Published:Updated:

அதிகார எல்லைச் சண்டை! அதிரடி ஆளுநர்! - அசராத முதல்வர்

முதல்வர் - ஆளுநர்
பிரீமியம் ஸ்டோரி
முதல்வர் - ஆளுநர்

நிதி மசோதாவைத் தவிர, வேறு எந்த மசோதா அனுப்பப்பட்டாலும், தனக்கு விருப்பமான கால வரையறைக்குள் அவர் முடிவெடுக்கலாம்.

அதிகார எல்லைச் சண்டை! அதிரடி ஆளுநர்! - அசராத முதல்வர்

நிதி மசோதாவைத் தவிர, வேறு எந்த மசோதா அனுப்பப்பட்டாலும், தனக்கு விருப்பமான கால வரையறைக்குள் அவர் முடிவெடுக்கலாம்.

Published:Updated:
முதல்வர் - ஆளுநர்
பிரீமியம் ஸ்டோரி
முதல்வர் - ஆளுநர்

“நீட் எனும் கொடுவாளால் சமூகநீதியை வெட்டிச் சாய்க்க வெறிகொண்டு துடிக்கின்றனர். கொடுவாளை ஏந்தியுள்ள யதேச்சதிகாரக் கரங்களை சட்டரீதியாக ஒடுக்க, அகிம்சைப் போரைத் தொடங்கியுள்ளோம்..!” - நீட் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினிடமிருந்து சமீபத்தில் வந்த வார்த்தைகள்தான் இவை. நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பியனுப்பியதால், கொந்தளிப்பின் உச்சத்திலிருக்கிறது தமிழக அரசு. இந்த மோதல் குறித்து, ஜனவரி 26-ம் தேதியிட்ட ஜூ.வி இதழில், ‘பவன் பாலிடிக்ஸ்; சூடாகும் தி.மு.க’ என்கிற தலைப்பில் கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தோம். நாம் கூறியிருந்தபடியே, ராஜ்பவனுக்கும் தலைமைச் செயலகத்துக்கும் இடையேயான மோதல் முற்றியிருக்கிறது. ஆளுநரிடம் சிக்கியிருக்கும் ஐந்து அமைச்சர்களின் ஃபைல்கள், உளவு பார்க்கும் அதிகாரிகள், டெல்லி விசிட் ரத்து பின்னணி என அடுத்தடுத்த நகர்வுகளால் தமிழக அரசியலில் வெப்பம் கூடுகிறது!

“ஏன் விலக்கு அளிக்க வேண்டும்?” - கேள்வி எழுப்பிய ஆளுநர்

2021, செப்டம்பர் 13-ம் தேதி, நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரும் மசோதா தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த மசோதாமீது எந்தவித பதிலும் அளிக்காமல் நான்கு மாதங்களுக்கும் மேலாகக் கிடப்பில் போட்டிருந்தது ஆளுநர் மாளிகை. நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி-க்களும், கூட்டணிக் கட்சியினரும் தொடர்ந்து எதிர்ப்புக் குரல் எழுப்ப, மசோதா குறித்துத் தன் நிலைப்பாட்டை அறிவிக்கவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார் ஆளுநர். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 1-ம் தேதி, மசோதாவை சபாநாயகர் அலுவலகத்துக்குத் திருப்பி அனுப்பினார் ஆளுநர். ஆளுநரின் அதிகார எல்லைகள் குறித்த விவாதம் சூடுபிடித்திருக்கிறது.

நம்மிடம் பேசிய ஆளுநருக்கு நெருக்கமான முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரிகள் சிலர், “இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 200-ன்படி, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு தன் இசைவுக்காக அனுப்பிவைக்கப்படும் தீர்மானங்கள்மீது முடிவெடுக்க ஆளுநருக்கு அதிகாரமுள்ளது. நிதி மசோதாவைத் தவிர, வேறு எந்த மசோதா அனுப்பப்பட்டாலும், தனக்கு விருப்பமான கால வரையறைக்குள் அவர் முடிவெடுக்கலாம். நீட் விலக்கு கோரும் தமிழக அரசின் மசோதாவிலும் அதுதான் நடந்தது. நீட் தேர்வு சமூகநீதிக்கு எதிரானது என்கிற வாதத்தைத் தமிழக அரசின் தரப்பில் முன்வைக்கிறார்கள். அதில்தான் கேள்வி எழுப்புகிறார் ஆளுநர். ‘நீட் தேர்வு நடைமுறைக்கு வருவதற்கு முன்பும் பின்பும் மருத்துவப் படிப்பில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை என்ன... ‘நீட் தேர்வு சமூகநீதிக்கு எதிரானதல்ல’ என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்திருக்கும் நிலையில், எந்தத் தரவுகளின் அடிப்படையில் நீட் விலக்கு தீர்மானத்தைத் தமிழக அரசு நிறைவேற்றியது... இந்தியா முழுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ள ஒரு தேர்விலிருந்து தமிழகத்துக்கு மட்டும் ஏன் விலக்கு அளிக்க வேண்டும்?’ எனப் பல்வேறு கேள்விகளைத் தமிழக அரசுக்கு அனுப்பியிருக்கிறார் ஆளுநர்.

அதிகார எல்லைச் சண்டை! அதிரடி ஆளுநர்! - அசராத முதல்வர்

இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்காமல், நீட் விலக்கு கோரும் தீர்மானத்தைவைத்து அரசியல் செய்கிறது தி.மு.க அரசு. இந்தத் தீர்மானத்தை பிப்ரவரி 1-ம் தேதியே சபாநாயகருக்கு திருப்பி அனுப்பிவிட்டார் ஆளுநர். ஆனால், அதை உடனடியாக வெளியிடாமல், ‘அகில இந்திய சமூகநீதிக் கூட்டமைப்பு’ குறித்து பிப்ரவரி 2-ம் தேதி 37 அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்குக் கடிதம் எழுதுகிறார் முதல்வர் ஸ்டாலின். மக்களவையில் அன்றைய தினமே, நீட் குறித்தும், ‘தமிழகத்தில் ஒருபோதும் பா.ஜ.க ஆட்சியமைக்க முடியாது’ என்றும் பேசுகிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. இதற்குப் பிறகுதான் ஆளுநர் மாளிகையிலிருந்து நீட் தீர்மானம் திருப்பி அனுப்பப்பட்டதாகச் செய்திக்குறிப்பு வெளியானது. தன்னுடைய பதவி, அரசியலாவதை ஆளுநர் ஆர்.என்.ரவி விரும்பவில்லை. அதேநேரத்தில், தன்னைச் சீண்டினால் அதற்கான எதிர்வினையை ஆளும் தரப்பிலிருப்பவர்கள் சந்தித்தாக வேண்டும் என்பதிலும் தீர்மானமாக இருக்கிறார் அவர்” என்றனர்.

நீட் விலக்கு தீர்மானத்தை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், அந்தத் தீர்மானத்தை மீண்டும் அவருக்கே அனுப்ப முடிவெடுத்தது தி.மு.க அரசு. இதற்காக, ‘பிப்ரவரி 8-ம் தேதி சட்டமன்றம் கூடும்’ என்று சபாநாயகர் அறிவித்தார். பிப்ரவரி 5-ம் தேதி தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில், ‘நீட் விவகாரத்தில் ஒருபோதும் தமிழக அரசு பின்வாங்கப்போவதில்லை’ என்றும் ஆளும்தரப்பில் உறுதியளித்தனர். ஆளுநரின் கேள்விகள் அடங்கிய கடிதத்தை சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பியது சட்டப்பேரவைச் செயலகம். இந்தச் சூழலில், “இரண்டாவது முறையாகச் சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினால், அதை ஆளுநரால் நிராகரிக்க முடியாது. இதை, ‘தீர்மானங்கள்’ தொடர்பாக ஆளுநருக்கு அதிகாரமளிக்கும் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 200 தெளிவாகக் கூறுகிறது. நீட் விலக்கு தீர்மானத்தைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதைத் தவிர இனி ஆளுநருக்கு வேறு வழியில்லை” என்கிறார்கள் சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள். இந்த மோதல் முற்றிய நிலையில்தான், டெல்லி கிளம்ப முடிவெடுத்தார் ஆளுநர் ரவி. ஆனால், கடைசி நிமிடத்தில் அந்தப் பயணத்திட்டம் ரத்தானது.

ராஜ்பவன் வசம் அதிகாரிகள்... - சிக்கலில் அமைச்சர்கள்!

இந்தப் பயணத்திட்டம் குறித்து, ஆளுநர் மாளிகை அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். “ஆளுநரின் டெல்லி பயணத்திட்டத்தில் இரண்டு முக்கியக் காரணங்கள் இருந்தன. ஒன்று, தனது இல்லத் திருமணவிழா அழைப்பிதழை டெல்லி முக்கியஸ்தர்களுக்குக் கொடுப்பது. இரண்டாவது, நீட் தொடர்பாக விவாதிக்கவும் முடிவெடுத்திருந்தார். தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலைச் சந்திக்க ஆளுநர் நேரம் கேட்டிருந்ததுதான் இதில் ‘ஹைலைட்.’ தமிழக ஆளுநராகப் பொறுப்பேற்றதிலிருந்து, தனக்கென ஓர் அதிகாரிகள் வட்டாரத்தை உருவாக்கிவைத்திருக்கிறார் ரவி. அவர்கள் மூலமாகக் கிடைத்த சில தகவல்கள் ஆளுநரை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டன.

தி.மு.க அரசு பொறுப்பேற்றதிலிருந்து சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். தமிழ் அதிகாரிகள் பலரும் பவர்ஃபுல் போஸ்ட்டிங்கிலிருப்பது அவர்களுக்கு நெருடலை ஏற்படுத்தியிருக்கிறது. தவிர, சிவில் சர்வீஸ் சட்டத் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு தயாராகிறது. இதன் மூலமாக, எந்த அதிகாரியையும் மத்திய அரசு நினைத்தால் பந்தாட முடியும். இதனால், ஒருவித அச்ச உணர்விலிருக்கும் அதிகாரிகள், மத்திய அரசைப் பகைத்துக்கொள்ள விரும்பவில்லை. இந்த நேரத்தில், ஆளுநர் மாளிகையிலிருக்கும் முக்கிய அதிகாரி ஒருவர், தனக்கு நெருக்கமாக இருக்கும் மேலும் சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை ஆளுநருக்கு ஆதரவானவர்களாக மாற்ற ஆரம்பித்தார்.

அதிகார எல்லைச் சண்டை! அதிரடி ஆளுநர்! - அசராத முதல்வர்

தமிழக அரசின் முக்கியத் துறை ஒன்றின் முதன்மைச் செயலாளர் அந்தஸ்தில் இருக்கும் ஓர் அதிகாரி, பா.ஜ.க தரப்புடன் நெருக்கமான தொடர்பைக்கொண்டவர். அவர் தற்போது பணியாற்றும் துறையில், மத்திய அரசின் நிதிகள் அதிகமாக வருகின்றன. அவரைக் கையில் எடுத்த ராஜ்பவன், டெண்டர், கமிஷன், செலவுகள், நிதி ஒதுக்கீடு எனப் பலவற்றையும் கேட்டுத் தெரிந்துகொள்கிறது. தலைமைச் செயலாளர் கனவில் இருக்கும் மற்றோர் அதிகாரி, தற்போது டம்மி பதவியில் இருக்கிறார். தமிழக அரசில் நடக்கும் தவறுகளை ஆவணங்களோடு சேகரித்து அதைக் கச்சிதமாக ஆளுநர் மாளிகைக்கு பாஸ் செய்கிறார். ராஜ்பவனின் நேரடிக் கண்காணிப்பிலுள்ள ஒரு துறையின் உச்ச அதிகாரி, வாரத்துக்கு மூன்று முறை ராஜ்பவன் வருகிறார். ஆளும்தரப்பின் செயல்பாடுகளை ஆளுநரிடம் புட்டுப் புட்டு வைக்கிறார். இப்படி ஆளுநருக்கு நெருக்கமான வட்டத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உலவ ஆரம்பித்துள்ளார்கள். அவர்கள் மூலமாகச் சில அமைச்சர்கள் பற்றிய ஃபைல்களைச் சேகரித்திருக்கிறார் ஆளுநர்.

மக்கள்நலன் பேணும் துறையில் நாள்தோறும் ஒரு கோடி ரூபாய்க்குக் குறையாமல் தினசரி கொள்முதல் நடக்கிறது. அமைச்சர் கை காட்டுபவருக்குத்தான் இந்த ஆர்டர்கள் வழங்கப்படுகின்றன. இது குறித்து ஆதாரபூர்வமாகத் தகவல்களைத் திரட்டியிருக்கிறார் ஆளுநர். ஊரகப் பகுதிகளை நிர்வகிக்கும் துறை, ஊருக்கே படியளக்கும் துறை, சாலைமார்க்க துறை, கடல் சார்ந்த துறை ஆகிய துறைகளில் நடந்துள்ள முறைகேடுகள் ஆளுநர்வசம் ஆவணங்களாகச் சென்றுள்ளன. இதை வைத்துக்கொண்டு, ஆளும் தரப்புக்கு ஆட்டம் காட்டுவதுதான் ஆளுநரின் திட்டம். அதற்கு ஆலோசனை பெறத்தான் அவர் டெல்லி செல்வதாக இருந்தது. ஆனால், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடப்பதால் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் அப்பாயின்ட்மென்ட் கிடைக்கவில்லை. இதனால், பயணத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ‘ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் தேவையா?’ என்று அண்ணா அவர்கள் அன்றே காரணத்தோடு எழுப்பிய கேள்வியை எண்ணிப்பார்க்கிறேன்’ என்று ஸ்டாலின், அண்ணா நினைவுநாளில் ட்வீட் செய்ததும் ‘ஆளுநர் எங்களுக்கு எஜமானர் அல்ல’ என்று அமைச்சர் துரைமுருகன் பேசியதும், ‘ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்துக்குத் தேவையில்லை. அவர் பதவி விலக வேண்டும்’ என தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு பேசியதும், மனதளவில் ஆளுநர் ரவியைக் காயப்படுத்திவிட்டன. அவருடைய பர்சனல் ஈகோவை தி.மு.க-வினர் சீண்டிவிட்டனர். அதற்கான எதிர்வினையை ஆளும்தரப்பு சந்திக்கப்போகிறது” என்றனர்.

“ஷா காலத்திலேயே நாங்க பார்த்தாச்சு...” - அசராத ஸ்டாலின்

ஆளுநரின் அதிரடி நடவடிக்கைகள் குறித்து தி.மு.க சீனியர் அமைச்சர் ஒருவரிடம் பேசினோம். “ஆளுநரின் ஈகோவை நாங்கள் யாரும் சீண்டவில்லை. மாநில அரசின் அதிகார வரம்புக்குள் ஆளுநர் தலையிட்டால், அதற்கான விளைவை அவர் சந்தித்துத்தான் ஆக வேண்டும். ஜனவரி 31, 1976-ல் தமிழக ஆளுநர் கே.கே.ஷாவின் அறிக்கையால் தி.மு.க அரசு கலைக்கப்பட்டது. அதற்கு ஒரு நாள் முன்னதாகத்தான் காந்தி மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ‘காந்திய வழியில் தி.மு.க ஆட்சி செய்கிறது’ என்று வாயாரப் புகழ்ந்திருந்தார் ஷா. இதை அடிக்கோடிட்டுக் காட்டிய மறைந்த பேராசிரியர் அன்பழகன், ‘ஒரே நாளில் தி.மு.க அரசு காந்திய வழியிலிருந்து பிறழ்ந்துவிட்டதா?’ என்று கிண்டலடித்தார். ஆக, ஆளுநர்களின் சித்து விளையாட்டுகளை ஷா காலத்திலேயே நாங்கள் பார்த்துவிட்டோம். இதே போன்ற அறிக்கையைத் தரச் சொல்லி, அப்போதைய ஒன்றிய அரசு, ஆளுநராக இருந்த பர்னாலாவுக்கு 1991-ல் அழுத்தம் கொடுத்தது. ஆனால், பர்னாலா அதற்கு மறுத்துவிட்டார். ஆனாலும் ஆட்சி கலைக்கப்பட்டது. இப்படி, மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடும் ஆளுநர்களையும், தலைவணங்கும் ஆளுநர்களையும் தி.மு.க பார்த்துவிட்டுத்தான் வந்திருக்கிறது.

அதிகார எல்லைச் சண்டை! அதிரடி ஆளுநர்! - அசராத முதல்வர்

2006-ல் தமிழகத்தில் மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்வை ரத்துசெய்யும் தீர்மானம் தி.மு.க அரசால் நிறைவேற்றப்பட்டு, அது ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. பின்னர், மத்திய அரசின் பார்வைக்கும், குடியரசுத் தலைவருக்கும் அந்தத் தீர்மானம் அனுப்பப்பட்டது. அப்போதே தமிழகத்தின் கல்வித் தரத்தை மத்திய அரசின் மனிதவளத்துறையும் சுகாதாரத்துறையும் பாராட்டின. இப்போது அந்தத் தரத்தை ராஜ்பவன் கேள்வி எழுப்புவது உள்நோக்கம் கொண்டதாகும். ‘நீட் விவகாரத்தில் தமிழக அரசு காட்டும் முனைப்பை, வேறு சில மாநிலங்களும் கையில் எடுத்துவிடுமோ’ என்கிற அச்சமே ஆளுநர் மாளிகை இவ்வளவு தூரம் துடிப்பதற்குக் காரணம். அதனால்தான், இந்த விவகாரத்தில் ஆரம்பம் முதலே ஒன்றிய அரசு நெருக்கடியைக் காட்டிவருகிறது. நீட் தேர்வுக்கும் சமூகநீதிக்கும் இடையிலான தொடர்பே ஆளுநருக்கும் சரி, ஒன்றிய அரசுக்கும் சரி... புரியவில்லை. இவர்களுடைய அதிகாரப் பூச்சாண்டி காட்டலுக்கெல்லாம் முதல்வர் ஸ்டாலின் அசரப்போவதில்லை. சட்டரீதியாக ஒரு கை பார்த்துவிடும் முடிவில் தெளிவாக இருக்கிறார் அவர்” என்றார்.

“நீட் விவகாரம் மட்டுமல்ல, சமூகநீதிக் கொள்கைகளை வலியுறுத்தி, இந்திய அளவிலான கூட்டமைப்பை உருவாக்கும் முனைப்பில் இருக்கிறார் ஸ்டாலின். அதற்காக, தேசிய அளவிலான பல கட்சிகளுக்கு அழைப்பும் விடுத்திருக்கிறார். ‘இந்தக் கூட்டமைப்பு தங்களின் தேர்தல் அரசியலுக்குப் பெரும் பிரச்னையாக அமையுமோ?’ என்கிற அச்சமே மத்திய அரசை யோசிக்கவைத்திருக்கிறது” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். இதற்கிடையே, ஆளுநர் - முதல்வர் மோதலாக ஆரம்பித்திருக்கும் இந்த யுத்தத்தை, பா.ஜ.க - தி.மு.க மோதலாகக் களத்தில் மாற்ற வியூகம் வகுக்கிறது கமலாலயம். எனவே, இந்த அதிகார எல்லைப் பிரச்னை இப்போதைக்கு ஓயாது என்பதே யதார்த்தம். ஆனாலும், கல்வி, சமூகநீதி, மாநில உரிமை என ஒன்றோடு ஒன்று பிணைந்திருக்கும் இந்தப் பிரச்னைகளில், கட்சி அரசியல் கடந்து தமிழகம் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism