள் நுழைந்து அவர்களைக் கைதுசெய்து பல வகைகளில் தாக்கியிருக்கின்றனர். மாவட்ட நிர்வாகத்துக்கும், காவல்துறைக்கும் எந்தவிதமான ஒருங்கிணைப்பும் இல்லாமல் இருந்திருக்கிறது.

‘மனித வேட்டை’ - ‘நரிகள் கொன்றுவிடும்’ - ஆணையம் அரசியல்

நடந்தது மனித வேட்டை!

2018, மே 22-ம் தேதி மதியம் 12 முதல் 1:30 மணி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் உள்ளேயும் வெளியேயும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாகச் சாட்சியத்தின் வாயிலாக அறிய முடிகிறது. மேலும், ஒரு துப்பாக்கிச்சூடு மதியம் 3 மணியளவில் திரேஸ்புரத்தில் நடந்திருக்கிறது. இந்த இரண்டு துப்பாக்கிச்சூட்டிலும் 13 பேர் இறந்துள்ளனர்’ என்பதைப் பதிவுசெய்திருக்கும் அருணா ஜெகதீசன் ஆணையம், துப்பாக்கிச் சூட்டின்போது நடந்த கொடூரங்களையும் ஆவணப்படுத்தியிருக்கிறது.

மேலும், ‘போலீஸ்காரர் சுடலைக்கண்ணு என்பவர் மட்டும் 17 ரவுண்ட் சுட்டிருக்கிறார். ஆட்சியர் அலுவலகத்திலிருந்த போராட்டக்காரர்களை பூங்காவில் மறைந்திருந்து போலீஸார் சுட்டிருக்கின்றனர். துப்பாக்கிச் சூட்டின்போது, காட்டில் விலங்குகளை வேட்டையாடுவதுபோலக் காவலர் சுடலைக்கண்ணு செயல்பட்டிருக்கிறார். புத்தி சுவாதீனம் இல்லாதவர்போல் இப்படி நடந்து கொள்ள ஆசைப்படுவது அனுமதிக்கத் தக்கதல்ல. காவல்துறை நிச்சயமாக வரம்பை மீறியிருக்கிறது.

மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைத் திட்டத்தின்போது, போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட வாய்ப்பிருப்பதாக மாவட்ட எஸ்.பி-க்கு மாநில உளவுத்துறை தகவல் அனுப்பியுள்ளது. அப்போதைய உளவுத்துறை தலைவர் கே.என்.சத்யமூர்த்தி, சேலத்தில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து நிலைமையை விளக்கியிருக்கிறார். ‘மீன்பிடித் தடைக்காலம் வருவதால், போராட்டக் களத்துக்கு மீனவர்களும் வர வாய்ப்பிருக்கிறது. இதனால் போராட்டம் தீவிரமாகும்’ என சத்யமூர்த்தி எச்சரித்திருக்கிறார். ஆனால், நடவடிக்கை எடுப்பதாகச் சொன்ன எடப்பாடி பழனிசாமி, ஆக்கபூர்வமான நடவடிக்கையை எடுக்கவில்லை’ என்று விரிவாகக் கூறியிருக்கிறது அருணா ஜெகதீசன் ஆணையம்.

‘மனித வேட்டை’ - ‘நரிகள் கொன்றுவிடும்’ - ஆணையம் அரசியல்

ரஜினி தலையில் கொட்டு!

நடிகர் ரஜினிக்குக் கொட்டு வைக்கவும் அருணா ஜெகதீசன் ஆணையம் தவறவில்லை. தூத்துக்குடி போராட்டம் கலவரமான பிறகு, ‘போராட்டத்தில் சமூகவிரோத சக்திகள் நுழைந்து காவலர் களைத் தாக்கியிருக்கிறார்கள். மாவட்ட ஆட்சியரகத்தைச் சேதப்படுத்தியதோடு ஸ்டெர்லைட் ஊழியர்களின் குடியிருப்புக்கும் தீவைத்துள்ளனர். எதற்கெடுத்தாலும் போராடினால் தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும்’ என்றார் ரஜினி. அந்தச் சமயத்தில், ரஜினியின் கருத்து பெரும் சர்ச்சையானது. இது தொடர்பாக ஆணையம் குறிப்பிடும்போது, ‘உறுதி செய்யப்படாத செய்திகளைப் பிடிவாதமாக நம்பும் தனிநபர்கள் பொதுவெளியைத் தவிர்க்க வேண்டும்’ என ரஜினியின் தலையில் பலமாகவே கொட்டியிருக்கிறது.

அருணா ஜெகதீசன் ஆணையம் தனது அறிக்கையின் முடிவாக, மூன்றுவிதமான நடவடிக்கைகளைப் பரிந்துரைத்திருக்கிறது. `முதலாவதாக ஐ.ஜி முதல் சாதாரண காவல்துறை அதிகாரிகள் வரை 17 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டாவதாக, துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவளித்த மூன்று வருவாய்த் துறை அலுவலர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மூன்றாவதாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை அதிகரித்துத் தர வேண்டும்’ என்று கூறியிருக்கிறது.

பல்டியடித்த பன்னீர்... சசிகலாவுக்கு அரசியல் ‘லாக்’!

ஆணையங்களின் முடிவுகள் வெளியாகிவிட்டன. அதன் அரசியல்ரீதியிலான தாக்கத்துக்கு இனி எல்லையே இல்லை என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். நம்மிடம் பேசியவர்கள், “ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆணைய அறிக்கையில் சசிகலா, சிவகுமார், விஜயபாஸ்கர், ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர்மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. பன்னீரையும் பல்வேறு சூசகமான வார்த்தைகளால் விமர்சித்திருக்கிறது ஆணையம். ‘ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரது வாரிசாக பன்னீர் தன்னை நிலைநிறுத்திக்கொண்டது தற்செயலான நிகழ்வாகத் தோன்றவில்லை’, ‘அதிகார மையத்தின் மர்மமான சூழ்ச்சிகளால் புதிதாகக் கிடைத்த பதவி அவருக்கு நீடிக்கவில்லை’, ‘துணை முதலமைச்சர் பதவியில் பன்னீர் தன்னைப் பொருத்திக்கொண்டது வல்லவனின் தந்திரமாக இருக்கலாம்’, ‘சிகிச்சை முறையில் என்ன நடந்தது என்பதை அவர் முழுமையாக அறிந்திருந்தார்’ என பன்னீர் மீதான சந்தேகங்களையும் விமர்சனங்களையும் முன்வைத்திருக்கிறது ஆணையம்.

‘மனித வேட்டை’ - ‘நரிகள் கொன்றுவிடும்’ - ஆணையம் அரசியல்

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகச் சர்ச்சையை முதலில் கிளப்பியதே பன்னீர்தான். அணிகள் இணைப்புக்கும் அதை நிபந்தனையாக முன்வைத்தார். ஆனால் விசாரணை ஆணையத்தில் ஆஜரான போது, `பொதுமக்களின் கருத்தாகச் சந்தேகம் இருக்கிறது. அதைப் போக்குவதற்கு சின்னம்மா அவர்களுக்கும் வாய்ப்பு இருக்கிறது. எனக்குத் தனிப்பட்ட முறையில் சின்னம்மா அவர்கள்மீது மதிப்பும் மரியாதையும் உண்டு’ என பல்டியடித்தார் பன்னீர். தற்போது ஆணைய அறிக்கையில், ‘சசிகலாவைக் குற்றம்சாட்டுவதைத் தவிர எந்த முடிவுக்கும் வர முடியாது’ என்றிருக்கிறார்கள். சசிகலா உள்ளிட்ட நான்கு பேரைக் குற்றம் செய்தவர்களாக ஆணையம் முடிவுசெய்திருக்கிறது. ஆனால், ‘ஆணையத்தின் அறிக்கை குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை’ என்கிறார் பன்னீர். இதில் அவருடைய முரண்பாடான அரசியல் வெளிச்சமாகியிருக்கிறது.

சசிகலாவுக்கும் இதில் சிக்கல்தான். ஜெயலலிதா மரணம் தொடர்பாக, சசிகலா மீது ஏற்கெனவே சிலர் சந்தேகங்களை எழுப்பிவரும் நிலையில், ‘அம்மாவின் ஆட்சியைக் கொண்டுவருவோம்’ என அவரால் இனி பிரசாரம் செய்ய முடியாது. ஆணைய அறிக்கையை வைத்தே எடப்பாடி தரப்பு, இனி சசிகலாவை அரசியல்ரீதியாக காலி செய்யும். அதேபோல, ‘எல்லாரும் ஒன்றிணைந்தால் பலமாக ஆகலாம்’ என்று எடப்பாடிக்கு பா.ஜ.க நெருக்கடி கொடுக்கிறது. ஆறுமுகசாமி அறிக்கையைவைத்தே, அந்தக் கோரிக்கையை எடப்பாடியால் புறந்தள்ள முடியும். ‘அம்மாவின் மரணத்தில் தொடர்புடையவர்களுடன் நாங்கள் கூட்டுச்சேர மாட்டோம்’ என பா.ஜ.க-வின் வாயை எடப்பாடி அடைக்கலாம்.

எடப்பாடிக்கு சிக்கல்!

ஒருவேளை தற்போது பன்னீர் கட்சியில் இருந்திருந்தால்கூட எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடியாகியிருக்கும். ஆனால், எடப்பாடி அதிலிருந்து தப்பித்துவிட்டார். ஆனால், அருணா ஜெகதீசன் அறிக்கையில் எடப்பாடி வசமாக மாட்டிக்கொண்டார். ‘எடப்பாடியின் மெத்தனம்தான் இந்தச் சம்பவத்துக்கு முக்கியமான காரணம். அவர்மீது வழக்கு பதிவுசெய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் எடப்பாடியைக் கடுமையாக விமர்சித்துவருகின்றன. ‘மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் செயலிழந்துவிட்டன’ என்பதை அழுத்தம் திருத்தமாகப் பதிவுசெய்திருக்கிறது அருணா ஜெகதீசன் ஆணையம். ‘காவல்துறை போராட்டக்காரர்களை வேட்டையாடியிருக்கிறது’ என்பதையும் கூறியிருக்கிறது. இதற்கெல்லாம், சட்டம்-ஒழுங்கைக் கையில் வைத்திருந்த எடப்பாடிதான் முழுப் பொறுப்பு. `எனக்கு எதுவும் தெரியாது. நானே டி.வி-யைப் பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன்’ என்று கூறியிருந்தார் எடப்பாடி. ஆனால், முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டி.ஜி.பி ராஜேந்திரன் ஐ.பி.எஸ்., உளவுத்துறை ஐ.ஜி சத்தியமூர்த்தி ஆகியோர் ஆணையத்திடம் `நிமிடத்துக்கு நிமிடம் தூத்துக்குடியில் என்ன நடக்கிறது என்பதை அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்குத் தெரிவித்தோம்’என்று கூறியிருக்கிறார்கள். இதற்கும் எடப்பாடி பதில் சொல்லவேண்டியிருக்கும். மொத்தத்தில் அவருக்கு மிகப்பெரிய சிக்கல் இருக்கும். ஆணையங்களின் அறிக்கைகளால் தமிழக அரசியலில் பல அதிரடிக் காட்சிகள் அரங்கேற வாய்ப்பிருக்கிறது’’ என்கிறார்கள்.

கே.எஸ்.சிவக்குமார்
கே.எஸ்.சிவக்குமார்

தி.மு.க என்ன செய்யப்போகிறது?

இரண்டு அறிக்கைகள் வெளிவந்துவிட்டன. அவை விவாதப் பொருளாகவும் மாறியிருக்கின்றன. இனி, தி.மு.க அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதுதான் கேள்வி. நம்மிடம் பேசிய மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலர், “தி.மு.க தன்னுடைய தேர்தல் வாக்குறுதியில், ‘தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, ஜெயலலிதா மரண மர்மம் தொடர்பாக உண்மைகளை வெளிக்கொண்டு வருவோம். உரிய நடவடிக்கை எடுப்போம்’ என்றார்கள். அந்த வாக்குறுதியை தி.மு.க நிறைவேற்ற வேண்டும். பல கமிஷன் அறிக்கைகளை பரண்மேல் தூக்கிப் போட்டுவிட்டுத் தூங்குவதுதான் அரசுகளின் வழக்கம். அதுபோல, இந்த இரண்டு அறிக்கைகளையும் ஒதுக்கிவிடாமல், உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்” என்றனர்.

இரண்டு ஆணைய அறிக்கைகள்மீதும் சூட்டோடு சூடாக உரிய நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுக்க வேண்டும். ‘ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி கிடைக்கும். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, நாங்கள் நீதி பெற்றுத் தருவோம்’ எனத் தேர்தல் பிரசாரங்களில் முதல்வர் ஸ்டாலின் பேசிய வார்த்தைகளுக்கு அதுவே நியாயம் சேர்க்கும்!