Published:Updated:

இளையராஜா முதல் ரேஷன் கடை வரை... பதற்ற அரசியல் செய்கிறதா பா.ஜ.க?

பதற்ற அரசியல் செய்கிறதா பா.ஜ.க?
பிரீமியம் ஸ்டோரி
பதற்ற அரசியல் செய்கிறதா பா.ஜ.க?

`தமிழகத்தில் பா.ஜ.க செய்த பெரும்பாலான போராட்டங்கள், மதத்தை முன்னிலைப்படுத்தியவைதான். சாதாரண பிரச்னைகளை மத விவகாரமாக மாற்றி, தமிழகத்தில் அசாதாரண சூழலை ஏற்படுத்த பா.ஜ.க முயல்கிறது

இளையராஜா முதல் ரேஷன் கடை வரை... பதற்ற அரசியல் செய்கிறதா பா.ஜ.க?

`தமிழகத்தில் பா.ஜ.க செய்த பெரும்பாலான போராட்டங்கள், மதத்தை முன்னிலைப்படுத்தியவைதான். சாதாரண பிரச்னைகளை மத விவகாரமாக மாற்றி, தமிழகத்தில் அசாதாரண சூழலை ஏற்படுத்த பா.ஜ.க முயல்கிறது

Published:Updated:
பதற்ற அரசியல் செய்கிறதா பா.ஜ.க?
பிரீமியம் ஸ்டோரி
பதற்ற அரசியல் செய்கிறதா பா.ஜ.க?

சமீபத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் மயிலாடுறை பயணத்தின்போது கறுப்புக்கொடி காட்டப்பட்ட நிகழ்வு, அரசியல் களத்தில் கடும் விவாதங்களை உண்டாக்கியிருக்கிறது. ‘தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை’ என எதிர்க்கட்சிகள் தி.மு.க-மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தன. உச்சபட்சமாக, ‘முதல்வர், கவர்னரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையென்றால் பதவி விலக வேண்டும்’ எனப் பேசினார் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை. ஆனால், `உரிய விளக்கங்கள் கொடுக்கப்பட்ட பிறகும், ஒன்றுமில்லாத விவகாரத்தை ஊதிப் பெரிதாக்குகின்றனர் பா.ஜ.க-வினர். தாங்கள் மட்டுமல்லாமல், அ.தி.மு.க-வையும் தூண்டிவிட்டு அரசியல் குளிர்காய நினைக்கின்றனர். தங்கள் ஆட்சியில்லாத மாநிலங்களில் கவர்னர்கள் மூலமாக நெருக்கடி கொடுப்பது, மொழி அரசியல், மதத் தலங்களை முன்வைத்து சர்ச்சையை உண்டாக்குவது, பிரபலங்களைவைத்து சர்ச்சை கருத்துகளைப் பேசவைப்பது, ஊர்வலங்களை முன்வைத்து சச்சரவுகள், புல்டோசர் கலாசாரம் என வடக்கு அரசியல் எப்போதும் பதற்றத்திலேயே இருக்கிறது. அதே பாணியைக் கையிலெடுத்து, தமிழகத்திலும் ஊரடங்கின்போதே வேல் யாத்திரை, திருவள்ளுவர் மீது காவி பூசியது, கொங்குநாடு சர்ச்சை எனத் தொடங்கிய பதற்ற அரசியல்... ரேஷன் கடையில் மோடி படம், இளையராஜா சர்ச்சைக் கருத்து வரை வந்து நிற்கிறது. அரசியல் களத்தை எப்போதும் பதற்றத்திலேயே வைத்துக்கொள்ள நினைக்கிறது பா.ஜ.க. இது ஆரோக்கியமான அரசியலுக்கு உகந்ததல்ல’ என ஆதங்கப்படுகிறார்கள் தி.மு.க கூட்டணிக் கட்சியினர்!

கறுப்புக்கொடி அரசியல் - பதற்றமே இலக்கு!

மயிலாடுதுறை மாவட்டத்தில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது மன்னம்பந்தல் என்ற இடத்தில் ஆளுநரின் வாகனம் செல்லும்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், தி.க உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆளுநரின் பார்வைக்குப் போராட்டக்காரர்கள் தெரியாத வகையில் காவல்துறையினர் வாகனத்தைக் கொண்டுவந்து மறைத்து நிறுத்தினர். இதனால், போராட்டக்காரர்கள் கறுப்புக்கொடியை சாலையில் எறிந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்த விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையானது. ஆளுநரின் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டதாக பா.ஜ.க., அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் சட்டமன்றத்தைவிட்டு வெளிநடப்பு செய்தனர். பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, இது குறித்து மத்திய உள்துறை அமைச்சருக்குக் கடிதமும் அனுப்பினார். ஆனால், ‘கவர்னருக்கோ, கவர்னரின் வாகனத்துக்கோ எந்த பாதிப்பும் இல்லை’ என ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி டி.ஜி.பி-க்குக் கடிதம் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார். அதை முதல்வரும் சட்டமன்றத்தில் மிகத் தெளிவாக விளக்கிவிட்டார்.

இளையராஜா முதல் ரேஷன் கடை வரை... பதற்ற அரசியல் செய்கிறதா பா.ஜ.க?

“இந்த விவகாரத்தில் பா.ஜ.க-வினர் வேண்டுமென்றே அரசியல் செய்கின்றனர்” என்கிற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரான முத்தரசன். மேலும், ``தங்களின் எதிர்ப்பைத் தெரிவிக்க கறுப்புக்கொடி காண்பிப்பது என்பது ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றுதான். கவர்னரின்மீது ஆளுங்கட்சிக்கோ, எங்களைப் போன்ற கூட்டணிக் கட்சியினருக்கோ எந்தவிதப் பகையுணர்வும் இல்லை. இது குறித்து முதல்வரும் சட்டமன்றத்தில் மிகத் தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறார். ஆனால், கவர்னருக்கே பாதுகாப்பில்லை என இதைச் சட்டம்- ஒழுங்குப் பிரச்னையாக்கி அரசின்மீது பழிசுமத்தும் வேலையை பா.ஜ.க வேண்டுமென்றே செய்கிறது. இது சரியல்ல. தி.மு.க-வைக் கொள்கைரீதியாக எதிர்ப்பதற்கு பதிலாக, தேவையற்ற பதற்றத்தை உருவாக்கிவருகிறது பா.ஜ.க. சமூகத்தில் அமைதியும் ஒற்றுமையும் நிலவக் கூடாது, ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ள வேண்டும், அதைவைத்து அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்கிற குறுகிய கண்ணோட்டத்தோடு சிந்திக்கிறார்கள். நாடு முழுவதும் பா.ஜ.க-வினர் இதே வேலையைத்தான் செய்துவருகின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் கொஞ்சம் கூடுதலாகச் செய்யத் தொடங்கியிருக்கின்றனர்” என்றார் கோபத்துடன்.

மத வெறுப்பே மூலதனம்!

`தமிழகத்தில் பா.ஜ.க செய்த பெரும்பாலான போராட்டங்கள், மதத்தை முன்னிலைப்படுத்தியவைதான். சாதாரண பிரச்னைகளை மத விவகாரமாக மாற்றி, தமிழகத்தில் அசாதாரண சூழலை ஏற்படுத்த பா.ஜ.க முயல்கிறது. ஊர்வலங்களை சிறுபான்மையினர் வழிபாட்டுத்தலங்கள் வழியே வேண்டுமென்றே நடத்துவது, அவர்களின் கல்வி நிலையங்கள் குறித்துத் தவறான தகவல்களைப் பரப்புவது எனத் தொடர்ந்து மத அரசியலை முன்னெடுக்கிறது பா.ஜ.க’ எனக் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் இராஜீவ் காந்தி இது குறித்துப் பேசும்போது, ``பா.ஜ.க செய்வது அனைத்துமே மத வெறுப்பு அரசியல்தான். வேல் யாத்திரை தொடங்கி, `மாநாடு’ பட விவகாரம், தஞ்சாவூர் மைக்கேல்பட்டி மாணவி விவகாரம், மேலூர் மாணவி மரணம் என அனைத்திலும் மத வெறுப்பு அரசியலைத்தான் செய்துவருகின்றனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போதுகூட, மேலூரில் ஹிஜாப்புடன் வாக்களிக்கச் சென்ற இஸ்லாமியப் பெண் ஒருவருடன் பா.ஜ.க நிர்வாகி சண்டையிட்டார். சமீபத்தில், சென்னை அயோத்தியா மண்டபத்தை உயர் நீதிமன்ற உத்தரவின்படி இந்து அறநிலையத்துறை கையகப்படுத்தியபோது, மடத்தின் வாயிலைப் பூட்டி பா.ஜ.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்படி மத வெறுப்பு அரசியல்தான் அவர்களின் மூலதனம். அதுமட்டுமல்லாமல், எங்கு, யார், எது பேசினாலும் பேசுபவர்களின் பெயர், அவர்களின் மத அடையாளங்களைத் தொடர்புபடுத்தி சமூகப் பதற்றத்தை ஏற்படுத்துவதுதான் பா.ஜ.க-வின் அடிப்படை அரசியல். விஜய், விஜய் சேதுபதி, சூர்யா எனப் பெரிய நட்சத்திரங்கள், பத்திரிகையாளர்கள் என யாரும் இதில் விதிவிலக்கில்லை. மற்ற மாநிலங்களில் பா.ஜ.க-வின் இந்த முயற்சிக்கு ஓரளவு வெற்றி கிடைத்ததும், அதைத் தமிழ்நாட்டிலும் செய்துபார்க்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். உண்மைநிலை இப்படியிருக்க, மயிலாடுதுறை சம்பவத்தில் ‘முதல்வர் பதவி விலக வேண்டும்’ என அண்ணாமலை அமித் ஷாவுக்குக் கடிதம் எழுதியிருப்பது சர்க்கஸ் வேடிக்கை. சட்டம்-ஒழுங்கைப் பற்றி அண்ணாமலை போன்ற வன்முறையாளர்கள் தமிழ்நாட்டுக்குப் பாடம் எடுக்கத் தேவையில்லை’’ என்றார்.

ரேஷன் கடைப் பிரச்னை - அடியாள்தன அரசியல்!

அரசு அலுவலகங்களில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை மாட்டி, புதிய சர்ச்சையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது தமிழக பா.ஜ.க. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவை மாவட்டம், ஆலாந்துறையை அடுத்த பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பா.ஜ.க ஆதரவாளர் ஒருவர் பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைத்தார். அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாக ஆலாந்துறை போலீஸார் அவர்மீது வழக்கு பதிவுசெய்தார்கள். அதேபோல திருச்சி பொன்நகர்ப் பகுதியில் செயல்பட்டுவரும் ரேஷன் கடையிலும், பா.ஜ.க மண்டலத் தலைவர் பரமசிவம் என்பவர் வலுக்கட்டாயமாக மோடியின் படத்தை மாட்டியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த நிலையில், கோவையில் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, கோல்டுவின்ஸ் துரைசாமி நகர்ப் பகுதியிலுள்ள ரேஷன் கடை முன்பு மத்திய அரசின் இலவச அரிசித் திட்டம் குறித்து பொதுமக்களிடையே பிரசாரம் செய்தார். அப்போது ரேஷன் கடைக்குள் சென்ற அண்ணாமலை, கையில் எடுத்து வந்திருந்த பிரதமர் மோடியின் புகைப்படத்தைச் சுவரில் தொங்கவிட்டுச் சென்றார். இதேபோல ரேஷன் கடைகளை மையமிட்டு, தமிழகத்தில் பா.ஜ.க-வினர் பல இடங்களில் பிரச்னைகள் செய்துவருவதாகப் புகார்கள் எழுந்துகொண்டிருக்கின்றன.

``கட்சியில் கீழ்மட்ட நிர்வாகிகள் சில தவறுகளைச் செய்யும்போது, மூத்த நிர்வாகிகள் அவர்களைத் திருத்த வேண்டும். ஆனால், ஒரு கட்சியின் தலைவரே அடாவடியாக அதைச் செய்யும்போது கீழ்மட்ட நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அந்தத் தவற்றைச் செய்ய ஊக்கமளிப்பதாகவே அமையும். ஹெச்.ராஜா, அண்ணாமலை போன்றவர்கள் அதைத்தான் செய்துவருகிறார்கள்’’ என்கிறார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.

மேலும் அவர், ``பஞ்சாயத்து போர்டு அலுவலகம், ரேஷன் கடைகள் உள்ளிட்ட இடங்களில் பிரதமர் மோடியின் படத்தை மாட்டுவது, அதை ஒப்புக்கொள்ளாவிட்டால் அதைவைத்து அரசியல் செய்வது என ஒரு முரட்டுத்தனமான போக்கில் பா.ஜ.க-வினர் நடந்துகொள்கிறார்கள். மக்களைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல், தினசரிச் செய்திகளில் தாங்கள் வந்தால் போதும் என்கிற எண்ணத்தில்தான் அப்படிச் செய்கிறார்கள். `தமிழ்நாட்டில் நாங்கள்தான் ஆளுமைமிக்கவர்கள்’ எனக் காட்டிக்கொள்ள அடியாள்தன அரசியலைத்தான் செய்துவருகின்றனர். பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேட்டி கொடுப்பது, ஓர் அரசியல் தலைவர் பேட்டி கொடுப்பதைப்போலவே இல்லை. அடாவடிக் கூட்டத் தலைவன் பேசுவதைப்போலவே இருக்கிறது. எதிர்க்கொள்கை உடையவர்களாக இருந்தாலும் இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் வைக்கும் விமர்சனங்கள், நாம் பதில் சொல்லும் வகையில் இருக்கும். ஆனால், அதற்குப் பிறகு வந்தவர்கள் பேசியதெல்லாம் அரசியலே அல்ல. மத்தியில் ஆட்சியில் இருக்கிறோம் என்பதற்காக ஒரு பண்பற்ற அரசியலைச் செய்துவருகின்றனர். ஆனால், தமிழக மக்கள் இவர்களின் பேச்சுகளை, அடாவடித்தனமான செயல்களை ரசிக்கவில்லை என்பதே உண்மை’’ என்றார்.

திரைத்துறை டார்கெட்... இளையராஜாவும் அரசியலும்!

‘அம்பேத்கர் அண்ட் மோடி’ என்ற நூலுக்கு இளையராஜா எழுதிய முன்னுரையில், மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்டுப் புகழ்ந்து எழுதியது சர்ச்சையானது. இதற்குக் கடுமையான எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அவரை முன்வைத்தும் தமிழகத்திலிருந்து டெல்லி வரை அரசியல் அனலடித்தது. அதேபோல, “பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள் - புதிய இந்தியா 2022” எனும் நூல் வெளியீட்டுவிழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் பாக்யராஜ் “மோடியை விமர்சனம் செய்பவர்கள் குறைப் பிரசவத்தில் பிறந்தவர்கள்” எனப் பொருள்படும்படி பேசியது பெரும் சர்ச்சையானது. இளையராஜாவை வைத்து பா.ஜ.க-வினர் மதுரையில் மாபெரும் விழா நடத்தவிருக்கிறார்கள், ராஜ்யசபா எம்.பி ஆக்கவிருக்கிறார்கள் என்றெல்லாம் செய்திகள் பரபரத்தன. இதனால், சமூக ஊடகத்தில் கடுமையான விவாதங்களும் வசைபாடல்களும் நடந்தேறின. ‘ஒரு பொது ஆளுமையை, அடையாள அரசியலுக்குள் இழுத்துவிடுகிறது பா.ஜ.க’ என்கிற விமர்சனம் எழுந்தது.

``தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே திரைத்துறையினரை அதிகமாகத் தங்களின் கட்சிகளில் இணைத்துவந்தனர் பா.ஜ.க-வினர். அதன் மூலம் மக்கள் மத்தியில் ஒரு கவனத்தைப் பெறலாம் என எதிர்பார்த்தனர். ஆனால், அந்த ஐடியா எடுபடாமல் போகவே, இப்போது திரைப் பிரபலங்களைத் தங்கள் தலைவர்கள் குறித்து கருத்து சொல்லவைக்கும் வேலையில் இறங்கியிருக்கின்றனர்’’ என்கிற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு.

இது குறித்து அவர் விரிவாகப் பேசியபோது, ``பா.ஜ.க-வின் கொள்கையை விற்பனை செய்ய அவர்களுக்கு எப்போதும் பிரபலங்கள் தேவையாக இருந்திருக்கிறார்கள். அப்படித்தான் தமிழ்நாட்டில் ரஜினியைவைத்து முயன்றார்கள். அவர் ஒத்துவரவில்லை என்றதும், தற்போது இளையராஜா, பாக்யராஜ் என ஆட்களைத் தேர்வுசெய்து பேசவைக்கிறார்கள். தமிழ்நாட்டில் ரஜினியும் இளையராஜாவும் சாதி, மத பேதமற்றுக் கொண்டாடப்படுபவர்கள். அப்படியானவர்கள் மூலமாகத் தங்களது கொள்கையை விற்க முயல்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் அவர்கள் விற்பனை உத்தி செல்லுபடியாகாது’’ என்றார்.

முத்தரசன், இராஜீவ்காந்தி, கே.பாலகிருஷ்ணன்,  வன்னி அரசு, நாராயணன் திருப்பதி
முத்தரசன், இராஜீவ்காந்தி, கே.பாலகிருஷ்ணன், வன்னி அரசு, நாராயணன் திருப்பதி

‘மதத்தை முன்னிலைப்படுத்துவது, அதிகாரத் தலையீடுகள், சர்ச்சைக் கருத்து விவகாரங்கள் எனத் தமிழகத்தில் பதற்ற அரசியல் செய்கிறது பா.ஜ.க!’ என்கிற குற்றச்சாட்டு குறித்து, பா.ஜ.க செய்தித் தொடர்பாளர், நாராயணன் திருப்பதியிடம் கேட்டோம், ``லஞ்சம், ஊழல் குறித்து நாங்கள் கேள்வி எழுப்புவதாலேயே நாங்கள் பதற்றத்தை ஏற்படுத்துகிறோம் என்கிற பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். அது மிகவும் தவறானது. அரசு அலுவலகங்களில் பிரதமரின் புகைப்படம் இடம்பெறுவதில் என்ன தவறு இருக்கிறது... பிரதமரின் படத்தை மாட்டக் கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. அதேபோல ஆளுநரின்மீது மாற்றுக் கருத்து இருந்தால், ஜனநாயகரீதியாகத்தான் அணுக வேண்டுமே தவிர, தெருவில் வன்முறையோடு இறங்கக் கூடாது. ஆளுங்கட்சியினுடைய கூட்டணிக் கட்சியினரின் நோக்கம் ஆளுநரைத் தாக்க வேண்டும் என்பதுதான். ஆளுநர் சட்ட விரோதமாகச் செயல்படுவதாக நினைத்தால், நீதிமன்றத்துக்குத்தான் போக வேண்டும். இவர்களின் வன்முறைப் போக்கை சாதகமாக்கிக்கொண்டு, பயங்கரவாதிகள் நாளை இதையே செய்தால், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுதானே ஏற்படும்... தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்லாமல், ரம்ஜானுக்கும் கிறிஸ்துமஸுக்கும் வாழ்த்துச் சொல்லும் முதல்வர்தானே இங்கே இருக்கிறார்... திருமாவளவன்கூட ‘இந்து மதத்தைத்தானே அழிப்போம்’ என்கிறார்... சிறுபான்மையின மக்களின் வாக்குகளுக்காக மதத்தைவைத்து அவர்கள்தான் அரசியல் செய்கிறார்களே தவிர, நாங்கள் இல்லை. இங்குள்ள கட்சிகள் அரசியலைத் தொழிலாகச் செய்துவருகின்றன. அதில் நாங்கள் கை வைப்பதாலேயே எங்களைப் பார்த்து பயப்படுகிறார்கள், கொதித்தெழுகிறார்கள்’’ என்கிறார்.

இந்தியப் பெருநிலத்தில், தமிழகம் எந்தவிதப் பிளவுக்கும் இடம் கொடுக்காத மாநிலம். சகிப்புத்தன்மையும் ஒருமைப்பாடும் மிகுந்த மாநிலம். இங்கே மதம், அடையாளம், சர்ச்சைக் கருத்துகளின் மூலம் பதற்றத்தை ஏற்படுத்தி யார் அரசியல் செய்ய முயன்றாலும், தமிழ் மக்கள் அவர்களை ஆதரிக்க மாட்டார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism