Published:Updated:

‘ஆபரேஷன் திராவிடா!’ - பா.ஜ.க-வின் தென்னகக் கனவு வெற்றிபெறுமா?

மோடி
பிரீமியம் ஸ்டோரி
மோடி

தமிழ்நாட்டு மக்களிடம் மோடி, பா.ஜ.க எதிர்ப்பு உணர்வு அதிகமிருப்பதாக பா.ஜ.க-வினரே கருதுவதால், தமிழ்நாட்டைத் தங்களது ரேடாரில் கடைசியாக வைத்துள்ளனர்.

‘ஆபரேஷன் திராவிடா!’ - பா.ஜ.க-வின் தென்னகக் கனவு வெற்றிபெறுமா?

தமிழ்நாட்டு மக்களிடம் மோடி, பா.ஜ.க எதிர்ப்பு உணர்வு அதிகமிருப்பதாக பா.ஜ.க-வினரே கருதுவதால், தமிழ்நாட்டைத் தங்களது ரேடாரில் கடைசியாக வைத்துள்ளனர்.

Published:Updated:
மோடி
பிரீமியம் ஸ்டோரி
மோடி

ஹைதராபாத்தில் நடைபெற்ற தேசிய செயற்குழுக் கூட்டத்தில், ‘தென்னகத்தை நோக்கி’ என்கிற இலக்கை முன்னெடுத்திருக்கிறது பா.ஜ.க. வட இந்தியாவை ஏறத்தாழ 80 சதவிகிதம் கைப்பற்றிவிட்ட பா.ஜ.க-வின் அடுத்த இலக்கு, தென்னிந்தியாவைக் கைப்பற்றுவதுதான். ஏற்கெனவே, கர்நாடகத்தில் ஆட்சியில் இருக்கிறார்கள், புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸை மறைமுகமாக இயக்கிக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், மீதமுள்ள ஆந்திரா, தெலங்கானா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவே ‘ஆபரேஷன் திராவிடா’ என்கிற அஜண்டாவை கையில் எடுத்திருக்கிறது பா.ஜ.க.

இன்று தொடங்கியதல்ல ‘ஆபரேஷன் திராவிடா!’

பா.ஜ.க-வின் தென்னிந்திய பிளான் குறித்து அரசியல் பார்வையாளர் ஒருவர் நம்மிடம் விளக்கமாகப் பேசினார். “ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னரே தொடங்கப்பட்டதுதான் ‘ஆபரேஷன் திராவிடா’ என்கிற அஜண்டா. எனினும், தற்போதுதான் ஓரளவுக்கு அதில் முன்னேறியிருக்கிறார்கள். பா.ஜ.க எப்போதுமே ‘லாங் பிளே’ செய்பவர்கள். அதாவது, டெஸ்ட் கிரிக்கெட்போல காத்திருந்து காரியத்தை முடிப்பவர்கள். தங்களுக்கான காலம் வரும்வரை கவனித்துக்கொண்டேதான் இருப்பார்கள். அப்படித்தான், மகாராஷ்டிர மாநிலத்தில் இரண்டரை ஆண்டுகள் காத்திருந்து, தற்போது ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

‘ஆபரேஷன் திராவிடா!’ - பா.ஜ.க-வின் தென்னகக் கனவு வெற்றிபெறுமா?

செயற்குழுக் கூட்டத்தில் தென்னிந்திய மாநிலங்களில் எந்தெந்தத் தொகுதிகளில் பின்தங்கியிருக்கிறோம், ஏன் அங்கெல்லாம் மக்கள் செல்வாக்கைப் பெற முடியவில்லை என்று பேசியிருக்கிறார்கள். இப்படி நாடாளுமன்றத் தொகுதி, சட்டமன்றத் தொகுதி, உள்ளாட்சி என்று பூத் கமிட்டி வரை விவாதித்திருக்கிறார்கள். தென் மாநிலங்களில் குறிப்பாக வாரிசு அரசியலை மையப்படுத்தியே கட்சிகள் இயங்குவதால், அதையே பா.ஜ.க துருப்புச்சீட்டாகப் பயன்படுத்த நினைக்கிறது. கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதாதளம், ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு, தெலங்கானாவில் சந்திரசேகர ராவ், தமிழ்நாட்டில் ஸ்டாலின் என வாரிசை ஆதரிக்கும் தலைவர்களை வீழ்த்த மாநிலத்துக்கு மாநிலம் தனித்தனி ஸ்ட்ராட்டஜியை வைத்திருக்கிறது பா.ஜ.க.

ரேடாரில் கடைசி இடத்தில் தி.மு.க!

தமிழ்நாட்டைச் சேர்ந்த இசையமைப்பாளர் இளையராஜா, கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட பி.டி.உஷா, ‘பாகுபலி’ உள்ளிட்ட படங்களுக்குத் திரைக்கதை எழுதிய தெலுங்குத் திரைப்பட எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத், கர்நாடகத்தைச் சேர்ந்த தர்மசாலா கோயில் அறங்காவலர் வீரேந்திர ஹெக்டே ஆகியோர் நியமன ராஜ்ய சபா எம்.பி-க்களாக அறிவிக்கப்பட்டதும்கூட, `ஆபரேஷன் திராவிடா’வின் ஒரு பகுதியே. தமிழிசை, ஆர்.என்.ரவி போன்ற ஆளுநர்கள் அரசியல் பேசுவதும்கூட பா.ஜ.க-வின் திட்டப்படிதான்.

தமிழ்நாட்டு மக்களிடம் மோடி, பா.ஜ.க எதிர்ப்பு உணர்வு அதிகமிருப்பதாக பா.ஜ.க-வினரே கருதுவதால், தமிழ்நாட்டைத் தங்களது ரேடாரில் கடைசியாக வைத்துள்ளனர். இருந்தபோதும், தொலைநோக்குப் பார்வையோடு எதையும் செய்யக்கூடிவர்கள் என்பதால்தான், முதலில் வலுவாக இருக்கும் எதிர்க்கட்சியான அ.தி.மு.க-வை வலுவிழக்கவைத்தனர். ‘தமிழ்நாட்டில் ஒரு ஷிண்டே உருவாவார்’ என்று அண்ணாமலை பேசியதும், இந்த ஆபரேஷனின் ஒரு பகுதிதான். முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை அனைவரையும் கட்டுப்படுத்தும் குடும்பத்தை தி.மு.க எம்.எல்.ஏ-க்களே வெறுக்கத்தான் செய்கிறார்கள். அத்தகையவர்களைத் தேடிப்பிடிப்பதுதான் பா.ஜ.க-வின் பாணி” என்று முடித்தார்.

“தமிழ்நாட்டில் எடுபடாது..!”

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரனிடம் பேசினோம். “ஒவ்வொரு மாநிலத்திலும், மாநிலக் கட்சிகளைப் பயன்படுத்திவிட்டு, தூக்கியெறிவதுதான் பா.ஜ.க ஸ்டைல். என்னைப் பொறுத்தவரை தென்னகத்தில் அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் கடுமையாக பா.ஜ.க-வை எதிர்க்கிறார். கேரளாவில் பா.ஜ.க-வால் ஒரு சீட்கூட பெற முடியவில்லை. கர்நாடகத்தில் வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக வெற்றிபெறாது. தமிழ்நாட்டில் பிரசார அளவில் தலைதூக்குகிறார்களே தவிர, அடித்தளத்தில் இல்லை. தற்காலிகமாகப் பெறக்கூடிய வெற்றிகளை நிரந்தமாக்க முயல்கிறது பா.ஜ.க. எம்.எல்.ஏ-க்களைக் காசு கொடுத்து வாங்கி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அதே ஃபார்முலாவை தமிழ்நாட்டில் அமல்படுத்தலாம் என்று நினைத்தால், நிச்சயம் தோற்றுப்போவார்கள்” என்றார்.

தி.மு.க செய்தித் தொடர்புத்துறை இணைச் செயலாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம். “தென்னிந்தியாவில் கேரளாவைப் பொறுத்தவரை ஆரம்பத்திலிருந்தே கம்யூனிஸ்ட்டும் காங்கிரஸும் நிலைத்து நின்றுவிட்டார்கள். ஆந்திரா, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை காங்கிரஸின் இடத்தை மாநிலக் கட்சிகள் அடித்துத் தூக்கிவிட்டன. கர்நாடகத்தில் ஹெக்டே ஜனதா தளத்தையும், தேவகவுடா மதச்சார்பற்ற ஜனதாதளத்தையும் வளர்க்கத் தவறியதால், காங்கிரஸை எதிர்த்து பா.ஜ.க வந்துவிட்டது. மற்றபடி, பா.ஜ.க-வின் கோட்பாடுகளுக்கு தென்னகத்தில் போதிய ஆதரவு இருக்காது. ‘ஆபரேஷன் திராவிடா’ என்பது கர்நாடகத்தில் வேண்டுமானால் கைகொடுக்கலாமே தவிர, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, தமிழ்நாட்டில் கைகொடுக்காது” என்றார் தெளிவாக.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத் தலைவர் இதாயத்துல்லா நம்மிடம், “தோல்வியையே சந்திக்காத கட்சி என்றும் பா.ஜ.க-வைச் சொல்லிவிட முடியாது. இந்தி பேசும் மாநிலங்களிலேயே தோற்ற வரலாறு உண்டு. குறுக்குவழியில்தான் பல மாநிலங்களில் ஆட்சியமைத்திருக்கிறது. பா.ஜ.க-வுக்கு வட இந்தியாவில் ஏற்பட்ட நிலையைவிட, தென்னிந்தியாவில் மோசமான நிலை ஏற்படும்” என்றார்.

சி.மகேந்திரன், கான்ஸ்டன்டைன், இதாயத்துல்லா, நரேந்திரன்
சி.மகேந்திரன், கான்ஸ்டன்டைன், இதாயத்துல்லா, நரேந்திரன்

“இரண்டையும் ஒப்பிடக் கூடாது!”

தமிழ்நாடு பா.ஜ.க பொதுச்செயலாளர் நரேந்திரனிடம் விளக்கம் கேட்டபோது, “ஏற்கெனவே வட இந்தியாவில் எல்லாப் பகுதிகளிலும் கட்சி வலுவாக இருக்கிறது. பல இடங்களில் ஆட்சியில் இருக்கிறோம். மேற்கு வங்கத்தில் தற்போது கட்சி வலுவான நிலைக்கு வந்துவிட்டது. ஒடிசா உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் எதிர்க்கட்சியாக, வலுவாக இருக்கிறோம். தென்னிந்தியாவில் ஆந்திரா, தெலங்கானா, கேரளா, தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்கள்தான் எங்களது அடுத்த இலக்கு. அடுத்து கட்சியை இங்கு வலுப்படுத்தி, ஆட்சியைப் பிடிப்பதுதான் எங்களது நோக்கம். ஆனால் இதற்கும், நியமன எம்.பி அறிவிப்புக்கும் தொடர்பில்லை. இரண்டையும் ஒப்பிடுவது சரியல்ல” என்றார்.

கட்சிகள் கணக்கு போடலாம். மக்கள் மனது வைக்கவேண்டுமே?!