Published:Updated:

கொடநாடு... ஆணையம்... உட்கட்சி... அ.தி.மு.க-வை நெருக்கும் வழக்குகள்!

அ.தி.மு.க-வை நெருக்கும் வழக்குகள்!
பிரீமியம் ஸ்டோரி
அ.தி.மு.க-வை நெருக்கும் வழக்குகள்!

ஒருபக்கம் கொடநாடு வழக்கால் எடப்பாடிக்குப் பதற்றமென்றால், மற்றொருபுறம் ஆறுமுகசாமி ஆணையம் பன்னீருக்கும் பதற்றத்தை உண்டாக்கியிருக்கிறது.

கொடநாடு... ஆணையம்... உட்கட்சி... அ.தி.மு.க-வை நெருக்கும் வழக்குகள்!

ஒருபக்கம் கொடநாடு வழக்கால் எடப்பாடிக்குப் பதற்றமென்றால், மற்றொருபுறம் ஆறுமுகசாமி ஆணையம் பன்னீருக்கும் பதற்றத்தை உண்டாக்கியிருக்கிறது.

Published:Updated:
அ.தி.மு.க-வை நெருக்கும் வழக்குகள்!
பிரீமியம் ஸ்டோரி
அ.தி.மு.க-வை நெருக்கும் வழக்குகள்!

ஐந்து ஆண்டுகளாகத் திக்குத் தெரியாமல் பயணித்த கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில், தற்போது முன்னேற்றம் தென்பட ஆரம்பித்திருக்கிறது. வழக்கு தொடர்பாக, அ.தி.மு.க வர்த்தக அணி மாநில அமைப்பாளர் சஜ்ஜீவன், அவரின் தம்பி சிபி ஆகியோரிடம் விசாரணை நடத்தியிருக்கிறது காவல்துறை. இதனால், ‘எடப்பாடி தரப்புக்குச் சிக்கல் உண்டாகலாம்’ என அ.தி.மு.க வட்டாரங்களிலேயே பரபரப்பையும் படபடப்பையும் காண முடிகிறது. மற்றொருபுறம், ஆறுமுகசாமி ஆணையம் தன் விசாரணையை நிறைவுசெய்திருக்கிறது. இதைத் தொடர்ந்து, பன்னீரின் அரசியல் ஸ்டன்ட்டுகளுக்கெல்லாம் ஆணையத்தின் அறிக்கை முற்றுப்புள்ளி வைக்கும் என அரசியல் பரபரப்பு எழுந்திருக்கிறது. இந்த வழக்கு சிக்கல்களுக்கு நடுவே, உட்கட்சித் தேர்தல் தொடர்பாக முன்னாள் அ.தி.மு.க எம்.பி கே.சி.பழனிசாமி தரப்பினர் தொடர்ந்திருக்கும் வழக்கும் அ.தி.மு.க-வின் கால்களைச் சுற்றியிருக்கிறது. அடுத்தடுத்து வழக்குகளும் விசாரணைகளும் இறுகுவதால், அ.தி.மு.க கூடாரத்தில் கொளுத்தும் வெயிலைத் தாண்டி அரசியல் அனலடிக்கிறது!

கொடநாடு... ஆணையம்... உட்கட்சி... அ.தி.மு.க-வை நெருக்கும் வழக்குகள்!

சசிகலா கொடநாடு செல்லாதது ஏன்?

அ.தி.மு.க கட்சி மேலிடத்தை அதிகம் அசைத்துப் பார்த்திருப்பது கொடநாடு வழக்குதான். அ.தி.மு.க முக்கியப் பிரமுகர்கள் சஜ்ஜீவன், ஆறுக்குட்டி, அனுபவ் ரவி ஆகியோரிடம் அடுத்தடுத்து நடத்தப்படும் விசாரணை, க்ளைமாக்ஸ் நோக்கி வழக்கை நகர்த்துவதாகக் கூறுகிறது அக்கட்சி வட்டாரம். எடப்பாடி ஆட்சிக்காலத்தில் கொடநாடு வழக்கில் சாட்சியாகக்கூட சேர்க்க முடியாத, ‘தேவையற்ற சாட்சி’ என நீதிமன்றத்தால் விலக்கப்பட்ட முக்கிய நபர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணையை நெருக்கியிருக்கிறது தனிப்படை. கொடநாடு எஸ்டேட் பங்களாவில் பணம் எண்ணும் இயந்திரம் இருந்ததாக போலீஸாரின் மறுவிசாரணையில் தெரியவந்திருக்கிறது. இது தொடர்பான கேள்விகளை மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் எழுப்பியபோது, பட்டும்படாமல் பதிலளித்திருக்கிறார் சசிகலா. அதேநேரம், முன்னாள் அமைச்சர்கள் தொடர்பான சில ஆவணங்கள் பங்களாவில் இருந்ததை அவர் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

ஐ.ஜி சுதாகரிடம், “இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட கனகராஜ், எங்கள் முன்பு நின்று தைரியமாகப் பேசக்கூடியவர். அவ்வளவு பெரிய பங்களாவில், உள்ளே என்ன இருக்கிறது என்பது தெரியாமல் செல்ல வாய்ப்பில்லை. தவிர, அப்போதிருந்த ஆட்சியாளர்கள் நம்பிக்கை அளித்திருக்க வேண்டும். அந்தத் துணிச்சலில்தான் அவர்கள் உள்ளே சென்றிருக்க வேண்டும். தடயங்களை அழிக்க வேண்டாம் என்பதால் நான் தற்போது வரை கொடநாடு செல்லவில்லை” என்றிருக்கிறார் சசி.

கொடநாடு வழக்கு விசாரணையிலுள்ள காவல் அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். “போயஸ் கார்டனிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, அப்போதைய எம்.எல்.ஏ ஆறுக்குட்டியிடம் டிரைவராக கனகராஜ் பணியாற்றியுள்ளார். ஆறுக்குட்டியின் எம்.எல்.ஏ வாகனத்துக்கான பாஸ் கனகராஜிடம் இருந்ததாகத் தெரிகிறது. கொடநாடு சம்பவத்தின்போது, இந்த பாஸை கனகராஜ் பயன்படுத்தியதாகவும் தெரியவந்துள்ளது. சயானுடன் இணைந்து ரியல் எஸ்டேட் வேலையையும் செய்துவந்த கனகராஜ், கொடநாடு சம்பவத்துக்குச் சில வாரங்களுக்கு முன்பு ஒரு நில விவகாரம் தொடர்பாக நீலகிரி சென்றுள்ளார். அவருடன் அனுபவ் ரவி, சயான் ஆகியோரும் சென்றுள்ளனர். அப்போது அனுபவ் ரவி போன் மட்டுமே ஆக்டிவ்வாக இருந்துள்ளது. கனகராஜ், சயான் போன்கள் ஸ்விட்ச் ஆஃப்-ல் இருந்துள்ளன. அனுபவ் ரவி போனிலிருந்து, மற்ற இருவரும் சிலரிடம் பேசியிருக்கிறார்கள். இது குறித்தெல்லாம் தீவிரமாக விசாரித்துவருகிறோம். விரைவில் சசிகலாவை, கொடநாடு அழைத்துவந்து விசாரிக்கவும் வாய்ப்புள்ளது” என்றனர்.

கொடநாடு... ஆணையம்... உட்கட்சி... அ.தி.மு.க-வை நெருக்கும் வழக்குகள்!

சிக்கலில் சஜ்ஜீவன்... சிக்குமா முதலைகள்?

இந்த வழக்கில், போலீஸார் இப்போதுதான் சீரியஸான நபர்களை விசாரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டியிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையிலேயே, அ.தி.மு.க வர்த்தக அணி மாநில அமைப்பாளர் சஜ்ஜீவனை விசாரித்திருக்கிறது போலீஸ். என்னதான் ஜெயலலிதா, சசிகலாவுடன் நெருக்கமாக இருந்தாலும், ஜெயலலிதா மரணம், கொடநாடு சம்பவம் ஆகியவற்றுக்குப் பிறகுதான் சஜ்ஜீவனுக்கு அ.தி.மு.க-வில் மாநிலப் பொறுப்பு வழங்கப்பட்டது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கேள்விகளால் துளைத்தெடுத்திருக்கிறது காவல்துறை.

“கொடநாடு பங்களாவுக்குக் கடைசியாக எப்போது போனீர்கள்... சம்பவம் நடந்த சமயத்தில் துபாயில் இருந்த காரணம் என்ன... அங்கிருந்தபடி யாருடன் போனில் பேசினீர்கள்?” என்று கேள்விகளைக் கேட்டு வாக்குமூலம் பெற்றுள்ளனர். சசிகலாவிடம் விசாரணை நடத்தியபோது, சஜ்ஜீவன் தொடர்பாகவும் சில கேள்விகளைக் கேட்டு பதில் பெற்றிருக்கிறார் ஐ.ஜி சுதாகர். இந்தச் சூழலில், இதுவரை வெளியில் தெரியாத சஜ்ஜீவனின் சகோதரர் சிபியை வரவழைத்து போலீஸ் விசாரித்திருப்பது அ.தி.மு.க வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நம்மிடம் பேசிய கூடலூர் அ.தி.மு.க பிரமுகர்கள் சிலர், “சஜ்ஜீவனின் சகோதரர்களில் ஒருவரான சுனில் மீது கேரளாவில் ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. தான் கொடுக்கும் ரகசிய வேலைகளை சுனில் ஆத்திரப்பட்டு செய்து மாட்டிக்கொள்வதால், அவர்மீது சஜ்ஜீவனுக்குப் பெரிய அபிப்பிராயம் கிடையாது. ஆனால், சிபி மிகவும் சாந்தமான நபராக வலம்வருபவர். பா.ஜ.க-வில் பொறுப்பிலிருக்கும் இவர்மீது சஜ்ஜீவனுக்குப் பாசம் அதிகம் என்பதால், பல ‘மதிப்புமிக்க’ சொத்துகளை சிபி பேரிலேயே வாங்கிப்போட்டிருக்கிறார். மிக முக்கியமான பணிகளை சிபியைவைத்தே செய்துவந்திருக்கிறார் சஜ்ஜீவன்.

சஜ்ஜீவன்
சஜ்ஜீவன்

கட்சிரீதியாக சஜ்ஜீவன் வளர்வதற்குத் துணையாக நின்றவர் கொங்கு மண்டல மாஜிதான். அந்த மாஜியின் உதவியாளரும், சஜ்ஜீவனும் சியர்ஸ் பார்ட்னர்கள். கொடநாடு வழக்கு மறுவிசாரணை தொடங்கியதும், அதற்குத் தடை கேட்டு வழக்கு தொடர மூளையாகச் செயல்பட்டவர் மாஜி. தற்போது விசாரணை இறுக்குவதால், மாஜி முகத்தில் கவலை ரேகைகள் தென்படத் தொடங்கியுள்ளன. சமீபத்தில் சஜ்ஜீவன் தரப்பை அழைத்து, ‘எந்த நேரத்திலும், எதுவும் நடக்கலாம்’ என்று உஷார்படுத்தியிருக்கிறார் மாஜி. அவர் சொல்லி வாய் மூடும் முன்பாகவே, சிபியை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்துவிட்டது போலீஸ். சஜ்ஜீவனுக்குச் சிக்கல்கள் முற்றுகின்றன. சஜ்ஜீவன் குடும்பம் வாய் திறந்தால், இந்த வழக்கில் தொடர்புடைய பல முதலைகள் வெளிச்சத்துக்கு வரும்” என்றனர்.

இளங்கோவனுக்கு திடீர் பதவி! - பதற்றத்தில் எடப்பாடி?

ஏப்ரல் 28-ம் தேதி, சஜ்ஜீவன் சகோதரர் சிபியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், “கூடலூர் செக்போஸ்ட்டில் மாட்டிய குற்றவாளிகளின் காரை விடுவிக்கச் சொல்லி, உங்களிடம் யார் உதவி கேட்டது... யார் மூலமாக காரில் இருந்தவர்களைத் தப்பவைத்தீர்கள்?” என்று கேள்விகளை அடுக்கியிருக்கிறது போலீஸ். “இனி, அடுத்த பாய்ச்சல் சேலத்துக்குத்தான்” என்று கண்சிமிட்டுகிறார்கள் தனிப்படை அதிகாரிகள்.

“இந்தப் பாய்ச்சல் விவகாரம் லீக் ஆனதால்தான், சேலம் இளங்கோவனைக் காப்பாற்றுவதற்காகத் தன் பதவியை விட்டுக்கொடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி” என்கிறது எடப்பாடிக்கு நெருக்கமான வட்டாரம். ஏற்கெனவே லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டில் சிக்கியிருக்கும் இளங்கோவனிடம், கொடநாடு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த தீர்மானித்திருக்கிறதாம் தனிப்படை.

நம்மிடம் பேசிய சேலம் மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள், “புறநகர் மாவட்டச் செயலாளர் பதவிக்கு, எடப்பாடி பழனிசாமி ஏப்ரல் 25-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தபோது, அவரை எதிர்த்து யாரும் வேட்புமனு அளிக்கவில்லை. போட்டியின்றி அவர் தேர்வானதாகவே தெரிவிக்கப்பட்டது. ஆனால், கொடநாடு வழக்கில் சிபி விசாரிக்கப்படப்போவதாகத் தகவல் வெளியானவுடன் இளங்கோவன் பதற்றமாகிவிட்டார். எடப்பாடியிடம், ‘உங்களுடன் நான் இருந்தேன் என்கிற காரணத்துக்காகவே என்மீது லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தப்பட்டது. இப்போது கொடநாடு வழக்கிலும் என்னைச் சேர்க்கப் பார்க்கிறார்கள். மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் பொறுப்பிலிருந்தபடி வழக்கைச் சந்தித்தால், பத்தோடு பதினொன்றாக அனைவரும் என்னைக் கடந்துபோவார்கள். நம் கட்சிக்காரர்கள்கூட என்னை மதிக்க மாட்டார்கள். கட்சி எனக்குத் துணையாக இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காக, மாவட்டச் செயலாளர் பதவியைக் கொடுங்கள்’ என்றிருக்கிறார். இளங்கோவன் சிக்கிவிடக் கூடாது. சிக்கினால், பிரச்னை வேறுவிதமாக மாறிவிடும் என்று எடப்பாடிக்கு நன்கு தெரியும். அதனால்தான், புறநகர் மாவட்டச் செயலாளர் பதவியை இளங்கோவனுக்கு விட்டுக்கொடுத்திருக்கிறார். மிக சென்ட்டிமென்ட்டான - ஜெயலலிதா கொடுத்த மாவட்டச் செயலாளர் பதவியை விட்டுக்கொடுக்கும் அளவுக்குப் பதற்றம் அவரை ஆட்கொண்டிருக்கிறது” என்றனர்.

இளங்கோவன்
இளங்கோவன்

“இமேஜ் போயிடுமே...” பதற்றத்தில் பன்னீர்!

ஒருபக்கம் கொடநாடு வழக்கால் எடப்பாடிக்குப் பதற்றமென்றால், மற்றொருபுறம் ஆறுமுகசாமி ஆணையம் பன்னீருக்கும் பதற்றத்தை உண்டாக்கியிருக்கிறது. ‘ஜெயலலிதா மரணத்தில் நீதி வேண்டும்’ என பன்னீர்செல்வம் போர்க்கொடி உயர்த்தியதால்தான், ஆறுமுகசாமி ஆணையமே அமைக்கப்பட்டது. அ.தி.மு.க ஆட்சியில் இருந்தவரை, எட்டு முறை சம்மன் அனுப்பியும் ஆணையத்தின் பக்கமே எட்டிப்பார்க்காத பன்னீர், ஆட்சி மாறியதும் ஆஜரானார். பெரும்பாலான கேள்விகளுக்கு, ‘தெரியாது’ என ஒற்றை பதிலைச் சொல்லி அ.தி.மு.க தொண்டர்களிடம்கூட அதிருப்தியை உருவாக்கினார் பன்னீர். இந்தச் சூழலில்தான், தன் விசாரணையை நிறைவுசெய்திருக்கிறது ஆறுமுகசாமி ஆணையம். தலைமைச் செயலக வட்டாரத்தில், இந்த கமிஷனுக்குச் செலவான தொகை மட்டும் 2 கோடியே 62 லட்சம் என்கிறார்கள்.

நம்மிடம் பேசிய அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் ஒருவர், “ஆணையத்தின் விசாரணை அறிக்கை என்ன சொல்லப்போகிறது என்பது தெரியவில்லை. ‘ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானதுதான். இந்த கமிஷன் தேவையில்லாதது’ என அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உட்பட பலரும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இந்தச் சூழலில், ஜெயலலிதாவின் மரணத்தில் எந்த மர்மமும் இல்லை என்பதை ஆணையமும் தன் அறிக்கையில் கூறிவிட்டால், பன்னீரின் சாயமெல்லாம் வெளுத்துவிடும். ஜெ. மரணத்தில் மர்மம் இருப்பதாக, 2017 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதாவின் உருவ பொம்மையைவைத்து பிரசாரம் செய்தது பன்னீர் தரப்பு. சசிகலா முதல் எடப்பாடி வரை தனக்குப் பிடிக்காத அனைவர் மீதும் அன்று கொலைப்பழியை மட்டும்தான் பன்னீர் சுமத்தவில்லை. பின்கதை இப்படியிருக்க, ஒருவேளை ஆணையத்தின் அறிக்கை பன்னீருக்கு எதிராக அமைந்தால், ஜெ. மரணத்தைவைத்து பன்னீர் அடைந்த அரசியல் லாபங்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியிருக்கும். இதுதான் அவருக்குள் பதற்றத்தை உண்டாக்கியிருக்கிறது. தனக்கு நெருக்கமான வட்டாரங்களில்கூட, ‘ஆணையம் ரிசல்ட் என்னப்பா ஆகும்’ என உதறலோடு விசாரிக்கிறார் அவர்” என்றார்.

கே.சி.பழனிசாமி
கே.சி.பழனிசாமி

இந்தச் சூழலில், அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி, எடப்பாடி பழனிசாமியையும் ஆணையம் விசாரிக்க வேண்டும் என்றிருந்தார். ஆனால், அவர் கோரிக்கையை ஆணையம் நிராகரித்துவிட்டது. நம்மிடம் பேசிய புகழேந்தி, “டெல்லியில் நடக்கவிருந்த காவிரிப் பிரச்னை தொடர்பான கூட்டம் குறித்து, மருத்துவமனையிலிருந்த ஜெயலலிதா ஆலோசனை நடத்தியதாக அப்போது அரசிடமிருந்தே செய்திக்குறிப்பு வெளியானது. அப்படியென்றால், அப்போது பொதுப்பணித்துறையை கவனித்துவந்த எடப்பாடி பழனிசாமிக்குச் சில ரகசியங்கள் தெரிந்திருக்கும். இதையெல்லாம் தி.மு.கழக அரசுதான் துப்பறிய வேண்டும். ஆணையம் தரப்பில் அரசுக்குத் தாக்கல் செய்யப்படும் அறிக்கையில், ‘குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிட வேண்டும். இதை ஏற்று முதல்வர் ஸ்டாலின், சி.பி.சி.ஐ.டி போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அப்போதுதான், ஜெயலலிதாவின் ஆத்மா சாந்தி அடையும்’’ என்றார்.

கட்சியை ‘ரீவைண்ட்’ செய்யுமா உட்கட்சி வழக்கு?

எடப்பாடிக்கு கொடநாடு வழக்கும், பன்னீருக்கு ஆறுமுகசாமி ஆணையமும் குடைச்சலைக் கொடுக்கும் நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அ.தி.மு.க எம்.பி., கே.சி.பழனிசாமி தரப்பு தொடர்ந்திருக்கும் வழக்கு, இருவருக்குமே புதிய சிக்கலை உருவாக்கியிருக்கிறது.

புகழேந்தி
புகழேந்தி

நம்மிடம் பேசிய கே.சி.பழனிசாமி, “அ.தி.மு.க தலைமையில் இருப்பவர்களுக்கு எதிராக யார் வழக்கு தொடர்ந்தாலும், ‘வழக்கு தொடர தார்மிக உரிமை இல்லை’ என்பதே இரட்டையர்களின் வாதமாக இருந்தது. அதனால்தான், அ.தி.மு.க உறுப்பினர்களாக இருக்கும் என் மகன் சுரேன் பழனிசாமி, வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் மூலமாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. ‘ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் அ.தி.மு.க சட்டவிதிகளுக்குப் புறம்பானவை. அதனால், அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற உட்கட்சித் தேர்தலை ரத்துசெய்ய வேண்டும்’ என நீதிமன்றத்தில் கோரியிருக்கிறோம். அ.தி.மு.க உறுப்பினர்களே இந்த வழக்கைத் தொடர்ந்திருப்பதால், விசாரணைக்கு நீதிமன்றம் ஏற்றிருக்கிறது. இதன் மூலம், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கட்சிப் பதவிகள், சமீபத்தில் நடந்த செயற்குழு, உட்கட்சித் தேர்தல் என அனைத்தும் சவாலை எதிர்கொண்டுள்ளன. இந்த வழக்கில், எங்களுக்குச் சாதகமாக தீர்ப்பு வரும் பட்சத்தில், டிசம்பர் 2016-க்கு முன்னதாக எந்தெந்தப் பதவிகளில் யார் யார் இருந்தார்களோ, அந்த நிலைக்குக் கட்சி ‘ரீவைண்ட்’ ஆகிவிடும்” என்றார்.

அ.தி.மு.க-வை வழக்குகள் சூழ்வது ஒன்றும் புதிதல்ல. ஆறு முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. கட்சியின் பல சீனியர்கள் மீது சி.பி.ஐ-க்குப் புகார்களும் சென்றுள்ளன. ஆனால், கொடநாடு வழக்கு, ஆறுமுகசாமி ஆணையம், உட்கட்சிப் பதவி விவகாரம் என வரும் வம்பு வழக்குகளால் தற்போதைய தலைமைகள் இருவரையும் சிக்கல்கள் நெருக்குகின்றன. தீர்ப்புகளையும் விடைகளையும் எதிர்நோக்கிக் காத்திருக்கிறது கழகம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism