Published:Updated:

‘வசூல் ராஜாக்கள்’ - தலைநகர் எம்.எல்.ஏ-க்களின் அட்ராசிட்டி!

தலைநகர் எம்.எல்.ஏ-க்களின் அட்ராசிட்டி!
பிரீமியம் ஸ்டோரி
News
தலைநகர் எம்.எல்.ஏ-க்களின் அட்ராசிட்டி!

மாநகராட்சியின் பராமரிப்பில் இருந்தாலும், இந்தக் கழிப்பிடங்களிலெல்லாம் தங்கள் ஆட்களைப் பொறுப்பாளர்களாக எம்.எல்.ஏ தரப்பு போட்டுக்கொள்ளும்.

சமீபத்தில் நமது அலுவலகத்துக்கு ஒரு போன்கால் வந்தது. எதிர்முனையில் ‘என் அடையாளத்தைக் குறிப்பிட விரும்பவில்லை’ என்று பேசிய நபர், “தி.நகர் எம்.எல்.ஏ கருணாநிதிக்கு நெருக்கமானவர்கள் செய்யும் அடாவடிகளை ஜூனியர் விகடனில் எழுதியிருந்தீங்க. அதே மாதிரி, இந்தத் தலைநகரத்தின் மற்ற தொகுதிக் குள்ளேயும் போய் எம்.எல்.ஏ-க்களைப் பற்றி விசாரிச்சுப் பாருங்க, வசூல் தூள்பறக்குது... தள்ளுவண்டிக் கடையிலருந்து டாஸ்மாக் வரை ஒருபக்கம்... தண்ணி கனெக்‌ஷன், கரன்ட் கனெக்‌ஷன்னு மறுபக்கம் தொட்டதிலெல்லாம் வசூல்தான். பொதுக்கழிப்பறை களைக்கூட இலவசமா பயன்படுத்த முடியாதபடிக்கு வசூல்பண்ணி அடித்தட்டு மக்களை விரட்டுறாங்க... சமூகநலக் கூடங்களைப் பயன்படுத்தவும் தொகுதி எம்.எல்.ஏ-க்களின் பெயரைப் பயன்படுத்தி பணம் வசூலிக்கிறாங்க. இந்தக் கொடுமை எழும்பூர், விருகம்பாக்கம், பெரம்பூர், மயிலாப்பூர்னு எல்லா இடத்துலேயும் நடக்குது...” என்றதோடு தொடர்பைத் துண்டித்தார்.

அவர் கூறிய குற்றச்சாட்டின் உண்மைத் தன்மையை விசாரிக்கக் களமிறங்கினோம். சென்னைப் பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட தொகுதிகள் அனைத்திலும் சிறுதும் பெரிதுமாய் பல புகார்கள் உள்ளன. அவற்றில் ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளில், மற்றவற்றைவிடவும் அதிக புகார்கள் கிடைக்கவே, அவற்றில் மட்டும் கவனம் செலுத்தி விசாரித்தோம். அந்த ஒன்பது எம்.எல்.ஏ-க்கள் மீதும் பல்வேறு அடாவடிப் பஞ்சாயத்துக் குற்றச்சாட்டுகள் வரிசைக்கட்டுகின்றன!

வேலு - ஐட்ரீம் மூர்த்தி - இ.கருணாநிதி
வேலு - ஐட்ரீம் மூர்த்தி - இ.கருணாநிதி

வசூலுக்குத் தனித்தனி ஆட்கள்... அடித்து ஆடும் பிரபாகர் ராஜா!

விசாரணையை நாம் தொடங்கும் முன்னர் நம்மிடம் பேசிய தி.மு.க நிர்வாகிகள் சிலர், “சென்னையிலுள்ள எம்.எல்.ஏ-க்களுக்குப் பெரும் வசூல் தருவதே பொதுக்கழிப்பிடங்கள்தான். மாநகராட்சியின் பராமரிப்பில் இருந்தாலும், இந்தக் கழிப்பிடங்களிலெல்லாம் தங்கள் ஆட்களைப் பொறுப்பாளர்களாக எம்.எல்.ஏ தரப்பு போட்டுக்கொள்ளும். ஏரியாவுக்குத் தகுந்தாற்போல, பொதுமக்களிடம் 5 முதல் 10 ரூபாய் வீதம் பணம் வசூலித்து, அதில் தினம்தோறும் 1,500 ரூபாய் வீதம் எம்.எல்.ஏ-க்களுக்கு கொடுத்து விட வேண்டும். மேற்கொண்டு வசூலாகும் பணத்தை அந்தப் பொறுப்பாளர்கள் எடுத்துக் கொள்ளலாம். சென்னையின் எழுதப்படாத விதியாக இது மாறியிருக்கிறது” என்றனர். விஷயத்தைக் கிரகித்தபடியே விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குள் நுழைந்தோம். இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ-வான பிரபாகர் ராஜா, தமிழகத்திலேயே மிக இளம்வயதில் எம்.எல்.ஏ ஆனவர். அவர் தரப்பு மீதே அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள் தொகுதி மக்கள்.

நம்மிடம் பேசிய விருகை பழ வியாபாரி ஒருவர், “பொதுக்கழிப்பறை, அரசு சமூகக்கூட வசூல் கொடிகட்டிப் பறக்குதுங்க. காமராஜர் சாலை யிலுள்ள சமூகக்கூடத்துல நிகழ்ச்சி நடத்த ஒரு லட்சம் ரூபாய் வரை எம்.எல்.ஏ தரப்பினர் கேட்கறாங்க. எம்.எல்.ஏ-வுக்கு நெருக்கமான விக்கி என்பவர்தான் இந்த வசூலை நடத்துறார். கள்ளத்தனமாக மது விற்பனை செய்ய, ஒரு டாஸ்மாக் கடைக்கு 25,000 வரை வசூல் செய்றாங்க. கந்துவட்டி பிசினஸை ஆனந்த்ராஜ் என்பவரும், விதிமுறைகளை மீறிய கட்டடங்களுக்கான வசூலை ஜி.ஹெச்.தினேஷ் என்பவரும் கவனித்துக் கொள்கிறார்கள். சூதாட்டக் கிளப் வருமானத்தைக் கோட்டியும், கட்டப்பஞ்சாயத்துகளை கோழிக்கடை மேகநாதனும், ஸ்டெர்லிங் சுரேஷும் கவனித்துக்கொள்கிறார்கள். இப்படி, ஒவ்வொரு வசூலுக்கும் தனித்தனியாக ஆட்களைப் போட்டு கமிஷனில் கொழிக்கிறது எம்.எல்.ஏ பிரபாகர் ராஜாவின் தரப்பு. இவர்கள் அடாவடியால் பாதிக்கப்பட்ட சின்னதுரை என்பவர், தனக்குப் பாதுகாப்பு கேட்டு நீதிமன்றம் வரை சென்றிருக்கிறார்” என்றார்.

சிறுநீர் கழிக்க 5 ரூபாய்... ரோட்டுக்கடைகளுக்கு 5,000!

விருகம்பாக்கம் தந்த அதிர்ச்சி விலகாமல், பெரம்பூர் தொகுதிக்குள் நுழைந்தோம். தி.மு.க-வின் இளைஞரணி மாநிலத் துணைச் செயலாளர் ஆர்.டி.சேகர்தான் இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ. “பெரம்பூரைச் சுற்றி ஏகப்பட்ட பன்னடுக்குக் குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. பில்டர்களை நேரில் அழைத்துப் பேசும் சேகர் தரப்பு, ஒவ்வொரு புராஜெக்ட்டுக்கும் 15 சதவிகித கமிஷனைக் கேட்கிறது. இதுதவிர, வீடுகளுக்கான மெட்ரோ வாட்டர், கழிவுநீர் இணைப்பு, பிளான் அப்ரூவல் என எல்லாவற்றிலும் சேகரின் பெயரைச் சொல்லி வசூல் நடக்கிறது. மாநகராட்சிக்குச் சொந்தமான கழிப்பறைகளைத் தலா ஒரு லட்ச ரூபாய் பெற்றுக்கொண்டு குத்தகைக்கு விட்டுள்ளது எம்.எல்.ஏ தரப்பு. இலவச கழிப்பறையைப் பொதுமக்கள் பயன்படுத்த, ஒருமுறை 5 - 10 ரூபாய் வசூலிக்கிறார்கள் குத்தகை எடுத்தவர்கள்” என்று தொகுதி மக்கள் புகார்களைக் கொட்டினர். நம்மிடம் பேசிய பூ வியாபாரியான செல்வி, “சராசரியாக 300 ரூபாய்கூட டெய்லி வருமானம் இல்லாத மக்கள் நாங்க. ஒரு வாட்டி யூரின் போகவே 5 ரூபாய் கேட்டா, நாங்க எங்க போறது? ரோட்ல வாழ்றவங்க, குடிசையில கக்கூஸ் இல்லாத அடித்தட்டு மக்கள் நாங்கதான் இதனால ரொம்ப பாதிக்கப்படுறோம்” என்றார்.

அடுத்ததாக, எழும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குள் சென்றோம். சுமை தூக்கும் தொழிலாளியான தட்சணாமூர்த்தி, “எழும்பூர் ரயில்வே ஸ்டேஷன், குழந்தைகள் மருத்துவமனை ஏரியாக்கள்ல இருக்கிற பப்ளிக் டாய்லெட் எல்லாம் எம்.எல்.ஏ பரந்தாமன் ஆட்கள் கட்டுப்பாட்டுலதான் இருக்குது. பணம் கொடுத்தா தான் அங்க ஒண்ணுக்கு போக முடியும். இதுபோக, சேத்துப்பட்டு அரசு சமூகநலக் கூடத்தை வாடகைக்கு எடுக்குறதுக்கும் எம்.எல்.ஏ-வோட ஆட்கள் பணம் வசூலிக்கிறாங்க. இதுமாதிரி புகார்கள் நிறைய வந்ததாலதான், பரந்தாமனுக்கு நெருக்கமான பகுதிச் செயலாளர் விஜயகுமாரைக் கட்சிப் பதவியிலிருந்து சமீபத்தில ஸ்டாலின் நீக்கியிருக்கிறார்” என்றார். கழிப்பறை வசூல் மட்டுமல்லாமல், ரோட்டுக்கடைகளிலும் எம்.எல்.ஏ பரந்தாமனின் தரப்பு கப்பம் வசூலிப்பதாகப் புகார் எழுப்பப்படுகிறது.

நம்மிடம் பேசிய அ.தி.மு.க எழும்பூர் பகுதிப் பொறுப்பாளர் சம்பத், “ரோட்டுக்கடைகள் ஒண்ணையும் பரந்தாமனோட ஆட்கள் விடுறதில்ல. ஒரு கடைக்கு மாசம் 5,000 ரூபாய் கப்பம் கட்டிடணும். தொகுதிக்குள்ள புதுசா ஒரு பில்டிங் கட்டினாகூட வசூலுக்குப் போய் நின்னுட்றாங்க. சமூகக்கூடத்த புக் பண்ணணும்னா, மாநகராட்சிக்கு 3,000 ரூபாய் கட்டினது போக இவங்களுக்குத் தனியா 15,000 கொடுக்கணும். அப்பதான் ஃபங்ஷன் நடத்த விட்றாங்க’’ என்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பிரபாகர் ராஜா - எழிலன்  - ஆர்.டி.சேகர்
பிரபாகர் ராஜா - எழிலன் - ஆர்.டி.சேகர்

நீத்தார் கூடத்துக்கு 1,000 ரூபாய்... சுடுகாட்டிலும் பேக்கேஜ் வசூல்!

அடித்தட்டு மக்கள் மிகுதியாக வாழும் ராயபுரம் தொகுதிக்குள்ளும் வசூல் பஞ்சாயத்துகள் தாண்டவமாடுகின்றன. நம்மிடம் பேசிய அ.தி.மு.க மாவட்ட பிரதிநிதி மோகன், “ஸ்டான்லி ஹாஸ்பிட்டல், ஆர்.எஸ்.ஆர்.எம் ஹாஸ்பிட்டல் ரெண்டுலயும் மருத்துவமனை தனியாக வாங்கும் மாத்திரை, மருந்துகளில் பத்து சதவிகிதம் கமிஷன் கேட்குது எம்.எல்.ஏ ஐ ட்ரீம் மூர்த்தி தரப்பு. கமிஷன் விவகாரங்களில் தங்களுக்கு ஒத்து வராததால ஆர்.எஸ்.ஆர்.எம் ஹாஸ்பிட்டல் சூப்பிரண்டென்ட் ஒருவரை வேற ஹாஸ்பிட் டலுக்கு மாத்திட்டாங்க. அதுமட்டுமல்லாம, லாலகுண்டா முதல்தெரு சந்திப்புல நீத்தார் நினைவுக்கூடம் இருக்கு. இலவசமாதான் கடந்த ஆட்சியில செயல்பட்டது. ஆட்சி மாறுனதும் 3,000 ரூபாய் வசூல் பண்ணினாங்க, மக்கள்லாம் பிரச்னை பண்ணவும், இப்போ 1,000 ரூபாய் வாங்குறாங்க’’ என்றார்.

அடுத்ததாக மயிலாப்பூருக்குள் நுழைந்தோம். 20 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தத் தொகுதியைக் கைப்பற்றியிருக்கிறது தி.மு.க. தொகுதி எம்.எல்.ஏ வேலுவின் செயல்பாட்டை விசாரிக்கத் தொடங்கியபோதே, ‘சுடுகாட்டைக்கூட வேலு தரப்பு விட்டுவைக்கவில்லை’ என்று கொந்தளித்தார்கள் மக்கள். நம்மிடம் பேசிய மயிலாப்பூர் கச்சேரி சாலையைச் சேர்ந்த லட்சுமணன், “சுடுகாட்டில் பிணங்களை எரிக்க, பள்ளம் தோண்ட, டேபிள், நாற்காலிகள், சாவுமேளம், ஃப்ரீஸர் பெட்டி, உடலை எடுத்துச் செல்லும் வாகனம் என எல்லாவற்றுக்கும் ‘பேக்கேஜ்’ முறையில் வசூல் செய்கிறது எம்.எல்.ஏ தரப்பு. நாராயணசாமி தோட்டம், காமராஜர் சாலையிலுள்ள ஜெ.ஜெ.மண்டபம் உள்ளிட்ட மாநகராட்சி சமூக நலக்கூடங்கள் இவர்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. வேலுவின் சகோதரர் பாலா, தொழில் பங்குதாரர் முரளி இவர்கள் இருவரும்தான் வேலுவுக்கு இரு கரங்கள். வீடுகளுக்குக் குடிநீர், கழிவுநீர், மின் இணைப்பு ரேஷன் கார்டு எது தேவையென்றாலும் முரளியைப் பார்த்தால்தான் ‘ஃபைல்’ நகரும்” என்றார்.

திருட்டு கரன்டுக்கு 150 ரூபாய்... மருதாணி போடுபவரிடமும் வசூல்!

சென்னையின் இதயப் பகுதி என்றழைக்கப்படும் ஆயிரம் விளக்கு தொகுதிக்குள் நுழைந்தோம். புதிய முகமாக எம்.எல்.ஏ ஆகியிருக்கும் எழிலன் தரப்பு மீதும் குற்றச்சாட்டை அள்ளி வீசுகிறார்கள் தொகுதி மக்கள். “தொகுதியில இருக்கிற எல்லா போலீஸ் ஸ்டேஷன்லேயும் எம்.எல்.ஏ பெயரைச் சொல்லி பஞ்சாயத்துகள் நடக்குது. பொதுக் கழிப்பிடங்கள், சமூகக் கூடங்கள்ல வசூல் தூள் பறக்குது. எம்.எல்.ஏ-வுக்கு ஆல் இன் ஆலாக இருப்பவர் வட்டச் செயலாளர் சக்தி.

கிரியப்பா ரோட்ல, 120 குடிசைகளுக்கு கரன்ட் கனெக்‌ஷன் கேட்டு எம்.எல்.ஏ-கிட்ட மனு கொடுத்தோம். ‘பட்டா இருந்தா செய்யலாம். குடிசை மாற்று வாரியத்துலருந்து என்.ஓ.சி வாங்கிட்டு வாங்க’னு சொல்லிட்டாரு. ஆனா, அங்க இருக்குற 40 வீடுகளுக்குத் திருட்டுத்தனமா கரன்ட் கொடுத்து, வீட்டுக்கு மாசம் 150 ரூபாய் வீதம் தி.மு.க நிர்வாகி செந்தில் வசூல் பண்ணிட்டிருக்காரு. வசூல் விவகாரம் பிரச்னையாகியும்கூட வசூல் இன்னும் நிறுத்தப் படல” என்றனர்.

நம்மிடம் பேசிய அ.தி.மு.க பிரமுகர் முருகேசன், “தொகுதியில இருக்கற எல்லா தள்ளுவண்டிக் கடைகள்லயும் 500 ரூபாய் வீதம் எம்.எல்.ஏ பெயரைச் சொல்லி வசூல் நடக்குது. ரோட்டுல மருதாணி போடுற இந்திக்காரங்களைக்கூட விடுறதில்ல. அதுமட்டுமல்ல, ஹிந்தி பிரசார சபாவுக்கு வெளிலருந்த பெட்டிக்கடைக்காரர், கேட்ட காசைக் கொடுக்கலைன்னு சொல்லி, மாநகராட்சி அதிகாரிகள் மூலமா கடையைக் காலி பண்ண வெச்சுட்டாங்க. ஏன்னு கேட்டதுக்கு, ‘எம்.எல்.ஏ-தான் பண்ணச் சொல்றாரு’னு தி.மு.க-காரங்களே சொல்றாங்க’’ என்றார்.

அரவிந்த் ரமேஷ் - எஸ்.ஆர்.ராஜா - பரந்தாமன்
அரவிந்த் ரமேஷ் - எஸ்.ஆர்.ராஜா - பரந்தாமன்

கிச்சனுக்கு 40,000 கமிஷன்... ‘குறுநில மன்னர்’ எஸ்.ஆர்.ராஜா?

தமிழகத்திலேயே மிகப்பெரிய தொகுதி சோழிங்கநல்லூர். தொகுதியில் இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ-வாகியிருக்கும் தி.மு.க பகுதிச் செயலாளர் அரவிந்த் ரமேஷ் குறித்து தொகுதிக்குள் விசாரித்தோம். “சோழிங்கநல்லூரில் ஏராளமான குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. ஒரு கிச்சனுக்கு 40,000 ரூபாய் கமிஷன் பெற்றுக்கொள்கிறது எம்.எல்.ஏ தரப்பு. அதேபோல, குடிநீர் இணைப்புக்கு 15,000 ரூபாய் வசூலிக்கிறார்கள். தமிழகத்திலேயே ஐ.டி நிறுவனங் கள் அதிகமுள்ள தொகுதி இதுதான். கட்டடம் கட்டியது, பிளான் அப்ரூவல் பெற்றது என ஏதாவது ஒருவகையில் அந்த நிறுவனங்கள் ஒரு தவறைச் செய்திருக்கும். அதை லாக் செய்து கப்பம் வசூலிப்பதுதான் ரமேஷ் தரப்பின் ஸ்டைல். ஒன்றியச் செயலாளர் ரவி என்பவர்தான், இந்த வசூல் விவகாரங்களைக் கவனிக்கிறார். மேலும், தொகுதிக்குள் நடக்கும் எல்லாக் கட்டுமானங்களிலும் அரவிந்தின் லாரிகள் மட்டுமே ஓடுகின்றன” என்றனர்.

கடைசியாக, தாம்பரம், பல்லாவரம் தொகுதி களுக்குப் பயணமானோம். தாம்பரம் மார்க்கெட் பகுதியிலுள்ள வியாபாரிகள் சிலர், “பூக்கடை, காய்கறிக் கடை, என ஒவ்வொரு பகுதிக்கும் கமிஷன் நிர்ணயித்து வசூல் செய்கிறது எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜா தரப்பு. முடிச்சூர் ரோடு, காந்தி ரோடு, மார்கெட் பகுதிகளில் நடைபெறும் சாலைப் பணிகளுக்கு 20 சதவிகிதம் கமிஷன் கேட்கிறார்கள். இந்த வசூலைக் கவனிப்பவர் எஸ்.ஆர்.ராஜாவின் நெருங்கிய உறவினர் காமராஜ் என்பவர்தான். மார்க்கெட் வசூலை நாகூர் கனி, மார்கெட் பாபு ஆகிய இருவரும் கவனிக்கிறார்கள். தொகுதியில் ராஜாவை யாரும் கேள்வி கேட்பதில்லை. கிட்டத்தட்ட தன்னை ஒரு குறுநில மன்னனாகவே நினைத்துக்கொண்டு திரிகிறார் எஸ்.ஆர்.ராஜா” என்றனர்.

பல்லாவரம் எம்.எல்.ஏ இ.கருணாநிதி குறித்து விசாரித்தோம், “புதிதாகக் கட்டடங்கள் கட்டுவதற்கு மிகப்பெரிய தொகையை அவர் தரப்பு கமிஷன் பெறுகிறது. இ.கருணாநிதியின் அண்ணன் ஜோசப் என்பவர்தான் வசூல் பொறுப்புகளைப் பார்த்துக்கொள்கிறார்” என்கிறார்கள்.

நமது ஜூவி செய்தியைத் தொடர்ந்து, தலைமையின் கண்டிப்பால் தி.நகர் எம்.எல்.ஏ கருணாநிதி தரப்பு சற்று அடக்கியே வாசிக்கிறது. அந்தக் கண்டிப்பு மற்ற எம்.எல்.ஏ-க்கள் மீதும் இருக்க வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

ஆட்சி அமைந்த எட்டு மாதங்களிலேயே, தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மீது புகார்கள் வரிசை கட்டுவது ஆட்சிக்கு நல்லதல்ல. தன்னைச் சிறந்த நிர்வாகியாகவும், அப்பழுக்கற்ற ‘மிஸ்டர் க்ளீனா’கவும் காட்ட முயல்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதற்கு முதல் தடை, தலைநகரிலிருந்தே எழுந்திருக்கிறது!

*****

‘வசூல் ராஜாக்கள்’ - தலைநகர் எம்.எல்.ஏ-க்களின் அட்ராசிட்டி!

எம்.எல்.ஏ-க்கள் தரும் விளக்கம் என்ன?

“சமீப காலமாகக் கட்சியில் என் வளர்ச்சியை விரும்பாத யாரோதான் இதுபோன்ற தவறான தகவல்களைப் பரப்பிவிடுகிறார்கள். மக்களோ வியாபாரிகளோ என்னிடம் நேரடியாகப் புகாரளித்தால், நான் நடவடிக்கை எடுக்கத் தயாராகவே இருக்கிறேன். மற்றபடி, என்மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்.’’

- பரந்தாமன், எம்.எல்.ஏ, எழும்பூர்.

“என் மீதான குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் சொல்ல முடியுமா? நான் வணிகர் சங்கத் தலைவரின் மகன். நான் போய் மார்க்கெட்டில் வசூல் செய்ய முடியுமா? உட்கட்சியில் எனக்கு எதிராக இருப்பவர்கள் இப்படி கிளப்பிவிடுகிறார்கள். என் ஆண்டு வருமானம் மட்டும் சுமார் 5 கோடி இருக்கும். ஆண்டுக்குச் சுமார் 3 கோடி ரூபாய் செலவு செய்கிறேன். என் மாதச் செலவுக்கு 10 லட்ச ரூபாய் கொடுத்துவிடுவார் என்னுடைய டாடி. எனவே, எனக்கு இப்படிப் பணம் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.”

- பிரபாகர் ராஜா, எம்.எல்.ஏ, விருகம்பாக்கம்.

“பொதுக்கழிப்பிட வசூல் அ.தி.மு.க ஆட்சியில் இருந்திருக்கலாம். மாநகராட்சி கமிஷனராக ககன்தீப் சிங் பேடி வந்த பிறகு, எல்லாவற்றையும் இலவசமாக்கிவிட்டார். டெண்டர் விவகாரங்களில் நான் தலையிடுவதில்லை. என் கட்சிக்குள்ளேயே எனது வளர்ச்சியைப் பிடிக்காதவர்கள்தான் இப்படி பொய்ச்செய்திகளைப் பரப்புகிறார்கள். என்மீது தவறு இருந்தால், மீண்டும் சீட் கொடுத்திருப்பாரா தலைவர்? இல்லை இளைஞரணி பொறுப்பில்தான் தொடர முடியுமா?”

- ஆர்.டி.சேகர், எம்.எல்.ஏ, பெரம்பூர்.

“20 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயித்திருப்பதால், தொகுதியைத் தக்கவைப்பதற்கான முயற்சியில் மட்டுமே ஈடுபட்டிருக்கிறேன். மற்றபடி, கழிப்பறை, சமூக நலக்கூடத்தில் கமிஷன் என்று ‘லோக்கலாக’ ஒருபோதும் இறங்க மாட்டேன். பிளான் அப்ரூவல் பிரிவுப் பக்கமே போனதில்லை. எனக்குக் கட்சிக்குள்ளேயே எதிரிகள் அதிகம். என் நற்பெயருக்குக் கலங்கம் விளைவிக்கவே இதுபோன்ற குற்றச்சாட்டுகளைக் கூறிவருகிறார்கள்.”

- மயிலை த.வேலு, எம்.எல்.ஏ, மயிலாப்பூர்.

“எந்த பில்டரிடமும், ஐ.டி நிறுவனங்களிடமும் நான் சென்றதில்லை; எங்கும் வசூல் செய்ததில்லை. ரிமார்க் எதுவும் வந்துவிடக் கூடாது என்று பார்த்துப் பார்த்து வேலைசெய்கிறேன். அவ்வப்போது என்னைப் பற்றி இதுபோன்ற ரூமர்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. இப்போது சவால் விடுகிறேன்... ‘நான் கமிஷன் வாங்கினேன்’ என்பதை ஒரேயொரு ஆதாரத்தோடு சொல்லச் சொல்லுங்கள்... பார்ப்போம்!”

- அரவிந்த் ரமேஷ், எம்.எல்.ஏ, சோழிங்கநல்லூர்.

“கொரோனா பேரிடர், மழைவெள்ளப் பாதிப்புகளைச் சரி செய்யவே எனக்கு நேரம் சரியாக இருந்தது. தொகுதியில் எந்த ஒப்பந்தமும் இதுவரை ஒதுக்கப்படவேயில்லை. எனவே, என் மீதான குற்றச்சாட்டுகள் எல்லாமே உண்மைக்குப் புறம்பானவை. 25 ஆண்டுகளாக இங்கே அரசியல் செய்கிறேன். என்னைப் பற்றி நன்றாக விசாரித்துக்கொள்ளுங்கள்.”

- எஸ்.ஆர்.ராஜா, எம்.எல்.ஏ, தாம்பரம்.

“எங்கள் பெயரைச் சொல்லி யார் வசூலிக்கிறார்களோ, அவர்கள் குறித்துப் புகாரளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். கிரியப்பா சாலை விவகாரம் எங்கள் கவனத்துக்கும் வந்தது. அ.தி.மு.க-காரர்கள்தான் அந்த வேலையைச் செய்கிறார்கள். கோரிக்கை விடுத்த மக்களுக்குச் சட்டப்படி, ‘Intemnity bond’ போடப்பட்டு, முறையாக கரன்ட் வாங்கிக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.’’

- டாக்டர்.எழிலன், எம்.எல்.ஏ, ஆயிரம் விளக்கு.

“தலைமையின் குட் புக்கில் இருப்பதால், அதைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே, நான் எதிலும் தலையிடுவது இல்லை. யாராவது என்னுடைய பெயரைச் சொல்லி பணம் கேட்கிறார்கள் என்றால், என்னிடம் நேரடியாக வரச்சொல்லுங்கள். நானே தட்டிக்கேட்கிறேன்.”

- கருணாநிதி, எம்.எல்.ஏ, பல்லாவரம்.

“மருத்துவமனை விவகாரங்களில் நான் தலையிடுவதே இல்லை. நீத்தார் கூடம் பற்றி நீங்க சொன்ன விஷயங்களை விசாரிக்கணும்.மற்றபடி, தொகுதியில் பணம் வசூலிக்கிறதா வர்ற விஷயங்கள்ல கொஞ்சம்கூட உண்மை இல்லை”

- ஐடிரீம் மூர்த்தி, எம்.எல்.ஏ, ராயபுரம்.