Published:Updated:

கறுப்பர் கூட்ட அந்தர் பல்டி... ஒதுக்கீட்டை எடுப்பா தூசு தட்டி!

ஸ்டாலின் - மோடி
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டாலின் - மோடி

பாயும் பி.ஜே.பி பம்மும் தி.மு.க

‘கறுப்பர் கூட்டத்துக்குப் பின்னால் இருப்பதே தி.மு.க-தான்’ என்று பா.ஜ.க உள்ளிட்ட இந்து அமைப்புகள் பலவும் தி.மு.க-வுக்கு எதிராக அஸ்திரங்களைப் பாய்ச்சி வருகின்றன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

குறிப்பாக பா.ஜ.க தரப்பில் இந்த விஷயத்தை பலமாகப் பிடித்துக்கொண்டு பாய்ச்சல் காட்டிவருகின்றனர். கூடவே அ.தி.மு.க அமைச்சர்கள் சிலரும், ரஜினிகாந்த் உள்ளிட்ட சிலரும் இந்த விஷயத்தின் சூட்டை விடாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். கறுப்பர் கூட்டத்துக்கு தி.மு.க தரப்பிலிருந்து கண்டனமே தெரிவிக்கப்பட்டபோதும், விஷயம் திமுக-வுக்கு எதிரானதாகவே கனன்றுகொண்டிருக்கிறது. இதனால், `நாங்களும் இந்துக்கள்தான்’ என்று பம்ம ஆரம்பித்திருக்கும் தி.மு.க தரப்பு, இந்த விஷயத்தை திசை திருப்புவதற்காக, ‘சமூகநீதிக்கான போர்’ என்று பழைய அஸ்திரத்தைத் தூசுதட்ட ஆரம்பித்துள்ளது!

இந்துக்களுக்கு எதிரான கட்சியா தி.மு.க?

‘‘இந்துக்கள் என்றால் திருடன் என்றொரு அர்த்தம் உள்ளது’’ என்றவர் தி.மு.க தலைவர் கருணாநிதி. சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் நெற்றியில் பொட்டு வைத்துக்கொண்டு வந்தபோது, ‘என்ன ரத்தம் வழிகிறது...’ என்று அவர் கிண்டலடித்த வரலாறெல்லாம் உண்டு. ஆனால், கால மாற்றத்துக்கேற்ப அவர்களின் கொள்கைகளும் மாறின.

தி.மு.க நிர்வாகிகள் பலரும் வெளிப்படை யாகவே கோயில்களுக்குச் செல்லத் தொடங்கினர். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் சென்ற மு.க.ஸ்டாலின் பட்டு வஸ்திர மரியாதையை ஏற்றுக்கொண்டதும் நடந்தது. ‘‘தி.மு.க ஒன்றும் இந்துக்களுக்கு எதிரான கட்சியல்ல’’ என்று மு.க.ஸ்டாலின் உட்பட பலரும் திரும்பத் திரும்ப சொல்லும் நிலைமையும் உருவானது. ஆனாலும், ‘‘தி.மு.க இந்துக்களுக்கு எதிரான கட்சி’’ என்ற விமர்சனத்தை மட்டும் அவர்களால் மாற்ற முடியவில்லை.

பா.ஜ.க மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு தி.மு.க-வுக்கு எதிரான பிரம்மாஸ்திரமாகவே இந்த விஷயத்தைக் கையிலெடுத்துள்ளது. ‘கறுப்பர் கூட்டம்’ விவகாரம் இதற்கு வலுசேர்ப்பது போன்று அமைந்துவிட்டது.

ஆர்.எஸ்.பாரதி - தங்கம் தென்னரசு
ஆர்.எஸ்.பாரதி - தங்கம் தென்னரசு

‘கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலே தி.மு.க-வின் பின்புலத்தில் இயங்குகிறது’ என்று பா.ஜ.க ஆதரவு அமைப்புகள் தொடர்ந்து விமர்சித்துவந்தன. இதுதான் தி.மு.க-வுக்குச் சிக்கலை ஏற்படுத்தியது. குறிப்பாக, ஸ்டாலின் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு தொடங்கிய மர்ம நபர்கள், ‘கறுப்பர் கூட்டத்துக்கு ஆதரவாக தி.மு.க பின்னால் நிற்கும்’ என்று பதிவிட்டிருந்தனர். இது தி.மு.க தரப்புக்கு மேலும் அதிர்ச்சியை அளித்தது. இது குறித்து சைபர் பிரிவு காவல்துறையில் தி.மு.க சார்பில் அதன் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகாரளித்தார்.

அதைத் தொடர்ந்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். ‘‘தேர்தல் வரவிருக்கும் நேரத்தில் இந்துக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த, காவிக் கூட்டத்தினர் முயல்கின்றனர். பேரறிஞர் அண்ணா அவர்கள் தி.மு.க-வை உருவாக்கியபோதே ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்றார். அதன் அடிப்படையில்தான் கடந்த 70 ஆண்டுகளாக தி.மு.க பணியாற்றிவந்திருக்கிறது. அனைத்து மதத் தலைவர்களுடன் தி.மு.க அணுக்கமான உறவையே பேணி வந்திருக்கிறது. தி.மு.க-வில் ஒரு கோடி இந்துக்கள் உள்ளனர்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, தி.மு.க-வின் மூத்த தலைவர்கள் பலரும், `தி.மு.க இந்து விரோதக் கட்சியல்ல’ என்கிற கோஷத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டிய நிர்பந்தம் இப்போது ஏற்பட்டுள்ளது.

தி.மு.க தீட்டும் திட்டம்?

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாகவே, ‘இந்து எதிர்ப்பு என்கிற கோஷத்தை வரும் தேர்தலில் பயன்படுத்த வேண்டாம்’ என்கிற முடிவை தி.மு.க தலைமை எடுத்திருந்ததாம். குறிப்பாக, பிரசாந்த் கிஷோர் தி.மு.க-வின் தேர்தல் ஆலோசகராகப் பொறுப்பேற்ற பிறகு அவர் செய்த முதல் காரியம் `கிராமக் கோயில்களுக்கு தி.மு.க முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்’ என்பதுதான். `ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் நாட்டார் தெய்வ வழிபாட்டுக்கு உதவ வேண்டும்’ என்று வாய்மொழி உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. அதோடு பூசாரிகள் மாநாடுகள் நடத்தவும் திட்டமிடப்பட்டது. அதற்குள் கொரோனா ஊரடங்கு தொடங்கியதால், அந்தத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கறுப்பர் கூட்டத்தை வைத்து தி.மு.க-வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அஸ்திரம் எடுக்கவே வேறு வழியைத் தேடியது. அந்த நேரத்தில் மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்கிற செய்தி வெளியானதும், அந்த விவகாரத்தை தி.மு.க இப்போது கையில் எடுத்துக்கொண்டுவிட்டது.

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

பிளான் பி.கே!

‘கறுப்பர் கூட்டம்’ சேனல் நிர்வாகி செந்தில்வாசன் தி.மு.க ஐ.டி விங்கின் முன்னாள் பொறுப்பாளர் என்று சொல்லப்படுகிறது. இதுதான் இப்போது தி.மு.க-வுக்குச் சிக்கலாகியுள்ளது. இதைக் கெட்டியாக பிடித்துக்கொண்டுவிட்ட பி.ஜே.பி தரப்பு, தி.மு.க ஐடி பிரிவு தலைவர் பழனிவேல் தியாகராஜனுடன் கறுப்பர் கூட்ட நிர்வாகி இருக்கும் படங்களை வெளியிட்டு பரபரப்பைக் கிளப்ப ஆரம்பித்துவிட்டது.

`இதற்கு பதிலடியாகவே இட ஒதுக்கீடு விவகாரத்தை தி.மு.க கையிலெடுத்துள்ளது’ என்கிறார்கள். இது குறித்து பிரசாந்த் கிஷோர் டீமின் ஆலோசனையும் தி.மு.க தலைமைக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில், ‘‘இந்துக்களின் வாக்குகளை இப்போது நாம் கைப்பற்ற இட ஒதுக்கீடு விவகாரத்தை ஓங்கிப் பிடியுங்கள். அதன் மூலம் பா.ஜ.க-வுக்கும் செக் வைக்கலாம். பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களிடமும் தி.மு.க-வின் செல்வாக்கு உயரும்’’ என்று கோடிட்டுக் காட்ட, தனது ஆரம்பகால அஸ்திரத்தை மீண்டும் கையிலெடுத்துவிட்டது தி.மு.க என்கிறார்கள்.

இட ஒதுக்கீடும் இந்துக்களும்!

மருத்துவக் கல்வியில் கடந்த சில ஆண்டுகளாகவே பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டு பிரச்னை இருந்துவருகிறது. குறிப்பாக நீட் தேர்வு வந்த பிறகு ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவத்தில் சேர்வது குறைந்துவருகிறது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மருத்துவப் படிப்பில் முறையாக இட ஒதுக்கீடு பின்பற்றப்படாத நிலை இருந்துவந்தது. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப் பட்டோருக்குத் தனி இட ஒதுக்கீடு உள்ளது. ஆனால், இதை முறையாகப் பின்பற்றவில்லை மத்திய அரசு. தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்பில் 15 சதவிகித இடங்களும், மருத்துவ முதுநிலை படிப்புகளில் 50 சதவிகித இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன. `இந்த அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீட்டை முழுமையாக வழங்க வேண்டும்’ என்ற கோரிக்கையை மையப்படுத்தி தி.மு.க சார்பில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

மோடி
மோடி

பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இந்த இட ஒதுக்கீடு கிடைக்காமல் போனால் ஏற்படும் பாதகங்களை தி.மு.க முன்னிலைப்படுத்தத் தொடங்கியுள்ளது. ‘இந்துக்களுக்கு ஆதரவான கட்சியாகச் சொல்லப்படும் பா.ஜ.க அரசு, இந்து மக்களின் உரிமையைப் பறிக்கிறது’ என்று ஒரு பிரசாரத்தை முன்வைத்து இப்போது களமாட ஆரம்பித்துள்ளது. இதனால், இந்து மக்களிடமும் தங்கள் கோரிக்கைக்கு ஆதரவு கிடைக்கும் என்று கணக்கு போட்டு தி.மு.க செயல்படுகிறது. ஓ.பி.சி இட ஒதுக்கீட்டை மையப்படுத்தி, ‘சமூகநீதிக்கான போருக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்’ என்று அகில இந்திய அளவிலான எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருப்பதன் பின்னணியும் இதுதான் என்கிறார்கள்.

தேர்தல் அஜெண்டா அல்ல!

இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக தி.மு.க சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள தி.மு.க வழக்கறிஞர் வில்சன், ‘‘ `மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி பிரிவு மாணவர்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்; தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு மாநில இட ஒதுக்கீட்டைக் கடைப்பிடிக்க வேண்டும்’ என்பதுதான் பிரதான கோரிக்கை. உச்ச நீதிமன்றம் இது குறித்துப் பல முறை வழிகாட்டுதலை வழங்கியுள்ளது. இந்தியாவிலேயே அதிக மருத்துவக் கல்வி இடங்கள் தமிழகத்தில் உள்ளன. ஆனால், அதில் தமிழக மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை முறையாக வழங்காமல் போனதால், தமிழக மாணவர்களின் இடங்கள் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்குச் செல்கிறது. முறையாக இட ஒதுக்கீட்டைப் பின்பற்றியிருந்தால் இந்தப் பிரச்னை ஏற்படாது. மத்திய அரசு கலந்தாய்வு நடத்துவதுதான் வேலை. `இட ஒதுக்கீட்டை அந்தந்த மாநில அரசின் நிலைப்பாட்டுக்குத் தகுந்தபடி அளிக்க வேண்டும்’ என்பதை உச்ச நீதிமன்றமே சொல்லிவிட்டது. அதை மத்திய அரசு செய்யவில்லை என்பதுதான் இப்போதுள்ள பிரச்னை. அதையே எங்கள் வழக்கில் குறிப்பிட்டுள்ளோம்’’ என்றார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

`இட ஒதுக்கீடு பிரச்னையைவைத்து இந்துக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கிறதா தி.மு.க?’ என்று தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கேட்டபோது ‘‘சமூகநீதி என்ற அச்சாணியில்தான் இந்த இயக்கமே எழுப்பப்பட்டுள்ளது. மண்டல் கமிஷன் முதல் மருத்துவக் கல்வி வரை இட ஒதுக்கீடு விஷயத்தில் தி.மு.க தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறது. இது மதத்தை மையப்படுத்திய விஷயமல்ல; அடித்தட்டு மக்களின் எதிர்காலம் குறித்த விவகாரம். நூற்றாண்டுகளாகவே இந்த பிரச்னை தமிழகத்தில் பேசப்பட்டுவருகிறது. இதில் பா.ஜ.க போல மலிவான அரசியல் தேட விரும்பவில்லை நாங்கள். அதனாலேயே, எங்கள் தலைவர் இதை ஒரு `ஜனநாயகப் போர்’ என்று குறிப்பிட்டுள்ளார்’’ என்றார்.

பா.ஜ.க தரப்பு வீசும் கறுப்பர் கூட்ட அஸ்திரங்களிலிருந்து தப்பிப்பதற்கான கேடயமாக தி.மு.க தூசு தட்டிக்கொண்டிருக்கும் இட ஒதுக்கீடு காக்குமா... கவிழ்க்குமா? காலம் பதில் சொல்லும்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இவர்கள் என்ன சொல்கிறார்கள்?

‘‘கறுப்பர் கூட்டம் விவகாரம் பெரிதாகும்வரை தி.மு.க எந்த ரியாக்ட்டும் பண்ணவில்லை. விஷயம் பெரிதான பின்னர்தான், ‘எங்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை, தி.மு.க இந்துக்களுக்கு விரோதி அல்ல’ என்று ஆர்.எஸ்.பாரதி விளக்கம் கொடுத்தார். இப்போது விசாரணையில் செந்தில்வாசன் என்பவர் தி.மு.க ஐ.டி விங்கில் பணியாற்றியவர் எனவும், பின்னணியில் தி.மு.க இருக்கிறது என்பதும் ஊர்ஜிதமாகியிருக்கிறது. அதனால்தான், தி.மு.க-வினர் இப்போது ஓ.பி.சி இட ஒதுக்கீடு விஷயத்தைத் தூக்கிப் பிடிக்கின்றனர். ஓ.பி.சி இட ஒதுக்கீட்டுக்காக அவர்கள் மட்டும் வழக்கு தொடுக்கவில்லை அ.தி.மு.க-வும்தான் வழக்கு தொடர்ந்திருக்கிறது. அவர்கள் தங்களை முன்னிறுத்திக்கொள்வதற்குக் காரணம் கறுப்பர் கூட்டம் விவகாரத்திலிருந்து தப்பிப்பதற்காகத்தான்!’’

- வைகைச்செல்வன், செய்தித் தொடர்பாளர், அ.தி.மு.க

‘‘இப்போது மட்டுமல்ல, எப்போதெல்லாம் அரசியல்ரீதியாக பதில் சொல்ல முடியாத ஒரு நிலை வருகிறதோ அப்போதெல்லாம் சமூகநீதி என்கிற விஷயத்தை தி.மு.க-வினர் கையிலெடுப்பார்கள். இவர்கள் மத்தியில் ஆட்சியில் பங்கெடுத்த 10 வருட காலம் இதைப் பற்றிப் பேசாமல் மௌனமாக இருந்துவிட்டு, இப்போது சமூகநீதியைக் காப்பாற்றுகிறோம் என வேஷம் போடுகிறார்கள். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு துரோகம் இழைத்தவர்கள் தி.மு.க-வினர்தான். மத்திய அரசு இந்த விஷயத்தை மிகவும் கவனமாகக் கையாள்கிறது. கறுப்பர் கூட்ட விவகாரத்தில் அனைத்து ஜாதியினரும் இந்துக்களாக ஒன்றுகூடுவதை தி.மு.க-வால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் சமூகநீதிக் காவலர்கள் வேஷம் போடுகிறார்கள். கந்த சஷ்டி விஷயத்தில் தி.மு.க செய்த துரோகத்தை மக்கள் அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள்.’’

- வானதி சீனிவாசன், மாநில பொதுச்செயலாளர், பா.ஜ.க

‘‘மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி இட ஒதுக்கீட்டுக்காக முதலில் நீதிமன்றப் படியேறிய கட்சி பா.ம.க-தான். எங்களைப் பார்த்துத்தான் தி.மு.க-வும், அதைத் தொடர்ந்து தமிழக அரசும் வழக்குத் தொடர்ந்தன. தொடர்ந்து பலர் வழக்கு போட்டார்கள். ஆனால், இவர்கள் 50 சதவிகிதம் கேட்டு வழக்குத் தொடுத்ததால்தான், இன்று நமக்குக் கிடைக்க வேண்டிய 27 சதவிகித இட ஒதுக்கீடும் கிடைக்காமல் போனது. முழுக்க முழுக்க இந்த விஷயத்தில் அரசியல்தான் செய்கிறது தி.மு.க. தயவுசெய்து அதைக் கைவிட வேண்டும்.’’

- வழக்கறிஞர் பாலு, செய்தித் தொடர்பாளர், பா.ம.க