
காவித்துண்டு அணிந்தபடி இளைஞர்கள் ஊர்வலத்தில் வருவார்கள். வாள், கத்தி, கிரிக்கெட் பேட் என்று அவர்கள் கைகளில் ஏதேதோ இருக்கும்.
ராம நவமியும் அனுமன் ஜயந்தியும் தமிழகத்தில் கொண்டாடப்படும் பெரிய விழாக்கள் கிடையாது. ஆனால், இந்தியாவின் பல மாநிலங்களில் இந்த விழாக்களின்போது பெரிய ஊர்வலங்கள் நடைபெறும்.
ராமநவமியை முன்னிட்டு ஏப்ரல் 10-ம் தேதி கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் குப்பி நகரில் நூற்றுக்கணக்கானோர் ஊர்வலமாகச் சென்றனர். இந்த ஊர்வலத்தில் வந்தவர்களுக்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் காவித் துண்டுகளைக் கழுத்தில் அணிந்துகொண்டு மோரும் பானங்களும் வழங்கினர்.
மதநல்லிணக்கத்தின் அடையாளமாக நிகழ்ந்த இந்த ஒற்றைச் சம்பவத்தைத் தாண்டி வேறு எங்கிருந்தும் நல்ல செய்திகள் வரவில்லை. பல மாநிலங்களில் இந்த ஊர்வலம் வன்முறையில் முடிந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து ஏப்ரல் 16-ம் தேதி நடைபெற்ற அனுமன் ஜயந்தி ஊர்வலங்களிலும் பல இடங்களில் வன்முறை வெடித்தது. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத வெவ்வேறு மாநிலங்களில், வெவ்வேறு பகுதிகளில் இந்தச் சம்பவங்கள் நடைபெற்றாலும், எல்லாமே ஒரே மாதிரியாக நடைபெற்றன என்பதுதான் இவற்றில் இருக்கும் ஒற்றுமை.

ஊர்வலத்தில் மையமாக ஒரு வாகனம் வரும். அதிலிருந்து உச்ச டெசிபலில் பாடல் ஒலிக்கும். பெரும்பாலும் அதில் ஒலிக்கும் பாடல் ஒன்றுதான். `தொப்பிவாலா பாடல்' என்ற பெயரில் வட இந்தியாவில் பிரபலம். `இந்துக்கள் எழுச்சிபெறும்போது அதன் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்' என்று ஆரம்பித்து இஸ்லாமியர்களுக்கு எதிரான உணர்ச்சியைத் தூண்டிவிடும் வாசகங்கள் கொண்ட பாடல் அது.
காவித்துண்டு அணிந்தபடி இளைஞர்கள் ஊர்வலத்தில் வருவார்கள். வாள், கத்தி, கிரிக்கெட் பேட் என்று அவர்கள் கைகளில் ஏதேதோ இருக்கும். சில இடங்களில் பொம்மைத் துப்பாக்கிகள் மற்றும் நிஜத் துப்பாக்கிகளை வானை நோக்கி உயர்த்தியபடியும் பலர் வந்தார்கள். இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிகள் வழியே ஊர்வலம் செல்லும்போது கோஷங்கள் வலுவாக இருக்கும். குறிப்பாக மசூதியைத் தொடும்போது அது உச்சக்கட்டம் பெறும். இதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவிக்கும்போது, இரு தரப்பிலிருந்தும் கல்வீச்சு நடைபெறும், கலவரம் ஏற்படும். வாகனங்கள், கடைகள், வீடுகள் எரிக்கப்படும்.
குஜராத் மாநிலம் ஹிம்மத் நகர் மற்றும் கம்பாட் நகரில் நடந்த ஊர்வலங்கள் கலவரத்தில் முடிந்திருக்கின்றன. கம்பாட் நகரில் கலவரத்தில் 65 வயதுள்ள ஒருவர் பலியாகியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் ஹவுரா, ஷிப்பூர், கர்கோனிக் பகுதிகளில் இதேபோல நடந்தது. ஜார்கண்ட் மாநிலம் லோகர் டகா, ராஜஸ்தான் மாநிலம் கரோலி என்று பல இடங்களில் நடைபெற்ற கலவரங்களில் ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பீகாரின் முசாபர் நகர் மாவட்டத்தின் முகமத்பூர் கிராமத்தில் நடந்த ராமநவமி ஊர்வலத்தின்போது அங்கிருந்த ஒரு மசூதியின் கோபுரத்தில் காவிக் கொடி ஏற்றும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.

ராமநவமியைத் தொடர்ந்து ஏப்ரல் 16-ம் தேதி அனுமன் ஜெயந்தி ஊர்வலங்களிலும் இதேபோன்ற சம்பவங்கள் நடந்தன. டெல்லியின் ஜஹாங்கிர்புரி பகுதியில் போலீஸாரின் கண்ணெதிரிலேயே மோதல் நடைபெற்றது. பெரிதாக வன்முறைச் சம்பவங்கள் நடைபெறாத உத்தரகாண்ட் மாநிலத்திலும் கலவரம் நடைபெற்றது.
சரி, இந்தப் பிரச்னையை அரசு எப்படிக் கையாண்டது? மத்தியப்பிரதேச மாநிலம் கார்கோன் பகுதியில் நடைபெற்ற சம்பவம் இந்த எல்லாவற்றுக்குமான ஒரு சோற்றுப் பதம்.
தலாப் சவுக் மசூதி எதிரில் ராமநவமி ஊர்வலம் சென்றபோது இரு பிரிவினரும் கல்வீசித் தாக்கிக்கொண்டனர். ``ஊர்வல வாகனத்தில் ஒலித்த வெறுப்பைத் தூண்டும் பாடல்களும், ஆயுதங்களைக் கையில் ஏந்தியபடி அவர்கள் போட்ட கோஷங்களும்தான் கலவரம் தொடங்கக் காரணம்'' என்கிறார்கள் அந்தப் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்கள். ``ராமநவமி ஊர்வலத்தில் வந்தவர்களைத் தாக்கிய முஸ்லிம்களுக்கு பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு நிதியுதவி செய்திருக்கிறது. துப்பாக்கி, கத்தி, கற்கள், பெட்ரோல் குண்டுகள் என எல்லாவற்றுடனும் அவர்கள் தயாராக இருந்தனர்'' என்று குற்றம் சாட்டுகிறார், மத்தியப் பிரதேச பா.ஜ.க தலைவர் வி.ஜி.சர்மா. கார்கோன் மாவட்ட ஆட்சியர் அனுக்ரஹா, ``கலவரத்தை எது தூண்டியது என்று காரணத்தைச் சரியாகக் கண்டறிய முடியவில்லை'' என்கிறார்.
இப்படி மாவட்ட நிர்வாகமும் போலீஸாரும் கலவரத்துக்கான காரணத்தைக் கண்டறிவதற்கு முன்பாகவே, அரசு கடும் நடவடிக்கையில் இறங்கியது. மத்தியப்பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா, ``கற்களை எறிந்தவர்கள் அத்தனை பேரின் வீடுகளும் கற்குவியல் ஆக்கப்படும்'' என்று சபதம் செய்தார். ``கலவரத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்வதுடன் நிற்க மாட்டோம். அவர்கள் சேதப்படுத்திய சொத்துகளுக்கு இரண்டு மடங்கு இழப்பீட்டை அவர்களிடமிருந்து வசூலிப்போம்'' என்றார் முதல்வர் சிவராஜ்சிங் சௌகான்.

உத்தரப்பிரதேசத்தில் குற்றங்களில் ஈடுபடுவோரின் வீட்டை புல்டோசர் வைத்துத் தகர்க்க உத்தரவிட்டிருக்கிறார் முதல்வர் யோகி ஆதித்யநாத். போலீஸ் விசாரணை, நீதிமன்ற விசாரணை எல்லாம் அப்புறம்தான்! புகார் பதிவான உடனே புல்டோசர் வந்துவிடும். இப்படி `இன்ஸ்டன்ட் நீதி' வழங்குவதால் அவருக்கு `புல்டோசர் பாபா' என்று பட்டப்பெயர் கிடைத்திருக்கிறது. விசாரணையில் ஒருவர் குற்றமற்றவர் என நிரூபணமானால் அவருக்குத் திரும்பவும் வீடு கட்டிக் கொடுப்பார்களா என்றால், இல்லை. சட்டவிரோத இடிப்பை அரசே செய்கிறது.
இதே ஃபார்முலாவை மத்தியப்பிரதேசத்தில் சிவராஜ்சிங் சௌகான் கையில் எடுத்தார். கலவரம் நிகழ்ந்த மறுநாளே கார்கோன் நகரில் ஐந்து இடங்களில் 16 வீடுகளும் 29 கடைகளும் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை இஸ்லாமியர்களின் உடைமைகள். கார்கோன் மசூதி வளாகத்தில் இருந்த 12 கடைகளும் இடிக்கப்பட்டன. இவற்றில் நான்கு கடைகள் இந்துக்கள் நடத்திவந்தவை.
`கலவரம் செய்தவர்களின் வீடுகளைத்தான் இடித்தோம்' என்று காரணம் சொல்லாமல், `ஆக்கிரமிப்புகளை அகற்றினோம்' என்று சமாளித்தார்கள் அதிகாரிகள். ஆனால், இடிக்கப்பட்டவற்றில் பிரதமரின் வீடு கட்டித் தரும் திட்டத்தில் கட்டப்பட்டு, முதல்வரின் புகைப்படத்துடன் இருந்த சில வீடுகளும் அடக்கம்.

மத்தியப்பிரதேசத்தின் செந்த்வா நகரில் இதேபோல கலவரத்தில் ஈடுபட்டதாக ஷபாஸ் என்பவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் வீட்டின் ஒரு பகுதியையும் அதிகாரிகள் இடித்தனர். ஆனால், அவர் ஏற்கெனவே வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டு ஒரு மாதமாக சிறையில் இருக்கிறார். சிறையில் இருப்பவர் எப்படி ஏப்ரல் 10-ம் தேதி கலவரம் செய்திருக்க முடியும் என்று கேட்டால், `புகார் கொடுத்தவர்கள் யார் யார் பெயர் சொன்னார்களோ, அவர்கள்மீது நாங்கள் வழக்குப்பதிவு செய்தோம். விசாரித்துவிட்டு நீக்கிவிடுவோம்' என்கிறார்கள். ஆனால், இடிக்கப்பட்ட வீடு?
இந்தக் கலவரங்கள் இருதரப்பினருக்கும் ஏராளமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கின்றன. கலவரத்தை யார் ஆரம்பித்து வைத்தாலும், யார் தாக்கினாலும், யார் தாக்கப்பட்டாலும், அது கலவரப் பிரதேசம்தான். கார்கோன் பகுதியில் இந்த மாதத்தில் நடைபெறவிருந்த பல திருமணங்கள் நின்றுபோயிருக்கின்றன; நிச்சயதார்த்தங்கள் ரத்தாகியுள்ளன. கலவரப் பகுதியில் பெண் கொடுக்கவோ, அங்கிருந்து பெண் எடுக்கவோ பலர் தயாராக இல்லை.
நிகழ்ந்துமுடிந்த அத்தனை சம்பவங்களையும் வைத்து சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட மெசேஜ்கள் பரவுகின்றன. அவை இந்தக் கலவரத்தீயைக் காட்டுத்தீயாக மாற்றத் துடிக்கின்றன. மும்பை போலீஸாரின் சோஷியல் மீடியா லேப் மட்டுமே கலவரத்தைத் தூண்டும் சுமார் 3,000 மெசேஜ்களை இந்த இரண்டு வாரங்களில் கண்டறிந்து அழித்துள்ளது. கவனம் பெறாத பல தகவல்கள் கால் முளைத்துப் பரவிக்கொண்டே இருக்கின்றன.
``இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்புப் பிரசாரம் கட்டவிழ்த்து விடப்படுகிறது'' என்று குரல் கொடுக்கிறார்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள். சோனியா காந்தியிலிருந்து மு.க.ஸ்டாலின் வரை 13 தலைவர்கள் இணைந்து வெளியிட்டுள்ள ஓர் அறிக்கை, `இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியின் அமைதி அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. மதவெறியைத் தூண்டுவோரின் வார்த்தைகள் மற்றும் செயல்களுக்கு எதிராகப் பிரதமர் மோடி பேசத் தவறிவிட்டார்' என்று குற்றம் சாட்டுகிறது. ``எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் பா.ஜ.க-வினரும் இந்துத்வ அமைப்பினரும் திட்டமிட்டுத் தாக்கப்படுகின்றனர்'' என்று குற்றம் சாட்டுகிறார் பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா.
கடந்த டிசம்பரில் நடைபெற்ற ஹரித்துவார் தர்ம சன்சத் நிகழ்ச்சியில் யதி நரசிங்கானந்த், `இஸ்லாமியர்களைக் கொல்ல வேண்டும்' என்று பேசியது கடும் சர்ச்சையானது. அதுதொடர்பாகக் கடும் சர்ச்சைகள் எழுந்தபிறகு அவர் கைது செய்யப்பட்டார். ஜாமீனில் வெளியில் வந்திருக்கும் அவர் இப்போது டெல்லியில் மீண்டும் ஒரு நிகழ்ச்சி நடத்தி, `இந்துக்கள் ஆயுதம் ஏந்த வேண்டும்' என்று பேசுகிறார். அந்த டிசம்பரில் தொடங்கி இப்போதுவரை தொடரும் வெறுப்புப் பிரசாரம் குறித்துத் துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு, `ஒரு தரப்புக்கு எதிராக இன்னொரு தரப்பு மக்களைத் தூண்டிவிடுவது தேசத்துக்கு எதிரான குற்றம்' என்று சொன்னதைத் தாண்டி அரசுத் தரப்பிலிருந்து எந்தக் கண்டனமும் இதுவரை இல்லை. வெறுப்புப் பேச்சைவிட அதிகாரத்தில் இருப்பவர்களின் இந்த மௌனம்தான் அச்சுறுத்துவதாக இருக்கிறது.
புனித வெள்ளி தினத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது வீடியோ ஒன்று. ஒரு தேவாலயத்துக்கு கிறிஸ்தவர்கள் ஊர்வலமாகச் செல்வதைப் பார்த்தபடியே தன் வீட்டு மொட்டை மாடியில் மெழுகுவத்தியை ஏற்றி உயர்த்திப் பிடிக்கிறார் 87 வயது பிராமண முதியவர் ஒருவர். இந்தப் பன்மைத்துவம்தான் நம் பண்பாட்டின் அடையாளம். சகிப்புத்தன்மையும் சமூக நல்லிணக்கமும் மட்டுமே நம்மை வளமான தேசமாக மாற்றும்.