அரசியல்
அலசல்
Published:Updated:

இந்துத்துவ ரூட்டைப் பிடிக்கும் ஆம் ஆத்மி... கெஜ்ரிவாலை இயக்குவது ஆர்.எஸ்.எஸ்-ஸா?!

அரவிந்த் கெஜ்ரிவால்.
பிரீமியம் ஸ்டோரி
News
அரவிந்த் கெஜ்ரிவால்.

11 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றால், அன்னா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் தனித்துத் தெரிந்த நபராக இருந்தார் அரவிந்த் கெஜ்ரிவால்

`தேசிய அளவில் காங்கிரஸுக்கு மாற்று நாங்கள்தான்’ என்று முழங்கிவருகிறார் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால். மறுபுறமோ, `பா.ஜ.க-வின் `பி’ டீம்தான் ஆம் ஆத்மி. ஆர்.எஸ்.எஸ் வழியைப் பின்பற்றி இந்தியாவில், இந்துத்துவாவை நிலைநிறுத்த நினைக்கிறார் கெஜ்ரிவால்’ என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகிறார்கள். அதற்கு வலு சேர்ப்பதுபோல, சில சர்ச்சைக் கருத்துகளைக் கூறிவருகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.

ஆம் ஆத்மி கட்சி தொடங்கப்பட்டு சரியாக பத்து ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அதன் இலக்குதான் என்ன... எதை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறது ஆ.ஆ.க?

அரவிந்த் கெஜ்ரிவால்.
அரவிந்த் கெஜ்ரிவால்.

ஒரு குட்டி ஃப்ளாஷ்பேக்!

11 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றால், அன்னா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் தனித்துத் தெரிந்த நபராக இருந்தார் அரவிந்த் கெஜ்ரிவால். அன்றைக்கு அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்துக்குக் கிடைத்த வரவேற்பைக் கண்டு, ‘நாம் ஏன் தேர்தல் அரசியலில் ஈடுபடக் கூடாது...’ என்ற எண்ணம் கெஜ்ரிவாலுக்கு ஏற்பட்டது. இதை அன்னா ஹசாரே மறுத்ததால், அவரிடமிருந்து விலகி வந்து, 2012 நவம்பரில் ஆம் ஆத்மி கட்சியைத் தொடங்கினார் கெஜ்ரிவால்.

2013-ல் நடைபெற்ற டெல்லி சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க-வுக்கு அடுத்து இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது ஆம் ஆத்மி. பா.ஜ.க-வை வீழ்த்த, ஆம் ஆத்மிக்கு வெளியிலிருந்து காங்கிரஸ் ஆதரவு தர, டெல்லி முதலமைச்சரானார் கெஜ்ரிவால். ஆனால், அடுத்த 49 நாள்களில் காங்கிரஸுடன் ஏற்பட்ட முரண்பாடுகளால் ஆட்சி கலைக்கப்பட்டது. மீண்டும் அடிபட்ட புலியாகப் பாய்ந்து, 2015 சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 70 சட்டமன்றத் தொகுதிகளில், 67 இடங்களை வென்று மீண்டும் முதல்வரானார் கெஜ்ரிவால்.

அதன் பிறகு, 2020 டெல்லி சட்டமன்றத் தேர்தலிலும், 2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலிலும் அமோக வெற்றிபெற்றது ஆம் ஆத்மி கட்சி. தற்போது, குஜராத், ஹரியானா, சத்தீஸ்கர், கோவா, இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களிலும் கட்சியை விரிவுபடுத்துவதற்கான வேலைகளில் இறங்கியிருக்கிறது ஆ.ஆ.க.

கட்சியின் கொள்கை!

`ஊழல் ஒழிப்பே’ ஆம் ஆத்மியின் பிரதான கொள்கை. அதோடு மக்களின் அடிப்படைத் தேவையான கல்வி, சுகாதாரம், மின்சாரம், குடிநீீர் ஆகிய விஷயங்களில், கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு, தேர்தல் வெற்றியைச் சாத்தியப்படுத்திவருகிறார் கெஜ்ரிவால். ஆனால், சி.ஏ.ஏ பிரச்னை, அதையொட்டி டெல்லியில் நடந்த மதக் கலவரம் ஆகியவை குறித்து கெஜ்ரிவால் வாய் திறந்ததேயில்லை. ‘இந்தியாவின் பிரதான பிரச்னைகளான ஏற்றத் தாழ்வுகள், வேறுபாடுகள் குறித்த எந்தவொரு தெளிவும் ஆம் ஆத்மி கட்சியிடம் இருப்பதாகத் தெரியவில்லை’ என விமர்சிக்கப்படுகிறது.

`ஆம் ஆத்மியின் கொள்கையற்ற அரசியல் ஆபத்தானது’ எனப் பல விமர்சனங்கள் எழுந்தாலும், அந்தந்த மாநில மக்களின் முக்கியப் பிரச்னைகளைக் கையிலெடுத்துப் பேசி, சாதித்துவருகிறார் கெஜ்ரிவால்.

2020-ம் ஆண்டு, ரூபாய் நோட்டுகளில் விநாயகர், லஷ்மி படங்களை அச்சடிக்கலாம் என்ற யோசனையை முன்வைத்தார் பா.ஜ.க-வின் சுப்பிரமணியன் சுவாமி. அப்போது, இஸ்லாமிய நாடான இந்தோனேசிய ரூபாய் நோட்டுகளில் விநாயகர் படமிருப்பதையும் அவர் சுட்டிக் காட்டியிருந்தார். இதே விஷயத்தை அப்படியே பேசியிருக்கிறார் ஐஐடி-யில் படித்த அரவிந்த் கெஜ்ரிவால். மேலும், ``நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முயன்றாலும், சில சமயங்களில் கடவுள்களின் ஆசீர்வாதமும் வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்தியா முழுவதும் இது பேசுபொருளாக, `ஆர்.எஸ்.எஸ் அமைப்புதான் கெஜ்ரிவாலை இயக்குகிறது; ஆம் ஆத்மி பா.ஜ.க-வின் `பி’ டீம்’ என்ற விமர்சனங்கள் எழுந்தன.

ஆர்.எஸ்.எஸ் ரூட்?

முன்னதாக, குஜராத் தேர்தல் வாக்குறுதியில், `ஆம் ஆத்மி வெற்றிபெற்றால் இலவசமாக அயோத்திக்கு அழைத்துச் செல்வோம்’ என்று கெஜ்ரிவால் பேசியிருந்தார். இது தவிர, பஞ்சாப்பில் வென்ற பிறகு அனுமன் கோயிலுக்குச் சென்றது, மதமாற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டெல்லி அமைச்சர் ராஜேந்திர பால் கெளதமை ராஜினாமா செய்யவைத்தது உள்ளிட்ட விஷயங்கள் ஆம் ஆத்மி மீதான விமர்சனத்துக்கு மேலும் வலுசேர்த்தன.

இதற்கிடையில், ஆம் ஆத்மி கட்சியிலிருந்து வெளியேறிய பிரசாந்த் பூஷண் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், ``காங்கிரஸ் அரசை ஆட்சியிலிருந்து இறக்கும் நோக்கில், பா.ஜ.க-வும், ஆர்.எஸ்.எஸ்-ஸும் இணைந்து நடத்தியதுதான் (அன்னா ஹசாரேவின்) `ஊழல் எதிர்ப்பு இயக்கம்.’ இது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நன்கு தெரியும்’’ என்று குண்டைத் தூக்கிப்போட்டார். இது குறித்து ராகுல் காந்தி, ``எங்களுக்குத் தெரிந்த விஷயத்தை, இன்று ஆம் ஆத்மியின் நிறுவன உறுப்பினர் உறுதிப்படுத்தியிருக்கிறார்’’ என்றார்.

வசீகரன்
வசீகரன்

`இது முட்டாள்தனம்!’

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் வசீகரனிடம் கேட்டோம். ``ஆர்.எஸ்.எஸ் எங்களை இயக்குவதாகச் சொல்வது முட்டாள்தனம். இன்றைய பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம் பா.ஜ.க-தான். இதை முன்வைத்துத்தான் `கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்’ என்ற தொனியில் ரூபாய் நோட்டில் கடவுள் படங்களைச் சேர்க்கலாம் என்று கெஜ்ரிவால் பேசியிருந்தார். அவர்கள் வழியிலேயே கெஜ்ரிவால் சொன்ன பதிலடிதான் இது...’’ என்றார்.

ஆம் ஆத்மி குறித்து மூத்த பத்திரிகையாளர்கள் சிலர், ``ஆம் ஆத்மியின் முக்கிய இலக்கு தேர்தல் வெற்றி மட்டுமே. எங்கே, எதைச் சொன்னால் வெற்றிபெறலாம் என்பதே அவரது கணக்கு. பஞ்சாப்பில், பகத் சிங்கையும் அம்பேத்கரையும் தூக்கிப்பிடித்த கெஜ்ரிவால், பா.ஜ.க ஆளும் குஜராத்தில் இந்துக் கடவுள்களை முன்னிறுத்துகிறார். இதைவைத்து, ஆர்.எஸ்.எஸ்-தான் அவரை இயக்குகிறது என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. அதேநேரம், காங்கிரஸுக்குச் சறுக்கல் ஏற்படுத்துவதே ஆம் ஆத்மியின் முக்கிய வேலையாக இதுவரை இருந்திருக்கிறது. முக்கியத்துவம் வாய்ந்த சில விஷயங்களில் ஆம் ஆத்மி, பா.ஜ.க-வுக்கு எதிரான நிலைப்பாடுகள் எடுக்காததும் சந்தேகத்தைக் கிளப்புகிறது’’ என்கின்றனர்.

அவரது நிலைப்பாடு என்ன என்பதை அடுத்தடுத்த தேர்தல்களில் அவர் பயன்படுத்தும் வார்த்தைகளே காட்டிக் கொடுத்துவிடும் போல!